மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பரவியது எப்போது? வரலாற்றைப் புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு

- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆந்திராவில் ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம் உள்ளது. இந்தியாவில் மனித கால் தடம் எப்போது பதிந்தது என்பதற்கான ஆதாரம், கண்டங்களைத் தாண்டி மனித இனம் பயணித்ததற்கான உறுதியான சான்று, நந்தியால் மாவட்டத்தின் சாம்பல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வரலாற்றுத் தளங்கள் குறித்து அறியாதவர்கள், அந்த சாம்பலை ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்று வருகின்றனர்.
மனித வரலாற்றுக்கான ஆதாரங்கள், மூட்டைகளாகக் கட்டப்பட்டு டன் கணக்கில் விற்கப்படுவது குறித்து ஆச்சர்யமாக இருக்கிறதா? இது, ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
முன்பு கர்னூல் மாவட்டமாக இருந்து தற்போது நந்தியால் மாவட்டமாக மாறியுள்ள பெட்டன்சரா யாகன்டிக்கு அருகே ஜுவாலாபுரம் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரிதான சாம்பல் கிடைத்துள்ளது.
அரிய வகை சாம்பல் இங்கு வந்தது எப்படி?

நிலவியலாளர்களின் கூற்றுப்படி, "சுமத்ரா தீவில் (தற்போதைய இந்தோனீசியா) 74,000 ஆண்டுகளுக்கு முன்பு தோபா எனும் எரிமலை வெடித்தது. அந்த எரிமலை வெடிப்பின் தாக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு நீடித்தது. அதனால் ஏற்பட்ட எரிமலைக் குழம்பு, பூமி முழுதும் பரவியது.
இதனால் உருவான சாம்பல் அடுக்கு, சூரிய ஒளி பூமியை அடையாமல் தடுத்தது. இது, சூரிய ஒளி இல்லாமல் ஒரு வகையான பனி யுகத்தை உருவாக்கியது. அந்த எரிமலை வெடிப்பால் மனித இனம் கிட்டத்தட்ட அழிந்து போனது. அந்தப் பேரழிவிலிருந்து மிகக் குறைந்த சதவிகித மக்களே பிழைத்தனர்."
அந்த எரிமலை வெடிப்பின் சாம்பல் இந்தியாவின் சில பகுதிகளிலும் விழுந்தது. அந்த சாம்பலின் பெரும்பகுதி ஜுவாலாபுரத்தில் உள்ளது. இந்த சாம்பலைக் கண்டறிவது அரிதானது.
ஜுவாலாபுரத்தில் அந்த சாம்பலை கண்டறிந்த விஞ்ஞானி ரவி கோரிசெட்டர், அங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
அந்த சாம்பல் அடுக்குக்கு மேலேயும் கீழேயும், மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் தடங்கள் இருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்தனர்.
ஏனெனில், 60,000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் இந்தியாவுக்கு வந்தது என முன்பு விஞ்ஞானிகள் மதிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்தக் கூற்றுக்கு ஜுவாலாபுரம் சவால் விடுத்தது.
- 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்
- 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்
- காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு
- சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?
இந்த எரிமலை சாம்பல், விஞ்ஞானிகள் கூறியது போன்று 60,000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாமல், 74,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் சுற்றித் திரிந்ததாகப் புதிய கருதுகோளை முன்வைத்தது.
எளிதாகக் கூறுவதென்றால், இந்தியாவின் கற்கால வரலாற்றுக்கே இந்த அகழாய்வுத் தளம் சவால் விடுத்துள்ளது.
கடந்த 2009இல் பிபிசி டூ-வில் (BBC Two) 'தி இன்கிரெடிபிள் ஹியூமன் ஜர்னி' எனும் ஆவணத் தொடரில் ஜுவாலாபுரம் குறித்துப் பதிவு செய்யப்பட்டது.
ரவி கோரிசெட்டருடன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் பெட்ராக்லியா உள்படப் பல விஞ்ஞானிகள் அந்தத் தளத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஜுவாலாபுரம் - ஏன் சிறப்பு வாய்ந்தது?

ஜுவாலாபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், இந்திய வரலாற்றுக்கு இரண்டு முக்கியப் பலன்களை அளித்ததாகக் கூறுகிறார் ரவி கொரிசெட்டர்.
"ஒன்று, இந்தியாவில் பழைய கற்கால குடியிருப்புகள் (Paleolithic) குறித்த முறையான தகவல்கள் இல்லை. ஆனால், இந்த சாம்பல்கள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன. இது, 74,000 ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான அடையாளங்களை வழங்குகின்றன. இரண்டாவதாக, மனிதர்கள் இந்தியாவுக்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாமல், 74,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாக முடிவு செய்கிறது" என்றார்.
தோபா எரிமலை வெடிப்பு, மனித இனத்தை முற்றிலுமாக அழிக்கவில்லை. மத்திய பழைய கற்காலமானது, இந்த வெடிப்புக்கு முன்பும் பின்பும் தொடர்ந்தது.
ஆப்பிரிக்கா மற்றும் ஜுவாலாபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கருவிகளில் ஒற்றுமைகள் உள்ளன. அதனால், மனித இனம் இங்கு 90,000 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.
"ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் நுண் கற்காலக் கருவிகளை பயன்படுத்தி வெளியே வந்தார்கள் என்ற கோட்பாடும் தவறானது," என ரவி கொரிசெட்டர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கற்காலத்துக்கு முந்தைய வரலாற்றை மீண்டும் எழுதுவதிலும் நவீன மனிதனின் முன்னேற்றத்துக்கும் ஜுவாலாபுரம் குறிப்பிடத்தக்க உறுதியான சான்றாக உள்ளது.
ஆனால், இவையனைத்தும் தற்போது மாறி வருகின்றன. ஏனெனில், அந்த சாம்பலுக்குப் பின்னுள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மனித வரலாறு, தற்போது டன் கணக்கில் விற்கப்படுகின்றது.
அங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமான சாம்பல் தோண்டி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இன்னும் விற்கப்பட்டு வருகிறது.
தற்போது, ஆதிகால மனிதனின் தடங்கள் கிட்டத்தட்ட அப்பகுதியில் அழிந்து போய்விட்டன.
டன் கணக்கில் விற்கப்படும் ஆதிகால சாம்பல்

மனிதர்களின் கைகளால் பக்குவமாக, கவனமுடன் அகழாய்வு செய்யப்பட வேண்டிய அந்த இடம், புல்டோசர்களால் அகழாய்வு செய்யப்படுகிறது. அக்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் பழமையான மரங்களின் எச்சங்கள் சல்லடை மூலம் பிரிக்கப்படுகின்றன. மென்மையான சாம்பல் பைகளில் விற்கப்படுகின்றன. இந்த சாம்பல் சலவை மற்றும் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தப்படும் பவுடர்களில் பயன்படுத்தப்படுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த சாம்பல், மலிவான விலையில் ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்கப்படுவதாக கிராமத்தினர் சிலர் கூறினர். எனினும், இந்த சாம்பலை எந்த நிறுவனம் வாங்குகிறது, எதற்காகப் பயன்படுத்துகிறது என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
அகழாய்வுப் பணிகளில் வேலை செய்துகொண்டிருந்த சிலரிடம் பிபிசி பேசியபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் வேலைக்காக மட்டுமே இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இந்த சாம்பல் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அங்குள்ள ஓர் இடத்தின் உரிமையாளரிடமும் பிபிசி பேசியது. அவர், "இங்குள்ள அனைவரும் தங்கள் நிலத்தில் உள்ள சாம்பலைத் தோண்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். அதனால்தான் நானும் விற்கிறேன். அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது," என்றார்.
நில உரிமையாளர்கள் ஏற்கெனவே நிலத்தைத் தோண்டி, சாம்பலை விற்றுவிட்டனர்.
ஜுவாலாபுரம் குறித்து தெரிய வந்தது எப்படி?

கர்னூல் மாவட்டத்தில் உள்ள பில்லசர்கம் குகைகள், உயிரி பரிணாம கோட்பாட்டுக்கு மிக முக்கியமான தளமாக விளங்குகிறது. இந்திய தொல்லியல் துறையின் தந்தை எனக் கருதப்படும் ராபர்ட் புரூஸ் ஃபோர்ட், முதன்முதலாக இந்த குகைகள் குறித்து எழுதினார்.
இந்த குகைகளில் மனித எச்சங்கள் குறித்து தொல்லியலாளர் ரவி கொரிசெட்டரின் குழு தேடியபோது, அவர் ஜுவாலாபுரம் குறித்து உள்ளூர் மக்கள் வாயிலாக அறிந்தார். 2004 முதல் 2005 வரை இரண்டு ஆண்டுகள் ஜுவாலாபுரத்தில் ரவி கொரிசெட்டர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
"வழக்கமாக, ஆய்வுக்காக பழமையான தளங்களுக்குச் செல்லும்போது, புதிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். முன்பு கண்டறியப்படாத விஷயங்களை நீங்கள் கண்டறிவீர்கள். நான் கர்னூல் சென்றபோது, புதிய விஷயங்களை தேடினேன். அப்போதுதான் இந்திய நிலப்பரப்பு வரைபடம் மூலமாக ஜுவாலாபுரம் எனும் பெயர் குறித்து அறிந்தேன்."
"எனவே அந்த உள்ளூர் மக்களிடம் பேசினேன், அவர்கள் நிறைய புதிய விஷயங்கள் குறித்துக் கூறினார்கள். யாகன்டி பகுதியைச் சேர்ந்த செங்கல ரெட்டி எனும் விவசாயி ஒருவரிடம் ஜுவாலாபுரம் மற்றும் பட்டபடு (Patapadu) ஆகிய பகுதிகளில், வெள்ளை நிறத்தில், மென்மையான சாம்பல்கள் இப்பகுதியில் உள்ளதா எனக் கேட்டபோது, அவர் எங்களை ஜுவாலாபுரத்துக்கு அழைத்துச் சென்றார்."
"நான் முதலில் ஜுவாலாபுரம் சென்றபோது, தொலைவிலேயே காற்றில் தூசு பறந்தது. எனவே இங்கு ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன்."
மேலும் பேசியவர், "அப்பகுதிக்கு நெருங்கிச் செல்லும்போது, அங்கு என்ன தோண்டப்படுகிறது என்பதை உணர்ந்தேன், அது எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல். ஆனால், அங்கு ஏற்கெனவே கிராமவாசிகள் தோண்டிக் கொண்டிருந்தனர்" என்று விவரித்தார் ரவி கொரிசெட்டர்.
"இது எரிமலை வெடிப்பு சாம்பல் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அதை அவர்கள் சலவைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள்" என ஜுவாலாபுரத்துக்கு முதன்முறையாகச் சென்ற அனுபவத்தை நினைவுகூர்கிறார் ரவி கொரிசெட்டர்.
இதையடுத்து, பில்லசர்கம் சென்ற தனது குழுவில் இருந்து சிலரை ஜுவாலாபுரத்துக்கு அகழாய்வுக்காக அனுப்பினார்.
அவை தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் என்பதால், விவசாயிகளுக்குச் சிறிது பணம் கொடுத்து அங்கே பணிகளை மேற்கொண்டனர். ஓராண்டு அங்கே விடாமுயற்சியுடன் தோண்டிய நிலையில் சுவாரஸ்யமான விஷயங்கள் பல வெளியே வந்தன.
"ஜுவாலாபுரம் அகழாய்வில் பழைய கற்காலத்தின் மத்திய காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அருகில் பழைய கற்காலத்தின் தொடக்க காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. ஜுரெரு நதிக்கரையில் நுண் கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
யாகண்டி கற்பாறைகளுக்கு அருகே நிலத்தில் நுண் கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. பழைய கற்காலத்தில் இருந்து பெருங்கற்காலம் வரை மனித வாழ்விடம் குறித்த பல ஆதாரங்கள் சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. கிழக்கு ஆப்பிரிக்காவை ஒத்த ஆதாரங்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டன" என ஜுவாலாபுரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கினார்.
உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி

தற்போது, ஜுவாலாபுரம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் கர்நாடகாவில் பாதுகாக்கப்படுகின்றன. கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ராபர்ட் புரூஸ் கோட்டை சங்கனகல்லு அருங்காட்சியகத்தில் கற்கருவிகள் மற்றும் பிற முக்கிய நினைவுச் சின்னங்களை ரவி பாதுகாத்து வைத்துள்ளார்.
"நான் அங்கு சென்றபோது, அவர்கள் சாம்பலை விற்றுக் கொண்டிருந்தார்கள். அதன் முக்கியத்துவத்தை ஏற்கெனவே உணர்ந்து, அதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஒருவேளை யாராவது வணிக ரீதியாக விற்கத் தொடங்கியிருக்கலாம்."
"அந்தப் பகுதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றோம். நாங்கள் அங்கு சென்றபோது, அதில் 50 சதவிகிதம் சேதமடைந்திருந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக நான் அங்கு சென்று வருகிறேன். வேறு ஏதாவது அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் தொடர்ந்து அங்கு செல்கிறேன். ஆனால், நீங்கள் தோண்டியதை ஏற்கெனவே மறைக்கும்போது, வேறு எதையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது."
"நாங்கள் இதுகுறித்து மக்களுக்கு விளக்கத் தொடங்கினோம். வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கிராம மக்களுக்கு விளக்கினோம். பள்ளிகளில் இதுகுறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். ஆனால் இப்போது, அதைச் சேமித்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. அதில் பெரும்பகுதி சேதமடைந்துவிட்டது," என்று ரவி கோரிசெட்டர் பெருமூச்சுவிட்டார்.
முக்கியமான விஷயங்களை மறைத்து, அவற்றைக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்ததாகவும், இங்கு வந்து யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
ஜுவாலாபுரத்தில் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை யார் செய்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
"ஏனென்றால் அங்கு கிடைக்கும் கருவிகள் ஒரு பகுதியளவு சான்றுகள் மட்டுமே. மனித எலும்புகள் கிடைத்தால், அவை உறுதியான ஆதாரமாக இருக்கும். அந்தக் கருவிகளை யார் உருவாக்கினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக இன்னும் அதிக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
ஆனால் அங்குள்ள சாம்பல் வணிகம் இந்த இடத்தை ஆராய்ச்சிக்குப் பொருத்தமற்றதாக மாற்றுகிறது. உள்ளூர் நிர்வாகத்தில் யாரும் அதைத் தடுக்க முயலவில்லை," என்று ரவி குறிப்பிட்டார்.
இது குறித்து பிபிசி நந்தியால் மாவட்ட ஆட்சியர் ராஜ குமாரியைத் தொடர்பு கொண்டபோது, அந்த இடத்தை விரைவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஜுவாலாபுரத்துக்கு இந்த பெயர் எப்படி வந்தது?

சமஸ்கிருதத்தில் ஜுவாலா என்றால் நெருப்பு என்று பொருள். அக்னி மலையில் இருந்து விழும் சாம்பலில் இருந்து இந்த கிராமம் அதன் பெயரைப் பெற்றதாகப் பலர் நம்புகிறார்கள்.
இருப்பினும், கிராமத்தின் பெயர் முதலில் ஜோலா, அதாவது "சோளம்" என்றும், படிப்படியாக அது ஜாவா என்று மாறியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்துக்கு அருகிலுள்ள மலைகளில் உள்ள பாறை குகைகளில் ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன. இவை வர்ணம் பூசப்பட்ட பாறை முகாம்கள் (Painted Rock Shelters) என்று அழைக்கப்படுகின்றன.
இந்த கிராமத்துக்கு அருகில் மட்டுமல்ல, யாகண்டியின் அருகிலும், பில்லசர்கம் குகைகள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து மனிதகுல வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
"யாகண்டி, பெட்டாஞ்சரா மற்றும் பில்லசர்கம் சுற்றி நூற்றுக்கணக்கான வர்ணம் பூசப்பட்ட பாறை முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யாகண்டியை சுற்றி இதுபோன்ற பல குகைகள் உள்ளன," என்று ரவி கூறினார்.
ஒருங்கிணைந்த கர்னூல் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களில் மனித குலத்தின் வரலாற்றுக்கு முந்தைய வரலாறு மற்றும் இந்தியாவின் கற்கால வரலாற்றின் வளமான சான்றுகள் உள்ளன.
ஆனால் அந்த இடங்களின் அழிவு தொடர்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












