மாநில அரசின் சுமையும் மத்திய அரசு பங்களிப்பு குறைவும் - தமிழ்நாடு பட்ஜெட்டின் 10 முக்கிய அம்சங்கள்

நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு பட்ஜெட் 2025, திமுக, முக ஸ்டாலின்

பட மூலாதாரம், mkstalin

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2026ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அந்தத் தேர்தலுக்கு முந்தைய முழுமையான நிதி நிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 14) மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், இந்த நிதிநிலை அறிக்கைதான் தேர்தலுக்கு முன்பாக தற்போதைய அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை. ஆகவே, இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

வருவாய் மற்றும் பற்றாக்குறை - புள்ளி விவரம் கூறுவது என்ன?

முதலில் இந்த நிதிநிலை அறிக்கையின் அடிப்படையான புள்ளிவிவரங்களை முதலில் பார்க்கலாம். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய்ரூ. 3,31,569 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடி ரூபாய். ஆகவே இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை 41,635 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 75.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வருவாயாக இருக்கிறது. மீதமுள்ள 24.7 சதவீதம் மத்திய அரசிடமிருந்து வரும் வரிப் பகிர்வு, மானியங்கள் மூலம் கிடைக்கிறது.

மாநிலத்தின் சொந்த வருவாயில், வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.2,20,895 கோடி. வரி அல்லாத வருவாய் ரூ.28,818 கோடி. மத்திய அரசிடமிருந்து வரும் நிதியில், வரிப்பகிர்வின் மூலம்58,022 கோடி ரூபாயும் மத்திய அரசின் மானியங்கள் மூலம் ரூ. 23,834 கோடியும் கிடைக்கிறது.

தமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினத்தில் பெரும் பகுதி உதவித் தொகைகளுக்கும் மானியங்களுக்கும் செலவிடப்படுவதாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, ரூ.1,53,724கோடி ரூபாய் இதற்காகச் செலவிடப்படுகிறது. சம்பளங்களுக்கு எனரூ. 90,464 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மூலதனச் செலவுகளைப் பொறுத்தவரை, சாலைகள் மற்றும் பாலங்களுக்காக ரூ.18,197 கோடி ரூபாய் செலவிடப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

நிதி ஒதுக்கீடுகளைப் பொறுத்தவரை, கல்விக்குத்தான் அதிக அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 55,261 கோடி இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நகர்ப்புற வளர்ச்சிக்கு என ரூ. 34,396 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு பட்ஜெட் 2025, திமுக, முக ஸ்டாலின்

பட மூலாதாரம், MK Stalin/X

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினத்தில் பெரும் பகுதி உதவித் தொகைகளுக்கும் மானியங்களுக்கும் செலவிடப்படுவதாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது

எதிர்க்கட்சியினர் விமர்சனம்

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை இந்த நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகளை இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிறைவேற்றவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் போன்ற வாக்குறுதிகள் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இடம்பெறவில்லை" என்கிறார் அவர்.

மேலும், "வடசென்னை வளர்ச்சித் திட்டம், அடையாறு சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி, மின்சாரப் பேருந்துகள், இந்து ஆலயங்களை புனரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை தவறாது இந்த பட்ஜெட்டிலும் இடம்பிடித்திருக்கின்றன. ஆனால், நான்கு ஆண்டுகளாக எந்தப் பணிகளும் இது தொடர்பாக நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நான்கு ஆண்டுகளில், இவர்கள் அறிவித்த மின்சாரப் பேருந்துகள் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. ஆனால், அவற்றில் ஒரு பேருந்து கூட இன்னும் சாலையில் ஓடவில்லை" என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார் இவர்.

நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு பட்ஜெட் 2025, திமுக, முக ஸ்டாலின்

பட மூலாதாரம், @annamalai_k/x

படக்குறிப்பு, எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை இந்த நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கின்றன

பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

ஆனால், அரசுக்கு இருக்கும் நெருக்கடியோடு ஒப்பிட்டால், இது ஒரு சிறந்த பட்ஜெட் என்கிறார் பொருளியல் துறை பேராசிரியரான ஜோதி சிவஞானம்.

"தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் கடுமையான நிதி நெருக்கடியோடு ஒப்பிட்டால், முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். பொருளாதார ஆய்வறிக்கையை உருவாக்கி, அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே எந்தெந்தத் திட்டங்களுக்கெல்லாம் பலனிருக்கிறதோ, அந்தத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டிற்குள்ளேயே மாவட்டங்களுக்கு இடையே வளர்ச்சியில் சமநிலை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு இந்த பட்ஜெட்டில் கிழக்கு மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்" என்கிறார் ஜோதி சிவஞானம்.

நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு பட்ஜெட் 2025, திமுக, முக ஸ்டாலின்

பட மூலாதாரம், MK Stalin/X

ஆனால், மாநில அரசு மிகப் பெரிய அழுத்தத்தில் இருப்பதை இந்த பட்ஜெட் சுட்டிக்காட்டுகிறது என்கிறார் மூத்த பொருளாதார பத்திரிகையாளரும் பொருளாதார நிபுணருமான வி. பாலசுப்பிரமணியன்.

"நிதி ரீதியாக மாநில அரசு மிகப் பெரிய அழுத்தத்தில் இருக்கிறது. மாநில அரசுக்கு கிட்டத்தட்ட9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது. இந்தக் கடனை எப்படி அடைக்கப்போகிறார்கள்? போக்குவரத்துக் கழகம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றன.

அவற்றைச் சீர்திருத்தியிருக்க வேண்டும். ஒரு காலத்தில் தமிழ்நாட்டை செயல்படுகிற பொருளாதாரமாக (performing economy) நிபுணர்கள் கருதினார்கள். ஆனால், பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யாத (not a reforming economy) மாநிலமாக பார்த்தார்கள். இப்பொழுது இந்த இரண்டு முனைகளிலும் தமிழக அரசு சவாலான சூழ்நிலையில் உள்ளது. வரியில்லாத வருமானத்தை பெருக்குவதற்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறை வல்லுநர்களைக் கொண்டு சீரமைக்க வேண்டும்" என்கிறார் அவர்.

ஆனால், மாநில அரசின் கடன்கள், வருவாய் பற்றாக்குறை போன்றவை மத்திய அரசு விதித்துள்ள வரம்பிற்குள் இருக்கின்றன என்கிறார் ஜோதி சிவஞானம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

"கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.32 சதவீதமாக இருக்கும் எனக் கூறியிருந்தனர். ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 3.26ஆகக் குறைந்திருக்கிறது. இந்த நிதியாண்டில் இது 3.00 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதிகரித்துவரும் தொழில் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் ஜோதி சிவஞானம்.

மேலும் மாநிலப் பொருளாதாரத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம். 2020 - 2021ல் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் மத்திய அரசின் பங்களிப்பு மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.5 சதவீதமாக இருந்தது. இப்போது அது 2.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அந்த நிதியைப் பெறவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்த நிதி நிலை அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

தமிழ்நாடு எதிர்கொள்ளும் இன்னொரு சவாலையும் வி. பாலசுப்பிரமணியன் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, மற்ற துறைகளைவிட சேவைத் துறையில் அதிக வளர்ச்சியிருப்பது, மற்ற துறைகளில் வளர்ச்சிக்கான தேவை அதிகமிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகச் சொல்கிறார் அவர். "தமிழக பொருளாதாரம் அதிக அளவில் சேவை துறையை நம்பி உள்ளது. உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் வருமானம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் multiplier effectஐ பார்க்க முடியும். இப்போதைய நிலைமையை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த முறை யார் ஆட்சிக்கு வந்தாலும் நெருக்கடியாகத்தான் இருக்கும்" என்கிறார் பாலசுப்பிரமணியன்.

நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு பட்ஜெட் 2025, திமுக, முக ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது பூர்த்தியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஹெச்.பி.வி. தடுப்பூசியை படிப்படியாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிதி நிலை அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கியத் திட்டங்கள்

1. கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது பூர்த்தியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஹெச்.பி.வி. தடுப்பூசியை படிப்படியாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் உருவாக்கப்படும்.

3. கோவை-சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

4. ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா ஒன்று அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும்.

5. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

6. இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்கள் பராமரிப்பில் மிகவும் வறிய நிலையில் உள்ள 50,000 குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி பள்ளி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை.

7. தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையில், அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.

8. ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

9. 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் லேப்டாப் அல்லது டேப்லட் வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்.

10. இந்திய பொருளாதார வளர்ச்சி, ஏற்ற - இறக்கமாக இருந்துவந்த நிலையில், தமிழ்நாடு 2021–2022ஆம் ஆண்டில் இருந்து 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தை எட்டி வருவதாக வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்தது. 2024–2025 நிதியாண்டிலும் 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதம் இருக்குமென இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது. அதேபோல, தேசிய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு, 9.21 சதவீதமாக இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)