டிரம்பின் புதிய வரி விதிப்புகள் சீன பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோயல் கின்டோ
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக சீனாவின் மீது வரி விதித்துள்ளார். இதனால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் குறைந்தது 20 சதவீத வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது சீனாவுக்கு எதிரான டிரம்பின் சமீபத்திய நடவடிக்கை. ஏற்கெனவே சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதமும், உடைகள் மற்றும் காலணிகளுக்கு 15 சதவீதமும் சுங்க வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
டிரம்பின் வரிகள் சீனாவின் உற்பத்தியை நேரடியாகத் தாக்குகின்றன.
தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள், மற்றும் உற்பத்திச் சங்கிலிகள் மூலம் உலகின் பெரும்பாலான பொருட்களை சீனா ஏற்றுமதி செய்கிறது. அதில் நவநாகரிக ஆடைகள் மற்றும் பொம்மைகளில் இருந்து சூரிய மின் தகடுகள் (சோலார் பேனல்கள்) மற்றும் மின்சார வாகனங்கள் வரை அனைத்தும் அடங்கும்.
வலுவான ஏற்றுமதியைத் தொடர்ந்து, 2024இல் உலக நாடுகளுடனான சீனாவின் வர்த்தக உபரி, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் அளவுக்கு உயர்ந்தது. மேலும் சீனாவின் ஏற்றுமதி மதிப்பு 3.5 டிரில்லியன் டாலராக இருந்ததுடன், அதன் இறக்குமதி செலவு 2.5 டிரில்லியன் டாலராக இருந்தது.
- டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் யாவை? என்ன அறிவிப்பு?
- டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?
- இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா?
- டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?

சீனா நீண்ட காலமாக 'உலகின் தொழிற்சாலையாக' இருந்து வருகிறது. 1970களின் பிற்பகுதியில் அதன் பொருளாதாரத்தை உலகளாவிய வணிகத்துடன் ஒருங்கிணைத்ததில் இருந்து குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பில் செய்யப்பட்ட அரசு முதலீடு ஆகியவற்றின் காரணமாக சீனாவின் ஏற்றுமதி செழித்து வளர்ந்துள்ளது.
ஆனால் இப்போது, டிரம்பின் வர்த்தகப் போர் சீனாவின் உற்பத்தி வெற்றியை எவ்வளவு மோசமாகப் பாதிக்கக்கூடும்?
சுங்க வரி என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன?

பட மூலாதாரம், Getty Images
சுங்க வரி என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள். பெரும்பாலான கட்டணங்கள் பொருட்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வரியை, பொதுவாக அவற்றை இறக்குமதி செய்பவர்தான் செலுத்துகிறார்.
உதாரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 டாலர் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு கூடுதலாக 0.40 டாலர் சுங்கக் கட்டணம் விதிக்கப்படுவது, அந்தப் பொருளுக்கான 10 சதவீத வரி எனப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்துவது, நுகர்வோர் குறைந்த விலையில் உள்ள உள்நாட்டு பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது, அந்நாட்டின் சொந்தப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.
அமெரிக்க பொருளாதாரத்தை வளர்த்தல், வேலை வாய்ப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் வருமான வரியை அதிகரித்தல் ஆகியவற்றுக்குத் தீர்வாகவே டிரம்ப் இந்த நடவடிக்கையைப் பார்க்கிறார்.
ஆனால், தனது முதல் ஆட்சிக் காலத்தில் டிரம்ப் விதித்த வரிகளின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வுகள், இவை இறுதியில் அமெரிக்க நுகர்வோருக்கான விலைகளை உயர்த்தியதாக முடிவுகளை முன்வைக்கின்றன.
'ஃபெண்டானில் எனும் போதை மருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க, சீனா அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்ற அழுத்தத்தைக் கொடுப்பதே, தனது சமீபத்திய வரி விதிப்புகளின் நோக்கம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும் அதற்குக் காரணமாக, அந்நாட்டுத் தலைவர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் சுங்க வரிகளால் சீனாவின் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images
ஆம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சீன பொருளாதாரத்திற்கு ஏற்றுமதிகள் மிக்க உறுதுணையாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவேளை வரிகள் தொடர்ந்து நீடித்தால், சீனாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்று மூடிஸ் அனலிட்டிக்ஸ் பொருளாதார நிபுணர் ஹாரி மர்பி குரூஸ் பிபிசியிடம் கூறினார்.
சீனாவின் ஏற்றுமதி மதிப்பு, அந்நாட்டின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. அதாவது 20 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டால் வெளிநாடுகளின் தேவையைக் குறைக்கலாம், வர்த்தக உபரியும் குறையலாம்.
"இந்த சுங்க வரிகள் சீனாவுக்கு பாதிப்பை உண்டாக்கும்," என்று ஹாங்காங் நாட்டின் 'நாடிக்ஸ் நிறுவனத்தின்' ஆசிய-பசிபிக் துறை முதன்மைப் பொருளாதார நிபுணர் அலிசியா கார்சியா-ஹெர்ரெரோ பிபிசியிடம் தெரிவித்தார்.
அதோடு, "அவர்கள் உண்மையில் துரிதமாகச் செயல்பட வேண்டும். உள்நாட்டுத் தேவையை அதிகரிக்க வேண்டும் என ஷி ஜின்பிங் ஏற்கெனவே கூறியதை அவர்கள் செய்ய வேண்டும்" என்றார் அலிசியா.
இருப்பினும், சீன பொருளாதாரத்தில் நிலப் பரிவர்த்தனை சந்தை, சரிவில் உள்ளதாலும் நம்பிக்கையிழந்த இளம் தலைமுறை அதிக சம்பளம் தரும் வேலைகளைப் பெறுவதற்குப் போராடி வருவதாலும், இது கடினமான பணியாக இருக்கும்.
சீன மக்கள், பொருளாதாரத்தை மீண்டும் மேம்படுத்துவதற்குத் தேவையான அளவுக்குச் செலவழிக்கவில்லை. இதனால், சீன மக்கள் அதிகம் செலவழிப்பதை உறுதி செய்ய சீனா சமீபத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
மேலும், சுங்க வரிகள் சீன உற்பத்தியை மந்தமடையச் செய்யலாம். ஆனால் உற்பத்தியை அத்தனை எளிதாக நிறுத்தவோ அல்லது மாற்றவோ முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
"சீனா பெரும் ஏற்றுமதியாளராக இருப்பது மட்டுமல்லாது, சில நேரங்களில், உதாரணமாக சோலார் பேனல்களுக்கு இருக்கும் ஒரேயொரு ஏற்றுமதியாளராகவும் செயல்படுகிறது. நீங்கள் சூரியவொளித் தகடுகளைப் பெற விரும்பினால், சீனாவை மட்டுமே நாட முடியும்," என்கிறார் கார்சியா-ஹெர்ரெரோ.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் அதிபராகப் பதவிக்கு வருவதற்கு முன்பே சீனா ஆடைகள் மற்றும் காலணிகளைத் தயாரிப்பதில் இருந்து ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முன்னோடியாக மாறத் தொடங்கியது.
இந்தச் 'சந்தையில் முன்கூட்டியே கால் பதித்தது' சீனாவுக்கு அதற்கேற்ற பலன்களை வழங்கியுள்ளது. அதேநேரம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனாவின் உற்பத்தி அளவும் பெரியதாக இருக்கும் என்பதால் அதற்கேற்ற பலன்களும் உள்ளன.
'சீன தொழிற்சாலைகள் குறைந்த விலையில் அதிக அளவில் உயர் தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்ய முடியும்' என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் தலைமை சீன பொருளாதார நிபுணர் ஷுவாங் டிங் கூறினார்.
"அதற்கு ஒரு மாற்று உற்பத்தியளரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சந்தைத் தலைவராக சீனாவின் நிலையை வீழ்த்துவதும் அவ்வளவு எளிதல்ல," என்றார் அவர்.
டிரம்பின் சுங்க வரி நடவடிக்கைகளுக்கு சீனா எவ்வாறு பதிலளிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் எதிர் வரிகளை விதித்துள்ளது. அமெரிக்க வேளாண் பொருட்கள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, வாகனங்கள் மற்றும் சில பந்தயக் கார்கள் மீது 10-15 சதவீத வரி விதித்துள்ளது.
மேலும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுடன் விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து கூகுளுக்கு எதிராக பிரத்யேக விசாரணையை அறிவித்துள்ளது. டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் இருந்து சீனாவும் பல ஆண்டுகளாக வரிவிதிப்பை மாற்றியமைத்தது.
சில சீன உற்பத்தியாளர்கள் தங்களது தொழிற்சாலைகளை அமெரிக்காவில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளனர். மேலும் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய, வரிகளைத் தவிர்க்க சில நிறுவனங்கள் வியட்நாம் மற்றும் மெக்சிகோவை நம்பத் தொடங்கியுள்ளன.
அதே நேரத்தில், டிரம்ப் சமீபத்தில் மெக்சிகோவுக்கு விதித்துள்ள சுங்க வரிகள் சீனாவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது, ஏனெனில் வியட்நாம் சீன பொருட்களுக்கு மிகப்பெரிய மறைமுக வழியாக உள்ளது என்று கார்சியா-ஹெர்ரெரோ கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வியட்நாம் இங்கே முக்கியமானது. வியட்நாம் மீது சுங்க வரி விதிக்கப்பட்டால், அது மிகவும் கடினமாக இருக்கும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுங்க வரிகளுக்கு மேல், சீனாவுக்கு அதிக கவலை அளிப்பது, மேம்பட்ட சிப் தொழில்நுட்பங்களின் மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்தான் என்கின்றனர் நிபுணர்கள். இரு நாடுகளுக்கு இடையில் முக்கியத் தடையாக, இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனாலும், மேற்கு நாடுகளைச் சாராத உள்நாட்டு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் சீனாவின் தீர்மானத்தை இந்தத் தடைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சீன ஏஐ நிறுவனமான டீப் சீக், ஓபன் ஏஐ-இன் சாட்-ஜிபிடிக்கு போட்டியாக ஒரு சாட்பாட்டை வெளியிட்டபோது சிலிகான் வேலியும் அமெரிக்காவும் அதிர்ச்சியடைந்தது.
மேலும் அமெரிக்கா சீனாவின் மேம்பட்ட என்விடியா சிப்களுக்கான அணுகலைத் தடை செய்வதற்கு முன்னரே, அந்த நிறுவனம் அவற்றைப் பெருமளவில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது "சீனாவின் போட்டித் திறனை பாதிக்கலாம் என்றாலும், உற்பத்தி சக்தியாக உள்ள சீனாவின் நிலையை இது பாதிக்காது" என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் டிங் கூறினார்.
மற்றொரு கோணத்தில், மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்தியில் சீனா அடையும் முன்னேற்றம் அதன் உயர்தர ஏற்றுமதிகளுக்கு ஆதாரமாக இருக்கும் என்றும் கருதப்படுகின்றது.
சீனா எப்படி உற்பத்தியின் வல்லரசாக மாறியது?

பட மூலாதாரம், Getty Images
அரசின் ஆதரவு, நிகரற்ற விநியோகச் சங்கிலி, குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் ஆகியவற்றின் காரணமாக இது நடந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"உலகமயமாக்கல், சீனாவின் வணிகச் சார்பு கொள்கைகள், சந்தைத் திறன் ஆகியவை தொடக்கத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க உதவியதாக" தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் ஆய்வாளர் சிம் லீ பிபிசியிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து அரசு தனது முயற்சியை அதிகரித்தது, பரந்த சாலைகள் மற்றும் துறைமுகங்களை அமைப்பதில் அதிகளவில் முதலீடு செய்து, மூலப்பொருட்களை கொண்டு வரவும், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உலகத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவியது.
அத்துடன், சீன யுவான் நாணயம் மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான நிலையான மாற்று விகிதமும் உதவியது.
சமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை நோக்கிய மாற்றம், சீனா தொடர்ந்து சந்தையில் நீடிப்பதையும், அதன் போட்டியாளர்களைவிட வேகமாக முன்னேறுவதையும் உறுதி செய்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சீனா ஏற்கெனவே ஓர் உற்பத்தி சக்தியாக இருந்து பெரும் பொருளாதார செல்வாக்கைக் கொண்டுள்ளது. ஆனால் டிரம்பின் சுங்க வரிகள் உலக நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை உயர்த்துவதால், அதற்கு ஓர் அரசியல் வாய்ப்பும் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"சுதந்திர வர்த்தகத்தின் ஆதரவாளராகவும், நிலையான உலகளாவிய சக்தியாகவும் தன்னை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பு, சீனாவுக்கு திறந்தே உள்ளது" என்கிறார் மூடிஸ் அனலிடிக்ஸை சேர்ந்த குரூஸ்.
ஆனால் அது எளிதானதல்ல. ஏனெனில் சீனாவின் மீது சர்வதேச வர்த்தக நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, 2020இல் ஆஸ்திரேலிய ஒயின் இறக்குமதிகளுக்கு 200 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுங்க வரி விதித்தது.
சீனாவும், அமெரிக்காவுக்கு அப்பால் பார்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா இன்னும் சீனாவின் ஏற்றுமதி தொடர்பான பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோவுக்கு பிறகு, அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான மூன்றாவது பெரிய சந்தையாக சீனா உள்ளது. மேலும் ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடனான சீன வர்த்தகம் வளர்ந்து வருகிறது.
ஆனால், உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்கள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை நிறுத்திக் கொள்ளும் என்பதைக் கற்பனை செய்வது கடினம்தான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












