பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்: நடந்தது என்ன?

(உலக அளவிலும் இந்தியாவிலும் இன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்)

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

பழனியில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் நிலம் தொடர்பான தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பழனி ராமபட்டினம் புதூரில் வள்ளுவர் என்ற திரையரங்கு இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சுப்பிரமணி, பழனிச்சாமி ஆகியோரும் இணைந்து சில வருடங்களுக்கு முன்பாக ஒரு நிலத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலம் தொடர்பாக நடராஜ் தரப்புக்கும் சுப்பிரமணி, பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் பிரச்சனை இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் சுப்பிரமணி, பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பாகியுள்ளது. இருந்தபோதும் விவகாரம் தீராத நிலையில், இது தொடர்பாகப் பேச, நடராஜின் வீடு அமைந்துள்ள பழனி அப்பர் தெருவுக்கு சுப்பிரமணியும் பழனிச்சாமியும் சென்றுள்ளனர். அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திடீரென நடராஜ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுப்பிரமணியையும் பழனிச்சாமியையும் சுட்டார்.

இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இருவரையும் நடராஜ் சுட்ட பிறகு, வேறு ஒருவர் கல்லைக் கொண்டு எறிந்து நடராஜை விரட்ட முயன்றார். அவரையும் துப்பாக்கியால் சுடுவதற்கு நடராஜ் முயன்று, அது நடக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நடராஜ்.

இந்த துப்பாக்கிச் சுட்டில் சுப்பிரமணிக்கும் பழனிச்சாமிக்கும் வயிறு, இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சுப்பிரமணிக்கு குண்டு எங்குள்ளது என்பது தெரியாததால், கூடுதல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட நடராஜ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தேனி சரக டிஐஜி முத்துச்சாமி, "பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக்கு உரிமம் உள்ளது. சம்பந்தப்பட்ட நடராஜ் கைதுசெய்யப்பட்டுள்ளார். பழனிச்சாமி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார்" என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.

மூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின்

கோவாக்ஸின்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் நுழைந்துள்ளது.சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஆகியவை இணைந்து 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகியவை இணைந்து 'கோவிஷீல்டு' எனும் பெயரில் தடுப்பு மருந்தை உண்டாக்கி அதை பரிசோதித்து வருகின்றன.

மூன்றாம் கட்ட பரிசோதனையின்போது தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலுக்குள் செலுத்ததப்பட்டு அவற்றின் செயல்திறன் மற்றும் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தன்மை ஆகியவை பரிசோதிக்கப்படும்.ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து தாங்கள் கோவேக்சின் தடுப்பு மருந்தை பரிசோதித்து வருவதாகவும், அது தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் நுழைந்துள்ளது என்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா நவம்பர் 16, 2020 அன்று தெரிவித்துள்ளார்.

மூக்கு துவாரங்கள் வழியாக உடலுக்குள் செலுத்தப்படும் சொட்டு மருந்து வடிவிலான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து ஒன்றும் அடுத்த ஆண்டு தயாராகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

'கோவேக்சின்' தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதைனையில் 26,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஏழாவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

பட மூலாதாரம், ANI

ஏழாவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார். பிகார் ஆளுநர் ஃபகு செளஹான் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக பிகாரின் முதல்வராகிறார் நிதிஷ் குமார்.

பாஜகவை சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதிவியேற்றுக் கொண்டனர்.

பிகார் மாநிலத்தின் 17வது சட்டமன்றத்தைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது.

பிகாரில் கொரொனா பெருந்தொற்றுக்கு மத்தியில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த நவம்பர் 10ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பதவியேற்பு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

டோக்கியோ ஒலிம்பிக்: `பார்வையாளர்கள் நிச்சயம் இடம்பெறுவர்` - கமிட்டியின் தலைவர் நம்பிக்கை

ஒலிம்பிக் லோகோ

பட மூலாதாரம், Getty Images

அடுத்த வருடம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்கு பெறுவர் எனத் தான் உறுதியாக நம்புவதாகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

போட்டிகளைக் காண வருவதற்கு முன் பார்வையாளர்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதா என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதிசெய்ய வலுவான முயற்சிகளை மேற்கொள்ளும் என தாமஸ் பேக் தெரிவித்துள்ளார்.

தற்போது தாமஸ் பேக் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்துக் கலந்தாலோசிக்க ஜப்பான் சென்றுள்ளார்.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற வேண்டியிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

"முடிந்தவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் அதன் காரணமாக அடுத்த வருடம் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் இடம்பெறுவர் என்ற நம்பிக்கை வருகிறது," என ஜப்பான் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ் பேக் தெரிவித்தார்.

முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்க ஜப்பான் செல்கிறீர்களா என்று செய்தியாளர்கள் தாமஸ் பேக்கிடம் கேட்டபோது அவர் உறுதியாக `இல்லை` என பதிலளித்தார். அவருக்கு முன்னதாக ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் கோவிட் 19 இருந்தாலும் இல்லையென்றாலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என உறுதியாக தெரிவித்திருந்தார்.

அதேபோல ஜப்பானின் ஒலிம்பிக் பொறுப்பு அமைச்சர் ஹாஷிமோட்டோ, 2021ஆம் ஆண்டு சூழல் எப்படியிருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

அடுத்த வருடத்திற்குள் கோவிட் -19 தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கும் நிலையிலும், பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து 90சதவீதம் பேரை வைரஸ் தொற்றிலிருந்து காக்கும் என ஆரம்பக் கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கும் நிலையில்தான் ஒலிம்பிக் கமிட்டியின் இந்த செய்தி வந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க முடியாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், Getty Images

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் மனு மீதான விசாரணை, நீதிபதி நவீன் சின்ஹா, கே.எம். ஜோசஃப் அடங்கிய அமர்வு முன்பு திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த வழக்கில் தமிழக அரசு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், சுற்றுச்சூழலுக்கு

ஆலை நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங் ஆஜராகி, ஆலை செயல்பாடு விவகாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் வகையிலேயே ஆலை செயல்பட்டு வந்தது. பரிசோதனை நடவடிக்கையாக ஆலை திறக்கப்பட்டால் அதன் பராமரிப்பு நடவடிக்கையை செய்ய ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.

ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே.வி. விஸ்வநாதன், வைத்தியநாதன் ஆகியோர், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ஏற்கெனவே மூடும் நோக்குடனேயே நடவடிக்கை எடுத்தோம். அந்த உத்தரவு அப்படியே இருக்கிறது. எனவே, தற்காலிகமாக ஆலையை திறக்க உத்தரவிடுவது சரியாக இருக்காது" என்று கூறினர்.

இதையடுத்து, தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாக ஸ்டெர்லை ஆலை பதில் அளிக்க அவகாசம் கோரிய நிலையில், அதற்கு அனுமதி வழங்கி வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 6.10 கோடி பேர் வாக்களிக்க தகுதி - அதிக வாக்காளர்கள் தொகுதி எது தெரியுமா?

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது நிறைவு செய்தவர்களை வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகக் கருதி வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்டிருக்கிறது.

இந்த வாக்காளர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவார்கள்.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலும் வழக்கமான வாக்குச்சாவடிகளான பள்ளிக் கட்டடங்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358. இதில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370. பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 6,358.

அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோளிங்கநல்லூர் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்து 366. இதில் ஆண்கள் 3 லட்சத்து 29 ஆயிரத்து 420 ஆகவும் பெண்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 858, மூன்றாம் பாலினத்தவர்கள் 88 பேர் வாக்களிக்க தகுதி பெறுகின்றனர்.

குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 107. இதில் ஆண்கள் 84 ஆயிரத்து 902. பெண்கள் 88 ஆயிரத்து 205, மூன்றாம் பாலினத்தவர்கள் எவரும் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

ஐடிபிபி வீரர்களுக்கு 5 வயது லடாக்கிய சிறுவன் அளிக்கும் அணிவகுப்பு - வைரலாகும் காணொளி

சிறுவன்

பட மூலாதாரம், ITPB

லடாக்கில் ஐந்து வயது சிறுவன், இந்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான இந்திய-திபெத்திய காவல் படைக்கு ராணுவ ரீதியிலான மரியாதை செலுத்திய காணொளி இணையத்தில் வைரலானதையடுத்து, அந்த சிறுவனை அழைத்து அந்த படையின் அதிகாரிகள் கெளரவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், தங்களைப் பார்த்து ஐந்து வயது சிறுவன், ராணுவ வீரரை போல வணக்கம் செலுத்துவதை பார்த்து ஆச்சரியப்பட்டு வாகனத்தை நிறுத்திப் பேசினர்.

பிறகு ஒரு அதிகாரி, "இப்படி கால்களை அகற்றியும் சேர்த்தும் வணக்கம் செய்ய வேண்டும்" என அறிவுறுத்த, அதை அப்படியே செய்து, நேர்த்தியாக அந்த சிறுவன் வணக்கம் செலுத்தும் காட்சி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதும் அந்த காட்சி வைரலானது.

இந்த நிலையில், லட்சக்கணக்கான சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்து, தேசப்பற்றை வெளிப்படுத்தவும் ஐடிபிபியின் சேவை தொடர்பான தகவல்களை பலரும் பகிரவும் அந்த சிறுவனின் செய்கை காரணமானது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், நவாங் நம்கியால் என்ற அந்த சிறுவனை, தங்களுடைய பிராந்திய படை முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவழைத்த அதிகாரிகள், அந்த சிறுவனுக்கு ஏற்றவாறு ஐடிபிபி ராணுவ சீருடையை வடிவமைத்து வழங்கினார்கள்.

அதை அணிந்து கொண்டு, அங்குள்ள அணிவகுப்பு மைதான சாலையில், சிறுவன் கம்பீரத்துடன் அணிவகுத்து வருவதையும், வணக்கம் செலுத்தும் காணொளியையும் ஐடிபிபி தலைமையகம் தனது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

லடாக்கின் சிசூல் என்ற இந்திய எல்லையோர கிராமத்தில், சிறுவன் நம்கியால், தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். உள்ளூர் மழலையர் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு ஆரம்பம் முதலே படையினரின் மீது அளவற்ற மரியாதை உண்டு என அவனது பெற்றோர் கூறுகின்றனர்.

இந்த சிறுவனின் காணொளியை பார்த்த பல சமூக ஊடக பயனர்களும், "அழகான வீரன்", "இந்தியாவின் எதிர்கால வீரன்", "ஒரு வீரன் உருவாகிறான்" போன்ற வரிகளை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: