சிஎஸ்கே பவுலர்களின் தூக்கம் கெடுத்த இந்த 'இடது கை சேவாக்' யார்?
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பௌலர்கள் வயிற்றில் புளியை கரைத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டார் பிரியான்ஷ் ஆர்யா. அவருக்கு வயது வெறும் 24 தான்.
இன்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தை டீப் பாக்வேர்டு பாயிண்டில் ஒரு அபாரமான சிக்ஸர் வைத்து ஆட்டத்தை துவங்கினார் பிரியான்ஷ் ஆர்யா.
அவரை கட்டுப்படுத்த அடுத்த பந்தே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோட்டை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் பிரியான்ஷ் ஆர்யா ஆடிய ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு வான்கடே மைதானத்தில் பிளேஆஃபில் சிஎஸ்கேவின் கனவை சேவாக் நொறுக்கிய ஆட்டத்தை நினைவு படுத்தியது.
ஆர்யா பேட்டிங் ஸ்டைலைப் பார்த்தால் சேவாக் இடதுகையில் பேட்டிங் செய்ததுபோல்தான் இருந்தது, அதாவது சேவாக் அதிரடியைப் போன்று ஆர்யாவின் அதிரடி ஆட்டமும் இருந்தது. பதிராணா வீசிய வைடு யார்கர், புல்டாஸ் என எது வீசினாலும் பந்து சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது. சிஎஸ்கே அணியில் நேற்று ஒரு பந்துவீச்சாளரையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பிரியான்ஷ் ஆர்யாவை எவ்வாறு அவுட் ஆக்குவது என தெரியாமல் சென்னை அணியினர் திணறி வந்தனர்.
பிரியான்ஷ் ஆர்யா டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். கௌதம் கம்பீரின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி அவர் பெற்றார். டெல்லி பல்கலைகழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
ஐபிஎல் டி20 வலைதள தகவல்படி, ஆர்யா 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியை வழிநடத்துகையில் தனது சிக்ஸர் அடிக்கும் திறனுக்காக பெரிதும் அறியப்பட்டவர்.
கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக்கில் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக, தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். அதனாலேயே ஆர்யாவை ஸ்பெஷல் ப்ளேயர் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அழைத்துள்ளார். அந்த ஆட்டத்தில் அவரது அணி 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது.
அந்த போட்டியின் மூலம் கவனம் பெற்றவருக்கு சையது முஷ்டாக் அலி கோப்பையில் டெல்லி அணி சார்பாக விளையாட இடம் கிடைத்தது. அதில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு மிரட்டல் ஆட்டம் ஆடினார்.
புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்த அந்த அணிக்கு எதிராக, 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகளை அடித்து 103 ரன்கள் எடுத்தார்.
கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராக தற்போது பிரியான்ஷ் ஆர்யா விளையாடியுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் அநாயசமாக சிக்ஸர்களை விளாசி அதீத ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து ஆர்யா கவனம் ஈர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் பார்வை பட, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரியான்ஷை எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. 3 கோடியே 80 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.
பிரியான்ஷுக்கு ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



