டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுக்கும் போது இந்தியா மௌனம் காப்பது ஏன்?

டிரம்ப் வரி விதிப்பு, அமெரிக்கா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை தனது நண்பர் என்று பலமுறை வர்ணித்துள்ளார்.
    • எழுதியவர், கீர்த்தி ராவத்
    • பதவி, பிபிசி நிருபர்

சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்திருந்தார்.

இதுகுறித்து இந்தியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிராக என்ன உத்தியை கையாளப் போகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , "புதிய வரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன" என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் சமீபத்திய மாற்றங்களால் ஏற்படும் புதிய வாய்ப்புகளும் ஆய்வு செய்யப்படுகின்றன." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரிகளுக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில், சீனா அமெரிக்கா மீது 34 சதவீதம் வரி விதித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் கலந்துரையாடல்கள் நடந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏன் பதிலடி கொடுக்கவில்லை?

டிரம்ப் வரி விதிப்பு, அமெரிக்கா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் இந்தியா வரி விதிப்பு குறித்து எந்த முடிவையும் எடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு பதிலடியாக இந்தியா இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு, உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் நிறுவனர் மற்றும் நிபுணரான அஜய் ஸ்ரீவஸ்தவா 3 காரணங்களை முன்வைத்துள்ளார்.

முதலாவது காரணம்:

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் சுதந்திர வர்த்தகம் பற்றி பேச்சு நடந்து வருகிறது.

முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடைபெறும். இதில் சுங்க வரிகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்படும்.

இது இந்தியா மீதான வரிகளைக் குறைக்கவோ அல்லது பரஸ்பர வரிகளை நீக்கவோ வழிவகுக்கும்.

இரண்டாவது காரணம்:

அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியதில் இருந்து, வணிக உலகில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

இந்த சுங்க வரி உயர்வு அமெரிக்க குடிமக்களையும் அவர்களது தொழிலதிபர்களையும் மிகவும் பாதிக்கிறது.

உதாரணமாக, அமெரிக்காவில் கார்கள் தயாரிக்கப்படும் போது, ​​அமெரிக்கா அதற்காக மற்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது, இதன் காரணமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கார்களின் விலை அதிகரிக்கும்.

இது உலகளவில் அமெரிக்க கார்களின் கொள்முதல் குறைவதற்கு வழிவகுக்கும்.

இதனால் தான் இந்திய அரசாங்கம் இந்த சுங்க வரி நடவடிக்கைகள் நிலையானது அல்ல என்று கருதுகிறது.

மூன்றாவது காரணம்:

டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், மார்ச் 2018 இல், அமெரிக்கா இந்திய எஃகு மீது 25 சதவீத வரியையும், அலுமினியம் மீது 10 சதவீத வரியையும் விதித்தது.

அப்போதும் கூட இந்தியா உடனடியாக பதிலடி கொடுக்கவில்லை.

பின்னர் ஜூன் 2019 இல், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 29 பொருட்களுக்கு இந்தியா வரி விதித்து பதிலடி கொடுத்தது.

இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனில் பரத்வாஜும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இந்தியா மீது மட்டும் வரி விதிக்கப்படவில்லை. இந்தியா மீது மிக அதிகமான வரி விதிக்கப்படவில்லை" என்று பிபிசியிடம் கூறினார்.

"நாம் அமெரிக்காவுடன் கவனமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கும் அத்தகைய ஒப்பந்தத்தை நாம் எட்ட வேண்டும்."

அதே நேரத்தில், பிரதமர் மோதி அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போது, ​​இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டதாக சமூக மேம்பாட்டு கவுன்சிலின் பேராசிரியர் முனைவர் பிஸ்வஜித் தார் கூறுகிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரே இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கும்.

ஜெய்சங்கர் மற்றும் ரூபியோவின் உரையாடல்

டிரம்ப் வரி விதிப்பு, அமெரிக்கா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், திங்களன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, உரையாடல் நன்றாக இருந்ததாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

"மார்கோ ரூபியோவுடனான உரையாடல் நன்றாக இருந்தது. இந்தோ-பசிபிக், இந்திய துணைக்கண்டம், ஐரோப்பா, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா தொடர்பான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒருமித்த கருத்து இருந்தது" என்று அவர் பதிவிட்டார்.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக நிலவரம்

டிரம்ப் வரி விதிப்பு, அமெரிக்கா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 2025 இல், பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவிற்கு பயணம் செய்தார். இந்தக் காலகட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன .

இந்தியா அமெரிக்காவிற்கு மருந்து, வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஆடைகள் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிறது .

கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் விவசாய பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் ஐந்தாவது பெரிய நாடாகவும், திரவ இயற்கை எரிவாயு (LNG) வழங்கும் நாடாகவும் அமெரிக்கா உள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாட்டின் பங்கை 6.3 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க இந்திய அரசு விரும்புகிறது.

அமெரிக்கா இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது.

2023 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 190 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க விரும்புகின்றன.

2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 190.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

மீதமுள்ள 66.19 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் சேவை சார்ந்து நடைபெற்றது .

இதில், இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 83.77 பில்லியன் டாலர்களாகவும், பொருட்கள் இறக்குமதி 40.12 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது.

அதாவது இந்த இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 43.65 பில்லியன் டாலராக இருந்தது.

மற்ற நாடுகளின் திட்டம் என்ன?

டிரம்ப் வரி விதிப்பு, அமெரிக்கா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு டிரம்பைச் சந்திக்கும் முதல் தலைவர் நெதன்யாகு ஆவார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 3 ஆம் தேதி வரிகளை அறிவித்ததிலிருந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

இந்தியாவைப் போலவே, வியட்நாம், தைவான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் வரி விதிப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகின்றன.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்காக, பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க வேண்டும் என்று தைவான் அதிபர் வில்லியம் லாய் பரிந்துரைத்தார்.

அமெரிக்காவிடமிருந்து விவசாயம், இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொருட்களை அதிக அளவில் வாங்க தைவான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார்.

"அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை நாங்கள் நீக்குவோம். அதை மிக விரைவில் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது சரியான நடவடிக்கை என்று நாங்கள் உணர்கிறோம். வர்த்தகத்தில் உள்ள தடைகளையும் நாங்கள் அகற்றுவோம்" என்று அவர் தெரிவித்தார்.

வரிகள் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, அதிபர் டிரம்பைச் சந்திக்கும் முதல் சர்வதேச தலைவர் நெதன்யாகு ஆவார்.

வியட்நாமின் பிரதமர் பாம் மின் சின், அமெரிக்காவிடமிருந்து அதிக பொருட்களை வாங்கப் போவதாகக் கூறியுள்ளார். இவற்றில் பாதுகாப்பு உபகரணங்களும் அடங்கும்.

வியட்நாம் மீது அமெரிக்கா 46 சதவீத வரியை விதித்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று வியட்நாம் ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு