தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?

தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் வழங்கியதைவிட தமிழ்நாட்டுக்குக் கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு அதிக நிதி கொடுத்துள்ளதாக பாஜக கூறி வருகிறது.
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டதை விடவும் கூடுதலான நிதி தற்போது கொடுக்கப்பட்டு வருவதாக கடந்த வாரம் ராமேஸ்வாரம் வந்திருந்த பிரதமர் மோதி கூறினார்.

இதுபோன்ற கூற்றுகளை மத்திய அரசு பல்வேறு தருணங்களில் கடந்த காலங்களிலும் எடுத்துரைத்துள்ளது. ஆனால் இந்தக் கருத்தை தமிழ்நாடு அரசு மறுப்பதுடன், நிதி ஒதுக்கீடு வெட்டப்படுவதாகவும் கூறுகிறது.

காங்கிரஸ் காலத்தில் கொடுத்ததைவிட ஐந்து மடங்கு அதிக நிதி கொடுத்ததாக கூறும் பாஜக

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியிலும் பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியிலும் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தரவுகளை எடுத்துரைத்தார்.

"கடந்த 2004-14 காலகட்டத்தில் வரிப் பகிர்வின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.94,977 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் 2014-2024 காலத்தில் 2023 டிசம்பர் வரையிலான தரவுகளின்படி ரூ.2,77,444 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இது முந்தைய பத்து ஆண்டுகளைவிட 192% அதிகம். அதேநேரம், 2004-2014 காலகட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் மூலம் ரூ.57,924.42 வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2014-2023 வரையிலான காலத்தில் ரூ.2,30,893 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது ஒன்பது ஆண்டுகளில் 300% அதிகரிப்பைக் கண்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு?

பட மூலாதாரம், SANSAD TV

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை பாஜக அலுவலகத்தை நேரில் திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதே தரவுகளை வேறு வார்த்தைகளில் சுட்டிக்காட்டினார்.

"கடந்த 2004 -14ஆம் ஆண்டு வரையிலான திமுக கூட்டணி வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, ஒரு லட்சத்து, 52 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2014-24 பத்து ஆண்டுக் கால மோதி ஆட்சியில், 5 லட்சத்து, 8,337 கோடி ரூபாய் என ஐந்து மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.

தற்போது ராமேஸ்வரம் வந்திருந்த பிரதமர் மோதி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதைவிட தமிழ்நாட்டுக்கு மூன்று மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் எவ்வளவு நிதி என்ற தரவுகளைக் குறிப்பிடவில்லை.

இதே போன்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பேசியிருந்த மோதி, 2004-2014 காலத்தில் மாநிலங்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் கிடைத்ததாகவும், பாஜக ஆட்சிக் காலத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் 120 லட்சம் கோடி ரூபாய் கிடைத்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மத்திய அரசின் ஒப்பீடு சரியா?

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு முன்வைக்கும் தரவுகளை யாரும் மறுக்கவில்லை என்றாலும் பொருளாதாரத்தில் பத்தாண்டு கால தரவுகளை இப்படி ஒப்பிடுவது தவறு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணத்தின் மதிப்பு குறைவதன் காரணமாக, இயல்பாகவே நிதி ஒதுக்கீடு தொகை அளவில் அதிகரிக்கும் என்பது ஒரு வாதமாக முன்வைக்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் கூறுகையில், "வெறும் எண்களில் இந்தத் தரவுகளை ஒப்பிடுவது தவறு. பணத்தின் மதிப்பு என்பது தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதாகும். எனவே இந்தத் தரவுகள் ஒன்றோடு ஒன்று ஒப்பிடக் கூடியவை அல்ல. மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் அல்லது மொத்த வருவாயில் மத்திய அரசின் பங்களிப்பு எவ்வளவு என்றுதான் கணக்கிட வேண்டும்" என்றார்.

பிரதமர் மோதியின் கூற்றை மறுத்துப் பேசியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் "ஜிடிபி அதிகரிக்கிறது, அரசின் மொத்த செலவுகள் அதிகரிக்கின்றன. நிதி ஒதுக்கீட்டை ஜிடிபி அல்லது மொத்த செலவினங்களுடன் ஒப்பிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் இதுகுறித்து விளக்கும்போது, "2021-22ஆம் ஆண்டு முதலான நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் ஜிஎஸ்டிபி-இல் 3.5% ஆக இருந்த மத்திய அரசின் நிதி பங்களிப்பு 2.3% ஆகக் குறைந்துள்ளது.

அது மட்டுமின்றி கடந்த பத்து ஆண்டுகளில் வருவாய் ஈட்டல், வரி விதிப்பு, நிதிப் பகிர்வு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி உறவு

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images

கூட்டாட்சி அடிப்படையில் இயங்கி வரும் இந்தியாவில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நிதி உறவுகள் நெருக்கமானவை. மத்திய அரசு பிரதானமாக மூன்று வகைகளில் மாநில அரசுகளுக்கு நிதி வழங்குகிறது.

நிதிக்குழு பரிந்துரைகள்: வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதி, இந்தக் குழுவின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இது சதவீதத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

மத்திய அரசின் உதவி மானியங்கள்: வரிப் பகிர்வு அளித்த பிறகு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நீக்கவும், பேரிடர்க் கால நிவாரணங்களுக்காகவும், உள்ளாட்சிகளுக்காகவும் இந்த நிதி வழங்கப்படும்.

மத்திய அரசு திட்டங்கள்: தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே போன்று 100% மத்திய அரசின் நிதியில் இயங்கும் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படும்.

அதே போன்று, மத்திய அரசும் மாநில அரசும் 60-40 என்ற சதவீதத்தில் நிதி பகிர்ந்து செயல்படுத்தும் திட்டங்களுக்காக நிதி வழங்கப்படும்.

"நிதிக் குழு பரிந்துரைகள் காரணமாக வரிப் பகிர்வு 32 சதவீதத்தில் இருந்து 42% ஆக உயர்ந்துள்ளது. எனினும் திட்ட ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன, பல மத்திய மாநில அரசுகள் நிதி பகிர்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால் மாநிலங்களுக்கு கிடைக்கும் நிகர பலன் மிகக் குறைவு. திட்டங்களைச் செயல்படுத்துவது மாநில அளவில் என்பதால் மத்திய அரசின் நிதியை நம்பியிருக்கும் அமைப்புகள் பாதிப்பை எதிர்கொள்ளும்" என்று எஸ் நாராயண், முன்னாள் மத்திய நிதி செயலர் 2016ம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு?
படக்குறிப்பு, எஸ். நாராயண், முன்னாள் மத்திய நிதிச் செயலர்

"சமக்ரா சிக்‌ஷா அபியான் என்ற கல்வித் திட்டம் மத்திய அரசும் மாநில அரசும் 60-40 என்ற சதவீதத்தில் நிதிப் பகிர்வு கொண்ட திட்டம். இந்த வகையிலான திட்டங்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கும் முறைக்குப் பதிலாக, மத்திய அரசின் கையில் இந்த முடிவுகள் இருக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

மேலும், மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கான ஒதுக்கீடும், அதில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடும் குறைந்து வருகிறது என்றார் அவர்.

"மொத்த வரி வருவாயில் 41% மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதில் தமிழ்நாட்டுக்கு 4% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. முன்னர் வரிப் பகிர்வு 8% இருந்த காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைந்துள்ளது (4.079%). மத்திய அரசின் வரியில் செஸ், சர் சார்ஜ் ஆகியவை மாநிலங்களுடன் பகிரப்படாது" என்று கூறினார்.

பாஜக என்ன சொல்கிறது?

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு?

பட மூலாதாரம், நாராயணன் திருப்பதி/Facebook

படக்குறிப்பு, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழ்நாட்டின் வாதம் அபத்தமானது என்று குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் பாஜக இந்தக் கூற்றுகளை முற்றிலும் மறுக்கிறது.

"ஜிடிபிக்கு ஏற்றவாறு வழங்கப்பட்ட நிதியை ஒப்பிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறுகிறார். அப்படியென்றால் ஜிடிபி உயர்ந்திருக்கிறது, நாடு வளர்ந்திருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறாரா?" என்று கேள்வி எழுப்புகிறார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சமும், முதலீட்டுக்குத் தரப்படும் சலுகைகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதுபற்றி ஜோதி சிவஞானம் கூறுகையில்: "இந்தியாவில் தனியார் முதலீடுகளில் சுமார் 95% ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே செல்கின்றன. அதில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்போது மாநிலத்துக்கான நிதி வெகுவாகக் குறைகிறது. கார்ப்பரேட்களுக்கு மத்திய அரசு வழங்கும் வரி விலக்கின் சுமையையும் மாநிலங்கள் ஏற்க வேண்டியுள்ளது," என்கிறார்.

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கிய நிதி கூடுதல் என்று கூறினால், இங்கே இருந்து வசூலிக்கப்பட்ட வரியும் அதிகமாகியிருப்பதை அத்துடன் இணைத்தே கூற வேண்டும் என்பது தமிழக அரசின் வாதமாக உள்ளது.

நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேசியபோது, 2014-2023 காலகட்டத்தில் ரூ.6.23 லட்சம் கோடி நேரடி வரி தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்பட்டது என்றும், அதே காலத்தில் தமிழகத்துக்கு ரூ.6.96 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, மத்திய அரசுக்குக் கொடுக்கப்படும் ஒரு ரூபாய்க்கு, தமிழ்நாட்டுக்கு 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது என தங்கம் தென்னரசு, தமிழ்நாடு நிதியமைச்சர் கூறுகிறார்.

ஆனால், அதை அப்போதே மறுத்துப் பேசினார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு‌. "தமிழ்நாட்டுக்கு இந்தக் காலகட்டத்தில் ரூ. 4.75 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது, அதில் ரூ.2.46 லட்சம் கோடி வரி பகிர்வாகவும், ரூ.2.28 லட்சம் கோடி மத்திய அரசு உதவி மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுக்கு வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தமிழ்நாட்டுக்கு 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது" என்று கூறினார்.

இருப்பினும், நாராயணன் திருப்பதி, "விமான நிலையங்கள், ரயில்வே, சாலைகள் என நாட்டிலுள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டவை.

வெளிநாட்டு நிதிகள் கிடைப்பதற்குக்கூட மத்திய அரசு உதவியாக இருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இவ்வளவு செய்யும்போது, இப்படி குற்றச்சாட்டுகள் வைப்பது சரியல்ல," என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு