நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? பிடிபட்டது எப்படி?

ரன்யா ராவ், தங்கம்

பட மூலாதாரம், Ranyarao/X

படக்குறிப்பு, ரன்யா ராவ்
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி செய்தியாளர், பெங்களூரு

தமிழில் வாகா திரைப்படத்திலும், கன்னட மொழியில் இரு படங்களிலும் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து திரும்பியபோது 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரன்யா ராவ், கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகள்.

பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு, செவ்வாய்க்கிழமை (மார்ச் 04) தங்கத்துடன் ரன்யா ராவ் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"அவர் தங்கக் கட்டிகளை அவரது உடலில் மிகவும் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருந்தார்" என்று வருவாய் புலனாய்வுத் துறை புதன்கிழமை (மார்ச் 05) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவரது உடலில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறப்பு பெல்ட்டில், இந்த தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர ரன்யா ராவிடம் இருந்த 800 கிராம் தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்ட பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்டனர்.

அவரது வீட்டில் இருந்து 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 2.67 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. "1962 சுங்கச் சட்டத்தின் கீழ் இந்தப் பெண் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மொத்தமாக 17.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில், இந்த முறை சிக்கிய 14.8 கிலோ தங்கமே பெருமதிப்புடையது என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கூறியுள்ளது.

யார் இந்த ரன்யா ராவ்?

ரன்யா ராவ், தங்கம்

பட மூலாதாரம், Ranyarao/X

தற்போது 32 வயதாகும் நடிகை ரன்யா ராவ், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக 'மாணிக்யா' என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் ரன்யா திரை உலகில் தனக்கான முத்திரையைப் பதித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக "வாகா" என்ற திரைப்படத்தில் நடித்தார். 2017ஆம் ஆண்டில், பிரபல கன்னட நடிகர் கணேஷாவுக்கு ஜோடியாக 'பட்கி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

"கடந்த சில ஆண்டுகளாக, அவர் திரைப்படத் துறையில் அதிகமாக ஈடுபடவில்லை. ஆனால் அவர் பணியாற்றிய படங்களில், அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்" என்று பத்திரிகையாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளரான சுனைனா சுரேஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

ரன்யா பொறியியல் படித்து முடித்த பிறகு, திரையுலகில் அடியெடுத்து வைத்ததாக கன்னட திரையுலகைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு நபர் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரன்யா ராவ். அவரது தாயார், காபி செடி விளைவிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல்துறையின் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக உள்ளார்.

ரன்யா ராவின் நடவடிக்கைகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தனது மகள் மற்றும் மருமகனின் வணிகம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவரது தந்தை ராமச்சந்திர ராவ் உள்ளூர் ஊடகத்திடம் கூறினார்.

ரன்யா ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ராமச்சந்திர ராவின் அதிகாரப்பூர்வ கருத்து கிடைத்தவுடன் இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும்.

ரன்யா ராவ் பிடிபட்டது எப்படி?

ரன்யா ராவ், தங்கம்

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, ரன்யா ராவிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் படத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

ரன்யா ராவ் அடிக்கடி துபைக்கு சென்று வருவதால் அவர் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் பார்வையில் சிக்கியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15 நாட்களில் நான்கு முறை அவர் துபைக்கு சென்று வந்ததால், அவர் மீதான சந்தேகம் மேலும் அதிகரித்தது.

மற்ற பயணிகள் குடியேற்ற ஆவண சரிபார்ப்பு செயல்முறை வரிசை வழியாகச் செல்ல வேண்டியிருந்த நிலையில், ரன்யா ராவ் அந்த வழியில் செல்லாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

தான் காவல்துறை இயக்குநர் ஜெனரலின் மகள் என்றும், தனது அடையாளத்தை நிரூபிக்க ஒரு ப்ரோட்டோகால் கான்ஸ்டபிள் எப்போதும் தன்னுடன் இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகளிடம் ரன்யா ராவ் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ப்ரோட்டோகால் கான்ஸ்டபிள் அல்லது காவல்துறை அதிகாரிகளைக் குறை கூறுவது தவறு என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)