பாகிஸ்தான்: கடத்தப்பட்ட ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்பு, 33 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் ரயில் கடத்தப்பட்ட விவகாரம் - இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை மார்ச் 11 அன்று பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் கடத்தினர்.

கடத்தப்பட்ட ரயில் மற்றும் அதிலுள்ள பயணிகளை மீட்கும் முயற்சியில், இதுவரை 300 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அந்தப் பகுதியில், 100 பாதுகாப்பு அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரின் கூற்றப்படி, 33 ஆயுதமேந்திய குழுவினர் இந்த மீட்புப் பணியின்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவம் மீட்புப் பணியை துவங்குவதற்கு முன்பு, 21 பயணிகளையும், 4 ராணுவ வீரர்களையும் ஆயுதமேந்திய குழுவினர் கொன்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலோச்சில் இருந்து அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களை 48 மணிநேரத்தில் விடுவிக்கவில்லை என்றால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பயணிகளைக் கொலை செய்துவிடுவோம் என்று ஆயுதக்குழுவினர் மிரட்டியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தற்போதைய நிலவரம் என்ன?

செவ்வாய்க் கிழமை பிற்பகலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டது. அந்த ரயிலில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பயணிகளில் 300 பேரை இதுவரை மீட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள 300 பயணிகள் தவிர மீதமுள்ளவர்கள் இன்னும் ரயிலில் இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தாக்குதல் நடத்திய ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் சில பயணிகளை பணயக் கைதிகளாக கடத்திக்கொண்டு மலைகளுக்கு அழைத்துச் சென்றதாக உள்துறை இணை அமைச்சர் தலால் சௌத்ரி மார்ச் 12 அன்று இரவு தெரிவித்தார்.

கடத்தப்பட்ட ரயில் மற்றும் அதிலுள்ள பயணிகளை மீட்கும் முயற்சியில் இதுவரை 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள பலூச் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலரைக் கொன்றுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த மீட்பு முயற்சியில் இதுவரை மீட்கப்பட்ட 37 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜாஃபர் எக்ஸ்பிரஸை தாக்கிய ஆயுதக்குழுவினர் ஆப்கானிஸ்தானில் உள்ள அவர்களது உதவியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் தற்கொலைப் படையினர் பணயக் கைதிகளாக பயணிகளுடன் இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் கூறுகிறது. ஆனால், இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தாக்குதல் நடந்த பகுதி எங்கு உள்ளது?

பாகிஸ்தானில் ரயில் கடத்தப்பட்ட விவகாரம் - இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன?
படக்குறிப்பு, பாகிஸ்தானில், ரயில் கடத்தல் நடந்த பகுதி அமைந்திருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் போலான் கணவாய் பகுதியில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தாக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் தலைநகரான குவெட்டாவுக்கும் சிப்பிக்கும் இடையில் 100கி.மீட்டருக்கும் அதிகமான கடினமான மலைப்பகுதி நிறைந்ததே போலான் கணவாய்ப் பகுதி.

கோல்பூரில் இருந்து குவெட்டாவின் தென் கிழக்கே உள்ள சிப்பி வரையிலான ரயில் பாதையில், இந்தப் பகுதியில் மட்டும் 17 சுரங்கப் பாதைகள் உள்ளன. ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, கடினமான நிலப்பரப்பு காரணமாக போலன் பகுதியில் மெதுவாகவே செல்ல முடியும்.

பலுசிஸ்தானில் நிலைமை மோசமடைந்ததில் இருந்து, போலனில் ரயில்கள் மற்றும் ரயில் பாதைகள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த காலங்களில், இந்தப் பகுதியில் உள்ள ரயில் பாதைகள் ராக்கெட்டுகள் அல்லது ரிமோட் கன்ட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், தீவிரவாதிகள் இந்தப் பகுதியில் ஒரு ரயிலை நிறுத்தி, பயணிகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை.

பாகிஸ்தானில் ரயில் கடத்தப்பட்ட விவகாரம் - இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பலுசிஸ்தான் விடுதலைப் படையின் நோக்கம் என்ன?

பலுசிஸ்தான் மக்கள், இந்தியா – பாகிஸ்தான் பிரிவிணையின்போது தங்களை ஒரு சுதந்திர நாடாக இருக்க விரும்பினாலும், தாங்கள் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாக நம்புகிறார்கள்.

ஆகையால், இந்த மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்தது. அது இன்னும் தொடர்ந்து வருகிறது.

பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரிப் பல பிரிவினைவாத குழுக்கள் தற்போது தீவிரமாக உள்ளன. அவற்றில் பழமையான, செல்வாக்கு மிக்க அமைப்புகளில் ஒன்று பாகிஸ்தான் விடுதலை ராணுவம். இந்த அமைப்பு முதன்முதலில் 1970களின் முற்பகுதியில் உருவானதாக நம்பப்படுகிறது.

சுல்பிகர் அலி பூட்டோவின் அரசுக்கு எதிராக பலூச் மக்கள் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கினர். ஆனால், ராணுவ சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு, பலூச் தேசியவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிந்த பிறகு, பலுசிஸ்தான் விடுதலை ராணுவமும் காணாமல் போனது.

பின்னர் இந்தக் குழு, 2000ஆம் ஆண்டில் மீண்டும் செயல்பட்டது. இந்த ஆண்டு பி.எல்.ஏ அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் ரயிலை கடத்திய ஆயுதக் குழுவினர் - நிலவரம் என்ன?

கடந்த 2000ஆம் ஆண்டு முதல், இந்த அமைப்பு பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த அமைப்பில் பெரும்பாலும் மாரி மற்றும் புக்தி பழங்குடியினர் உள்ளனர். மேலும், இவர்கள் பிராந்திய சுயாட்சிக்காக பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

சர்தார் அக்பர் கான் புக்தி பலுசிஸ்தானின் முன்னாள் தலைவராக இருந்தார். அவர் பலூச் விடுதலை ராணுவத்தின் மிக மூத்த நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆகஸ்ட் 26, 2006 அன்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர், நவாப் கைர் பக்ஷ் மிரியின் மகன் நவாப்சாதா பலாச் மிரி, அதிகாரிகளால் தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 2007இல், பலாச் மிரியின் மரணச் செய்தியும் வந்தது.

இந்த ஆண்டு, பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)