பழங்குடி சிறுவனை தீயில் தள்ளியதாக கூறப்படும் விவகாரம்: நடந்தது என்ன? – கள நிலவரம்

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழ்
ஆறாம் வகுப்பு படிக்கும் பழங்குடி சிறுவனைச் சாதி பெயரை சொல்லி தீயில் தள்ளியதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பள்ளி சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மற்றும் இதில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்கள் அனைவருமே ஒன்றாக விளையாடுகிறவர்கள்; அவர்களுக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார் குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தாயார்.
காயமடைந்த சிறுவனின் தந்தை சாதிப் பெயரை சொல்லி தனது மகனை தீயில் தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்.
எனவே இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய காயமடைந்த சிறுவனின் குடும்பத்தினர், குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பள்ளி தலைமை ஆசிரியர் என அனைத்து தரப்பினரையும் பிபிசி தமிழ் நேரில் சந்தித்து கள ஆய்வை மேற்கொண்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த இவர், கட்டட பெரியாள் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த திங்கள்கிழமை அன்று அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகனை சாதி பெயரை சொல்லி, தீயில் தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் கன்னியப்பன்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், சாதிப் பெயர் சொல்லி நெருப்பில் தள்ளிவிட்டதாக 3 சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உட்பட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று சிறுவர்கள் 6ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த சிறுவன் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?
இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தந்தை கன்னியப்பனை பிபிசி தமிழ் தொடர் கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "எனது மகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பள்ளிக்குச் சென்றபோது, அவனை சாதிப் பெயரைச் சொல்லி அதே பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் திட்டியுள்ளனர். மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து முறையிட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது மகன் சரியாக பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நான் கட்டட பெரியாள் வேலைக்குச் சென்றேன். மாலை வீடு திரும்பும் போது எனது மனைவி கை பேசியில் அழைத்து மகனுக்கு நெருப்பு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உடனடியாக வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது எனது மகன் பாட்டி வீட்டிற்கு செல்லும்பொழுது அங்குள்ள கருமாரி கொட்டாய் என்ற பகுதிக்கு அருகே நின்றிருந்தபோது அதே இடத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள், சாதிப் பெயரைச் சொல்லி அருகில் வருமாறு அழைத்துள்ளனர். பின்னர் அவனை அருகே குப்பையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் பிடித்து தள்ளி விட்டனர்.
நெருப்புக் காயங்களுடன் அருகிலிருந்த தண்ணீர் தொட்டியிலிருந்த நீரில் தனது உடம்பை நனைத்துள்ளார் எனது மகன். பின்னர் தள்ளிவிட்டவர்களில் இருவரும் நெருப்புக் காயமடைந்த எனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து உடனே எனது மனைவி அஞ்சலை சிகிச்சைக்காக மணம்பூண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கே என் மகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினான்," என்றார் கன்னியப்பன்
"பிறகு தீக்காயங்களால் கடும் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த எனது மகனை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன். தற்போது அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார் கன்னியப்பன்.
தன்னை சாதி பெயரை கொண்டு அழைத்து அருகே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளியதாக காயமடைந்த ஆறாம் வகுப்பு சிறுவனும் தெரிவித்துள்ளான்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் தரப்பில் கூறுவது என்ன?
குற்றம்சாட்டப்பட்ட 8ஆம் வகுப்பு சிறுவனின் தாயார் மாரியாம்மாள் என்பவரை பிபிசி தமிழ் சந்தித்து பேசிபோது, "எங்கள் வீட்டிற்கு எதிரே தான் பள்ளி உள்ளது, எப்போது வந்தாலும் காலையும், மாலையும் பள்ளி நேரம் தவிர்த்து எனது மகன், காயமடைந்த சிறுவன் உட்பட அனைவரும் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள். இவர்கள் எல்லாம் ஒன்றாக இங்கே வீட்டில் சாப்பிட்டதும் உண்டு.
கடந்த திங்கள்கிழமை அன்று எனது மகன் மற்றும் காயமடைந்த சிறுவன் உட்பட நான்கு பேரும் எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் கருமாரி கொட்டாய் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் சிறுவர்கள் விளையாடுவதற்கு முன்பிருந்தே கருமாரி கொட்டாய் பக்கத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. காற்றோட்டமாக இருக்கும் என்பதால் அந்த இடத்தில் வழக்கமாக ஆட்கள் வந்து உட்கார்ந்து செல்வார்கள். அதனால் அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பு எப்படி உருவானது என்று தெரியவில்லை.
அங்குச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த பாலிஸ்டர் சட்டையில் தீப்பற்றியுள்ளது. உடனே அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்கு சென்று தீ பற்றிய இடத்தை நனைத்துள்ளான். அப்போது அந்த சிறுவனுக்கு எனது மகனின் சட்டையை மாற்றிவிட்டு, எனது மகனும், மற்றொரு சிறுவனும் அவனை வீட்டிற்குச் அழைத்து சென்றுள்ளனர். மேலும் சிறுவனின் தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். பின்னர் அவரே கையில் 50 ரூபாய் கொடுத்து எண்ணெய் வைத்துகொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சிறுவர்களை அனுப்பியுள்ளார்," என்று மாரியம்மாள் கூறினார்.

"அதையடுத்து காயமடைந்த சிறுவனை என் மகன் உட்பட இரு சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீட்டில் விட்டு வந்தனர்.
ஆனால் அதன்பிறகு அந்த சிறுவனை திண்டிவனம் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவனது பெற்றோர் மூன்று சிறுவர்கள் தான் தீயில் தள்ளியதாக கூறியுள்ளனர். சாதி என்றால் என்னவென்று கூட இவர்களுக்கு தெரியாது. எப்போதுமே பள்ளிக்கு எதிரே இருக்கும் எங்கள் வீட்டில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விளையாடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் இதுபோன்று யாரும் இதுவரை செய்ததில்லை. ஆனால் எப்படி சிறுவர்கள் செய்ததாக தவறாக கூற முடிகிறது," என்று குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் தாயார் மாரியம்மாள் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் கூறியது என்ன?
இதில் குற்றம்சாட்டப்பட்ட 8ஆம் வகுப்பு சிறுவனிடம் பேசியபோது, "அவன் எப்போதும் எங்கள் வீட்டருகே தான் விளையாடுவான். பள்ளி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இங்கே தான் விளையாடுவான். திங்கட்கிழமை காலையிலிருந்தே எல்லாம் ஒன்றாகத் தான் இருந்தனர். நான் மதியத்திற்கு மேல் தான் வந்தேன். அப்போது நாங்கள் அனைவரும் கிணற்றில் குளித்துவிட்டு இங்கே வந்து விளையாடினோம். அப்போது தண்ணீர் குடிக்க அருகே இருந்த தொட்டிக்குச் சென்றோம். அங்கே நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் இவன் என்ன செய்தான் என்று தெரியவில்லை. உடனே ஓடிவந்து தண்ணீரில் விழுந்தான். உடனே அவனைக் குளிப்பாட்டி என் சட்டையைப் போட்டுவிட்டு அவன் வீட்டில் விட்டேன். அவங்க அம்மா மருத்துவமனைக்கு அழைத்து போக சொன்னாங்க. நானும் மருந்துபோட்ட பிறகு மாத்திரைகள் வாங்கிக்கொண்டு, அவனை வீட்டிற்கு கொண்டு சென்றேன்," என்று சிறுவன் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுவன் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களுடன் விளையாட்டாக புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்துக்கொண்டதை, சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட எட்டாம் வகுப்பு சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருப்பதை காணமுடிந்தது.
காயமடைந்த சிறுவனின் தாய் கூறியது என்ன?
இதையடுத்து காயமடைந்த சிறுவனின் தாயார் அஞ்சலையிடம் பேசினோம். அப்போது அவர், "திங்கட்கிழமை மாலை தீக்காயம் ஏற்பட்டு எனது மகனை அழைத்து வந்தனர். அவனுக்கு எப்படி தீக்காயம் ஏற்பட்டது? உங்களுடன் தானே இருந்தான் என்று கேட்டபோது அவனை அழைத்து வந்த சிறுவர்கள் எதுவும் சொல்லவில்லை. என் மகனிடம் கேட்டதற்கு தள்ளி விட்டதாக தெரிவித்தான். பின்னர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காயத்திற்கு மருந்திட்டு அழைத்து வந்தோம்," என்றார் அஞ்சலை.

சிறுவனை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது யார் என்று தாயாரிடம் கேட்டபோது, "அந்த சிறுவர்களுடன் நானே தான் அனுப்பி வைத்தேன். அவர்களும் அழைத்துச்சென்று சிகிச்சை பெற்று வந்தனர்," என்று தெரிவித்தார்.
பள்ளித் தலைமையாசிரியர் கூறுவது என்ன?
மேலும் காயமடைந்த சிறுவனின் தந்தை ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளியில் தனது மகனை சாதி பெயரிட்டு சக பள்ளி மாணவன் அழைத்தது குறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் தெரிவித்ததாக கூறினார். அது குறித்து காட்டுச்சிவிரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வளர்மதியை பிபிசி தமிழ் சந்தித்தது.
அப்போது விளக்கமளித்த அவர், "கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சிறுவனை, அதே வகுப்பை சேர்ந்த மற்றொரு சிறுவன் சாதிப் பெயர் சொல்லி அழைத்ததாக, சிறுவனின் தந்தை தெரிவித்தார். இது தொடர்பாக, அப்போது சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோரை அழைத்துப் பேசினோம். ஆனால் அந்த சம்பவம் குறித்து முன்பே அறிந்த சிறுவனின் பெற்றோர் அதுதொடர்பாக அவர்களது மகனை கண்டித்ததாக தெரிவித்து, இது போன்ற தவறு இனி நடக்காது என்று உறுதியளித்தனர். மேலும் பள்ளி சார்பில் பெற்றோரிடம் இதுகுறித்து கண்டித்தோம். இந்த தகவல் அறிந்ததும் அப்போதே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்று தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
சாதி பெயரை வைத்து அழைத்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யப்பட்ட மாணவர் தற்போது குற்றம் சுமத்தப்பட்ட மாணவர்களில் ஒருவர் அல்ல.
'விசாரணைக்கு பிறகே என்ன நடந்ததென்று உறுதியாக கூற முடியும்'
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர், "இதில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பிலும் விசாரணை செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான விசாரணை நிறைவடைந்த பிறகே இதைப் பற்றி உறுதியாக கூறு முடியும்," என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












