குட் பேட் அக்லி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? பழைய அஜித்-ஐ பார்க்க முடிந்ததா?

குட் பேட் அக்லி திரை விமர்சனம், நடிகர் அஜித் குமார், நடிகை த்ரிஷா, ஊடக விமர்சனம், ஆதிக் ரவிச்சந்திரன்

பட மூலாதாரம், @MythriOfficial/X

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் 10 அன்று வெளியாகியுள்ளது குட் பேட் அக்லி திரைப்படம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அஜித் நடிப்பில் தொடர்ச்சியாக வந்த ''சீரியசான'' படங்களுக்கு மத்தியில், ஜாலியான ஒரு 'கேங்க்ஸ்டர்' ட்ரைலர் பலரையும் ஈர்த்தது.

த்ரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் மட்டுமின்றி, அர்ஜூன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, ரகுராம், ரெடின் கிங்ஸ்லி, ப்ரியா பிரகாஷ் வாரியர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு மற்றும் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிம்ரன் உள்ளிட்ட பலரும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை அமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

படத்தின் ட்ரைலர் வெளியான நாளில் இருந்தே, அதில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான படங்களின் முக்கியக் காட்சிகளை 'ரெஃபரென்ஸாக' இடம் பெற்றிருந்தது.

விஜயின் கில்லி படத்தில் வரும் 'காரப்பொரி' காட்சியும் இடம் பெற்று இந்த படம் நல்ல விருந்து படைத்துள்ளது என்று பல ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.

மங்காத்தா போன்று ஒரு ஜாலியான படமாக இது உள்ளதா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

குட் பேட் அக்லி திரை விமர்சனம், நடிகர் அஜித் குமார், நடிகை த்ரிஷா, ஊடக விமர்சனம், ஆதிக் ரவிச்சந்திரன்

பட மூலாதாரம், @MythriOfficial/X

படக்குறிப்பு, மிக சமீபத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியான நிலையில் தொடர்ச்சியாக இவர்களின் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாகியுள்ளது

படத்தின் கதை என்ன?

'ரெட் டிராகன்' என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு பெரிய, கொடூரமான கேங்க்ஸ்டராக நடித்துள்ளார் நடிகர் அஜித். 18 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மனைவிக்கு கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வன்முறையில் இருந்து விலகி, செய்த தவறுகளுக்காக சிறை சென்று திரும்புகிறார்.

திரும்பியதும் அவருடைய மகனைக் காணவில்லை. அவர் ஜெயிலுக்கு செல்கிறார். அஜித்தின் மகனை யார் சிறைக்கு அனுப்பியது? எந்த 'சம்பவம்' அவரின் குடும்பத்தை பாதிக்கிறது? என்ற இந்த கேள்விகளுக்கான பதில் தான் இந்த 138 நிமிட படம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள திரை விமர்சனத்தில், "இந்த படத்தின் நாயகன் அஜித், படத்தின் கதை இதற்கு முன்பு அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்கள்தான் என்பதை ரசிகர்கள் மறந்துவிடாத வகையில் படம் அமைந்துள்ளது. அஜித்தின் முந்தைய படங்களை நினைவு கூறுவதற்கான ஒரு காரணமாக குட் பேட் அக்லி படம் இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளது.

குட் பேட் அக்லி திரை விமர்சனம், நடிகர் அஜித் குமார், நடிகை த்ரிஷா, ஊடக விமர்சனம், ஆதிக் ரவிச்சந்திரன்

பட மூலாதாரம், @MythriOfficial/X

படக்குறிப்பு, 'ரெட் டிராகன்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு பெரிய, கொடூரமான கேங்க்ஸ்டராக நடித்துள்ளார் நடிகர் அஜித்

படம் எப்படி இருக்கிறது?

"இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை அஜித் ரசிகர்கள் நீண்ட காலம் மறக்க மாட்டார்கள். அந்த குட் பேட் அக்லியை முழுக்க அஜித்தின் படமாகவே உருவாக்கியிருக்கிறார் ஆதிக். படத்தில் அஜித் இல்லாத பிரேம்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அறிமுகக் காட்சியில் ரசிகர்களைக் கத்திக் கூச்சல் போட வைத்த ஆதிக், படம் முடிந்தபின் காட்டப்படும் படப்பிடிப்பு சம்பவங்கள் வரை விசில் சத்தங்களிலேயே வைக்கும் அளவிற்கு ரசிகர்களின் பாஷையில் சம்பவம் செய்திருக்கிறார்," என்று தினமணி தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

"வித்தியாசமான தோற்றங்கள், இதுவரை பார்க்காத ஆடை வடிவமைப்புகள், அஜித்தை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டார்களோ அப்படியான காட்சிகள் என விருந்து வைப்பதிலேயே முழுகவனத்தைச் செலுத்தியிருக்கிறார் அவர். லாஜிக் இல்லாத கதையாக இருந்தாலும் காட்சிகளைப் பரபரப்பாக நகர்த்தியது படத்தை பலப்படுத்துகிறது.

