தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் அறிவித்த கிராம மக்கள்: எதற்கு தெரியுமா?

- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
''உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தவற விடாதீர் முதல் பரிசு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 70 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 40 ஆயிரம்'' என்கிற அறிவிப்பு பதாகைகள் தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த கிராம மக்கள் முகநூல் மற்றும் வாட்சப் குழுக்களிலும் இதை பகிர்ந்தும் வருகின்றனர்.
கிராமப்புறங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்களில் இது போன்ற அறிவிப்புகள் வருவது வழக்கம்தானே என்று இந்த பதாகைகளை கடந்து செல்ல முடியாது. இது விளையாட்டுப் போட்டிக்கான அறிவிப்பு பதாகை இல்லை. அரசுப் பள்ளியில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு கிராமத்தினர் அளிக்கும் பரிசுத் தொகைக்கான அறிவிப்புதான் இது என்பது தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் தொற்றிக் கொள்ளும்.
வாட்ஸ் அப் குழு மூலம் நிதி
ஆம், தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டு இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 3 மாணவர்களுக்குத்தான் இப்படி பரிசுத் தொகையை அறிவித்துள்ளனர். நடப்பாண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் இது தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர் பரிசுத் தொகையை வழங்கும் கல்வி ஆர்வலர்கள்.
கஜா புயல் பாதிப்பின் போது ஆம்பலாபட்டு கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஆம்பல் ரிலீப் பண்ட் என்கிற வாட்ஸ் அப் குழு மூலம் நிதி சேகரித்து, இலுப்பைத்தோப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்குகின்றனர்.
எதற்காக பரிசு அறிவிப்பு

இது குறித்து ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "எங்கள் கிராமத்தில், நாங்க படித்த அரசுப் பள்ளியில் மைதானம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை இருந்தும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
நாங்க படிச்சப்போ 1, 500 மாணவர்களுக்கு மேல் படித்த நிலையில், இன்றைக்கு 500க்கு கீழ் குறைந்து விட்டது. எனவே தரமான கல்வி தரும் அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.'' என்கிறார் ரமேஷ்.
உயர்கல்விக்கும் உதவி செய்ய
தொடர்ந்து அவர் கூறுகையில், "கஜா புயல் பாதிப்பின் போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, நிதி மற்றும் உடல் உழைப்பைக் கொடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம். இதன் தொடர்ச்சியாக, ஆம்பல் நண்பர்கள், ஆம்பல் ரிலீப் பண்ட் என்கிற வாட்ஸ் அப் குழு மூலம் நிதி சேகரித்தோம்.
இதன்படி, வெளிநாடுகளில் வசிப்போர் மற்றும் கிராமத்தில் உள்ளோர் என 21 நபர்கள் தலா ரூ. 10 ஆயிரம் என வழங்குகின்றனர். இதைக் கொண்டு நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இதை வழங்குகிறோம். தொடர்ந்து பலரும் ஆர்வமாக உள்ளனர்.
அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றால், உயர்கல்விக்கும் உதவியாக இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லும் வகையில் இதை வழங்குகிறோம். காரணம், பொருளாதாரத்தால் உயர்கல்வி தடைபடக் கூடாது என்பதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்.'' என்கிறார் ரமேஷ்.
பள்ளி மேலாண்மைக் குழு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோர்கள் 14 பேர் உட்பட மொத்தம் 20 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
பள்ளி அருகில் உள்ள 5 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல். பள்ளியில் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் இடைநில்லாமல் கற்பதை உறுதிப்படுத்தல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி, நலத்திட்ட உதவிகளைக் கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு கண்காணிக்கும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த குழு மாற்றியமைக்கப்படும்.
அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பட மூலாதாரம், TN -DIPR
பள்ளி மேலாண்மைக் குழுக்களின் விழிப்புணர்வு கூட்டம் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசுகையில்,
''தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டத்தில் சுமார் 50 லட்சம் பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு பெற்றோர்கள் நின்று விடக்கூடாது.
ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெறும் வகையில், தரமான கல்வி, உள் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் பெற்றோர்கள் பங்கெடுக்க வேண்டும்.
ஆசிரியர்களோடு இணக்கமான உறவைத் தொடர வேண்டும். அரசுப் பள்ளிகளை பெருமையின் அடையாளங்களாக மாற்ற வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்களது பங்களிப்பை தரவேண்டும்'' என்றார்.
அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு

பட மூலாதாரம், TN-DIPR
கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், உதவித் திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் தற்போது அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த கிராம மக்களின் முயற்சி பல கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












