டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜான் சுட்வொர்த்
- பதவி, மூத்த வட அமெரிக்க செய்தியாளர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கவனத்தை முழுவதுமாக சீனா பக்கம் திருப்பியுள்ளார்.
உலகுக்கு எதிராக அனைத்து முனைகளிலும் வர்த்தகப் போரைத் தொடங்குவதற்குப் பதிலாக, டிரம்புக்கு நன்கு பழக்கமான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான மோதலைப் போன்ற தோற்றத்தை அவரது வர்த்தகப் போர் பெற்றுள்ளது.
அமெரிக்க அரசு, டஜன்கணக்கான நாடுகளில் விதிக்கப்படும் "பரஸ்பர" வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்திய வேளையில், உலகளாவிய அளவில் 10% வரி விதிப்பை நடைமுறையில் வைத்துள்ளது.
ஆனால், ஐபோன்கள் முதல் குழந்தைகளுக்கான பொம்மைகள் வரை, அமெரிக்காவின் இறக்குமதியில் சுமார் 14% சீனா பங்கு வகிக்கிறது. இந்நிலையில், அதன் மீது தன் முழு கவனத்தையும் குவித்துள்ள டிரம்ப், சீன இறக்குமதிகள் மீது 125% வரி என மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு 84% வரி விதிப்பதன் மூலம் டிரம்பின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்க சீனா தயாராக இருப்பதே இந்த வரி அதிகரிப்புக்குக் காரணம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் டிரம்பை பொறுத்தவரை, அவர் சீன எதிர்ப்பை முன்வைத்து வெள்ளை மாளிகையில் முதலில் அதிபர் பதவிக்கு வந்த ஓர் அரசியல்வாதி. ஆகவே, இந்த விஷயத்தில் பழிவாங்கல் நடவடிக்கை என்பதையும் தாண்டி ஆழமான அர்த்தம் இருக்கலாம்.
டிரம்பின் சீன எதிர்ப்புக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
டிரம்பை பொறுத்தவரை, அவர் தனது முதல் பதவிக் காலத்தில் முடிக்காத சில பணிகளைச் செய்ய விரும்புகிறார்.
"நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் சரியான வேலைகளைச் செய்ய அப்போது எங்களுக்கு நேரம் இருக்கவில்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
உலகளாவிய உற்பத்தி மையமாக சீனா இருப்பதையும், அதிக அளவிலான உலகளாவிய வர்த்தகமே பயன் தரக்கூடியது என்று முன்னர் பரவலாகக் கருதப்பட்ட கருத்து ஆகியவற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதே டிரம்பின் நோக்கம்.
அமெரிக்க அதிபரின் இந்தச் சிந்தனையைப் புரிந்துகொள்ள, அவரை அதிபர் வேட்பாளராகக்கூட யாரும் நினைக்காத காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.
கடந்த 2012ஆம் ஆண்டில், சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் இருந்து நான் முதன்முதலில் செய்தி வெளியிட்டபோது, உலகளாவிய வணிகத் தலைவர்கள், சீன அதிகாரிகள், வெளிநாட்டு அரசுகள், வர்த்தகப் பிரதிநிதிகள், சர்வதேச நிருபர்கள், பொருளாதார வல்லுநர்கள் எனக் கிட்டத்தட்ட அனைவருமே சீனாவுடன் அதிகரித்து வந்த வர்த்தகத்தைக் கிட்டத்தட்ட ஒரு பெரிய விஷயமில்லை எனக் கருதினார்கள்.
இது உலகளாவிய வளர்ச்சியை அதிகரித்தது, முடிவில்லாத மலிவான பொருட்களை வழங்கியது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பெருகிய முறையில் சீனத் தொழிற்சாலைகளும் அதன் தொழிலாளர் படையும் வளப்படுத்தியது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தங்கள் பொருட்களை, நடுத்தர வர்க்கங்களுக்கு விற்பனை செய்யும் லாபகரமான வாய்ப்புகளையும் அது வழங்கியது.

பட மூலாதாரம், Getty Images
நான் அங்கு சென்ற சில ஆண்டுகளுக்குள், சீனா அமெரிக்காவை விஞ்சி ரோல்ஸ் ராய்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ், வோக்ஸ்வேகன் ஆகியவற்றுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறியது.
இதற்கு ஓர் ஆழமான நியாயமும் இருந்தது. சீனா பணக்கார நாடாக வளர வளர, இந்தக் கோட்பாடு அப்படியே தொடர்ந்தது. சீன மக்கள் அரசியல் சீர்திருத்தத்தை கோரத் தொடங்குவார்கள்.
அவர்களிடம் இருந்த செலவழிக்கும் பழக்கம், சீனாவை நுகர்வோர் சமூகமாக மாற்றவும் உதவும். ஆனால், அத்தகைய ஆசைகளில் முதலாவதான அரசியல் சீர்திருத்தம் ஒருபோதும் நடக்கவில்லை. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கியது.
இரண்டாவது ஆசை போதுமான அளவுக்கு வேகமெடுக்கவில்லை. சீனா இன்னமும் ஏற்றுமதிகளைச் சார்ந்திருப்பது மட்டுமின்றி, வெளிப்படையாக அதில் மேன்மேலும் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு சீனா வெளியிட்ட மேட் இன் சீனா 2025 என்ற கொள்கைத் திட்டம், முக்கிய உற்பத்தித் துறைகளில், அதாவது விண்வெளி, கப்பல் கட்டுதல், மின்சார வாகனங்கள் எனப் பல உற்பத்திகளில் உலகளாவிய தலைமையாக மாறுவதற்கான திட்டத்தைக் கட்டமைத்தது.
அதிலிருந்து ஓராண்டு கழித்து, முற்றிலும் அரசியல் ரீதியாக அறியப்படாத ஒருவர் அமெரிக்க அதிபர் பதவிக்கான முயற்சியைத் தொடங்கினார். சீனாவின் எழுச்சி அமெரிக்க பொருளாதாரத்தைக் குழி பறித்துப் புதைப்பதாகவும், சரிவை நோக்கித் தள்ளுவதாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் தனது பிரசாரத்தில் தொடர்ந்து முன்வைத்தார்.

பட மூலாதாரம், Reuters
டிரம்பின் முதல் ஆட்சிக்கால வர்த்தகப் போர், அதுவரை இருந்த வர்த்தக நடைமுறையைக் கேள்விக்கு உள்ளாக்கியது. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜோ பைடன், சீனா மீதான வரிகளில் பெரும்பகுதியை நடைமுறையில் வைத்திருந்தார்.
அவை சந்தேகத்திற்கு இடமின்றி சீனாவுக்கு சில இழப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், அது தனது பொருளாதார மாதிரியை மாற்றும் அளவுக்குத் தாக்கம் செலுத்தவில்லை.
சீனா இப்போது உலகின் 60% மின்சார கார்களையும், அவற்றை இயக்க உதவும் பேட்டரிகளில் 80 சதவிகிதத்தையும் உற்பத்தி செய்கிறது. அவற்றில் பெரும்பகுதி அதன் சொந்த உள்நாட்டு பிராண்டுகளால் தயாரிக்கப்படுகிறது.
எனவே, இப்போது டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். வரிக்கு பதிலடியாக அதிக வரி என்ற பழிவாங்கும் நடவடிக்கையைக் கையில் கொண்டு வந்துள்ளார்.
இந்த மாற்றம் உலகளாவிய வர்த்தகத்தில் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஆனால், அது இனி அவ்வளவு அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாக தெரியவில்லை. ஏனெனில், அமெரிக்க அதிபர் ஏற்கெனவே அதுகுறித்து சமீபத்தில் பல கணிக்க முடியாத வர்த்தக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
இனி என்ன நடக்கும் என்பது இரண்டு முக்கியக் கேள்விகளைப் பொறுத்து அமையும்.
முதலாவதாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை சீனா ஏற்றுக்கொள்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இரண்டாவதாக, அதை சீனா ஏற்றுக்கொள்கிறது என வைத்துக் கொண்டாலும், அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார மாதிரியை முழுமையாக மாற்றுவது உள்பட, அமெரிக்கா எதிர்பார்க்கும் பெரிய சலுகைகளை வழங்க சீனா தயாராக உள்ளதா?
இங்கு நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. இந்த நிலைமை முற்றிலும் புதியது, நிச்சயமற்றது. ஆகவே, சீனா எவ்வாறு இதற்கு எதிர்வினையாற்றும் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்வது மிகவும் கடினம்.
ஆனால், எச்சரிக்கையாக இருப்பதற்குச் சில காரணங்கள் உள்ளன.
வலுவான ஏற்றுமதிகள் மற்றும் இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு சந்தையை அடிப்படையாகக் கொண்ட சீனாவின் பொருளாதார வலிமை பற்றிய பார்வை, இப்போது தேசிய புத்துணர்ச்சி மற்றும் அதன் ஒரு கட்சி ஆட்சியின் மேலாதிக்கம் பற்றிய அணுகுமுறையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
தகவல் துறையில் இருக்கும் சீன அரசின் இறுக்கமான கட்டுப்பாடு, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக அதன் தடைகளைக் கைவிட வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Reuters
ஆனால், இங்கு மூன்றாவதாக ஒரு கேள்வியும் உள்ளது. அது அமெரிக்கா பதிலளிக்க வேண்டிய கேள்வி.
குறிப்பாக டிரம்ப் வரிகள் அமெரிக்காவுக்கு நல்லது செய்யும் என்று வெளிப்படையாக ஆதரிப்பதால் இந்தக் கேள்வி எழுகிறது. அதாவது, அமெரிக்கா இன்னும் சுதந்திர வர்த்தகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதா அல்லது வரிகளை நிரந்தர உத்தியாகப் பயன்படுத்துவதை நோக்கி நகர்கிறதா?
உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளை மீண்டும் அமெரிக்காவுக்குள் கொண்டு வர ஊக்குவிக்கவும், வரி வருவாயை அதிகரிக்கவும் அமெரிக்காவுக்கு தேவைப்படும் ஒரு பாதுகாப்புவாத தடையின் நன்மை பற்றி அவர் பேசுகிறார்.
அதுதான், வரி விதிப்பின் முதன்மையான நோக்கம் என்று சீனா நம்பினால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவுமில்லை என்ற முடிவுக்கு வரக்கூடும்.
பொருளாதார ஒத்துழைப்பு என்ற கருத்தை ஆதரிப்பதைவிட, உலகின் இரண்டு பெரிய வல்லரசுகள், 'வெற்றி பெறுபவருக்கு அனைத்தும் கிடைக்கும்' என்ற மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் இறங்கலாம்.
அப்படியானால், அது உண்மையில் வர்த்தகம் தொடர்பான பழைய ஒருமித்த கருத்தை உடைப்பதையும், மிகவும் வித்தியாசமான எதிர்காலத்தையும் குறிக்கும். அது ஒருவேளை மிகவும் ஆபத்தானதாகக்கூட இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