ஆக்சன் காட்சிகளைத் திட்டமிட்ட விதமும் அதில் ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தியதும் அதில் அஜித் ஈடுபாட்டைக் கொடுத்திருப்பது என உளவியல் ரீதியாகவே அஜித்தின் பழைய படங்களை நினைவுப்படுத்தி ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலையிலேயே வைத்திருப்பதில் ஆதிக் வெற்றி பெற்றிருக்கிறார்," என்றும் தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது தினமணி.

குட் பேட் அக்லி திரை விமர்சனம், நடிகர் அஜித் குமார், நடிகை த்ரிஷா, ஊடக விமர்சனம், ஆதிக் ரவிச்சந்திரன்

பட மூலாதாரம், @MythriOfficial/X

படக்குறிப்பு, ''உளவியல் ரீதியாகவே அஜித்தின் பழைய படங்களை நினைவுப்படுத்தி ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலையிலேயே வைத்திருப்பதில் ஆதிக் வெற்றி பெற்றிருக்கிறார்''

சலிப்படைய வைக்கும் ரெஃபரன்ஸ்கள்

இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நாஸ்டால்ஜியா என்ற பெயரில் அவர்கள் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வசனங்கள் அல்லது பாடல்களாக வைப்பதுதான் ட்ரெண்ட் ஆக உள்ளது.

ஆனால், இதுவரை அப்படி வந்த படங்களுக்கும் 'குட் பேட் அக்லி' படத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. அந்த படங்களில் காட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்தப் படத்தில் ரெஃபரன்ஸ்களுக்கு நடுவே தான் படம் கொஞ்சம் வருகிறது. அந்த அளவுக்கு அஜித்தின் ஆரம்பகால படங்கள் தொடங்கி சமீபத்திய படங்கள் வரை ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸோ ரெஃபரன்ஸ். ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு வசனத்துக்கு அஜித்தின் முந்தைய படங்களின் ஒரு குறியீடாவது வசனங்களாகவோ அல்லது பாடல்களாகவோ வந்துவிடுகிறது," என்று குறிப்பிட்டுள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் அவை குதூகலத்தை தந்தாலும் போகப் போக அதுவே ஓவர்டோஸ் ஆகி போதும் என்று தோன்றவைத்து விடுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது அந்த விமர்சனம்.

நிறைய ஹாலிவுட் படங்கள், புகழ்பெற்ற வலைத்தொடர்களின் ரெஃப்ரன்ஸ்கள் இடம் பெற்றிருக்கின்ற சூழலில், கோலிவுட் திரைப்படங்களையும் விட்டுவைக்கவில்லை என்கிறது தி இந்துவின் திரை விமர்சனம்.

"அஜித்தின் பழைய படங்களில் இடம் பெறும் காட்சிகள் மற்றும் பாட்டுகள் இதில் இடம் பெற்றிருந்தாலும் கில்லி படத்தில் இடம் பெற்றுள்ள காரப்பொரி சீனை மீள் உருவாக்கம் செய்திருப்தை அஜித் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். அஜித் விஜயின் பிரபல டையலாக்கை ஒன்றை பேசியிருப்பது ரசிகர்களுக்கான உண்மையான விருந்தை அளித்திருக்கும்," என்று அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

குட் பேட் அக்லி திரை விமர்சனம், நடிகர் அஜித் குமார், நடிகை த்ரிஷா, ஊடக விமர்சனம், ஆதிக் ரவிச்சந்திரன்

பட மூலாதாரம், @iam_arjundas

படக்குறிப்பு, ''திரைக்கதை மிகவும் ஆழமற்றதாக இருந்தாலும் கூட, மிகவும் 'எங்கேஜிங்கான' படமாக உள்ளது குட் பேட் அக்லி.''

'சொதப்பிய திரைக்கதை'

"ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் பார்ப்பவர்களை 'கூஸ்பம்ப்ஸ்' ஆக்கும் வகையில் ரெஃபரன்ஸ் வைத்தால் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், வெறுமனே முதல் மூன்று நாட்கள் வரும் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு காட்சிக்கு ரெஃபரன்ஸ்களை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக்," என்று குறிப்பிட்டுள்ளது இந்து தமிழ் திசையின் திரை விமர்சனம்.

"திரைக்கதை மிகவும் ஆழமற்றதாக இருந்தாலும் கூட, மிகவும் 'எங்கேஜிங்கான' படமாக உள்ளது குட் பேட் அக்லி. விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜன் அஜித்தை புது வெளிச்சத்தில் காட்டியுள்ளார். படத்தின் திரைக்கதையில் இடைவெளியை நிரப்ப இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவில்லை. ஆனால் ஆதிக்கின் பணியும், அஜித்தின் நடிப்பும் அனைத்தையும் மறக்கடிக்க வைத்துவிட்டது," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் தெரிவிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு