தமிழ்நாட்டை உலகப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் பொருளாதார ஆய்வறிக்கையின் சிறப்பு அம்சங்கள்

பட மூலாதாரம், @CMOTamilnadu
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், 2024–2025ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இத்தகைய பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
தமிழக அரசின் மாநில திட்டக்குழு தயாரித்துள்ள இந்த அறிக்கையில் முக்கிய அம்சங்களாக 35 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெருந்தொற்று, சர்வதேச அரசியல் பதற்றங்கள், தீவிரமான தட்பவெப்ப மாற்றங்களால் உலகளாவிய சந்தை வாய்ப்புகள் பாதித்த நிலையிலும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாக சில புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய பொருளாதார வளர்ச்சி, 2022–2023ஆம் ஆண்டில் 7.61 சதவீதம், 2023–2024இல் 9.19 சதவீதம், 2024–2025இல் 6.48 சதவீதம் என்று இருக்கும் நிலையில், தமிழ்நாடு 2021–2022ஆம் ஆண்டில் இருந்து 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தை எட்டி வருவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.. மேலும், 2024–2025 நிதியாண்டிலும் 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமென்று எதிர்பார்ப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய பொருளாதாரத்துடன் ஒப்பிடப்படும் தமிழகம்
நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதமும், மக்கள் தொகையில் 6 சதவீதமும் கொண்ட தமிழ்நாடு, 2023–2024ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9.21 சதவீதம் பங்களித்துள்ளதாகவும், மாநில உள்நாட்டு உற்பத்தி தற்போதைய மதிப்பில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியிருப்பதாகவும் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிப்பதால், மாநில பொருளாதாரம் உலகளாவிய சந்தை நிலைகளையொட்டியே அமைந்துள்ளதாகக் கூறும் அந்த அறிக்கை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளைக் காட்டிலும், உலகளாவிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையே பெரிதும் சார்ந்திருப்பதை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவிக்கிறது.
தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகமாக இருப்பதுடன், தனிநபர் வருமானத்தில் தமிழகம் நான்காவது இடத்தில் இருப்பதாக அறிக்கை சொல்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பெருநகரத்தை மையமாகக் கொண்டு இயங்குவதைப் போலன்றி, மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் பரவலாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற–ஊரக இடைவெளி குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், 2019–2020 முதல் 2023–2024 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பணவீக்கமான 4.85 சதவீதத்தைவிட, தமிழகத்தின் சராசரிப் பணவீக்கம் 5.7 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருப்பதை அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் "2021–2022 முதல் மாநிலத்தின் சில்லறை வர்த்தகப் பணவீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதில் இந்தியாவின் 20 முக்கிய மாநிலங்களில் தமிழகம் 8வது இடத்தில் இருக்கிறது" என்று கூறுகிறது. அதே அறிக்கை நகர்ப்புற பணவீக்கம் (4.5 சதவீம்) குறைந்து, கிராமப்புற பணவீக்கம் (5.4 சதவீதம்) அப்படியே இருக்கிறது என்றும் கூறுகிறது.
வேளாண் உற்பத்தியைப் பொறுத்தவரை, எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தியில் முதலிடத்திலும், நெல் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயிர் உற்பத்தி அதிகரிப்புக்கு, ரசாயன உரங்கள் மற்றும் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகம் காரணமாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. வேளாண் பொருட்கள் தவிர்த்து, முட்டை, இறைச்சி உற்பத்தியிலும், மீன் ஏற்றுமதியிலும் தமிழகத்தின் பங்களிப்பு சிறப்பாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
- தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் 'ரூ' சேர்க்கப்பட்டது விவாதமாவது ஏன்?
- ரேபிஸ் நோய் முற்றிய நோயாளிகளை கையாளும் வழிமுறைகள் - மருத்துவர் விளக்கம்
- இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம்
- தொகுதி மறுவரையறை: 7 மாநில முதல்வர்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலினின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?
'இந்தியாவின் டெட்ராய்டு தமிழகம்'

பட மூலாதாரம், Getty Images
உற்பத்தித் துறையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம் என்று கூறும் பொருளாதார ஆய்வறிக்கை, தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மொத்தம் 35.56 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் தமிழகம் 2023–2024ஆம் ஆண்டில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றம் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியால் 'இந்தியாவின் டெட்ராய்ட்' என்று தமிழகம் அழைக்கப்படுவதாகவும் அறிக்கை பெருமிதப்படுகிறது.
உற்பத்தித் துறை, கட்டுமானத் துறையின் வளர்ச்சி சதவீதமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறது இந்த அறிக்கை.
கடன் வைப்பு விகிதத்தில் (CDR) இந்தியாவின் 3 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பதாகவும் 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சிடிஆர் 109.2 சதவீதத்தில் இருந்து 117.7 சதவீதமாக உயர்ந்திருப்பதாகச் சொல்லும் அறிக்கை, அதே காலகட்டத்தில் இந்தியாவின் சிடிஆர் 76.5 சதவீதத்தில் இருந்து 79.6 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.
சமூக முன்னேற்றக் குறியீடு, உயர் கல்விக்கான மொத்த சேர்க்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதாகப் பெருமைப்படுகிறது அறிக்கை. இதற்கான செலவு, ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதையும் அறிக்கை கூறியுள்ளது. கடந்த 2005–2006 முதல் 2023–2024 வரையிலான காலத்தில் தமிழகத்தின் வறுமை நிலை (HCR) 36.54 சதவீதத்தில் இருந்து 1.43 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் இந்திய அளவில் இதன் நிலை 55.34 சதவீதத்தில் இருந்து 11.28 சதவீதமாக மட்டுமே குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சிறந்த 50 ஆராய்ச்சி நிறுவனங்களில் மூன்று, 100 சிறந்த பல்கலைக் கழகங்களில் எட்டு, சிறந்த 100 கல்லுாரிகளில் 4 அரசு கலைக்கல்லுாரிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது இந்த அறிக்கை.
கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி எனப் பல்வேறு பெருமைகளைப் போலவே, காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் இயற்கைப் பேரிடர்களையும் அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளையும் அறிக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
இறுதியாக, தமிழகத்தின் வெற்றியானது, உழைக்கும் வயதினரை முடுக்கி விடுவதையும், நீடித்த வளர்ச்சி குறித்த கவனத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சார்ந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றங்களுக்குத் தீர்வு காணவும், தொழிலாளர்களின் தேவை–விநியோகச் சமநிலையின்மையை சரி செய்யவும் புதுமையான மற்றும் ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலமாக இந்திய பொருளாதாரப் பரப்பில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் அறிக்கை நிறைவு பெற்றுள்ளது.
ஆய்வறிக்கையின் ஒப்பீடும் மாறுபட்ட விமர்சனங்களும்

பட மூலாதாரம், Getty Images
நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக, தமிழக அரசு முதல் முறையாக வெளியிட்டுள்ள இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு தகவல்களும், வாசகங்களும் மாநில அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன.
"இதிலுள்ள பல விஷயங்கள் உண்மைதான் என்றாலும், தமிழகத்தில் இன்னும் மாற்றப்பட வேண்டிய பல விஷயங்களும் உள்ளன" என்கிறார் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா.
''தமிழகம் மட்டுமில்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால், தென் மாநிலங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக உள்ளன. அதிலும் கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு எனப் பலவற்றிலும் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பது உண்மைதான். அதற்காக, உலகப் பொருளாதாரத்துடன் மட்டுமே தமிழகத்தை ஒப்பிட வேண்டுமென்கிற கருத்தை முழுமையாக ஏற்க முடியாது. ஏனென்றால் எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் என்பது முற்றிலும் உண்மையில்லை'' என்கிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா.
சில விஷயங்களில் கேரளா மாநிலம் சிறப்பாகச் செயல்படுவதைப் போல, சில விஷயங்களில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறும் வெங்கடேஷ் ஆத்ரேயா, "மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகம் முன்னேறிவிட்டதாகத் தெரிவித்தால் ஒன்றிய அரசின் நிதி குறைந்துவிடுமென்கிற அச்சமும் இந்த ஒப்பீட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்.
ஆனால் இந்த ஒப்பீடு சரிதான் என்கிறார் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
"தமிழகத்தில் இருந்து வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் பெரும்பாலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், அங்குள்ள பொருளாதாரச் சூழ்நிலையே, நம்முடைய ஏற்றுமதியில் எதிரொலிக்கும் என்பதால், தமிழகப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தையே பிரதிபலிக்கிறது என்பது சரிதான்" என்கிறார் அவர்.
''ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் சரியானவைதான். புதிய கல்விக் கொள்கையைக் கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் நாம் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 50 சதவீதத்தை ஏற்கெனவே எட்டிவிட்டோம். கடந்த 2014ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமென்று 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அறிவித்தார்கள்.
பத்து ஆண்டுகளில் தேசிய சராசரியில் ஒரு புள்ளிகூட முன்னேறவில்லை. ஆனால் நாம் சேவைத் துறையில் மட்டுமின்றி உற்பத்தித் துறையிலும் மற்ற மாநிலங்களைவிடப் பல அடிகள் முன்னோடியாக இருக்கிறோம்'' என்கிறார் ஜோதி சிவஞானம்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்றுமதியின் பங்களிப்பில் தமிழகம் முன்னோடியில் இருந்தாலும், அதற்காக உலகப் பொருளாதாரத்தின் தாக்கம் இங்கே எதிரொலிக்கும் என்பதை ஏற்க மறுக்கும் வெங்கடேஷ் ஆத்ரேயா, கேரளா மக்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருப்பதால், அங்கே ஏற்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அந்த மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்கிறார்.
வறுமை நிலை குறித்த புள்ளி விவரத்தைப் பற்றிக் குறிப்பிடும் வெங்கடேஷ், ''தமிழ்நாட்டின் வறுமை நிலை 1.64 சதவீதம் என்றால், கேரளாவில் இது 0.8 சதவீதம் ஆகவுள்ளது. தமிழக அரசு முழுக்க முழுக்க தாராளமய கொள்கையுடன் பயணிக்கிறது; இடையில் சமூகத் திட்டங்களையும் செயல்படுத்துகிறது. ஆனால் கேரளா தாராளமயக் கொள்கையை ஏற்காவிடிலும் சமூகத் திட்டங்களிலும் பங்காற்றுகிறது,'' என்கிறார்.
விவசாயத்தில் இருந்து உற்பத்தித் துறைக்கும், உற்பத்தியில் இருந்து சேவைத் துறைக்கும் மாறுவதே உலகளாவிய மாறுதலாக இருப்பதாகக் குறிப்பிடும் பேராசிரியர் ஜோதி சிவஞானம், "சீனா உற்பத்தித் துறையில் எட்டிய உயரத்தை இந்தியாவால் எட்ட முடியாததற்குக் காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்புகிறார்.
"ஆனால் தமிழகம் உற்பத்தித் துறையிலும் தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகமாகி இருப்பதாக" அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஓர் ஒப்பீடு என்பது ஒன்றைவிட அதிகமாக இருப்பதுடன்தான் இருக்க வேண்டுமென்பதன் அடிப்படையில், உலக நாடுகளுடனான பொருளாதாரத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவதே சரியானது என்கிறார் ஜோதி சிவஞானம்.
இதிலிருந்து மாறுபடும் வெங்கடேஷ் ஆத்ரேயா, ''தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். ஆனால் இதை அரசின் வெற்றியாக மட்டுமே பார்க்கக்கூடாது. இதில் காங்கிரஸ் ஆட்சிக் காலம் துவங்கி, இங்கிருந்த அரசுகளின் கொள்கைகளும் திட்டங்களும் காரணம். இடது சாரி இயக்கங்களுக்கும், பெரியார் இயக்கத்துக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது. வளர்ச்சி இருந்தாலும் சட்டம்–ஒழுங்கு சார்ந்த சில விஷயங்களில் நமது நிலை என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது'' என்கிறார்.
''தமிழகத்தின் மிகப்பெரிய பலவீனமே, இயற்கை வளங்களைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, அரசுக்கு மிகக் குறைந்த வருவாயை ஈட்டுவதுதான். மதுக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, அதன் உற்பத்தி நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. சமூக நீதி பேசும் அரசு, சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை அமைக்கவே போராட வைக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் இன்னும் மாற வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன'' என்கிறார்.
கல்வியில் தனியாரின் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்பதுடன், உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும் என்று கூறும் வெங்கடேஷ் ஆத்ரேயா, கல்வி, சுகாதாரத்தில் தனியாரின் பங்களிப்பு அதிகரிக்க ஒன்றிய அரசும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












