வட மாநிலங்கள் போல் தமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம் பரவுகிறதா? ஸ்டாலின் கேள்வி
(தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் சில முக்கிய நாளிதழ்களில் வெளியான இன்றைய செய்திகளில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

பட மூலாதாரம், MK STALIN TWITTER
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத் துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய்விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி சுய விளம்பரத்தில் கவனம் செலுத்துகிறாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் என்று தி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக துப்பாக்கிகள் மூலம் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் யானைகவுனியில் கணவன், மாமனார், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர் மருமகளுடன் வந்த ஆட்கள். பழனியில் 2 பேர் சுடப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட முகநூல் பதிவு:"தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பியுள்ளன. வடமாநிலங்களைப் போல, தமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை, பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம் என தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத் துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய்விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, சுய விளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய கவனம் செலுத்துகிறாரா?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் என்று தி இந்து தமிழ் திசை கூறுகிறது.
வாசன் ஐ கேர் நிறுவனர் ஏ.எம். அருண் சாவில் மர்மம் - காவல்துறை விசாரணை

பட மூலாதாரம், AM ARUN
சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்ட வாசன் ஐ கேர் நிறுவனர் ஏ.எம். அருணின் உயிரிழப்பை சந்தேக மரணம் ஆக நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
திருச்சியில் வாசன் ஐ கேர் என்ற மருத்துவமனையை நிறுவிய 51 வயதாகும் ஏ.எம். அருணின் மருத்துவ நிறுவனம், இந்தியா முழுவதும் 100க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவரது உயிர் மாரடைப்பால் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதையடுத்து, அதை சந்தேக மரணம் ஆக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திங்கட்கிழமை காலையில் உயிரிழந்த பிறகு உடல்கூராய்விற்காக காவல்துறையினர் சென்னை அரசு ஒமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரி கூறும்போது, ஆரம்பநிலை வாய்மொழி பிரேத பரிசோதனை அறிக்கையைப் பொருத்தவரை, ஏ.எம். அருண் தற்கொலை செய்து கொண்டதாகவோ கொலை செய்யப்பட்டதாகவோ தடயங்கள் இல்லை என்றும் இயற்கையாகவே அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளதாக கூறினார். எனினும், உடல் உறுப்புகளின் நிலை தொடர்பான விரிவான மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் - ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், RBI
கரோனா உள்ளிட்ட வைரஸ்கள் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்திந்திய வர்த்தகக் கழகம் எழுதிய கடிதத்தில், ரூபாய் நோட்டுகள் வாயிலாக கரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.இந்தக் கடிதத்தை மத்திய நிதியமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்திருந்தது.
இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் பதிலில், ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், முடிந்த அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் கூறியுள்ளது.
மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம் என்றும், பல்வேறு ஆன்லைன் வசதிகள் மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ்.
இந்திய நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடருக்கு சாத்தியம் குறைவு

பட மூலாதாரம், PARLIAMENT OF INDIA
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு நடப்பதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கமாக நவம்பர் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். ஆனால், இம்முறை தலைநகர் டெல்லியில் கோவிட் - 19 வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதால் அந்த கூட்டத்தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இதற்கு முன்பு 1975, 1979, 1984 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றம் குளிர்கால கூட்டதொடரின்றி நடந்துள்ளது.
நடைமுறைப்படி குளிர்கால கூட்டத்தொடருக்கு இரண்டு வாரங்கள் முன்பாக அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடி கூட்டத்தொடரை நடத்துவதற்கான பரிந்துரையை வழங்கும். நவம்பர் இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் அக்கூட்டத்தொடர் இன்னும் நடக்கவில்லை. ஏற்கெனவே நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரை ஃபிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நடக்கும் வழக்கத்தை இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. எனவே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் அலுவலை அடுத்த ஆண்டில் நிதிநிலை கூட்டத்தொடருடன் சேர்த்து நடத்தும் வாய்ப்புகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
மழைக்கால கூட்டத்தொடரின்போது சுமார் 40 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நிலையில், மருத்துவமனையிலேயே கன்னியாகுமரி தொகுதி எம்.பி ஹெச். வசந்தகுமார், திருப்பதி எம்.பி துர்கா பிரசாத், மாநிலங்களவை எம்.பி அசோக் கஸ்தி உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறுகிறது தி இந்து நாளிதழ்.
பிற செய்திகள்:
- மு க அழகிரி: "திமுகவில் உள்கட்சி புகைச்சல் அதிகமாகியுள்ளது"
- விண்வெளியில் ஒரு சூரரைப் போற்று: மலிவு விலை விண்வெளி பயண கனவுடன் போராடிய நிறுவனம்
- இந்தியாவில் முதன்முறையாக குழந்தைகள் நேய காவல் பிரிவு: திருச்சியில் தொடக்கம்
- கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க-இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு
- பிஸ்கோத் - சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












