குழந்தைகள் நேய காவல் பிரிவு: இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் தொடக்கம்

ருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் நேய காவல் பிரிவு

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, காவல்துறை சார்பில், நாட்டிலேயே முதன்முறையாக, குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல்பிரிவு, திருச்சி சரகத்திற்கு உட்பட்ட, 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை விசாரிக்கவும், குற்றச் செயலில் ஈடுபடும் குழந்தைகளை, நல்வழிப்படுத்தும் நோக்கிலும், இளைஞர் நீதி சட்டம் 2015 உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.

ருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் நேய காவல் பிரிவு

குற்றச்செயலில் ஈடுபடும் குழந்தைகளை, காவல் நிலையத்திற்குள் அழைத்து வரக்கூடாது. சீருடையில் இருந்துகொண்டே, குழந்தைகளிடம் விசாரணை நடத்தக் கூடாது. எக்காரணம் கொண்டும், குழந்தைகளை கைது செய்து, சிறையில் அடைக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை, கடைப்பிடிக்கும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல் நிலையத்திற்குள், புகார் அளிக்க வரும்போது, தகுந்த சூழலை உருவாக்கி தரும் வகையிலும், குழந்தைகள் நேய காவல் பிரிவு (Child friendly corner) உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா தலைமையில், காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஐந்து மாவட்டங்களில், தலா இரண்டு காவல்நிலையம் வீதம், 10 குழந்தை நேய காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் குழந்தைகளிடம், அச்ச உணர்வை போக்க, புறத்தோற்றத்தை மாற்றும் வகையில், காவல் நிலையத்திற்குள் குறிப்பிட்ட இடத்தில், சுவர் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அந்தந்த காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் தலைமையில், பெண் காவல் அதிகாரிகள், இப்பிரிவில் வரும் புகார்களை, விசாரிப்பார் என டி.ஐ.ஜி., ஆனி விஜயா தெரிவித்தார்.

ருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் நேய காவல் பிரிவு

இவர் மேலும் கூறுகையில், ''சட்டம் ஒழுங்கு காவல் பிரிவுக்கு, பல நேரங்களில், கைக்குழந்தைகளுடன் பெண்கள் வருகின்றனர். இவர்களுக்கு உகந்த சூழல் ஏற்படுத்தி தர, பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரிவில் வரும் புகார்கள், விசாரிக்கும் நடைமுறைகளின் அடிப்படையில், குழந்தைகள் நேய காவல் பிரிவுக்கு, வரும் புகார்களும் விசாரிக்கப்படும். ஆனால் இப்பிரிவில், பிரத்தியேக பெண் அதிகாரிகள் இருப்பர், '' என்றார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறுகையில், " நாட்டிலே, குழந்தைகளுக்கு எதிரான, அதிக புகார்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் ஏழாம் இடத்தில் உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை குறைக்கவும், புகார் அளிக்கும் நடைமுறைகளை, எளிமையாக்கவும் திருச்சி சரகத்தில் காவல் நிலையங்களில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து, குழந்தைகள் நேய காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு போலீஸ் அதிகாரிகளுடன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களும், புகார்களை விசாரிக்கும் நடைமுறைகளில் ஈடுபடுவர்," என்றார்.

குழந்தைகள் நேய காவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடங்கள்:

  • திருச்சி மாவட்டத்தில், திருவெறும்பூர் மற்றும் துவரங்குறிச்சி.
  • கரூர் மாவட்டத்தில், வெங்கமேடு மற்றும் லாலாபேட்டை.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆவுடையார் கோவில் மற்றும் பொன்னமராவதி.
  • பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகர் காவல் நிலையம் மற்றும் மங்கலமேடு.
  • அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் மற்றும் கூவாகம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: