தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து 58 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. அதோடு, 1.413 என வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்துக்குச் சரிந்தது.

குஜராத் அணியின் வெற்றிக்கு தமிழக வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீண்டும் காரணமாகியுள்ளனர். அதிலும் தமிழக பேட்டர் சாய் சுதர்சன் கடந்த 5 போட்டிகளிலும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஆரஞ்சு தொப்பியை நோக்கி முன்னேறியுள்ளார்.

சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து குஜராத் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எனவும், சாய் கிஷோர் 2.2 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனவும் ராஜஸ்தான் அணியை நெருக்கடியில் தள்ளினர்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணியின் சரியில்லாத பேட்டிங்தான் தோல்விக்கான முக்கியக் காரணம். 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. சிவப்பு மண் கொண்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால் பேட்டர்கள் யாரும் நிதானமாக ஆடவில்லை என்பதுதான் விக்கெட் சரிவுக்கு காரணம்.

அது மட்டுமின்றி ராஜஸ்தான் அணியில் ஹெட்மெயருக்கு அடுத்தார்போல் நடுப்பகுதியில் பெரிதாக பேட்டர்கள் யாருமில்லை. டாப்ஆர்டர் 3 பேர்தான் ஓரளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர்கள். நடுப்பகுதியும், கீழ்வரிசையும் ராஜஸ்தான் அணியில் பலவீனமாக இருக்கிறது.

இதைச் சரிசெய்யாவிட்டால் ராஜஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுவிடும். நடுப்பகுதியில் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய வகையில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடக் கூடிய பேட்டர்கள் யாருமில்லை. ஷுபம் துபே, ஜூரெல் இருவரும் கடந்த சில போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார்கள்.

ஷிம்ரன் ஹெட்மயர்(52) மட்டுமே அரைசதம் அடித்தார். கேப்டன் சஞ்ஜூ சாம்ஸன்(41), ரியான் பராக்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற வகையில் ஜெய்ஸ்வால்(6), நிதிஷ் ராணா(1), ஜூரெல்(5), ஷுபம் துபே(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ஆர்ச்சரின் அதிரடி பந்துவீச்சு

வெற்றிக்குப் பின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "நன்கு ஸ்கோர் செய்திருந்தோம். சேஸிங்கும் எளிதாக இருக்கவில்லை. முதல் 4 ஓவர்களில் நாங்கள் நெருக்கடி கொடுத்துவிட்டோம். சாய், பட்லர் பார்ட்னர்ஷிப் ஆட்டம் அற்புதமாக இருந்தது, அதனால்தான் 200 ரன்களை கடக்க முடிந்தது. எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினர்," என்று தெரிவித்தார்.

அதோடு, ஒவ்வொருவரும் தனது பங்கை உணர்ந்து ஆடியதாகக் குறிப்பிட்ட அவர், "நாம் நினைத்தது போல் பந்துவீச்சாளர்கள் செயல்படும்போது கேப்டன்சி எளிதாகிறது. நான் யாரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தாலும் 100 சதவீத பங்களிப்பு செய்கிறார்கள். இஷாந்த் சர்மாவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்து வீசினார்," எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இந்த சீசன் சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் இரு போட்டிகளில் 6.3 ஓவர்களில் 109 ரன்கள்வரை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த போட்டிகளில் மீண்டு வந்த ஆர்ச்சர் 7 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் அதிரடியைக் காட்டியுள்ளார்.

இந்த ஆட்டத்திலும் ஆர்ச்சரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. சாய் சுதர்சன் சந்தித்த முதல் ஓவரில் ஆர்ச்சர் 152 கி.மீ வேகத்தில் பந்துவீசித் திணறடித்தார். 147 கி.மீ வேகத்தில் இன்ஸ்விங் வீசி சுப்மன் கில்லை கிளீ்ன் போல்டாக்கி மகிழ்ச்சியில் ஆர்ச்சர் திளைத்தார்.

அடுத்து வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு 2 ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்தி, ஷார்ட் லெக்கில் ஃபீல்டர் அமைத்து ஆர்ச்சர் அவுட் ஸ்விங் வீசியும், பவுன்ஸர் வீசியும் திணறவிட்டார். ஆனால், பட்லர் கடைசியில் பவுண்டரி அடித்து ஆர்ச்சருக்கு பதிலடி கொடுத்தார்.

சாய் சுதர்சன் எனும் நங்கூரம்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

குஜராத் டைட்ன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன், நங்கூரம் என்று தமிழக வீரர் சாய் சுதர்சனை குறிப்பிடலாம். இதுவரை 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்பட 40க்கும் அதிகமான ரன்களை 4 முறை அடித்துள்ளார். குஜராத் அணி ஒவ்வொரு முறையும் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்கப் புள்ளியாக சாய் சுதர்சன் ஆட்டம் அமைந்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய சுதர்சன் ஸ்கூப், டிரைவ், கட்ஷாட் என அடித்து ரன்களை சேர்த்தார். இதன்மூலம் 5.1 ஓவர்களில் குஜராத் 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அதில் 39 ரன்கள் சாய்சுதர்சன் சேர்த்தது. ஜாஸ் பட்லர் ஒரு கட்டத்தில் திணறி 12 பந்துகளில் 13 ரன்கள் என இருந்தார். அதன் பின்னர், அடுத்த 6 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 19 பந்துகளில் 31 ரன்களுக்கு முன்னேறினார்.

பட்லரும், சாய் சுதர்சனும் 2 விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். தீக்சனா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு குஜராத் ரன்ரேட் திடீரென சரிந்தநிலையில் மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான் களமிறங்கி சிறிய கேமியோ ஆடி 20 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்திக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி எல்லையில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஷுபம் துபே கைக்கு வந்ததைத் தவறவிட்டார். ஆனால், அதன் பிறகு ஒரு ரன் மட்டுமே சேர்த்த சுதர்சன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 46 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன் 19வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆங்கர்ரோல் எடுத்தார்.

ராகுல் திவேட்டியா(24) மற்றும் ரஷித்கான்(12) குஜராத் அணி 200 ரன்களை கடக்க உதவினர். 20 ஓவர்களில் குஜராத் அணி 217 ரன்கள் சேர்த்தது.

ராஜஸ்தான் திணறல்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணி 218 ரன்கள் எனும் பெரிய இலக்குடன் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 3வது முறையாக ஏமாற்றினார். அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில் ஆப்சைடு விலகிச் சென்ற பந்தை அடிக்க முயன்று டீப் தேர்டு திசையில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராணா ஒரு ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் கெஜ்ரோலியாவிடம் கேட்ச் கொடுக்கு விக்கெட்டை இழந்தார்.

ரியான் பராக் வந்த வேகத்தில் சிராஜ் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசினார். சாம்சன், ரியான் பராக் ஓரளவுக்கு ஆடி 26 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்திருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பராக் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது.

குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 7வது ஓவரில் ரியான் பராக் பந்தை அடிக்க முற்பட்டு பட்லரிடம் கேட்சானது. பேட் தரையில் மோதியபோது சத்தம் கேட்டது, ஆனால், பந்து பேட்டில் பட்ட சத்தமா அல்லது பேட் தரையில் மோதியதால் சத்தம் வந்ததா என்ற குழப்பத்தில் 3வது நடுவர் ரியான் பராக்கிற்கு அவுட் வழங்கினார். இதுகுறித்து கள நடுவரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்து பராக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஃபார்முக்கு வந்த ரஷித் கான்

கடந்த 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்த ரஷித் கான் இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். தனது முதல் ஓவரிலேயே துருவ் ஜூரெல் விக்கெட்டை எடுத்தார் ரஷித் கான்.

அதன்பின் ஹெட்மெயர் வந்தவுடன் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் பந்து சிறிது லெக்ஸ்டெம்புக்கு தள்ளி பிட்ச் ஆனதால் அவுட் வழங்கவில்லை. ஆனால் ரஷித் கான் குறிவைத்துப் பந்து வீசியதில் ஹெட்மயர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். ஷுபம் துபே ஒரு ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

நெருக்கடியளித்த சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

நடுப்பகுதியில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா இருவரும் கடைசி வரிசை விக்கெட்டுகளை கவனித்துக்கொண்டனர். சாம்சன், ஹெட்மெயர் இருவரும் அணியை மெல்ல வெற்றியை நோக்கி நகர்த்தினர். 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களுடன் ராஜஸ்தான் அணி வலுவாக இருந்தது.

பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு ஷார்ட் தேர்டு திசையில் கேட்ச் கொடுத்து சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 16வது ஓவரில் ஷார்ட் பந்தில் ஆர்ச்சர்(4), ஹெட்மெயர்(52) இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர்.

ராஜஸ்தான் அணி, 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்துத் தடுமாறியது. அதன் பிறகு அடுத்த 14 ரன்களுக்குள் மீதமிருந்த இரு விக்கெட்டுகளையும் சாய் கிஷோரிடம் இழந்து ராஜஸ்தான் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது.

அடுத்த ஆட்டம் யாருக்கு?

இன்றைய ஆட்டம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

நாள் - ஏப்ரல் 11

இடம் - சென்னை சேப்பாக்கம்

மும்பையின் அடுத்த ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் - ஏப்ரல் 13

இடம் - டெல்லி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) -288 ரன்கள் (5 போட்டிகள்)

சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்)

மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்)

பர்பிள் தொப்பி யாருக்கு?

நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.