சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடி, ஆன்லைன் வர்த்தகம், சைபர் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பேசியதாக புனையப்பட்ட செய்தி ஒன்றையும் சைபர் கிரைம் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் மேற்கோள் காட்டியுள்ளார்.

மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்தாலும் அதனை விரைந்து மீட்பதற்கான வழிகள் உள்ளதாகக் கூறுகின்றனர், சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக எவ்வாறு மோசடி நடக்கிறது? இதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரூ.6 கோடியை இழந்த ஓய்வு பெற்ற அதிகாரி

தமிழ்நாடு வனத்துறையில் தலைமை வனப் பாதுகாவலராக (PCCF) பதவி வகித்தவர் கிருஷ்ணன் குமார் கவுசல். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார்.

சென்னையில் வசித்து வரும் இவர், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்ததாக, 1930 என்ற இணைய குற்றப் பிரிவு உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார்.

தனது புகார் மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலீட்டுக்கு அதிக லாபம் கொடுப்பதாக வாட்ஸ்ஆப்பில் வந்த தகவல் ஒன்றைக் கவனித்ததாகவும் அதன்பிறகு இரண்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மோசடி நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 6.58 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ததாக புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி கிருஷ்ணன் குமார் கவுசலை மோசடிக் கும்பல் ஏமாற்றியுள்ளது.

"செயலியில் பங்குகளின் மதிப்பு உயர்வதைப் போன்று திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது. ஆனால் அந்த விலையானது, தேசிய பங்குச்சந்தை விலைகளுடன் ஒத்துப் போகவில்லை" எனப் புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.

"பேராசையே ஏமாறுவதற்கு அடிப்படை காரணம்"

"ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக வரும் போலி விளம்பரங்களின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராயாமல் முதலீடு செய்வதால்தான் இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன" என பிபிசி தமிழிடம் கூறினார், சென்னை சைபர் குற்றப்பிரிவின் காவல் ஆய்வாளர் பீர் பாஷா.

அதிக லாபம் ஈட்ட நினைக்கும் நபர்களை வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் மோசடிக் கும்பல் சேர்த்துவிடுவதாகக் கூறும் பீர் பாஷா, "குழுவில் உள்ள சிலர், தனக்கு ஓரிரு நாளில் பல லட்சம் லாபம் கிடைத்தது எனப் போலியாக பதிவிடுவதைப் பார்த்து இவர்களும் நம்பி ஏமாறுகின்றனர் " என்கிறார்.

"ரிசர்வ் வங்கி விதிகளின்படி முதலீட்டுக்கு எவ்வளவு வட்டியை தர முடியும் என்பதற்கு விதிகள் உள்ளன. ஆனால், அதையும் மீறி பல மடங்கு லாபம் தருவதாக கூறப்படுவதை நம்புகின்றனர் மக்கள். இதற்கு அடிப்படைக்கு காரணம் பேராசை தான்" எனவும் பீர் பாஷா குறிப்பிட்டார்.

கிருஷ்ணன் குமார் கவுசல் விவகாரத்தில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஏடிஜிபி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடி, ஆன்லைன் வர்த்தகம், சைபர் குற்றம்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல்

வனத்துறை அதிகாரியிடம் நடைபெற்ற மோசடி தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியான ஓரிரு தினங்களில் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் கடந்த மார்ச் 6 ஆம் தேதியன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளைப் போலவே தென்படும் 2 போலிகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிர்ந்த சந்தீப் மிட்டல், 'எக்ஸ் தளத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் தொடர்பான விளம்பரங்களை சிலர் வெளியிட்டுள்ளனர். இவை சைபர் மோசடிகளில் பொதுமக்களை சிக்க வைக்கும் பொறிகளாக உள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

'எச்சரிக்கையாக இருங்கள்... பாதுகாப்பாக இருங்கள்' எனக் கூறியுள்ள சந்தீப் மிட்டல், "குற்றச்செயல்களில் வெளிப்படையாக இயங்கும் இதுபோன்ற நபர்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான வழிமுறைகளை எக்ஸ் தள நிர்வாகம் கண்டறிய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற போலிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

ஸ்ரேயா கோஷல் சொன்னது என்ன?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடி, ஆன்லைன் வர்த்தகம், சைபர் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்

ஆனால், இந்தச் சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்னதாக தனது எக்ஸ் தளக் கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரேயா கோஷல் தெரிவித்திருந்தார்.

பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், அதனை மீட்பதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய பக்கத்தில் பதிவிடப்படும் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக 'பொது எச்சரிக்கை' என்ற பெயரில் விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு போன்று போலியாக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் ஆன்லைன் முதலீட்டை பாடகி ஸ்ரேயா கோஷல் ஊக்குவிப்பதைப் போல புனையப்பட்டுள்ளது, இது போலியானது என' அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துரித முடிவுகளை எடுக்கத் தூண்டுவது எது?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடி, ஆன்லைன் வர்த்தகம், சைபர் குற்றம்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பணி ஓய்வில் வரக்கூடிய பணத்தை எந்தவித சிரமமும் இல்லாமல் முதலீடு செய்வதை பலரும் விரும்புகின்றனர் என்கிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்

அந்த அறிக்கையில், "அண்மையில் வெளியான பல விளம்பரங்கள் சில புகழ்பெற்ற பிரபலங்கள் அல்லது தொழிலதிபர்களின் பெயர்களில் வருகின்றன. இந்த விளம்பரங்கள் உண்மையானவை போல் தோன்றுகின்றன, ஆனால் அவை உண்மை இல்லை.

இந்த விளம்பரங்கள் பயனரின் இணைய தேடுதல் தரவுகள் மற்றும் அவரது சமூக ஊடக செயல்பாட்டின் அடிப்படையில் அவர்களை இலக்காக வைத்து செயல்படுகின்றன. அந்த தரவுகள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) முழுமையாக பகுப்பாய்வு செய்து, ஒருவரை ஈர்க்கும் விளம்பரங்களை பரிந்துரைக்கின்றன. இவை உங்கள் மனநிலையை கண்காணித்து, துரித முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான வலைதளங்கள், வாட்ஸ்ஆப் செயலி, டெலிகிராம் போன்றவற்றில் இவை விளம்பரப்படுத்தப்படுவதாகக் கூறியுள்ள இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தலைமையகம், இதனை பிரபலங்கள் ஆதரிப்பதைப் போல காட்டும் போலி வீடியோக்களை உருவாக்குவதற்கு ஏஐ தொழிநுட்பம் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது.

"ஆன்லைன் வர்த்தகத்தில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டி மோசடி செய்கின்றனர். பணி ஓய்வு அல்லது சொத்தை விற்று வரக் கூடிய பணத்தை முதலீடு செய்ய பலரும் விரும்புகின்றனர். இதை சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பங்கு வர்த்தக நிலவரம், தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டிருப்பவர்களை இலக்காக வைத்து இந்த மோசடிகளை அரங்கேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோசடிக் கும்பலை கைது செய்வது சாத்தியமா?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடி, ஆன்லைன் வர்த்தகம், சைபர் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதன் பின்னணியில் இயங்கும் நபர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும் போலி வங்கிக் கணக்குகளை உருவாக்கும் சிலரை (Runners) காவல்துறை கைது செய்துள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகேயன்

"இவ்வாறு மோசடியில் ஈடுபடுகிறவர்களை அவ்வளவு எளிதில் கைது செய்ய முடியாது. ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எப்படிச் செயல்படுமோ, அப்படியே இவர்களும் செயல்படுகிறார்கள்" எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.

இதன் பின்னணியில் இயங்கும் நபர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும் போலி வங்கிக் கணக்குகளை உருவாக்கும் சிலரை (Runners) காவல்துறை கைது செய்துள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகேயன்.

"நமக்கு தொடர்பில்லாத அல்லது நாம் மேற்கொள்ளாத ஒரு செயலுக்கு எதாவது பரிசுப் பொருளோ, தள்ளுபடி அறிவிப்போ வந்தால் அதைத் தவிர்த்துவிடுவதே பாதுகாப்பானது" எனக் கூறுகிறார் சைபர் கிரைம் குற்றத் தடுப்புப் பிரிவின் ஆய்வாளர் பீர் பாஷா.

தற்காத்துக் கொள்வது எப்படி?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடி, ஆன்லைன் வர்த்தகம், சைபர் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எந்தவொரு முதலீட்டை செய்வதற்கு முன் அதுதொடர்பாக சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்

ஆன்லைன் டிரேடிங் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சில வழிமுறைகளையும் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் தலைமையம் தெரிவித்துள்ளது. அதன்படி,

  • எந்தவொரு முதலீட்டையும் செய்யும் முன் அதுதொடர்பாக சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்
  • முறையான முதலீட்டு தளங்கள் எதுவும் அதிக உத்தரவாதமுள்ள வருவாயை உறுதியளிப்பதில்லை.
  • விளம்பரங்களில் காட்டப்படும் சான்றுகளை மதிப்புரை செய்ய வேண்டும்.
  • பிரபலங்களின் ஒப்புதல்கள் உண்மையானவையா என்பதை சரிபார்க்காமல் அவற்றை நம்ப வேண்டாம். இந்த மோசடிக்கு தொழில்நுட்பத்தையும் கட்டண விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • ஆன்லைனில் முதலீடு செய்யும் போது HTTPS (Hypertext transfer protocol secure) வலைதளங்களில் மட்டும் தேட வேண்டும்.

இதுபோன்ற மோசடிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைமின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறை கூறியுள்ளது.

இழந்த பணத்தை மீட்க முடியுமா?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடி, ஆன்லைன் வர்த்தகம், சைபர் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

இணைய மோசடிக் கும்பலிடம் பணத்தை ஏமாந்தாலும் அதனை மீட்பதற்கான வழிகள் உள்ளதாக கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திகேயன், "ஏமாந்ததை உணர்ந்த ஓரிரு மணிநேரத்தில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

காவல்துறை உதவியுடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்கை முடக்க முடியும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சுமார் 80 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்றுவிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)