மோதலில் தயாரிப்பாளர் சங்கங்கள்: தனுஷ் காரணமா? தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது?

நடிகர் தனுஷ் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்

பட மூலாதாரம், V4 STUDIO

    • எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெஃப்சி அமைப்புக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. ஃபெஃப்சிக்கு பதிலாக புதிய தொழிலாளர் சம்மேளனம் ஒன்றை துவங்கவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த மொத்த பிரச்னைக்கும் தனுஷ் முன் பணம் பெற்ற விவகாரம் தான் காரணமா என்ற கேள்வியெழுந்துள்ளது. இது குறித்து கடந்த வருடத்திலிருந்து வெளியான சில செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகளின் அடிப்படையில் சில விஷயங்கள் தெரிய வந்துள்ளன.

தமிழ் சினிமா துறையில் என்ன நடக்கிறது?

தனுஷ் விவகாரம்தான் காரணமா?

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோரின் தயாரிப்பில் படம் நடிப்பதற்காக முன் பணம் பெற்றுள்ளார். ஆனால் அந்தப் படம் அப்போது எடுக்கப்படவில்லை.

கடந்த வருடம் இந்த விவகாரம் குறித்து புகார் எழுப்பப்பட்டு, தனுஷ் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. இதற்குப் பின் தயாரிப்பாளர் சங்கத்துடன் நடிகர் சங்கமும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அந்தப் பிரச்னையை முடித்து வைத்துள்ளனர். இது குறித்து பத்திரிகை செய்தியும், தனுஷ் தரப்பிலிருந்து நன்றி தெரிவித்து கடிதமும் கூட வெளியானது.

ஆர்.கே. செல்வமணி

பட மூலாதாரம், RK SELVAMANI / FACEBOOK

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது ஏற்புடையதாக இல்லை என்று கூறி மீண்டும் இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கம் கையிலெடுத்தது.

இதனை ஒட்டியே தனுஷ் நடித்து வரும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பை நிறுத்த தங்களுக்கு அழுத்தம் தரப்பட்டதாக ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி ஒரு திரைப்பட நிகழ்வில் கூறியிருந்தார்.

மேலும், தங்களை அடியாட்களைப் போல பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னை தீவிரமாக மாற ஆரம்பித்திருக்கிறது.

ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பிபிசி தமிழ் சார்பாக இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, தனுஷ் விவகாரம் மட்டுமே காரணம் அல்ல, அதுவும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டார்.

தாமதமான சீர்திருத்தங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு என்பது புதிதல்ல. நிலுவையில் இருக்கும் சம்பளம், சம்பள உயர்வு என, கடந்த காலத்தில் நடந்த பிரச்னைகளுக்கு அவ்வபோது தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்த வருடத்திலிருந்தே திரைப்பட தயாரிப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக ஃபெஃப்சி அமைப்பும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

ஆனால், ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தரப்பிலிருந்து இது குறித்து முறையாக எதுவும் பேசவோ, அனுப்பிய கடிதங்களுக்கு பதில் தரவோ தவறியதால், சீர்த்திருத்த வழிகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும், ஃபெஃப்சியும் சேர்ந்து தற்போது புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இது தவிர, ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை, சம்மேளன தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாகவே தயாரிப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். அதற்கான கூட்டம் இந்த வருடம் நடக்க வேண்டியிருந்தது. ஆனால் அதனை அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைத்து, சம்பள உயர்வுக்கு பதிலாக ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் காப்பீடுக்கான தொகையை தயாரிப்பாளர்கள் ஏற்பார்கள் என்ற உடன்படிக்கைக்கும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதையும் தயாரிப்பாளர் சங்கம் எதிர்த்துள்ளது.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி

பட மூலாதாரம், RK Selvamani/Facebook

படக்குறிப்பு, தனுஷ் விவகாரம் மட்டுமே காரணம் அல்ல, அதுவும் ஒரு காரணம் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்

முதுகில் குத்தியது யார்?

இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமியிடம் பிபிசி சார்பாக தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:

"எங்கள் சங்கத்துக்கும் ஃபெஃப்சி அமைப்புக்கும் அவ்வப்போது எழும் பிரச்னைகளை அப்போதே பேசித் தீர்த்திருக்கிறோம். ஆனால், தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தோடு சேர்த்து அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் காப்பீடு (PF AND ESI) தொகையையும் தயாரிப்பாளர்கள் ஏற்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு 30 சதவிதம் வரை கூடுதலான செலவு ஏற்படும். மேலும் சம்மேளனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தினசரி சம்பளம் பெறுபவர்கள்.

எனவே, வைப்பு நிதியோ, காப்பீடோ எங்களுக்கு இந்தத் துறைக்கு சட்டப்படி பொருந்தியும் வராது. எனவே, இந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை. கார்ப்பரேட்டுக்கு இணையாக ஒரு அமைப்பாக இதை மாற்றினால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்." என்றார்.

இந்த நிலையில், தற்போது, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துடன் சம்மேளனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார் அவர். இங்கிருந்து பிரிந்து சென்றே புதிதாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினை ஆரம்பித்தாலும் அனைவரும் இதுவரை ஒற்றுமையாகவே இருந்திருக்கிறோம் என்றார் அவர்.

"இந்த ஃபெஃப்சி பிரச்னை உட்பட இதுவரை வந்த பல பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் அனைவரும் கலந்து பேசியே தந்திருக்கிறோம். ஆனால், எங்களுடன் நட்பு பாராட்டி விட்டு தற்போது எங்கள் முதுகுக்கு பின்னால் குத்துவதைப் போல இப்படி ஒரு ஒப்பந்தத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் போட்டிருப்பதும், பல தசாப்தங்களாக இருக்கும் பாரம்பரியத்தை மீறி ஃபெஃப்சி இப்படி கையெழுத்திட்டிருப்பதும் ஏமாற்றமாக இருக்கிறது.

அதுவும் எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு சந்திப்பு ஆரம்பிக்க அரை மணி இருக்கும் போது இப்படியான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.

தனஞ்செயன்

பட மூலாதாரம், Dhananjayan Govind/Facebook

படக்குறிப்பு, சினிமா துறையின் நன்மைக்காக ஃபெஃப்சி உடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தோம் என்கிறார் தனஞ்ஜெயன்

இது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய நடப்பு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் தனஞ்ஜெயன், "தனுஷ் விவகாரம், வெளியீடு ஒழுங்குமுறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நாங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி வருகிறோம். எதற்குமே அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் தான் துறையின் நன்மைக்காக ஃபெஃப்சி உடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தோம். அவர்களுக்கு இதில் ஆட்சேபனை இருந்திருந்தால் முன்னரே அதை தெரிவித்திருக்கலாமே.

மேலும் ஃபெஃப்சி தரப்பும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என இருவரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று ஏற்கெனவே கூறியுள்ளது. ஃபெஃப்சியின் அந்த கடிதத்துக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இங்கு முதுகில் குத்துவது என்ற குற்றச்சாட்டு எப்படி வருகிறது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

உருவாகும் புதிய சம்மேளனம்

விவகாரங்கள் அடுத்தடுத்து வளரவே ஃபெஃப்சியை சாராமல் தனியாக ஒரு தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காமல் புதிதாக ஒரு சம்மேளனத்தை உருவாக்குவதன் நோக்கம் என்ன என்று ஆர்கே செல்வமணி சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இது பற்றி முரளி ராமசாமியிடம் கேட்டபோது, "ஃபெஃப்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியே. இந்த புதிய சம்மேளனத்தில் அங்கிருக்கும் உறுப்பினர்களும் இணைந்து கொள்ளலாம். மேலும், சிறு முதலீட்டுப் படங்களுக்கு என தனியாக சம்பள திட்டம் நிர்ணயித்துள்ளோம். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து மட்டுமே துணை நடிகர்களையும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்கிற விதியை ஏற்கெனவே விதித்துள்ளோம்.

புதிய சம்மேளனத்தில் சேர தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான படிவங்களை கொடுத்திருக்கிறோம். இதில் விண்ணப்பிக்கும் சிலர், ஃபெஃப்சியிலிருந்து மொத்தமாக விலகிவிட்டு இங்கு வந்து இணைகிறோம், அங்கு சரியாக வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர்." என்றார்.

ஆர்கே செல்வமணி, விருப்பம் இருக்கும் தயாரிப்பாளர்களிடம் சேர்ந்து பயணிக்கத் தயார் என்றும் ஆனால் அவர்களுடன் பணிபுரிய கடிதம் வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறுவதாக முரளி ராமசாமி தெரிவிக்கிறார். சம்பளம் தரும் முதலாளி எதற்காக கடிதம் கொண்டு வர வேண்டும் என்று தனக்குப் புரியவில்லை என்கிறார் அவர்.

"தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லை, பல்வேறு சங்கங்கள் இருக்கிறது என்று பேசினாலும், நாங்கள் எப்போதுமே இணக்கத்துடன் தான் செயல்படுகிறோம். மேலும், எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவையும், விதிகளையுமே அனைத்து தயாரிப்பாளர்களும் பின்பற்றுகின்றனர். தற்போது தான் முதன்முதலாக எங்களுக்குத் தெரியாமல் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது." என கூறுகிறார் அவர்.

உண்மையான காரணத்தை கூற மறுக்கின்றனர்: ஆர்.கே.செல்வமணி

ஆனால் ஃபெஃப்சி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்கே செல்வமணி முரளி கூறியதை மொத்தமாக மறுத்துள்ளார். மேலும் தனி சம்மேளனம் பற்றி கேட்டபோது "தனியாக சம்மேளனம் ஆரம்பிக்க அவர்களுக்கு வேறு காரணங்கள் உள்ளன. உண்மையான காரணத்தைக் கூறாமல் இப்போதுதான் வைப்பு நிதி, காப்பீடு ஆகிய காரணங்களைக் கூறுகின்றனர். தொடர்ந்து எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

மேலும், எங்களுடன் பணியாற்ற விருப்பமில்லை என்று கூறிய தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மீண்டும் எங்களுடன் பணியாற்ற விருப்பம் என்றால், அதற்கான கோரிக்கை கடிதத்தை அவர்கள் முதலில் தருவது தானே முறையாக இருக்கும்? அப்படி வேண்டுமென்றால் கடிதம் தரட்டுமே. அவர்கள் புதிதாக சம்மேளனம் ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நாங்கள் எங்கள் நிலையில் தெளிவாகவே இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா

பட மூலாதாரம், Getty Images

புதிய சம்மேளனம் வேண்டாம்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்

இதற்கு நடுவில் பிரச்னை தீவிரமடைந்ததை உணர்ந்த நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் விபிஃஎப் கட்டண விவகாரம், திரைப்பட வெளியீட்டில் ஒழுங்குமுறை உள்ளிட்ட 5 முக்கியப் பிரச்னைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதில், "நாம்‌ ஒருங்கிணைந்து செயல்பட்டு, FEFSI-யுடன் இணைந்து, ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை (Joint Action Committee) அமைத்து அனைத்து சங்கங்களின்‌ ஒத்துழைப்புடன்‌, தமிழ்‌ சினிமாவில்‌ தற்போது தேவைப்படும்‌ மாற்றங்களை கொண்டுவருவது மிகவும்‌ அவசியம்‌ என்று கருதுகிறோம்‌.

இன்னுமொரு தொழிலாளர்‌ சம்மேளனத்தை உருவாக்க தமிழ்‌ திரைப்பட தயாரிப்பாளர்‌ சங்கம்‌ முயற்சிப்பது எந்த வகையிலும்‌, தமிழ்‌ சினிமாவுக்கு பயன்‌ தராது. தமிழ்‌ திரைப்பட தயாரிப்பாளர்‌ சங்கத்துடன்‌ இணைந்து செயல்பட தமிழ்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்‌ சங்கம்‌ தயாராக உள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்‌" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளியிடம் கேட்டபோது, "இப்போதும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நாங்கள் தயாராகவே உள்ளோம். அதற்கு முதலில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை அவர்கள் கலைத்துவிட்டு எங்களோடு இணைய வேண்டும். ஃபெஃப்சி உடனான புதிய ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு