பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி, தாய்ப்பால் வங்கி, தாய்ப்பால் சேகரிப்பு, தாய்ப்பாலை எப்படி சேகரிப்பது, தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சோஃபியா பெட்டிஸா
    • பதவி, பிபிசி உலக சேவை

திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை நிபுணர்கள், மாய சக்தியின் பிறப்பிடம் என்றும் கூறுகின்றனர்.

தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பலை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர்.

மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான ஜேம்சன் ரைடெனூர் அவருடைய 39 வயதில் முதன்முறையாக தாய்ப்பாலை அருந்தினார். அவருடைய துணைவி மெலிசா குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவந்தார். அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை ஜேம்சன் தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக சேர்த்து வந்தார்.

"மெலிசா இதனை 'ஒருவிதமாக' நினைத்தாலும் கூட, நான் இதனை 'ஷேக்கில்' பயன்படுத்துகிறேன்," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தாய்ப்பாலை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, 'பாடி பில்டர்' ஒருவர் யூடியூபில் பேசியதை பார்த்த பிறகு ஜேம்சன் தாய்ப்பாலின் நன்மை குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார்.

"அந்த உடற்பயிற்சி செய்யும் நபர் பெரிய பலசாலியாக இருந்தார்," என்று ஜேம்சன் தெரிவித்தார்.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம், Jameson Ritenour

படக்குறிப்பு, தாய்ப்பாலை உட்கொள்வதில் அதிக கவனம் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்ற போதும், ஜேம்சன் தாய்ப்பால் அவருக்கு தேவையான உத்வேகத்தை ஜிம்மில் வழங்குகிறது என்று நம்புகிறார்.

தாய்ப்பாலை உணவில் சேர்த்துக் கொள்வது ஜேம்சனின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு 226 கிராம் (8 அவுன்சஸ்) நிறை கொண்ட இரண்டு தாய்ப்பால் 'பாக்கெட்டுகளை' அவர் பயன்படுத்துகிறார்.

"என் வாழ்வின் மிகவும் சிறந்த தோற்றத்தில் நான் தற்போது இருக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"தசை வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் உதவுகிறது. 8 வாரங்களில் என்னுடைய தசை வளர்ச்சி மேம்பட்ட அதே நேரத்தில் உடல் எடையும் எனக்கு குறைந்தது," என்று அவர் தெரிவிக்கிறார்.

தாய்ப்பாலை தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் இருந்து அவருக்கு உடல் நலக்குறைவோ, காய்ச்சலோ ஏற்பட்டதாக நினைவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

"நான் குழந்தை போலவே வளர்ந்து, குழந்தை போலவே தூங்க விரும்புகிறேன். எனவே நான் குழந்தை போலவே சாப்பிட விரும்பினேன். நான் நன்றாக உணருகிறேன். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறேன்," என்று ஜேம்சன் தெரிவிக்கிறார்.

ஆன்லைனில் வாங்குவது ஆபத்தானது!

தாய்ப்பால் அருந்துவதால் பெரியவர்களின் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அதனால் பயன்கள் சில இருக்கின்றன என்று நிகழ்வுச் சான்றுகளை (anecdotal evidence) குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள்.

"தாய்ப்பாலில் அதீத புரதம் இருக்கிறது. இதனால் குழந்தையின் உடலில் தசை வளர்ச்சியானது வேகமாக இருக்கிறது. 'பாடி பில்டர்களுக்கு' இது தான் தேவை," என்று கூறுகிறார் மருத்துவர் லார்ஸ் போட். அமெரிக்காவின் சாண்டியாகோவில் அமைந்திருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனித பால் நிறுவனத்தின் (Human Milk Institute) இயக்குநராக போட் பணியாற்றி வருகிறார்.

"பாடி பில்டர்களுக்கு அவர்களின் உடலைப் பற்றிய நல்ல புரிதல் உள்ளது என்பதால், அந்த பயன்பாட்டில் எதோ ஒன்று உள்ளது. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்று தெரியவில்லை," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் முகநூல், க்ரைக்லிஸ்ட் மற்றும் ரெட்டிட் சமூக வலைதளங்கள் மூலம் வாங்கப்படும் தாய்ப்பால் எங்கிருந்து வருகிறது என்பதில் சந்தேகம் நிலவுவதால் இந்த விசயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் போட்.

"அந்த பால் சோதனைக்கு உட்படுத்தப்படாதது. அதில் குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்துகள் இருக்கலாம். ஹெச்.ஐ.வி. மற்றும் ஹெபாடிடிஸ் போன்ற நோய்களின் தொற்று காரணிகள் அதில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன," என்று எச்சரிக்கிறார் போட்.

தாய்ப்பாலை வழங்கும் பெண்ணின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தே தாய்ப்பால் நல்லதாக இருக்கலாம். மேலும் அதில் பல தொற்றுகளுக்கான காரணிகளும் இருக்கலாம்.

முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாத, ஆரோக்கியமற்ற சூழல்களில் தான் பெண்கள் பெரும்பாலும் தாய்ப்பாலை 'பம்ப்' செய்து சேமித்து வைக்கின்றனர். எனவே தாய்ப்பால் எளிதில் நஞ்சாக மாறலாம்.

அமெரிக்காவில் உள்ள நேஷன்வைட் குழந்தைகள் மருத்துவமனை 2015-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் போது ஆன்லைனில் வாங்கப்படும் தாய்ப்பாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 101 மாதிரிகளில் 75% மாதிரிகளில் ஆபத்தை விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 10% மாதிரிகள் மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கு வழங்கப்படும் தாய்ப்பால் 'ஃபார்முலாக்கள்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம், Jameson Ritenour

படக்குறிப்பு, ஜேம்சன் ஆன்லைன் மூலம் வாங்கிய தாய்ப்பால் பாக்கெட்டுகள்

மெலிசாவுடனான உறவில் இருந்து ஜேம்சன் வெளியேறிய பிறகு அவருக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை. எனவே அவர் ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்க ஆரம்பித்தார்.

கெட்டுப்போன தாய்ப்பாலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவருக்கு போதுமான விழிப்புணர்வு அப்போது இல்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

"இணையத்தில் யாரோ ஒரு நபரிடம் இருந்து நான் தாய்ப்பாலை வாங்கினேன். நான் முகநூலில் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் ஒரு சாதாரண பெண்ணாகவே இருந்தார்," என்று தெரிவித்த ஜேம்சன்,"என்னுடைய வாய்ப்புகளை நான் தவறவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன்," என்று கூறுகிறார்.

போதுமான அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லாதது அவருக்கு வருத்தம் அளிக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, அவருடைய சொந்த அனுபவம் மிகவும் நேர்மறையாக இருக்கிறது என்று கூறுகிறார்.

"நான் சந்திக்கும் அவமானங்கள் தான் நேர்மறையாக இல்லை," என்று தெரிவித்த அவர், "மக்கள் என்னை அசௌகரியமாக பார்க்கின்றனர். ஏன் என்றால் தாய்ப்பாலானது குழந்தைகளுக்கானது. ஆனால் அவர்கள் நினைப்பது போன்று அவ்வளவு மோசமானதாக இல்லை," என்று கூறுகிறார் ஜேம்சன்.

தாய்ப்பாலை பெரியவர்கள் அருந்துவது சரியா?, தாய்ப்பால் நன்மைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது

ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் என்ன ஆவார்கள்?

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்று ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் மருத்துவர் மேகன் அசாத், "நான் ஒரு போதும் பெரியவர்கள், தாய்ப்பாலை அருந்த வேண்டும் என்று கூற மாட்டேன்," என்று தெரிவிக்கிறார்.

"இது அவர்களுக்கு ஆபத்து விளைவுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் உண்மையாகவே தாய்ப்பால் தேவை உள்ள குழந்தைகளுக்கு இது சாத்தியமான ஆபத்தை ஏற்படுத்தலாம்," என்று கூறுகிறார்.

மருத்துவர் போட் இது குறித்து பேசும் போது, "தேவைக்கு அதிகமாக இருக்கும் தாய்ப்பாலை லாபத்திற்காக விற்பதற்கு பதில் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்," என்று கூறுகிறார்.

"வறுமையில் வாடும் தாய்மார்கள் ஆன்லைனில் தாய்ப்பாலை விற்பனை செய்வதன் மூலமாக பணம் ஈட்டலாம் என்று நினைத்தால், அது பெரியவர்கள் மத்தியில் தாய்ப்பாலை உணவாக எடுத்துக் கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும்," என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அசாத்.

ஆனால் இதில் எந்த விதமான குற்ற உணர்வும் ஏற்படவில்லை என்று ஜேம்சன் தெரிவிக்கிறார்.

"பசியோடு இருக்கும் குழந்தைகளைப் பற்றி கவலைப்படும் மக்கள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நான் ஒன்றும் மருத்துவமனைகளின் முன்பு பாலூட்டும் தாய்மார்களிடம் சென்று பால் வேண்டும் என்று கேட்கவில்லை."

உண்மையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களிடம் சுரக்கும், தேவைக்கு மிஞ்சிய தாய்ப்பாலை வழங்குவதற்காக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கிறார்.

சாத்தியமான சுகாதார பலன்கள்

தாய்ப்பால் இதுவரை அதிகம் ஆய்வுக்குட்படுத்தப்படாத பகுதியாகும்

"ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கிய மக்கள் நீண்ட காலமாக தாய்ப்பால் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை. தேவையற்ற பெண்களின் பிரச்னையாக இதைக் கருதினார்கள்," என்று கூறிய மருத்துவர் அசாத், இது ஒரு "ஆணாதிக்கப்பார்வை," என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் அது மாறிவருகிறது.

தாய்ப்பால் குடிப்பதால் பெரியவர்களுக்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான ஆபத்துகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்படும் கீல்வாதம், இருதய நோய், புற்றுநோய் மற்றும் 'இரிட்டேடபிள் பவுல் சிண்ட்ரோம்' உள்ளிட்ட நோய்களுக்கு எவ்வாறு தாய்ப்பாலை கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு, உருகுவேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புட்டிகளில் அடைத்து சேமித்து வைக்கப்பட்டுள்ள தாய்ப்பால்

தாய்ப்பாலில் காணப்படும் ப்ரீபையோடிக் நாரிழையான ஹெச்.எம்.ஓ-வின் (Human Milk Oligosaccharides) பலன்கள் குறித்து ஆர்வம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஆசாத்.

இந்த நாரிழையை மனிதர்களால் செரிமானம் செய்ய முடியாது. ஆனால் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பாக்டீரியா இந்த நாரிழையை பயன்படுத்திக் கொள்கிறது.

"ஆராய்ச்சியாளர்கள் இந்த நாரிழையை பயன்படுத்தி பெரியவர்கள் மத்தியில் குடலில் வீக்கம் மற்றும் அழற்சியை உருவாக்கும், 'அழற்சி குடல் நோய்க்கு (inflammatory bowel disease)' சிகிச்சை அளிக்க இயலுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு 'மைக்ரோபையோம்கள்,' மிகவும் முக்கியமானது என்று நம் அனைவருக்கும் தெரியும். எனவே குடல் பகுதியில் இருக்கும் மைக்ரோபையோம்களை மேம்படுத்த புதிய வழிகளை நாம் கண்டுபிடித்தால் அது அனைத்து வகையான நன்மைகளையும் வழங்கும். தாய்ப்பாலில் காணப்படும் ஹெச்.எம்.ஓ நாரிழை சாத்தியமான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக தெரிகிறது," என்று அவர் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டு எலி மீது நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், ஒரே ஒரு ஹெச்.எம்.ஓ இதயத்தில் உள்ள ஆர்ட்டரிஸில் உருவாகும், அதேரோஸ்க்லேரோசிஸ் (atherosclerosis) என்ற அடைப்பை குறைக்க உதவியதை கண்டறிந்தார் மருத்துவர் போட். இந்த அடைப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

"தாய்ப்பாலில் உள்ள மூலக்கூறுகள் தனித்துவமானவை. மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்படும் ஒரே பொருள் இது தான்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் போட்.

செயற்கை மூலக்கூறுகளைக் கொண்டு உருவாக்கப்படும் மருந்துகள் போன்றில்லாமல், தாய்ப்பால் பாதுகாப்பானது. அதிக திறனுடன் செயல்படும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கிறார் அவர்.

சாத்தியமான நன்மைகள் குறித்து இவர்கள் பேசினாலும், உண்மையில் ஆய்வக தரவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

மருத்துவர் போட் நம்பிக்கையுடன் இருப்பது போன்று, தற்போது நடைபெற்று வரும் ஆய்வக ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை தாய்ப்பால் மூலக்கூறுகள் வகிக்கும்.

"மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையை குறைக்க இதனால் முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்," என்று மருத்துவர் போட் தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.