எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?

பட மூலாதாரம், X/@PrithviOfficial
மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் லூசிஃபர். அதன் இரண்டாம் பாகமான எல்2: எம்புரான் திரைப்படம் இன்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன்.
மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், அபிமன்யு சிங், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் சுஜீத் வாசுதேவன். பின்னணி இசை அமைத்துள்ளார் தீபக் தேவ். எடிட்டிங் பாகத்தை அகிலேஷ் தேவ் பார்க்க, திரைக்கதை எழுதியுள்ளார் முரளி கோபி.
லூசிஃபர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இத்தகைய சூழலில் இன்று வெளியான இந்தப் படம் குறித்து ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
- இயக்குநராக விரும்பியவரை நடிகராக்கிய பாரதிராஜா - மனோஜின் நிறைவேறாத ஆசை
- சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு - சிபிஐ முடிவறிக்கை குறித்து ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் கூறுவது என்ன?
- நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? பிடிபட்டது எப்படி?
- கோலிவுட்: பல வருடங்களாக தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?
படத்தின் கதை என்ன?
லூசிஃபர் படம் பார்க்கவில்லை என்றாலும், இந்தப் படம் புரியும் என்று தினமணி விமர்சனம் தெரிவிக்கிறது. இருந்தாலும் லூசிஃபர் படத்தின் ஒரு 'ரீக்கேப்' இங்கே.
முதல் பாகத்தில் அரசியல்வாதியாகக் காட்டப்படும் ஸ்டீஃபன் நெடும்பள்ளி (மோகன்லால்), அவர் இயங்கி வந்த கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான பி.கே. ராமதாஸ் மறைவுக்குப் பின், ஜித்தின் ராமதாஸை (டொவினோ தாமஸை) கேரளாவின் புதிய முதல்வராக உருவாக்கிவிட்டு, கேரளாவை விட்டு வெளியேறுகிறார் ஸ்டீஃபன். பிறகு குரேஷி ஆபிரஹாம் என்ற ஒரு 'டானாக' தன்னை அடையாளப்படுத்துவது போன்று படம் முடிந்திருக்கும்.
இரண்டாம் பாகத்தில், ஜித்தின், தன்னுடைய கட்சியில் இருந்து வெளியேறி மத சித்தாந்தம் கொண்ட ஒரு தேசியக் கட்சியுடன் இணைவதாக அறிவிக்கிறார். அப்போது கட்சிக்குள் ஏற்படும் பல குழப்பங்களைத் தீர்க்கப் பலரும் தேடும் நபராக இருக்கிறார் குரேஷி ஆபிரஹாம்.
'அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் கேரளத்திற்குத் திரும்பி வந்தாரா?' என்பதே எம்புரானின் கதை.
பாகம் இரண்டு முயற்சி வெற்றி பெற்றதா?

பட மூலாதாரம், X/@PrithviOfficial
"மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்தப் படம் இருந்தாலும் அது எதிர்பார்த்த திருப்பத்தை ஏற்படுத்தவில்லை. கேரளாவையே காப்பாற்றும் ஒரு தனிநபர்தான் இந்த மொத்த படத்தையும் காப்பாற்றியுள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடக விமர்சனம் தெரிவிக்கிறது.
"மொத்தத்தில் முதல் பாகத்தில் மாஸ் மசாலாவை தாண்டி இருந்த நேட்டிவிட்டியை ஓரங்கட்டிவிட்டு முழுக்க முழுக்க பான் இந்தியா ஆடியன்ஸை திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிசோதனை முயற்சி படம் பார்ப்பவர்களைக் கொஞ்சம் அதிகமாகவே சோதிக்கிறது," என்று இந்து தமிழ்திசை தன்னுடைய திரை விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
இயக்குநர் பிரித்விராஜ் பற்றிக் குறிப்பிடுகையில், "பல இடங்களில் அவர் தனித்துத் தெரிகிறார். உதாரணமாக, குஜராத் தொடர்பான காட்சிகளைக் காட்டிய விதம் சிறப்பு. அவசியம் இருந்தும்கூட வன்முறைகளை அப்பட்டமாகக் காட்டாமல் தவிர்த்தது பாராட்டுக்குரியது," என்றும் குறிப்பிட்டுள்ளது.
இயக்குநர் பிரித்விராஜ் மலையாள சினிமாவின் தரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல முயன்றிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகத் தெரிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளைப் பார்க்கும்போது எவரும் ஹாலிவுட் படமா என்றே நினைப்பார்கள். அந்த அளவிற்கு ஒளிப்பதிவு மற்றும் காட்சிகளை எடுத்த விதத்தில் பிரித்விராஜ் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் என்று தினமணி பாராட்டியுள்ளது.

பட மூலாதாரம், X/@PrithviOfficial
மோகன்லால் மற்றும் இதர நடிகர்களின் நடிப்பு எப்படி?
"மோகன்லால் முதல் பாகத்தைக் காட்டிலும் இதில் படு ஸ்டைலாக இருக்கிறார். நடிப்புக்கு வேலை இல்லையென்றாலும் படம் முழுக்கத் தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவுகிறார்," என்று இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
"ஸ்டீபன் நெடும்பள்ளியாகவும் குரேஷி ஆபிரஹாமாகவும் மோகன்லால் தனது நடிப்பில் முழுமையைக் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் தொடர்ச்சி அறுபடாத நடிப்பாகவும் இருக்கிறது. டொவினோ மற்றும் மஞ்சு வாரியருக்கான காட்சிகள் இவர்களுக்கு இடையிலான அரசியல் என எம்புரானில் சிறப்பான பங்களிப்பை இருவரும் செய்துள்ளனர். குறிப்பாக, மஞ்சு வாரியர் முழு அரசியல்வாதியாகவே தன்னை மாற்றியதில் கைத்தட்டல் பெறுகிறார்," என்று தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












