தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடப்பு ஐபிஎல் தொடரில், இனி வரும் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் கேப்டனாக பொறுப்பு வகித்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் தோனி தலைமை ஏற்பார் என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ருதுராஜுக்கு இடது முழங்கையில் பந்து தாக்கியதில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக காலம் எடுக்கும் என்பதால், அவர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விலகியதையடுத்து, ஓர் ஆண்டுக்குப்பின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்கிறார்.

சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாகியுள்ள நிலையில் நாளை (ஏப்ரல்11) சென்னை அணி சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி வகித்த தோனி 2023-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். இந்த 15 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தோனி பெற்றுக் கொடுத்துள்ளார்.

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தலைமுறை மாற்றத்துக்கு ஏற்ப புதிய கேப்டன்களை நியமித்த நிலையில் சிஎஸ்கே மட்டும் நியமிக்காமல் இருந்தது. அதுமட்டுமின்றி, தோனிக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கேப்டனாக செயல்படுவதும் சிரமம் என்று கூறப்பட்டது.

தோனிக்கு அடுத்தாற்போல் கேப்டன் பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்று யோசித்து, கெய்க்வாட்டை தேர்வு செய்தனர்.

ஆனால், கடந்த சீசனில் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கூட செல்லமுடியாமல் கடைசி ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோற்று வெளியேறியது.

சிஎஸ்கே அணி தோனி தலைமையில் செயல்பட்டபோது, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றில்யே "கன்சிஸ்டென்ட் டீம்" அதாவது நிலைத்தன்மையான அணியாக சிஎஸ்கே வலம் வந்தது.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 235 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 142 போட்டிகளில், தோனி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தும், ஓர் அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் தோனி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு கடைசியாக சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டு, 5வது சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலக, ருதுராஜ் கெய்வாட்டிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் 2024ம் ஆண்டு அவர் கேப்டனாகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அந்த சீசனில் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட செல்லவில்லை.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோற்று படுமோசமான நிலையில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட்டின் இடது முழங்கையில் பந்து தாக்கி, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து, கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்பதாக சிஎஸ்கே நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் " ருதுராஜ் கெய்க்வாட்டின் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக அணியை வழி நடத்துவார். ருதுராஜ் விரைவில் குணமடைய வாழ்த்துகள்," எனத் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு