தூத்துக்குடி தலித் மாணவரின் விரல்கள் வெட்டப்பட்ட விவகாரத்தின் முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"மார்ச் 10ஆம் தேதியன்று பிளஸ் 1 ஆங்கில தேர்வு. பேருந்தில் மகனை அனுப்பிவிட்டு செங்கல் சூளை வேலைக்காக நானும் எனது கணவரும் பஸ் பின்னாடியே டூவீலரில் சென்றோம். ஆனால் சற்று நேரத்தில் என் மகனை சிலர் வெளியே இழுத்துப்போட்டு அரிவாளால் வெட்டினார்கள்," எனக் கூறியவாறே கண்கலங்குகிறார் மாலதி.
கபடிப் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகத் தனது மகனை தலை, கை விரல்கள், முதுகு ஆகிய பகுதிகளில் மூன்று பேர் அரிவாளால் வெட்டியதாகக் கூறுகிறார் மாணவரின் தந்தை தங்க கணேஷ்.
அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேரை ஸ்ரீவைகுண்டம் காவல்துறை கைது செய்துள்ளது. அதில், இருவர் சிறார் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரிவாளால் மாணவர் தாக்கப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்தது?
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியாக அரியநாயகபுரம் உள்ளது. இங்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்களில் பலரும் செங்கல் சூளை உள்பட அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். இங்கு வசித்து வரும் தங்க கணேஷ்-மாலதி தம்பதியின் மூத்த மகன், பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்துராஜ் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.
- சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா?நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?
- 'கோவில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர் கூடாது' - நீதிமன்ற உத்தரவுக்கு அறநிலையத்துறை பதில் என்ன?
- காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, உறவினர்களின் புறக்கணிப்புகள் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி
- வேங்கைவயல்: 2 ஆண்டுகளாக தீராத மர்மமும் எழுப்பப்படும் சந்தேகங்களும் - பிபிசி கள ஆய்வு
பேருந்தில் என்ன நடந்தது?
இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் காயமடைந்த மாணவரின் தந்தை தங்க கணேஷ் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், "எங்கள் ஊரில் 'முத்து விநாயகா ஸ்போர்ட்ஸ் கிளப்' என்ற கபடிக் குழு ஒன்று உள்ளது. கடந்த மாதம் கட்டாரிமங்கலத்தில் கபடிப் போட்டி நடந்தது. அப்போது அரியநாயகபுரத்தில் இருந்து என் மகன் தலைமையிலான கபடிக் குழு பங்கெடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்தப் போட்டியில் அருகிலுள்ள கெட்டியம்மாள்புரத்தைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞர்களும் பங்கெடுத்ததாகக் கூறியுள்ள தங்க கணேஷ், "போட்டியில் என் மகன் தலைமையிலான குழு வெற்றி பெற்றது. அப்போது அவர்கள் (தற்போது கைதான நபர்கள்) என் மகனிடம் தகராறு செய்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அவர்கள், "எங்களை எதிர்த்து ஜெயித்துவிட்டாய். பார்த்துக் கொள்கிறோம்" எனத் தகராறு செய்ததாகவும் தங்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததும் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
"அந்தப் பசங்களும் குடும்பத்தினரும் எங்களுக்கு அறிமுகம் ஆனவர்கள்தான். கபடிப் போட்டியில் ஏற்பட்ட தகராறு இந்த அளவுக்குப் போகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் மாணவரின் தாய் மாலதி.
மகனை பேருந்தில் அனுப்பிவிட்டு, அதன் பின்னால் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்காக மாலதி சென்றுள்ளார்.
"கெட்டியம்மாள்புரம் பஸ் ஸ்டேண்ட் வந்ததும் சிலர் பேருந்தை வழிமறித்து ஒருவரை மட்டும் இறங்குமாறு சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அது என் மகனாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை" எனக் கூறுகிறார் மாலதி.
அப்போது, "நீ செத்தால் மட்டுமே நாங்கள் ஜெயிக்க முடியும். எங்களை மீறி வெற்றி பெற முடியாது" எனக் கூறி தனது மகனின் தலையில் அவர்கள் வெட்டியதாகவும் மாலதி குறிப்பிட்டார்.
துண்டிக்கப்பட்ட விரல்கள்

பட மூலாதாரம், HANDOUT
"அருகில் சென்றபோது என் மகன் எனத் தெரிந்து சத்தம் போட்டோம். அவர்கள் மூன்று பேரும் ஓடிவிட்டனர். அதற்குள் தலை, கை விரல்கள், முதுகு எனக் கடுமையாக வெட்டிவிட்டனர். வலது கையில் இரண்டு விரல்களும் இடது கையில் உள்ள விரல்களும் துண்டாகிவிட்டன," என்கிறார் மாலதி.
மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அவரை அங்கிருந்து ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
"தலையில் வெட்டு விழுந்தவுடன் என் மகன் மயக்கமாகிவிட்டான். சிகிச்சை முடிந்து கண் விழித்தபோது, 'என் கையில் எல்லா விரல்களும் இருக்கிறதா?' எனக் கேட்டான்" என்று கண்ணீருடன் கூறினார் மாலதி.
மாணவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனையின் டீன் ரேவதி பாலன், இடது கையில் அனைத்து விரல்களும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
அதோடு, "மாணவரின் வலது கை விரல்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரல்களைச் சரி செய்யும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
நான்கு பிரிவுகளில் வழக்கு

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கில் கைதான மூன்று பேரில் ஒருவரைத் தவிர மற்ற இருவரும் சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது.
இவர்கள் மீது கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "கபடிப் போட்டியில் வெற்றிக் கோப்பையுடன் கொண்டாடியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், 'தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கபடி போட்டியா? காதல் விவகாரமா?
மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வேறு சில தகவல்களும் முன்வைக்கப்படுகின்றன. கெட்டியம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பெயர் அடையாளம் தவிர்த்துவிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார்.
"கபடிப் போட்டியின் காரணமாக இந்த மோதல் ஏற்படவில்லை. காயமடைந்த மாணவர் முன்னதாக ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். அப்போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். தற்போது கைதான நபர்களில் ஒருவர் அந்த மாணவியின் உறவினர்" எனக் கூறினார்.
காயமடைந்த மாணவருக்கும் மாணவிக்கும் இடையில் காதல் இருந்ததை அறிந்து அதுதொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Thoothukudi District Police
இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், "கைதான நபர்களில் ஒருவரின் உறவுப் பெண்ணை, காயமடைந்த மாணவர் காதலித்து வந்துள்ளார். அதன் காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது" எனக் கூறினார்.
ஆனால் தனது மகன் அப்படி யாரிடமும் பேசவில்லை என்றும் அப்படி எந்த விவகாரமும் இல்லை என்றும் மாணவரின் தாய் மாலதி மறுக்கிறார்.
அதுகுறித்துக் கேட்டபோது, "மாணவரின் தந்தை அளித்த புகாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இந்தத் தாக்குதலுக்கு கபடியும் ஒரு காரணமாக இருந்துள்ளது" எனக் கூறினார் எஸ்.பி ஆல்பர்ட் ஜான்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், "புகார் வந்தவுடன் சம்பவ இடத்துக்கு காவல்துறை விரைந்து சென்றது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, ஆறு மணிநேரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில், இரண்டு பேர் சிறுவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.
காயமடைந்த மாணவர் மற்றும் கைதான நபர்கள் வசிக்கும் இரு கிராமங்களிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகக் கூறிய எஸ்.பி ஆல்பர்ட் ஜான், "இரு தரப்பிலும் வதந்திகள் மூலம் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சமூக தலைவர்களிடம் பேசியுள்ளோம்" என்றார்.
பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிப் பாகுபாடுகளைக் களையும் வகையில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதற்கு காவல்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறிய எஸ்.பி, "மாணவர்கள் மத்தியில் சாதிரீதியான எண்ணங்களை அகற்றுவதற்கு இதுபோன்ற கூட்டங்கள் அவசியம்" எனக் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












