பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை

பட மூலாதாரம், Sneha Jha
- எழுதியவர், அன்னா எம்.எம். வெட்டிகாட்
- பதவி, சினிமா செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக
பி.கே. ரோஸி ஒரு மலையாள திரைப்பட நடிகை. பட்டியலினத்தைச் சேர்ந்த அவரின் 120வது பிறந்தநாளை கூகுள் டூடுள் சிறப்பித்து அவரது கருத்தோவியத்தை வெளியிட்டது. அதற்குப் பிறகு பி.கே. ரோஸி, அனைவராலும் பேசப்படும் ஒரு நடிகையாக மாறினார்.
ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக அவர் நடித்தபோது, அவருக்கு இத்தகைய வரவேற்பும், மரியாதையும் கிடைக்கவில்லை. அதன் விளைவாக அவர் நாகர்கோவிலில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது.
பி.கே.ரோஸி, அவரின் பூர்வீக மாநிலத்தில் இருந்து விரட்டப்பட்டது ஏன்? கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ராஜம்மா என்ற பி.கே.ரோஸி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்ததன் பின்னணி என்ன?
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சினிமாவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரோஸியின் சிறு முன்னெடுப்பு இன்று ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதா?
மலையாள சினிமாவின் முதல் நடிகை
"அகங்காரரூபினி,
பாவி,
விலை மாதர்,
மனுஸ்மிருதியின் விதிகளை உடைத்த இழிவான பெண்..."
புகழ்பெற்ற மலையாள கவிஞர் குரீபுழ ஶ்ரீகுமார் எழுதிய 'நடியுடே ராத்திரி' (ஒரு நடிகையின் இரவு) என்ற கவிதையில் இடம்பெற்ற வரிகள் இவை.
மலையாள சினிமாவின் முதல் பெண் நடிகரான ரோஸியின் முதல் மற்றும் கடைசி படமான 'விகதகுமாரன்' திரைக்கு வந்தபோது, இத்தகைய வசைகளைத் தான் சாதிய சமூகம் அவர் மீது வீசியது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அவர் நாயர் சமூகப் பெண்ணாக அந்த ஊமைப் படத்தில் நடித்திருப்பார்.
கடந்த 1928ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஜே.சி. டேனியல். மலையாள சினிமாவின் தந்தை என்று இவர் கருதப்படுகிறார். விகதகுமாரன் என்ற அந்தப் படம் இந்த இவர்கள் இருவரின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.
யார் இந்த பி.கே. ரோஸி

பட மூலாதாரம், Google
பி.கே. ரோஸி, கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் 1900களில் பிறந்தவர். அவரைப் பற்றி, 'நஷ்ட நாயகா' என்ற புத்தகத்தை எழுதிய வினு ஆப்ரஹாம், "ரோஸியின் பிறப்பு மற்றும் இறப்பு குறித்து எந்த விதமான உண்மையான தகவலும் இல்லை," என்று கூறுகிறார்.
இன்று பலராலும் பார்க்கப்படும், பகிரப்படும் பி.கே. ரோஸியின் புகைப்படமும் உண்மையான புகைப்படம்தான் என்று கருதப்படவில்லை என்பதையும் அவர் தெரிவிக்கிறார்.
கேரளத்தில் பட்டியலினமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் புலையர் சமூகத்தில் பிறந்தவர் பி.கே.ரோஸி. புல்லறுக்கும் பணியைச் செய்து வந்தவர் அவர். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஆர்வம் காரணமாக அவர் 'காகரிசி' நாடகக் கலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இது, இசையை உள்ளடக்கிய நாட்டுப்புற நாடகக் கலை.
கடந்த 1900களில் இதுபோன்ற நாடகத்தில் நடித்த முதல் பெண்மணி ரோஸி என நம்பப்படுகிறது. நாட்டுப்புறக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில்தான் அவர் இயக்குநர் டேனியலை சந்தித்தார். 1928ஆம் ஆண்டில் டேனியல் இயக்கத்தில் உருவான விகதகுமரான் என்ற படத்தில் ரோஸி நடித்தார்.
அந்தப் படத்தில் அவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பார். சாதி இந்து பெண்ணாக ஒரு பட்டியலினப் பெண் நடித்திருப்பது மலையாள சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதி இந்து பிரிவினர் திரையரங்குகளைச் சூறையாடினார்கள். அங்கிருந்து டேனியலையும் ரோஸியையும் துரத்தியடித்தனர். ஆனால் அந்தத் தாக்குதல் அதோடு நிற்கவில்லை. ரோஸியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
கடந்த 2003ஆம் ஆண்டு ஶ்ரீகுமார் எழுதிய அந்தக் கவிதை பிரசுரமாகவே, ஒரு நூற்றாண்டு காலம் காணாமல் போன ரோஸி பொது வெளிச்சத்திற்கு வந்தார். அவரைப் பற்றி மிகவும் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. கூகுள் அவரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது 120வது பிறந்தநாள் எனக் குறிப்பிட்டு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று டூடுள் ஒன்றை வெளியிட்டது.
உண்மையில் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த பி.கே. ரோஸி

பட மூலாதாரம், Prime Time Cinema production house
படம் வெளியான பிறகு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் திருவனந்தபுரத்தில் இருந்து வெளியேறினார். நாகர்கோவிலுக்கு கேசவ பிள்ளை என்பவர் ஓட்டி வந்த லாரியில் ஒளிந்து கொண்டு சென்றார்.
பின்னாளில் ரோஸி, சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த கேசவ பிள்ளையை திருமணம் செய்துகொண்டார். எந்தச் சமூகம் அவரை ஏற்றுக் கொள்ள மறுத்ததோ, அதே சமூகத்தில் தனது சொந்த அடையாளங்களை மறைத்து இறுதிக் காலம் வரை வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. 1980களில் அவர் இறந்திருக்கலாம். ஆனால் முழுமையான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
விகதகுமாரன் படத்தை இயக்கிய டேனியல் ஒரு செல்வந்தர். ஆனால் அந்தப் படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு மற்றும் தோல்வி காரணமாக அவர் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது.
கடந்த 1960களில் வரலாற்று ஆசிரியரும் ஊடகவியலாளருமான செல்லங்காட் கோபாலகிருஷ்ணன் மலையாள திரையுலகில் டேனியலின் பங்களிப்பை ஆய்வு செய்து அவரை மலையாள திரையுலகின் தந்தை என்று அங்கீகரித்தார். டேனியல் 1975ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
தென்னிந்திய திரையுலகில் பேசுபொருளாக மாறிய ரோஸி
கடந்த 1970களில் ரோஸி பற்றி எழுத ஆரம்பித்தார் வரலாற்று ஆசிரியர் குன்னுக்குழி எஸ். மணி. 21ஆம் நூற்றாண்டில் சில முறை ரோஸிக்கு அங்கீகாரம் அளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2005ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பட்டியலின எழுத்தாளர்கள் சங்கத்தினர் போராட்டக் கடிதம் ஒன்றை வெளியிட்டபோது தான், வினு ஆப்ரஹாமுக்கு ரோஸி பற்றி தெரிய வந்தது.

பட மூலாதாரம், Getty Images
அதன் பிறகு ரோஸி குறித்த ஆராய்ச்சியில் அவர் இறங்கினார். அவர் தனது ஆய்வின் அடிப்படையில் 'நஷ்ட நாயகா' என்ற புத்தகத்தை எழுதினார். 2013ஆம் ஆண்டு இயக்குநர் கமல் மலையாளத்தில் 'செல்லுலாய்டு' என்ற படத்தை எடுத்தார். அதில் டேனியலாக ப்ரித்விராஜ் சுகுமாரனும், ரோஸியாக சாந்தினி கீதாவும் நடித்தனர்.
சாதி இந்து சமூகத்தினரின் கண்ணோட்டத்தில் ரோஸியின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற கடுமையான விமர்சனம் அப்போது முன்வைக்கப்பட்டது. ஆனால் ரோஸியின் வாழ்க்கை குறித்து இன்றளவும் பேசப்படும் ஒரு பிரபலமான படைப்பாக அந்தப் படம் அமைந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 'வுமென் இன் சினிமா கலெக்டிவ்' (WCC), பி.கே. ரோஸி ஃபிலிம் சொசைட்டியை உருவாக்கியது. சினிமாவில் பெண்கள் மற்றும் பெண்ணியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது.
"ரோஸியின் கதை முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டியதில்லை. ஆனால் அவரின் இருப்பே சாதிய, பாலின பாகுபாடுகளுக்கு எதிரான அடையாளமாக மாறிவிட்டது," என்று கூறுகிறார் WCC-யின் நிறுவனர்களின் ஒருவரான பினா பால்.
தமிழ்நாட்டில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், பி.கே. ரோஸி திரைப்பட விழாவை ஆரம்பித்தது. அதில் பட்டியலின மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் ரோஸிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தியாவில், ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பட்டியலின ஆளுமைகளை நினைவுகூரும் வகையிலும், பட்டியலின மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள், கருத்தரங்குகள், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், @NeelamPublicat1/x
சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வோர் ஆண்டும் தலித் வரலாற்று மாதத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏப்ரல் மாதம் முழுவதும் நடத்தும்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடல் நிகழ்வை ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 7 தேதி வரை நடத்துகிறது. நுங்கம்பாக்கம் மேக்ஸ் முல்லர் பவனில் நடைபெறவிருக்கும் இந்தத் திரையிடல் நிகழ்வுக்கு, பி.கே. ரோஸி ஆவண மற்றும் குறும்பட விழா என்று பெயரிடப்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் நிகழ்ந்துள்ளதா?
தென்னிந்திய சினிமாவில் தற்போது நடைபெற்று வரும் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. ஆனால் பட்டியலின மக்களும், பெண்களும் தொடர்ச்சியாக இந்திய சினிமாவில் தங்களுக்கான இடத்தைப் பெற்றாலும், கதையின் நாயகன், நாயகியாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடித்தால்தான் உண்மையான நீதியை அடைய முடியும்.
இன்றும்கூட, படங்களில் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கதாநாயகன், கதாநாயகியாக நடிப்பது அரிதாகவே உள்ளது. மேலும் திரையுலக பிரபலங்களின் பட்டியலின அடையாளம் பொதுவெளியில் அறியப்படுவதும் மிகவும் அரிதாகவே உள்ளது.
ரோஸி இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு குணச்சித்திர வேடங்களே கிடைத்திருக்கும் என்று நம்புவதாகக் கூறுகிறார் இயக்குநர் கமல்.
பட்டியலின மக்களின் வாழ்வை மையப்படுத்தி தமிழ் மற்றும் மராத்தி திரையுலகில் மட்டுமே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான படங்கள் ஆண்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் படங்களாக உள்ளன. நூறு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, ரோஸி என்ற பெயர் கொண்ட ஒரு பட்டியலினப் பெண் உருவாக்கிய பாதையை இந்திய சினிமா முழுமையாகப் பின்பற்றவில்லை.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












