ஏப்ரல் 1 முதல் உதகை, கொடைக்கானலில் வாகனங்கள் நுழைய புதிய கட்டுப்பாடு

உதகை, கொடைக்கானல், இ பாஸ், சுற்றுலா, தமிழக அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உதகைக்கு ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ பாஸ் நடைமுறை தேவையில்லை
    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு, ஒரு நாளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களைத்தான் அனுமதிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இ பாஸ் வழங்கப்படும் என்பதால், இந்த ஆண்டு கோடை சீசனுக்கு நினைத்த நேரத்தில் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தின்போது, நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட இ பாஸ் நடைமுறை, கடந்த 2022 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. ஆனால் உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இந்த இ பாஸ் நடைமுறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சூழல் பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உதகை, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் எவ்வளவு?

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு, இவ்விரு மலைப்பகுதிகளுக்கும் எவ்வளவு வாகனங்கள் வரும் என்று கேள்வி எழுப்பினர்.

நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்த தகவலில், உதகைக்கு சீசன் காலங்களில் தினமும் கார், வேன் உள்பட 20,011 வாகனங்களும், பிற நாட்களில் தினமும் 2,002 வாகனங்களும், கொடைக்கானலுக்கு சீசன் மாதங்களில் 5,135 வாகனங்களும், சீசன் இல்லாதபோது 2,100 வாகனங்களும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நகரங்களிலும் உள்ள தங்குமிடங்கள், அறைகள், வாகன நிறுத்தங்கள் குறித்த விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த விவரங்களைப் பார்த்த நீதிபதிகள், இரு நகரங்களுக்கும் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த ஆய்வறிக்கை வரும் வரை, இ பாஸ் நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தனர். அதன் அடிப்படையில், கடந்த 2024 அக்டோபர் முதல் தேதியிலிருந்து இரு பகுதிகளுக்கும் இ பாஸ் கட்டாயமாகவுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், கடந்த மார்ச் 13 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஐஐடி மற்றும் ஐஐஎம் நிபுணர்களின் ஆய்வு நிறைவடைவதற்கு மேலும் 9 மாதம் அவகாசம் தேவைப்படும் என்று கூறினார்.

அதுவரையிலும் இந்த மலை நகரங்களுக்கு ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் செல்லும் ஏழை மற்றும் நடுத்தர சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிக்காத வகையில் உத்தரவு வழங்க வேண்டுமென்றும் அரசு தரப்பில் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் செவணன் மோகன், கோடை சீசன் துவங்கவிருப்பதால் சுற்றுலா வாகனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு வாதாடியுள்ளார். மாவட்ட நிர்வாகங்களால் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.

உதகை, கொடைக்கானல், இ பாஸ், சுற்றுலா, தமிழக அரசு
படக்குறிப்பு, உதகையில் விடுமுறைக் காலங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல்

உதகையில் ஒரு நாளில் எவ்வளவு பேர் தங்க முடியும்?

உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளின் நுழைவுப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கேமரா பதிவுகளின் அடிப்படையில், சீசன் அல்லாத மற்றைய காலங்களில் வரும் வாகனங்களின் எண்ணிக்கை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி உதகைக்கு தற்போது வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் தினமும் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வாகனங்களும் வருகின்றன. கொடைக்கானலுக்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் தினமும் 5 ஆயிரம் வாகனங்கள் வரை வருவதாகக் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, உதகையில் தற்போதுள்ள தங்கும் விடுதிகள், அறைகள் குறித்த புள்ளி விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ''உதகையிலுள்ள 1035 விடுதிகளில் இருக்கும் 5,620 அறைகளில் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தங்க முடியும். அவற்றைத் தவிர்த்து, உரிமங்களுடன் இயக்கப்படும் தங்கும் வீடுகளில் 3 ஆயிரம் பேரும் என மொத்தம் 23 ஆயிரம் பேர் மட்டுமே தங்க முடியும். கோடை சீசனில் இதற்கும் அதிகமாக பல மடங்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.'' என்று கூறியுள்ளனர்.

இந்த விபரங்களின் அடிப்படையில், சுற்றுலா வாகனங்களைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக சில உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகக் கூறியுள்ள நீதிபதிகள், இரு நகரங்களுக்கும் ஒரு நாளுக்கு எவ்வளவு சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலையும் எண்ணிக்கையுடன் வழங்கியுள்ளனர்.

''உதகைக்கு வார நாட்களில் தினமும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்கலாம். கொடைக்கானலுக்கு வார நாட்களில் தினமும் 4 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும், வார இறுதி நாட்களில் தினமும் 6 ஆயிரம் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் மட்டுமே, இ பாஸ் வழங்க வேண்டும்.'' என்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஜூன் 30 வரை கட்டாயமாக இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ள நீதிபதிகள், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும், விவசாயப் பயன்பாடு வாகனங்களுக்கும் தனி பாஸ் அளிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர். ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ பாஸ் நடைமுறை தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

மின்சார வாகனங்களுக்கு இ பாஸ் வழங்குவதில் முன்னுரிமை

உதகை, கொடைக்கானல், இ பாஸ், சுற்றுலா, தமிழக அரசு
படக்குறிப்பு, கொடைக்கானலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் ஒரு பகுதி

இவற்றைத் தவிர்த்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் கொடுத்துள்ள சில உத்தரவுகள்:

* மின்சார வாகனங்களுக்கு இ பாஸ் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* கொடைக்கானல் மலைக்கு 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களை இயக்குவதற்கு, கடந்த டிசம்பரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததுபோல, நீலகிரி ஆட்சியரும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

* கோடை சீசனின்போது இரு நகரங்களிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.

* வாகன கட்டுப்பாடு குறித்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக, இரு மாவட்ட ஆட்சியர்களும் வரும் ஏப்ரல் 25 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* உதகை, கொடைக்கானலில் மின்சார வாகனங்களை இயக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இயலாதபட்சத்தில், பழங்குடியின மக்கள், கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனியார் மூலமாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

* மலைப்பகுதிக்குக் கீழே சுற்றுலா வாகனங்களை நிறுத்திவிட்டு, மின்சார வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் சென்று மீண்டும் அதே இடங்களில் அவர்களை இறக்கிவிடலாம். இதனால் மலைப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு முக்கியமான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

இ பாஸ் பெறுவதில் இப்போதுள்ள சிக்கல் என்ன?

உதகை, கொடைக்கானல், இ பாஸ், சுற்றுலா, தமிழக அரசு
படக்குறிப்பு, இ பாஸ்-க்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் போர்ட்டல்

ஏற்கெனவே இ பாஸ் நடைமுறையில் இருக்கும் நிலையில், epass.tnega.org என்ற ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் தற்போது இ பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது இதில் விண்ணப்பித்தால் OTP எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதை பிபிசி தமிழ் ஆய்வு செய்தபோது, இந்த போர்ட்டலில் முதலில் 'நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்' என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் 'இந்தியாவுக்கு வெளியே, இந்தியாவுக்கு உள்ளே' என்ற இரு வாய்ப்பு தரப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே என்றால் மின்னஞ்சல் முகவரியும், உள்ளே என்றால் அலைபேசி எண்ணும் கேட்கப்படுகிறது.

அந்த எண்ணைப் பதிவிட்டு, அதற்குரிய Captcha எண்ணைப் பதிவிட்டாலும் OTP உடனே வருவதில்லை. வெகுநேரம் கழித்து வரும் OTP எண்ணைப் பதிவிட்டால், Invalid OTP என்று வருகிறது. இதனால் எளிதில் இ பாஸ் கிடைப்பதில்லை என்பதை அறிய முடிந்தது.

வழக்கமாக இதில் விண்ணப்பித்தால் வாகன எண், எத்தகைய வாகனம், எந்த விதமான எரிபொருள் வாகனம், பயணம் செய்வோர் எண்ணிக்கை, மலை நகரத்துக்கு வரும் தேதி, திரும்பும் தேதி மற்றும் பயணத்தின் நோக்கம் ஆகிய விபரங்கள் கேட்கப்படும். அவற்றைப் பூர்த்தி செய்தாலே இ பாஸ் அனுமதி க்யூ ஆர் கோடுடன் வரும். அதை 'டவுன்லோடு' செய்துகொண்டு, பயணம் செய்யலாம்.

ஆனால் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஒரு நாளுக்கு இவ்வளவு வாகனங்கள்தான் அனுமதிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால், இ-பாஸ் வழங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)