ஒரே வீடியோ தர்பூசணி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி? என்ன நடந்தது?

தர்பூசணியில் கலப்படமா, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், விவசாயிகள் நஷ்டம், தமிழ்நாடு செய்திகள், தமிழக விவசாயிகள் , கோடைக்காலம், கோடை பானங்கள், விவசாயிகள், வேளாண் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நித்யா பாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ், சென்னை

கோடைக் காலத்தில் நல்ல வரவேற்பைக் கொண்டிருக்கும் தர்பூசணியில் ரசாயனம் ஊசி மூலமாக ஏற்றப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அதன் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள அனைவரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தர்பூசணியில் நிறமிகள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று சமீபத்தில் உணவுத்துறை பாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோதான் இதற்குக் காரணம் என்கின்றனர் விவசாயிகள். இழப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் விவசாய சங்கத்தினர்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் விளக்கம் அளிக்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது? பாதிக்கப்பட்ட விவசாயிகள் வைக்கும் கோரிக்கை என்ன?

'நாங்கள் விவசாயிகளுக்கு எதிரிகள் அல்ல' – பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரி விளக்கம்

சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலராக இருந்த சதீஷ்குமார் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "தர்பூசணி பழங்களில் நிறம் மற்றும் சுவைக்காக ரசாயனங்கள் ஏற்றப்படுவதாக" கூறினார். இவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதை 'டெமோவாக' செய்து காட்டிய அவர், பழத்தில் நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும்போது, அதில் 'டிஸ்யூ' காகிதம் ஒன்றை வைத்துத் தேய்த்தால், அடர் சிவப்பு நிறத்தில் அந்தக் காகிதம் மாறிவிடும் என்றும் கூறினார்.

இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற அவரின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவவே, மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்த ஆண்டில் தர்பூசணிக்கு பெரிய அளவில் விலை ஏதும் கிடைக்காததற்கு இதுதான் காரணம் என்று விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினார்கள்.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, ஏப்ரல் 3ஆம் தேதியன்று இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு விளக்கத்தை அளித்தார் சதீஷ்குமார். அதில், "தர்ப்பூசணிகள் சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு வாயில் புண் வருவதாக ஆங்காங்கே புகார்கள் வருகின்றன. யாரோ ஒரு சிலர் செய்த தவறு மூலமாக ஒட்டுமொத்தமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல," என்று அவர் கூறினார்.

மேலும், அவர் ஆய்வு செய்த பகுதியில், எலி கடித்த பழங்களை மட்டுமே அழித்ததாகவும், அந்தப் பழங்களில் எந்தவிதமான நிறமூட்டிகளும் சேர்க்கப்படவில்லை என்றும் உறுதியளித்தார். மக்கள் எந்த விதமான அச்சமுமின்றி இப்பழங்களை உட்கொள்ளலாம் என்றும் கூறினார் அவர்.

"ரசாயனம் ஏற்றப்பட்ட பழங்கள் அடர் சிவப்பு நிறத்திலும் அதீத இனிப்பு சுவையும் கொண்டிருக்கும். அதை உட்கொண்ட சில மணிநேரத்திற்குள் வாய்ப்புண், வயிற்றெரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை மக்கள் சந்திப்பார்கள்," என்று விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார்.

ஏப்ரல் 5ஆம் தேதியன்று, சதீஷ்குமாரை தமிழ்நாடு மருந்து நிர்வாகத் துறைக்குப் பணியிட மாற்றம் செய்தது தமிழக அரசு. திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தைக் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் கூறுவது என்ன?

தர்பூசணியில் கலப்படமா? முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், விவசாயிகள் நஷ்டம், தமிழ்நாடு செய்திகள், தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்கள் எந்தவிதமான அச்சமுமின்றி இப்பழங்களை உட்கொள்ளலாம்

தாராபுரத்தில் 3 ஏக்கர் நிலத்தில் தர்பூசணி விவசாயம் செய்து வருபவர் சக்திவேல் குப்புசாமி. ரசாயனம் தொடர்பான செய்தி வெளியான பிறகு நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் அவர்.

"எங்கள் குடும்பத்தில், நான், என் மனைவி, என் அக்கா மற்றும் அம்மா என நான்கு பேரும் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறோம். இருப்பினும் உரம், மருந்து, மின்சாரம் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு ஏக்கருக்கு (ஒரு விளைச்சலுக்கு) இரண்டு மாதங்களுக்குச் செலவு மட்டுமே ரூ. 15 ஆயிரம் வரை ஆகும். நல்ல விளைச்சலும் நல்ல விலையும் இருந்தால், ஒரு ஏக்கருக்கு எங்களால் ரூ.15- 20 ஆயிரம் வரை லாபம் பார்க்க இயலும்," என்று விளக்கினார் சக்திவேல்.

"தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வியாபாரிகள் தர்பூசணிகளை வாங்கிச் செல்வதுண்டு. இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பு வியாபாரிகள் எங்களிடம் ஒரு கிலோ பழத்தை ரூ.7க்கு வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது 2 ரூபாய்க்குத் தர முடியுமா என்று கேட்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3 டன் எடை கொண்ட பழங்கள் தேக்கமடைந்து நிலத்திலேயே வெடித்து அழுகிப்போயின," என்று கூறுகிறார் அவர்.

சுட்டெரிக்கும் கோடை என்பதால் விற்பனைக்குத் தயாரான நிலையில் இருந்த பழங்களை அறுவடை செய்யாததால் வெடித்தும், வெம்பியும் வீணாகிப் போவதாகத் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

'ஒரு வாரமாக வேலையில்லை'

தர்பூசணியில் கலப்படமா? முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், விவசாயிகள் நஷ்டம், தமிழ்நாடு செய்திகள், தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம், Food Safety and Drug Administration Department Tamil Nadu/ Facebook

படக்குறிப்பு, பாலக்கோடு பகுதியில் தர்பூசணியின் தரம் குறித்து ஆய்வு நடத்தும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

ஒட்டன்சத்திரம் விவசாயிகளிடம் இருந்து பழங்களை வியாபாரிகளுக்குக் கைமாற்றிவிடும் இடைத்தரகராகப் பணியாற்றி வருகிறார் ராமசாமி ஆறுமுகம்.

வீடியோவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துப் பேசும்போது, "இந்த சுற்று வட்டாரப் பகுதியில் பழங்களை விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலங்களுக்கு வாரம் ஒரு முறை சென்று விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு வியாபாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பேன்.

அவர்கள் பெரிய வண்டிகளில் வந்து பழங்களை வெட்டி எடுத்துச் செல்வார்கள். ஒரு கிலோவுக்கு எனக்கு ஐம்பது காசுகள் கமிஷனாக கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை இந்த வேலையை நான் பார்த்து வந்தேன். தற்போது வீடியோ வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக எந்த வியாபாரிகளும் என்னிடம் பழங்கள் இருப்பு குறித்துக் கேள்வி எழுப்பவில்லை.

வருகின்ற காலங்களிலும் தர்பூசணிக்கு நல்ல விலை இருக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே அடுத்த சில வாரங்களுக்கு எனக்கு வேலை ஏதும் இல்லாமல் வருமானமின்றி இருக்க நேரிடும்," என்று குறிப்பிடுகிறார் ராமசாமி.

'பழங்களை குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது'

தர்பூசணியில் கலப்படமா? முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், விவசாயிகள் நஷ்டம், தமிழ்நாடு செய்திகள், தமிழக விவசாயிகள்
படக்குறிப்பு, சென்னை மண்டல உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலராகப் பணியாற்றிய சதீஷ்குமார்

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மலர், காய்கனி வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ வைத்தியலிங்கம் பேசுகையில், "ஒரு வீடியோவுக்கு பிறகு தர்பூசணி விவசாயிகளின் நிலைமை தலைகீழாக ஆகிவிட்டது," என்று குறிப்பிடுகிறார்.

கோவிந்தராஜூ அளித்த தகவலின்படி, திண்டிவனம், செய்யாறு, வந்தவாசி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரியபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் தர்பூசணி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தர்பூசணிகளே சென்னையில் விற்பனைக்கு வருகிறது.

"சென்னையில் சந்தைப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் தர்பூசணிகளில் 5 முதல் 10 சதவிகித பழங்கள் மட்டுமே நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. மீத பழங்கள் அனைத்தும் ஒவ்வொரு வார்டிலும் உள்ள உள்ளூர் வியாபாரிகளிடம் கொடுத்து சந்தைப்படுத்துகின்றனர் விவசாயிகள்," என்று கூறுகிறார் கோவிந்தராஜூ.

பழத்தின் தரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடும் அவர், உணவுத்துறை அதிகாரிகளின் வீடியோ வருவதற்கு முன்பு, முதல்நிலை தரம் கொண்ட பழங்கள் கிலோ ஒன்று ரூ.20-க்கும், மத்திய தரம் கொண்ட பழங்கள் ரூ.15-க்கும், சிறிய ரக பழங்கள் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவிக்கிறார்.

"வீடியோ வெளியான பிறகு பழங்களின் விற்பனை மந்தமடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். வியாபாரிகள் ஏற்கனவே வாங்கிய பழங்களை குப்பையில் கொண்டு போய் கொட்டுகின்றனர். அறுவடை செய்யப்பட்ட பழங்களை, விலை போகவில்லை என்று தெரிந்தும், விவசாயிகள் நேரடியாக வந்து வியாபாரிகளிடம் இலவசமாக கொடுத்துவிட்டு செல்கின்றனர். அந்த பழங்களும் தற்போது குப்பைக்குத் தான் செல்கிறது," என்று தெரிவிக்கிறார் கோவிந்தராஜூ.

வெயில் காலத்தில் அதிக காலம் இந்த பழங்களை பாதுகாத்து வைப்பது கடினம். பழத்திற்கான விலை வருங்காலங்களில் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் ஆனால் அத்தனை காலம் வரை இருப்பில் இருக்கும் பழங்கள் தாக்குபிடிக்குமா என்பது கேள்வி தான் என்று தெரிவிக்கிறார் அவர்.

'தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்'

தர்பூசணியில் கலப்படமா? முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், விவசாயிகள் நஷ்டம், தமிழ்நாடு செய்திகள், தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் சந்தைப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்படும் தர்பூசணிகளில் 5 முதல் 10 சதவிகித பழங்கள் மட்டுமே நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசிய போது, இந்த இழப்பீட்டிற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

முறையான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்கள் ஏதுமின்றி இத்தகைய வீடியோவை உணவுத்துறை அதிகாரிகள் எவ்வாறு வெளியிட முடியும் என்ற கேள்வியை எழுப்பிய அவர், "பொறுப்பற்ற வகையில் இவர்கள் வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா என்பதை அரசு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்," என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த அவர்,"சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடுமா? தமிழகத்தில் மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தர்பூசணி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இதனால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்," என்றார் பாண்டியன்.

விவசாயிகள் அடைந்த நஷ்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், பழங்கள் சாப்பிட பாதுகாப்பானவையாகவே இருக்கிறது என்று கூறினார். மேலும், "விவசாயிகள் இத்தகைய கலப்படத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது," என்று தெரிவித்தார். இழப்பீடு குறித்து எந்த விதமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு