நேபாளம் இந்து நாடாக மீண்டும் மாறுமா? மன்னராட்சி வேண்டி மக்கள் போராட்டம் - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Sanjit Pariyar/NurPhoto via Getty Images
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர், காத்மண்டுவிலிருந்து
நேபாள தலைநகர் காத்மண்டுவில் சமீப நாட்களாக மன்னராட்சி மற்றும் கூட்டாட்சிக்கு இடையே சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும்போது அந்நகரம் அமைதியாக இருப்பது போன்று தான் தோன்றும், ஆனால் அங்குள்ள மக்களிடம் பேசினால் அரசுக்கு எதிராக மக்களின் விரக்தி புரியும்.
மன்னராட்சிக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் உள்ளனர். அங்கே பெருவாரியான மக்கள் அரசின் நடவடிக்கைகளால் ஏமாற்றத்தில் இருந்தாலும் மன்னராட்சி மீண்டும் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
தலைநகரில் உள்ள பால்கு பகுதியில் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் படங்கள் மற்றும் நேபாள நாட்டுக் கொடிகளை ஏந்தி, ஏப்ரல் 8-ஆம் தேதி மன்னராட்சிக்கு ஆதரவாக மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
அதில் பங்கேற்றவர்கள் 2008-இல் மன்னராட்சிக்கு முடிவுகட்டி ஜனநாயக குடியரசான நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக மாற்றவும் மன்னராட்சியை கொண்டு வரவும் வலியுறுத்தினர்.
எனினும், இதன் தாக்கம் பெரியளவில் இந்த இயக்கத்துக்கு வெளியே உணரப்படவில்லை. நேபாளத்தின் மற்ற பகுதிகளிலும் மன்னராட்சிக்கு ஆதரவாக பரவலாக போராட்டம் நடைபெறவில்லை.
முதல் பிரதமரான கொய்ராலா

பட மூலாதாரம், Getty Images
நேபாள வரலாற்றின் பெரும்பகுதி, அரச குடும்பத்தாலேயே ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. 1846 முதல் 1951 வரை ராணா குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரதமராக இருந்துள்ளனர்.
நேபாளத்தை ஜனநாயக நாடாக்குவதற்கான முதல் முயற்சி 1951-இல் மேற்கொள்ளப்பட்டது. நேபாளி காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்துக்கு ஆதரவான இயக்கத்தின் மூலமாகவும் மன்னர் திரிபுவனின் உதவியாலும் ராணாவின் குடும்பத்தினர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டனர்.
1959-இல் நேபாளத்தில் முதன்முறையாக தேர்தல்கள் நடைபெற்றன, பிபி கொய்ராலா நாட்டில் முதல் பிரதமராக ஆனார். நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.
1960-இல் திரிபுவனின் மகன் மகேந்திர பீர் விக்ரம் ஷா தேவ் ஆட்சியைக் கைப்பற்றினார். அனைத்து ஜனநாயக நிறுவனங்களையும் கலைத்தார். 1960 முதல் 1990 வரை நேபாளம் நேரடி மன்னராட்சி நடைபெற்றது, நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டிருந்தன.
வெகுஜன இயக்கத்திற்குப் பிறகு, 1990 இல் மன்னராட்சிக்கு அரசியலமைப்பு வடிவம் வழங்கப்பட்டது. எனினும், குடியரசு நாடாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. 1990 முதல் 2006 வரை நாட்டில் உள்நாட்டுப் போர் மாதிரியான சூழல்கள் ஏற்பட்டன. அப்போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அரச குடும்பத்தில் நிகழ்ந்த கொலைக்குப் பிறகு திருப்புமுனை

பட மூலாதாரம், Getty Images
ஜூன் 2001-இல் நேபாளத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சந்தேகத்துக்குரிய சூழல்களில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள், அரச குடும்ப வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது, நாட்டில் மன்னராட்சியின் வீழ்ச்சி தொடங்கியது.
அப்போதைய மன்னர் பிரேந்திர பீர் பிக்ரம் சிங் தேவ் படுகொலை செய்யப்பட்டார். இதன்பின், அவருடைய தம்பி ஞானேந்திரா ஷா ஆட்சியில் அமர்ந்தார்.
2005-இல் ஞானேந்திர ஷா ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆட்சியை முழுமையாக தன் கைகளில் கொண்டு வந்தார். 2006-இல் குடியரசு நாடாக்குவதற்கான இரண்டாவது வெகுஜன இயக்கம் உருவானது, அதன்பின், 2008ல் மன்னர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
செப்டம்பர் 2015-இல் நேபாளம் மதச்சார்பின்மை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்து நாடு என்ற அடையாளம் முடிவுக்கு வந்து தற்போதைய கூட்டாட்சி அமைப்பு நடைமுறைக்கு வந்தது.
அரசியல் நிலையின்மை

பட மூலாதாரம், Getty Images
நேபாளம் ஜனநாயக நாடாகி 17 ஆண்டுகளே ஆகியுள்ளன. அரசியலமைப்பு செயல்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கூட நிறைவுறவில்லை. இந்த காலகட்டத்தில் நேபாளத்தில் 14 அரசுகள் மாறியுள்ளன.
நேபாளத்தில் எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் அதன் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. நாட்டில் அரசியல் நிலையின்மையே நிலவியது.
2015 முதல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கேபி ஷர்மா ஒலி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) புஷ்ப கமல் தஹல் அகா பிரசந்தா, நேபாளி காங்கிரஸ் கட்சியின் ஷேர் பகதூர் தேவ்பா ஆகியோரே மாறிமாறி பிரதமர்களாக இருந்துள்ளனர்.
தற்போது கேபி ஷர்மா ஒலி பிரதமராக உள்ளார், இவர் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆட்சிக்கு வந்தார். நேபாளி காங்கிரஸின் ஷேர் பகதூருடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அவர் நடத்தி வருகிறார். அவருக்கு முன்பு, பிரசந்தா இரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
மன்னராட்சிக்கு ஆதரவாக இயக்கம் நடைபெறுவது ஏன்?

அரசியல் நிலையின்மையால் நாடு வளர்ச்சி பெற முடியவில்லை என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர், அதனால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சார்ட்டர்ட் அக்கவுண்டன்டும் நேபாளி மாணவர் காங்கிரஸ் தலைவருமான திவாகர் பாண்டே கூறுகையில், "நேபாள மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. குடியரசு நாடான போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படவில்லை என சாமானிய மக்கள் கருதுகின்றனர். நேபாளம் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது," என்றார்.
இந்த அதிருப்திதான் நாட்டில் தற்போது மன்னராட்சிக்கு ஆதரவான இயக்கம் நடைபெறுவதற்கு காரணம் என திவாகர் பாண்டே தெரிவித்துள்ளார். பாண்டே கூறுகையில், "மன்னராட்சியை ஆதரிப்பவர்களின் எண்னிக்கை மிகவும் குறைவு. ஆனால், சாமானிய மக்கள் துன்பத்தில் உள்ளனர். அதனால் தான் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன." என்றார்.
"அரசாங்கத்தின் மீதான அதிருப்தி என்பது மன்னராட்சிக்கு ஆதரவானது என்பது அர்த்தம் இல்லை. நாட்டில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட வேண்டும் என விரும்புபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு." என திவாகர் தெரிவித்தார்.
உலகின் ஒரே இந்து நாடு என்ற அடையாளம்

பட மூலாதாரம், Getty Images
பழைய பதான் பகுதியில் இருந்த டாக்ஸி நிறுத்தத்தில் இருந்த பெரும்பாலான ஓட்டுநர்களும் இதே கருத்தை கொண்டிருந்தனர்,
"பல அமைச்சர்கள் நாட்டை கொள்ளையடிப்பதை விட ஒரு மன்னர் ஆள்வது சிறந்தது," என இங்கிருந்த பலரும் கூறினர்.
நேபாளம் இந்து நாடாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என விரும்பும் அதேவேளையில் மன்னராட்சி மீண்டும் திரும்பக் கூடாது என விரும்புபவர்களும் உள்ளனர்.
பசுபதிநாத் கோவிலுக்கு சிறிது தொலைவில் உள்ள சாலையோர உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், "நேபாளத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்துக்கள். இந்த நாடு இந்து நாடாக இருந்துள்ளது. இந்த நாட்டின் பெருமை மீட்டெடுக்கப்பட வேண்டும், ஆனால் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு சரியானது." என்றார்.
பால்கு பகுதியில் நடைபெற்ற பேரணியில் இந்துத்வாவுக்கு ஆதரவான பலர் கலந்துகொண்டனர்.
அதில் கலந்துகொண்ட இளம் போராட்டக்காரர் அபிஷேக் ஜோஷி கூறுகையில், "மன்னர் - இந்து தேசம் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்து தேசத்தின் பாதுகாவலர் மன்னர் தான். எனவே, அவர்தான் கலாசாரம் மற்றும் மதத்தின் பாதுகாவலர்" என்றார்.
நேபாளத்தை குடியரசு நாடாக்கியது வெளிநாட்டு சதி என மன்னர் ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்ட சாகர் கட்கா கருதுகிறார். கட்கா கூறுகையில், "வெளிநாட்டவரின் நோக்கங்களை பின்பற்றுபவர்களால் நாட்டின் பாரம்பரிய ஆட்சி சட்ட விரோதமாக நீக்கப்பட்டது. நாட்டின் விழுமியங்கள், பாரம்பரியம் மற்றும் கலாசாரம் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் அரசியல் தத்துவங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது," என்றார்.
கட்கா கூறுகையில், "இந்த உலகிலேயே நேபாளம் தான் இந்து நாடு. இன்றைக்கு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்களுக்கு என தனி நாடுகள் உள்ளன. ஆனால், எங்களின் இந்து நாடு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது. இந்த நாட்டின் பழம்பெருமையை மீட்டெடுக்க நாங்கள் போராடி வருகிறோம்" என்றார்.
இந்த உலகிலேயே நேபாளம் ஒன்றுதான் இந்து நாடு என்பதையும் இந்துக்களிடமிருந்து அந்த அடையாளம் எடுக்கப்பட்டு விட்டதாக போராட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் கருதுகின்றனர். எனினும், இந்த போராட்ட களத்தைத் தவிர நகரின் மற்ற பகுதிகளில் அரசுக்கு எதிராகவோ அல்லது மன்னராட்சிக்கு ஆதரவாகவோ எதுவும் நடைபெறவில்லை.
நேபாளம் இந்து நாடாக வேண்டும் என கருதும் பலரும் மன்னராட்சி வேண்டாம் என நினைக்கின்றனர். பசுபதிநாத் கோவிலுக்கு வரும் பலரும் இதே கருத்துகளை கொண்டுள்ளனர்.
இங்கு வந்துள்ள இளைஞர்கள் குழுவும் நேபாளம் இந்து நாடாக வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், அரசியல் அமைப்பு குறித்து இந்த இளைஞர்கள் கூறுகையில், ஜனநாயகம் தான் சரியானது என்றும் ஆனால் அதில் முன்னேற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
'நேபாளத்தில் தற்போது மன்னராட்சிக்கு வாய்ப்பு இல்லை'

பட மூலாதாரம், Getty Images
நேபாள நாடாளுமன்றத்தின் தலைவர் நாராயண் தஹல், மக்களின் அதிருப்தியை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், நாட்டில் மன்னராட்சி திரும்புவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்.
முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹலின் உறவினர் தான் நாராயண் தஹல், இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். தஹல் கூறுகையில், "இந்த இயக்கத்தின் வாயிலாகத்தான் நேபாளத்தில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டது. இப்போது நேபாளத்தில் மன்னராட்சி மீண்டும் வர எந்த வாய்ப்பும் இல்லை" என்றார்.
எனினும், தற்போதைய அரசியல் அமைப்பில் மக்கள் நிச்சயம் அதிருப்தியில் இருப்பதாக தஹல் நம்புகிறார்.
அவர் கூறுகையில், "நாங்கள் ஏதோ தவறு செய்திருக்கிறோம், அதனால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை மக்கள் தங்களின் எதிர்ப்பு குரல்கள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால், எங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் அனைவரும் மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் என்பதில் உண்மையில்லை" என்றார்.
தஹல் கூறுகையில், "ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் குரல் எழுப்பவில்லை, மாறாக அவர்கள் சீர்திருத்தத்தைக் கோருகின்றனர். எங்கே தவறு நிகழ்ந்தது, என்னென்ன சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும்." என்றார்.
ஏழு மாகாணங்கள் கொண்ட குடியரசு

பட மூலாதாரம், Getty Images
ஏழு மாகாணங்கள் கொண்ட ஒரு கூட்டாட்சி ஜனநாயக நாடு தான் நேபாளம். பெரும்பான்மை எம்.பிக்கள் மூலமாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா-வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர விரும்பும் மக்கள் இயக்கத்தை வழிநடத்தும் ராஷ்டிரிய பிரஜாதந்திரா கட்சி இதை மாற்ற விரும்புகிறது.
நேபாள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 165 பேர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், மீதமுள்ள 110 பேர் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மன்னராட்சியை ஆதரிக்கும் ராஷ்டிரிய பிரஜாதந்திரா கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் சரத் ராஜ் பதக் கூறுகையில், "மன்னரை நாட்டின் தலைவராக பார்க்க நாங்கள் விரும்புகிறோம். நேபாளம் இந்து நாடாக மீண்டும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்" என்றார்.
பதக் கூறுகையில், "இந்த கூட்டாட்சி அமைப்பை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம். நேபாளத்தின் நிலைத்தன்மைக்காக, மக்களால் நேரடியாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவதே சிறந்தது. எம்.பிக்கள் அமைச்சர்களாகும் முறையும் முடிவுக்கு வர விரும்புகிறோம்" என்றார்.
போராட்டத்தில் நிகழ்ந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை சமீபத்திய மாதங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா போகாராவில் இருந்து காத்மண்டு திரும்பியபோது, விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர்.
இதன் பின்னர், மார்ச் 28-ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது, பெரியளவில் தீ வைக்கப்பட்டு, இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரு பத்திரிகையாளரும் இறந்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஞானேந்திர ஷாவால் மக்கள் தளபதியாக (jan commander) நியமிக்கப்பட்ட துர்கா பர்சாய் தலைமறைவாகிவிட்டார்.
தற்போது இந்த இயக்கத்தில் எந்த உத்வேகமும் இல்லை, ஆனால் இயக்கத்தை வழிநடத்தும் ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி, அந்த இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக எச்சரிக்கிறது.
"மக்களின் கோபம் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையைக் கையாள வேண்டியிருக்கும். இல்லையெனில் எதுவும் நடக்கலாம். வங்கதேசம் மற்றும் இலங்கை தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியது போன்று, நேபாளத் தலைவர்களும் வெளியேற வேண்டியிருக்கும். அவர்களால் எங்கும் வேறோரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது" என்று சரத் பதக் கூறுகிறார்.
'குடியரசாகி சில ஆண்டுகளே ஆகின்றன'

மன்னரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரக் கோருபவர்கள் முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று நேபாள அரசாங்கம் நம்புகிறது.
நாட்டின் சட்ட அமைச்சரும் நேபாள காங்கிரஸ் தலைவருமான அஜய் சௌராசியா கூறுகையில், "மக்களால் மன்னர் நீக்கப்பட்டார். நீண்ட போராட்டம் நடந்தது, பின்னர் மன்னர் அதிகாரத்திலிருந்து விலகினார். அரசியலமைப்புச் சபை இந்த நாட்டில் ஒரு குடியரசை நிறுவியுள்ளது. மன்னர் நீக்கப்பட்டது, மன்னராட்சியை விரும்புபவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரத்தை அனுபவித்து வந்த ஒரு சிலரே, இப்போது மீண்டும் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகிறார்கள்." என்றார்.
பொதுமக்களைத் தூண்டிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருப்பவர்களை காவல்துறை தேடி வருவதாகவும் அஜய் சௌராசியா கூறுகிறார். "ஜனநாயகத்தில் வன்முறையற்ற போராட்டத்துக்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் யாராவது வன்முறையில் ஈடுபட முயன்றால், அரசாங்கம் அமைதியாக இருக்காது" என்று சௌராசியா கூறுகிறார்.
மக்களிடையே வளர்ச்சியின்மை மற்றும் வெறுப்பு பற்றிய கேள்விக்கு, சௌராசியா கூறுகையில், "நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் கூட ஆகவில்லை. 2015 இல் நாடு பேரழிவு தரும் பூகம்பத்தை சந்தித்தது. இதற்குப் பிறகு, இன்னும் பல சவால்கள் வந்தன. அரசாங்கத்திடம் குறைவான வளங்களே உள்ளன, நேபாளம் ஜனநாயக நாடாகி சில ஆண்டுகளே ஆகின்றன." என்றார்.
நீண்ட போராட்டத்தில் மாதேசி இன மக்கள்

நேபாளத்தில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் மாதேசி மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். மாதேஸ் பகுதியில் கூட்டாட்சி அமைப்பை நிறுவுவதற்கான நீண்ட போராட்டம் நடந்தது.
ஜன்மத் கட்சி செய்தித் தொடர்பாளர் சரத் யாதவ் கூறுகையில், "மாதேசி மக்கள் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து கூட்டாட்சியை நிறுவ நீண்ட போராட்டத்தை நடத்தினர். ஆனால் இந்த அமைப்பில் மாநிலங்கள் பெற்ற உரிமைகள் குறைவாகவே உள்ளன. இப்போதும் கூட நாட்டின் அரசியல் கட்சிகள் காத்மண்டுவில் உள்ள சிங் தர்பாரிடம் இருந்து ஆட்சி வர வேண்டும் என்று விரும்புகின்றன, ஆனால் இது நடக்காது. உண்மையான அதிகாரம் மக்களின் கைகளில் இருக்க வேண்டும். நாட்டில் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்த நாங்கள் போராடுவோம்." என்றார்.
சரத் யாதவ் கூறுகையில், "தற்போது, நாட்டில் உள்ள அரசியல் அமைப்பில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த ஏமாற்றம் தற்போது நடைபெற்று வரும் இயக்கத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நாடு மீண்டும் மன்னராட்சியை விரும்புகிறது என்று அர்த்தமல்ல." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
நேபாளத்தின் முன்னாள் அமைச்சரும் இந்தியாவுக்கான தூதருமான நீலம்பர் ஆச்சார்யா, அரச குடும்பத்தின் பிரச்னையை நேபாளம் தீர்த்துவிட்டதாகக் கூறுகிறார்.
"மக்கள், மக்கள் இயக்கம் மற்றும் அரசியலமைப்பு சபை ஆகியவை மன்னராட்சி பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ளன. இப்போது நடக்கும் கூச்சல் எதிர்காலத்துக்கு எந்த அர்த்தத்தையும் அளிக்காது. தற்போதைய அரசியல் அமைப்பை சீர்குலைக்க அவர்களுக்கு சில அரசியல் நோக்கங்கள் இருக்கலாம், ஆனால் நேபாளம் மன்னராட்சிக்கு மீண்டும் திரும்பப் போவதில்லை" என்று நீலம்பர் ஆச்சார்யா கூறுகிறார்.
இருப்பினும், அரசியல் அமைப்பில் ஏமாற்றமடைந்த மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், இந்த மாற்றம் என்னவாக இருக்கும் என்பதை நாடுதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஆச்சார்யா நிச்சயமாகக் கூறுகிறார்.
நேபாளத்தின் வளர்ச்சி வேகம் குறைவு

பட மூலாதாரம், Getty Images
நேபாளத்தில் மன்னராட்சி மீண்டும் வருவதும், இந்து தேசத்துக்கான இயக்கமும் சிலரின் உணர்வுகளைத் தூண்டியுள்ளன, ஆனால் இங்கே உண்மையான கேள்வி வளர்ச்சியாகத் தெரிகிறது.
நேபாளத்தின் பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ந்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) படி, 2024 இல் நேபாளத்தின் வளர்ச்சி விகிதம் 3.1 சதவிகிதமாக இருந்தது.
நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கு வெளிநாட்டில் வசிக்கும் நேபாள மக்களிடமிருந்து வருகிறது. இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். ஆங்கிலம் தவிர, காத்மண்டுவில் பல இடங்களில் கொரிய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளைக் கற்பிக்கும் மையங்கள் உள்ளன.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நாளும் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேபாளத்தை விட்டு வெளியேறினர்.
காத்மண்டு விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் கூட்டத்தைக் காணலாம். குடியேற்ற வரிசையில் நிற்கும் ஓர் இளைஞர், "நேபாளத்தில் எல்லாம் சரியாக இருந்திருந்தால், நான் நாட்டை விட்டு வெளியேறுவேனா?" என்று கேட்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












