திமுக Vs பாஜக: தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தந்து தமிழ் பின்னுக்குத் தள்ளப்படுகிறதா?

- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தந்து தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக திமுக மீது குற்றம் சுமத்தியிருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தமிழ்மொழியை வளர்ப்பது யார், அழிக்க நினைப்பது யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும் என்று அவருக்கு பதில் தந்திருந்தார் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி.
உண்மையில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறதா? அது தமிழை அழித்து விட்டதா?
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியது, தமிழை மாநிலத்தின் ஆட்சி மொழியாக்கியது, சமஸ்கிருதம் கலந்து மணிப்பிரவளமாக ஆகிவிட்டிருந்த தமிழுக்கு மாற்றாக 'தனித்தமிழ் உரையாடலை' பொதுவெளிப் பேச்சாக மாற்றியது, ராமாயணம், மகாபாரதம் ஆகிய வடமொழி இதிகாசங்களுக்கு மாற்றாக சிலப்பதிகாரம் உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்களைப் பேசியது, திருக்குறளை முன்னிறுத்தியது என்று திராவிட இயக்கம், குறிப்பாக திமுக, எப்போதும் தன்னை தமிழின் பாதுகாவலராகவே முன்னிறுத்தி வந்திருக்கிறது.
ஆனால், இந்த வரலாற்றுக்கு இணையானது திராவிட இயக்கத்தின் ஆங்கிலத்துக்கு ஆதரவான நிலைப்பாடும்.
பெரியார் காலத்தில் இருந்தே ஆங்கிலம் படிப்பதன் முக்கியத்துவத்தை திராவிட இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். தமிழ் - ஆங்கிலம்- இந்தி என்ற முக்கோண முரண்பாட்டில் இந்தியை விலக்கிவைக்க ஆங்கிலத்தைப் பற்றிக் கொள்வது என்பதுதான் திராவிட இயக்கத் தலைவர்களின் நிலைப்பாடாக இருந்து வந்தது.

பட மூலாதாரம், @annamalai_k twitter
தொடர்பு மொழியாக ஆங்கிலம் இல்லாமல் போகுமானால், அந்த இடத்தில் இந்தி வந்து உட்காரும் என்பதுதான் அவர்களின் புரிதல். 'தொடர்பு மொழி' என்ற பாத்திரத்தை அப்படி இந்திக்கு வழங்கினால், வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உலக அளவிலான ஓட்டத்தில் தமிழ்நாடு பின்தங்கிப் போகும் வழியாகிவிடும் என்று அவர்கள் வாதிட்டார்கள்.
சில வகை தமிழ் தேசியர்களின் ஒரு மொழிக் கொள்கைக்கும், இந்திய தேசியவாதிகளின் மும்மொழிக் கொள்கைக்கும் நடுவே இரு மொழிக் கொள்கையை தேர்வு செய்தது திராவிட இயக்கம்.
இந்த அணுகுமுறையில், ஆங்கிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதா, இந்த அணுகுமுறை தமிழ்நாட்டுக்கு நன்மை செய்ததா, தீமை செய்ததா என்பதுதான் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டின் அரசியலைக் கடந்து அதில் மிஞ்சி நிற்கும் கேள்வி.
இந்தக் கேள்வியை மொழியுரிமை செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதனிடம் முன்வைத்தோம்.
ஆங்கிலம் உலகம் முழுவதும் சவால்தான்

"இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்துக்கு தமிழ்நாட்டில் தரப்பட்ட முக்கியத்துவம் உலகம் முழுவதும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் சாதகத்தை, வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு அளித்தது," என்று அவர் கூறினார்.
"ஆங்கிலம் பிற மொழிகளைப் பின்னுக்குத் தள்ளியது என்று கூறினால், அது இந்தியாவில் உள்ள இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கும் நடந்தே இருக்கிறது. உலகம் முழுவதும் அப்படி பிற மொழிகளை ஆங்கிலம் பின்னுக்குத் தள்ளிதான் இருக்கிறது. ஆங்கிலமே பேசாத நாடுகளும் ஆங்கிலம் கற்கத் தொடங்கியிருக்கின்றன," என்கிறார் அவர்.


"உலகமயமாக்கலால் ஓர் அளவுக்கு மேல் ஆங்கிலத்தை எதிர்க்க முடியாத நிலை, எல்லா இடங்களிலுமே ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், இந்திய அரசு மாநில மொழிகளுக்கு எதிராக இருக்கும் நிலையில், ஆங்கிலத்தை எதிர்ப்பது கடினமானது," என்கிறார் ஆழிசெந்தில்நாதன்.
தமிழ்நாடு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை உறுதியாக செயல்படுத்தியிருக்கிறது என்று கூறிய அவர், கல்வி என்று வரும்போது இந்திய அரசின் அழுத்தங்களும், அனுமதி மறுப்புகளுமே தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் தமிழில் கிடைக்காமல் இருக்கவும் காரணம் என்கிறார்.
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி முழுவதும் தமிழில் மட்டுமே இருக்கலாம் என்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டம் கொண்டுவரப்பட்டது, அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது சிபிஎஸ்சி பள்ளி லாபிதான். இதே போன்ற ஒரு சட்டத்தை கர்நாடக அரசு கொண்டுவந்தபோதும் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது சிபிஎஸ்சி லாபிதான் என்று அவர் கூறினார். அத்துடன், ஒன்றிய அரசின் கல்வி முறையான சிபிஎஸ்சி திட்டத்தின் கீழ் நடக்கும் அனைத்துப் பள்ளிகளும் ஏன் ஆங்கிலவழிப் பள்ளிகளாகவே இருக்கின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார்?
தமிழ்வழிக் கல்விக்குத் தடையாக இருப்பவை இந்திய அரசின் மெடிகல் கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு, என்.சி.ஆர்டி. போன்றவைதான் என்றும் அவர் கூறினார்.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து தர ஏன் பாஜக அரசு முன்வரவில்லை என்றும் அவர் கேட்கிறார்.
தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அதிகம் - கல்யாணி

ஆனால், கல்வி உரிமை செயற்பாட்டாளரும், தமிழ்வழிக் கல்வி ஆதரவாளருமான பிரபா கல்விமணி, வேறு விதமான பார்வையைக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்கியது திமுக என்ற பங்களிப்பை அவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், இந்த ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறையில் முழுமையாக செயல்படவில்லை என்கிறார் அவர்.
காவல் துறை போன்ற சில துறைகளில் தமிழின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், தலைமைச் செயலகத்தில் ஏராளமான ஆணைகள், கோப்புகள் இன்னும் ஆங்கிலத்தில்தான் போடப்படுகின்றன என்கிறார் அவர்.
திமுக ஆட்சிக் காலம் ஒன்றில் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட அமலாக்கத்தின் முன்னேற்றத்துக்கு குரல் கொடுத்துவந்தார். ஆனால், இது முழுமை அடையவில்லை என்கிறார் கல்விமணி.
மிக முக்கியமாக ஆட்சி மொழி எதுவோ அதுதான் கல்வி மொழியாகவும் இருக்கவேண்டும். ஆட்சி மொழி என்பதன் உண்மையான பொருள் அதுதான் என்று அவர் வாதிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டில், கல்வியில் ஆங்கில மோகம் அதிகரித்துவிட்டது என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.
உண்மையில் தமிழ்நாட்டில் பணம் கொடுக்க முடிகிற அனைவரும் ஆங்கில வழிக் கல்வியையே நாடிச் செல்வதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதை ஒரு கட்சியின் குறைபாடாக பார்க்க முடியாது என்கிறார் அவர்.
மாறி, மாறி ஆட்சி செய்த எல்லா கட்சிகளின் அணுகுமுறையும் அப்படித்தான் இருந்தது என்று கூறும் கல்விமணி, தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டும் தகுதி பாஜகவுக்கு இல்லை என்கிறார்.
தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அதிகரிக்க தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் காரணமாக இருந்ததாக கூறும் கல்விமணி, தமிழ்நாட்டில் அவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துள்ளதை அவர்களின் பங்களிப்பாகப் பார்க்கிறார்.
"தமிழ் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்று பாஜக எப்போது போராடியது? பாஜக தலைவர்களில் எத்தனைபேர் தமிழ்வழியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கின்றனர்? எந்தக் கட்சியிலும் தலைவர்களின் பிள்ளைகள் தமிழில் படிக்கவைப்பது இல்லை" என்கிறார் கல்விமணி.
இந்தி வேண்டும், மருத்துவக் கல்வி தமிழில் வேண்டும்

பட மூலாதாரம், SG Surya/fb
தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலே பட்டம் வாங்க முடியும் என்ற நிலை இருப்பதாக குற்றம்சாட்டுகிறார் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. கொரியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆங்கிலம் இல்லாமலே அவர்களின் தாய்மொழியிலேயே படிக்கிறார்கள் ஆனால், உலகின் தொன்மையான மொழியான தமிழில் மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வியைத் தர முடியாதா? ஏன் தமிழ்நாட்டில் இவர்கள் செய்யவில்லை என்று கேட்கிறார் அவர்.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆட்சி மொழியாக்க மறுப்பதற்கு இந்திய அரசைத்தானே குற்றம் சொல்கிறார்களே என்று கேட்டபோது, இது நீண்ட காலமாக கூறப்படுவதுதான் என்கிறார் அவர்.
இதை ஏன் திமுக மத்திய அரசில் பங்கு வகித்தபோது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பும் அவரிடம் இந்தியே இந்தியாவை இணைக்கும் என்ற அமித்ஷாவின் கருத்தை சுட்டிக் காட்டினோம். அதற்கு அவர், நாட்டில் 70 சதவீதம் பேர் புரிந்துகொள்வார்கள் என்பதால்தான் பிரதமர் பேசும்போது இந்தியில் பேசுகிறார். அவர் தமது தாய்மொழியில் கூட பேசாமல் இந்தியில் பேசுவதற்கு இதுதான் காரணம். அவர், ஆங்கிலத்தில் பேசினால் 5 சதவீதம் பேர்தான் புரிந்துகொள்வார்கள். தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்கள், தலைவர்கள் நடத்தும் 49 பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக இருக்கும்போது, தமிழ்நாட்டின் ஏழை எளியவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பைத் தரக்கூடாது என்று கேட்கிறார் சூர்யா.
தமிழைக் காப்பதாக, இந்தியை எதிர்ப்பதாக கூறும் திமுக தலைவர்கள் தங்கள் பள்ளியிலேயே அதைப் பின்பற்றாதது ஏன் என்று அவர் கேட்கிறார். தமிழ்வழிப்பள்ளிகளை ஏன் திமுக தலைவர்கள் நடத்தவில்லை என்றும் அவர் கேட்கிறார்.
மருத்துவக் கல்வியை தமிழில் தந்தால் அங்கீகரிக்கவேண்டியது இந்திய அரசுதானே என்று கேட்டபோது, அதற்கு வேண்டிய எல்லா வேலையையும் மாநில அரசு செய்து முடித்தால் இந்திய அரசு அங்கீகாரம் வழங்கும் என்கிறார் சூர்யா.
தமிழை வழிபாட்டு மொழியாக்க போராடட்டும் பாஜக
தெய்வீகமான தமிழ்மொழியை அழித்து திமுக ஆங்கிலத்தை வளர்ப்பதாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, மொழி உரிமை ஆர்வலரும், கணினித் தமிழுக்குப் பங்களிப்பவருமான மணி மணிவண்ணன், "இது சீமானைப் போல் திமுகவைத் தமிழுக்கு எதிரியாகக் காட்டும் உத்தி. இவர்கள் தமிழைத் தெய்வீக மொழியென்று ஏற்றுக்கொண்டால் கோயிலில் தமிழில் வழிபாடு செய்யப் போராடட்டும்" என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













