சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?

- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி தெலுகு
விநோதமான எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகளின் சிலைகள் நிறைந்த இந்த கல்லறை, நவீன இந்திய வரலாற்றில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் நிலவிய ஐரோப்பிய காலனிய ஆட்சிக்கு சாட்சியாக இது நிற்கிறது.
இந்த டச்சு கல்லறை சென்னை அருகே ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் பழவேற்காடு பகுதியில்அமைந்துள்ளது.
இது ஒரு கல்லறை மட்டுமல்ல, ஒரு காலத்தில் அதன் அருகில் ஒரு டச்சு கோட்டை இருந்தது. இது கெல்டிரியா கோட்டை என்று அழைக்கப்பட்டது.

இந்த கல்லறை கட்டப்படுவதற்கு முன்பே கோட்டை கட்டப்பட்டிருந்தது. இந்த டச்சு கல்லறை எப்போது நிறுவப்பட்டது என்பதில் வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
My Biography: Palliacatta the Pulicat என்ற நூலில் டாக்டர் ஜெயபால் அசாரியா எழுதிய விவரங்களின்படி, டச்சுக்காரர்கள் 1610 இல் பழவேற்காட்டில் ஒரு தளத்தை நிறுவினர், 1613 இல் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர். இந்த கல்லறை பின்னர் 1656 இல் கட்டப்பட்டது.
போர்த்துக்கீசிய கோட்டையின் அஸ்திவாரத்தில்...

டச்சுக்காரர்கள் இந்தியாவில் தங்கள் குடியேற்றங்கள் அனைத்தையும் வர்த்தக நிலையங்களாக வைத்திருந்தனர், ஆனால் பழவேற்காடு குடியிருப்பு மட்டுமே கோட்டையாக கட்டப்பட்டது.
பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இது ஏற்கனவே இருந்த போர்த்துக்கீசிய கோட்டையின் அஸ்திவாரங்களின் மீது கட்டப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த நேரத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த விஜயநகர ஆட்சியாளர்களின் அனுமதியுடன் கட்டப்பட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.
பின்னர், முகலாயப் பேரரசின் விரிவாக்கம் மற்றும் ஆங்கிலேயருடனான போட்டி காரணமாக வர்த்தகம் வீழ்ச்சியடைந்ததால், டச்சுக்காரர்கள் படிப்படியாக இலங்கையை நோக்கி நகர்ந்தனர்.
1606 முதல் 1825 வரை கிட்டத்தட்ட 214 ஆண்டுகள் டச்சு ஆட்சி இந்த இடத்தில் நீடித்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
பின்னர், இப்பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்த டச்சு கல்லறையை பராமரித்து வருகிறது.

மண்டை ஓடு சிலைகளுடன் டச்சு பாணி அலங்காரம்
இந்த கல்லறையின் நுழைவாயிலில் ஒரு மண்டை ஓடு மற்றும் பிற டச்சு பாணி அலங்காரங்கள் உள்ளன. இந்த வளைவில் கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டில் உள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தின் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

கல்லறைகளில் அங்கு புதைக்கப்பட்டவர்களின் விவரங்கள் டச்சு மொழியில் உள்ளன. இவர்களில் டச்சு அதிகாரிகள், வணிகர்கள், வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,பிற முக்கியஸ்தர்கள் அடங்குவர். இங்கு மொத்தம் 76 கல்லறைகள் உள்ளன.
இது கைகளில் தலை சாய்ந்து நிற்கும் ஓர் எலும்புக்கூடு போல் தெரிகிறது. இந்த கல்லறைகள் இந்திய தொல்லியல் துறையால் பழுது பார்க்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்தில் மேலும் 22 பேரின் கல்லறைகளைக் கொண்ட மற்றொரு இடம் உள்ளது. ஒரு பண்டைய போர்த்துக்கீசிய தேவாலயமும் உள்ளது.
- தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது?
- வசாய் கோட்டை: இந்தியாவில் ஒரு ஐரோப்பிய நகரம் - எங்கே இருந்தது? என்ன ஆனது?
- இருபது வீதிகள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய இலங்கையின் பிரமாண்ட கோட்டை
- சத்ரபதி சிவாஜி மருமகன் கைப்பற்றிய ஆத்தூர் கோட்டையை மீட்க ஔரங்கசீப் உதவியது எப்படி?

தென்னிந்தியாவில் ஒரு சிறப்பான இடம்..
தென்னிந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் பழவேற்காடு ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
பண்டைய தமிழ் மன்னர்கள் முதல் விஜயநகர பேரரசு வரை பல மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இந்த துறைமுகம் வர்த்தக மையமாக செயல்பட்டது.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசியர்கள் இங்கு வந்தனர். அவர்கள் வந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு டச்சுக்காரர்கள் வந்தார்கள்.
இந்த வரலாற்றைப் பாதுகாக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசும் செயல்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












