வீர தீர சூரன் 2 படம் எப்படி உள்ளது? - வின்டேஜ் விக்ரமை திரையில் பார்க்கின்றனரா ரசிகர்கள்?

வீர தீர சூரன் 2 திரை விமர்சனம், விக்ரம், துஷாரா விஜயன்

பட மூலாதாரம், X/@Chiyaan

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது வீர தீர சூரன் 2.

விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

படத்தை வெளியிடுவது தொடர்பாக பல சட்ட சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், இந்த படம் திரைக்கு வந்துள்ளது. இயக்குநர் அருண்குமார் பேட்டிகளில் கூறியது போல, 'விண்டேஜ் விக்ரமை' மீண்டும் திரையில் கொண்டு வந்தாரா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

கதை என்ன?

மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் ரவிக்கும் (ப்ருத்வி ராஜ்) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர் திருவிழாவின்போது ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அதே பிரச்னையை காரணமாக வைத்து அவர்களை என்கவுன்ட்டர் செய்ய துடிக்கிறார் எஸ்.பி-யான அருணகிரி (எஸ்.ஜே. சூர்யா).

அருணகிரியிடமிருந்து தப்பிக்க அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் ரவி.

காளி, அருணகிரி, ரவி, கண்ணன் இவர்களிடையே இருக்கும் முன்பகை எத்தகையது? அருணகிரி எதற்காகப் அந்த குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார்? பலரையும் மிரள வைக்கும் காளியின் பின்னணி என்ன? அவர் இந்தச் சிக்கலுக்கு எழுதும் முடிவுரை என்ன? என்பதே இந்த 'வீர தீர சூரன் பாகம் 2'.

'முனியாண்டி விலாஸ் கறி விருந்து'

வீர தீர சூரன் 2 திரை விமர்சனம், விக்ரம், துஷாரா விஜயன்

பட மூலாதாரம், X/@Chiyaan

"மதுரை பையனான அருண்குமார், சொந்த ஊரின் சுவைகளை அவரின் முதல் 'சூப்பர்ஸ்டார்' படத்தில் பயன்படுத்தியுள்ளார். 'கெடா விருந்து' துவங்கி, குடும்பம், நட்பு, விசுவாசம், ஏமாற்றம், பழிவாங்குதல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய சிக்கலான 'கேங்க்ஸ்டர்' படத்தை வழங்கியுள்ளார்," என்று 'தி இந்து' தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

"விக்ரமின் ரசிகர்கள் நீண்ட நாள் ஏங்கிக் காத்துக் கொண்டிருந்த படம்தான் வீர தீர சூரன். ஆனால் இது அவர்களுக்கானது மட்டுமல்ல. இது மதுரை முனியாண்டி விலாஸில் பரிமாறப்படும் காரசாரமான விருந்து. கறி விருந்தை விரும்பும் அனைவரும் இங்கே வரவேற்கப்படுகின்றனர்," என்று 'தி இந்து' குறிப்பிட்டுள்ளது.

வீர தீர சூரன் 2 திரை விமர்சனம், விக்ரம், துஷாரா விஜயன்

பட மூலாதாரம், @hr_pictures/x

படக்குறிப்பு, ஒரு நாள் இரவில் நடைபெறும் மொத்த நிகழ்வுதான் கதை. தேனி ஈஸ்வர், இந்த இரவின் நிகழ்வுகளை அழகாக படமாக்கியுள்ளார் என்று திரை விமர்சனங்கள் தெரிவிக்கின்றன

படம் எப்படி இருக்கிறது?

ஒரு நாள் இரவில் நடைபெறும் மொத்த நிகழ்வுதான் கதை. "ஆனால் இது ஒரு நேரடியான ஆக்‌ஷன் படம் இல்லை. அருண்குமார் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கதையை நகர்த்தியிருக்கிறார்," என்று விமர்சனம் செய்துள்ளது இந்தியா டுடே.

''முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதி தொய்வாக இருப்பதால் படத்தின் வேகம் சீராக இல்லை," என்றும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"படத்தில் 'ஃப்ளாஷ்பேக்' பகுதியை மட்டும் இயக்குநர் காட்டாமல் இருந்திருந்தால் இந்த படம் மிகவும் தனித்துவமானதாக இருந்திருக்கும். அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிந்திருந்தும், தேவையான அளவு காட்சிகளை, ஃப்ளாஷ்பேக்காக வழங்கியிருக்கிறார். அங்கே தான் படம் அதன் தனித்துவத்தை இழந்துவிட்டது. படத்தின் முதல் பாதியில் காட்டப்பட்ட காட்சிகளோடு எந்த வகையிலும் இந்த பின்னணி கதை பொருந்தவில்லை," என்று விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

படத்தின் சண்டைக்காட்சிகளை ஊடக விமர்சனங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

"படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக்காட்சிகள் எதார்த்தமாக உள்ளது," என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

வீர தீர சூரன் 2 திரை விமர்சனம், விக்ரம், துஷாரா விஜயன்

பட மூலாதாரம், @hr_pictures/x

படக்குறிப்பு, துஷாரா விஜயன் சராசரி கதாநாயகி இடத்திலிருந்து கொஞ்சம் விலகி நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்

நடிகர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

விக்ரமுக்கு, முழு திறனையும் வெளிப்படுத்த சரியான கதாபாத்திரம் இது இல்லை என்ற போதிலும், கதை கேட்கும் நடிப்பை குறை இல்லாமல் வழங்கியிருக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளது தினமணி.

"காதல் காட்சிகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் இயக்குநர் கேட்கும் அளவில் நடிப்பை வழங்கியிருக்கிறார் என்று சொல்லலாம். அவருக்கு ஜோடியாக வரும் துஷாரா விஜயன் சராசரி கதாநாயகி இடத்திலிருந்து கொஞ்சம் விலகி நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். காதலில் கொஞ்சுவதிலிருந்து கதறி அழுவது வரை அவரது நடிப்பு தனித்து நிற்கிறது," என்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளது தினமணி.

"எஸ்.ஜே. சூர்யா மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரியாக வலம் வருகிறார். ஆனால் முன்னேப்போதும் பார்த்திராத வகையில் ஒரு புதுமையான உணர்வை இந்த படத்தில் வழங்கியுள்ளார்," என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு