BigBash League 2020: மாற்றப்பட்ட கிரிக்கெட் விதிகள் - இதுதான் எதிர்காலமா?

சிட்னி

பட மூலாதாரம், Mark Metcalfe/Getty Images

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

கிரிக்கெட் இனி நீங்கள் பார்க்கும் வடிவத்தில் இல்லாமல் போகலாம், புதுப்புது விதிகள் வரக்கூடும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது பிக்பேஷ் லீக்கின் புதிய விதிகள். இவை சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகியுள்ளன. என்ன விதிகள் அவை?

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போலவே சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துவரும் மற்றொரு லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக்.

அடுத்த தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இப்போதே கிரிக்கெட்டில் புதிய விதிகளை உட்புகுத்த திட்டமிட்டிருக்கிறது பிபிஎல் எனப்படும் பிக்பேஷ் லீக்கின் நிர்வாகம். அடுத்தமாதம் துவங்கவுள்ள பிபிஎல் 10வது சீசனில் இருந்தே இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர்சர்ஜ்

இப்போது டி20 போட்டிகளில் முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே கொண்டதாக இருக்கிறது, அதாவது இந்த ஆறு ஓவர்களில் உள்வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். இதனால் பேட்டிங் செய்யும் அணி அதிக பவுண்டரிகளை விளாச வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது பிக்பேஷில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின் படி, முதல் நான்கு ஓவர்கள் மட்டுமே கட்டாயம் பவர்பிளேவாக இருக்கும். அடுத்த இரண்டு ஓவர்களை பேட்டிங் செய்யும் அணி 11வது ஓவரின் தொடக்கத்திலிருந்து எப்போது தேவைப்படுகிறதோ அப்போது எடுத்துக்கொள்ளலாம்.

இதனால் பேட்டிங் செய்யும் அணியினர் 12 அல்லது 13ஆவது ஓவர்களிலோ அல்லது 15 அல்லது 16ஆவது ஓவர்களிலோ ஏன் 19 அல்லது 20ஆவது ஓவர்களில் கூட அந்த இரண்டு ஓவர்கள் பவர்பிளேவை எடுத்துக்கொள்ளலாம், இந்த இரண்டு ஓவர்கள், பவர்சர்ஜ் என அழைக்கப்படும்.

இந்த புதிய விதி முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க ஒரு வாய்ப்பாக அமையும். அதே சமயம் ஆட்டத்தின் துவக்கத்தில் பவர்பிளே ஓவர்கள் நான்காக குறைக்கப்படுவதால் பந்துவீசும் அணிக்கு ஆட்டத்தின் துவக்கத்திலேயே எதிரணி விறுவிறுவென ரன்கள் குவிப்பதை மட்டுப்படுத்தப் பெரிதும் உதவக்கூடும்.

பிக்பேஷ்

பட மூலாதாரம், Getty Images

'X-factor Player'

அடுத்ததாக எக்ஸ்-ஃபேக்டர் பிளேயர்: 'X-factor Player' எனும் விதியை ஆட்டத்தின் 10வது ஓவருக்கு பிறகு இரு அணிகளும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன்படி பிளெயிங் லெவன் மற்றும் ஒரு மாற்று வீரர் - ஆக மொத்தம் 12 பேர் என்பதற்கு பதிலாக பிளேயிங் லெவன் மற்றும் இரண்டு மாற்று வீரர்கள் என 13 பேர் அணியில் இருப்பர்.

இதில் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தின் 10வது ஓவருக்கு பிறகு இந்த மாற்று வீரர்களில் யாராவது ஒருவரை அணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இதிலும் ஒரு விதி இருக்கிறது. பந்து வீசும் அணி இந்த வசதியை உபயோகப்படுத்தும் பட்சத்தில் 10 ஓவர்கள் முடிவில் அதுவரை ஒரு ஓவருக்கு மேல் பந்துவீசியிருக்காத பந்துவீச்சாளருக்கு பதில் மாற்று வீரரைச் சேர்த்துக்கொள்ளமுடியும்.

இந்த விதி குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தளத்துக்கு டேரன் லீமன் பேசியபோது, இதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார்.

"இரண்டு மாற்று வீரர் எனும்போது ஒரு பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரை மாற்று வீரர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு ஒரு மைதானத்தில் நன்றாகப் பந்துகள் திரும்பும் என்பதைக் கணித்து இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் பந்துகள் எதிர்பார்த்த அளவு திரும்பவில்லை எனில் 10 ஓவருக்கு பிறகு ஒரு சுழற்பந்து வீச்சாளருக்குப் பதில் ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ அல்லது ஆல்ரவுண்டரையோ இணைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல நீங்கள் பேட்டிங் செய்யும்போது முதல் 10 ஓவர்களுக்குள்ளே 4 அல்லது 5 விக்கெட்டுகளை இழந்து விடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது கௌரவமான ரன்களை எட்டுவதற்காக ஒரு பந்து வீச்சாளருக்கு பதில் பேட்ஸ்மேனை மாற்று வீரராக அழைத்துக் கொள்ள முடியும்.

அதேபோல முதலில் பேட்டிங் செய்யும்போது முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்துவிடுகிறீர்கள் என வைத்துக்கொண்டால், எதிரணிக்கு சேஸிங் செய்யும்போது நெருக்கடி கொடுக்கும் வண்ணம் முன்கூட்டியே கணித்து ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒரு பந்து வீச்சாளரை மாற்று வீரராக அழைத்துக்கொள்ளலாம்.

இப்படி பல வசதிகள் இருக்கின்றன, எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது," என்கிறார் லீமன்.

பிக்பேஷ்

பட மூலாதாரம், Getty Images

'பேஷ் பூஸ்ட'

மூன்றாவதாக மற்றொரு முக்கியமான விதி பேஷ் பூஸ்ட் 'Bash Boost'

இனிமேல் ஒரு போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றால் இரண்டு புள்ளிகளுக்கு பதிலாக மூன்று புள்ளிகள் வழங்கப்படும். இதுதவிர ஒரு போனஸ் புள்ளி உண்டு. இதை வெற்றி பெறும் அணி, தோல்வி அடையும் அணி என இருவரில் யார் வேண்டுமானாலும் பெறமுடியும்.

அதாவது இந்த போனஸ் புள்ளி இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி 10 ஓவர்களை முடித்தபிறகு யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.

விளக்கமாக சொல்ல வேண்டுமெனில், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி 10 ஓவர்கள் முடிவில் முதலில் பேட்டிங் செய்த அணி எடுத்த ரன்களை விட ஒரு ரன்னாவது கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்துவிட்டால் சேசிங் செய்த அணிக்கு Bash Boost' புள்ளி சென்றுவிடும். இல்லையெனில் பீல்டிங் செய்யும் அணிக்கு ஒரு புள்ளி கிடைத்துவிடும்.

உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன என கருதுவோம். முதலில் பேட்டிங் செய்யும் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களை எடுத்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தது என்றும் வைத்துக்கொள்வோம்.

ஆனால் 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்திருந்தது எனில், சென்னை அணிக்கு 'Bash Boost' புள்ளி கிடைத்துவிடும். மும்பைக்கு வெற்றியின் காரணமாக மூன்று புள்ளிகள் கிடைக்கும்.

இன்னொரு உதாரணம்: முதலில் பேட்டிங் செய்யும் அணி 10 ஓவர்கள் முடிவில் 70 ரன்களும் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்களும் எடுத்திருக்கிறது என வையுங்கள். சேசிங் செய்யும் அணி முதல் 10 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்திருக்கிறது அதன்பின் 78 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிறது என வைத்துக்கொண்டால், இங்கே சேசிங் செய்த அணிக்குதான் 'Bash Boost' புள்ளி கிடைக்கும். முதலில் பேட்டிங் செய்த அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி கண்டாலும் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும்.

பிக்பேஷ் லீக் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த புதிய விதிகள் புரிந்து கொள்ள சற்று சிரமமாகவும் வீரர்களின் தன்னம்பிக்கையை உடைப்பது போல உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பிளெயிங் லெவனில் ஒருவர் இடம்பெற்றாலும் கூட எந்த நேரத்திலும் அவருக்கு பதில் மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் எனும் உணர்வு கூடுதல் அழுத்தத்தைத் தரும் என சிலர் பதிவிட்டுள்ளனர்.

அதே சமயம் கிரிக்கெட் அடுத்தகட்டத்துக்கு நகரவும், புதிய ரசிகர்களை ஈர்க்கவும் இதுபோன்ற விதிகள் உதவும் எனும் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

இந்த புதிய விதிகள் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்குக் கூடுதல் வேலைதரும் விஷயமாக இருக்கப்போகிறது. புத்திசாலித்தனமாக முடிவுகள் எடுக்க வேண்டும் இல்லையெனில் எந்தவொரு கட்டத்திலும் ஆட்டம் எதிரணிக்கு சாதகமாகச் செல்லக்கூடும் எனும் நிலை உருவாகும்.

எது எப்படி இருந்தாலும் இந்த விதிகளின் படிதான் அடுத்த மாதம் பிக்பாஷ் லீக் தொடங்கவிருக்கிறது. இந்த விதிகள் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில், வருங்காலத்தில் அமல்படுத்த வாய்ப்பிருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: