டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கெடு விதித்தது ஏன்? நாடாளுமன்ற உரையின் 7 முக்கிய அம்சங்கள்

டொனால்ட் டிரம்ப, அமெரிக்க நாடாளுமன்ற உரை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜூட் ஷீரின்
    • பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன்

ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அதில் பேசும்போது, "அமெரிக்க கனவு நிறுத்த முடியாதது" என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில், டிரம்பின் இந்த உரையே மிக நீளமானது. இதில் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டத்தை அதிபர் டிரம்ப் விவரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்த, டிரம்பின் ஆறு வார கால ஆட்சியை குடியரசுக் கட்சியினர் பாராட்டினர்.

ஜனநாயகக் கட்சியினரால் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் உரையாற்றினார்.

அமெரிக்க அரசின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, குடியேற்றத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் நாடுகள் மீதான வரிவிதிப்பு, யுக்ரேன் போர் தொடர்பான கூட்டணியை ஆட்டம் காணச் செய்தது என்று அதிபர் டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நீளமான அவரது உரையின் 7 முக்கிய அம்சங்கள் என்ன? இந்தக் கட்டுரையில் காண்போம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், "பல தசாப்தங்களாக சில நாடுகள் நமக்கு எதிராகக் கடும் இறக்குமதி வரியை விதிக்கின்றன. தற்போது நமக்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. அந்தந்த நாடுகளுக்கு எதிராக நாமும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்

அதோடு, "ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் எவ்வளவு வரி வசூலிக்கின்றன என்று தெரியுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"எண்ணற்ற பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிக வரியை நம்மிடம் இருந்து வசூலிக்கின்றன. இது நியாயமற்றது. இந்தியா, அமெரிக்க வாகனங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேல் வரி வசூலிக்கிறது. இந்த முறை அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

அதனால், "ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. பிற நாடுகள் நமது பொருளுக்கு என்ன வரி வசூலிக்கின்றனவே, அதே அளவுக்கு நாமும் அவர்களிடம் இருந்து வசூலிப்போம்" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு,

2. வரிவிதிப்புகளில் ஒரு பெரிய ஏற்ற இறக்கம் இருக்கும்

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைத் தொடர்ந்து, இந்த வாரம் அவர் தொடங்கிய வர்த்தகப் போரின் சாத்தியமான பொருளாதார விளைவுகளை டிரம்ப் குறைத்து மதிப்பிட்டார். இதில் மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரிகளும், சீனப் பொருட்கள் மீதான கூடுதல் 10% வரியும் அடங்கும்.

அதோடு, அவரது மற்ற கொள்கை நோக்கங்களை வரவேற்ற கைதட்டல்களுக்கு மத்தியில், பல குடியரசுக் கட்சியினர் எதிர்வினையாற்றாமல் அமர்ந்திருந்தனர். இது டிரம்பின் இறக்குமதி மீதான வரிகள் அவரது கட்சியை எவ்வாறு பிளவுபடுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

"இந்த வரி விதிப்பு அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றுவது மற்றும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவது பற்றியது" என்று அவர் சி.என்.என் ஊடகத்திடம் கூறினார்.

"அது நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் விரைவாக நடக்கும். சில இடையூறுகள் இருக்கும், ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது அதிகமாக இருக்காது."

அமெரிக்க வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்கு ஏற்றவாறு வரி விதிப்பு ஏப்ரல் 2ஆம் தேதி "அமலுக்கு வரும்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

புதன்கிழமையன்று, நாளின் தொடக்கத்தில், டிரம்ப் மெக்சிகோ மற்றும் கனடாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கக்கூடும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஃபாக்ஸ் பிசினஸிடம் கூறினார்.

3. யுக்ரேனுடனான கனிம ஒப்பந்தம்

டொனால்ட் டிரம்ப, அமெரிக்க நாடாளுமன்ற உரை

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் அதிபரிடம் இருந்து, ஒரு "முக்கியமான கடிதம்" தனக்கு நேற்று முன்தினம் கிடைத்ததாகவும், அது வொலோதிமிர் ஸெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்ட கருத்துகளுடன் பொருந்துவதாகத் தோன்றியதாகவும் டிரம்ப் கூறினார்.

போரை முடிவுக்குக் கொண்டு வரவும், "முடிந்தவரை விரைவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும்", டிரம்பின் "வலுவான தலைமையுடன்" இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் யுக்ரேன் அதிபர் கூறியிருந்தார்.

"அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியதற்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று டிரம்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

அமெரிக்க நட்பு நாடுகளுக்கு, அமெரிக்கா அனைத்து ராணுவ விநியோகங்களையும் நிறுத்திய, அடுத்த நாள் யுக்ரேன் அதிபர் அமைத்திக்கான கரங்களை நீட்டினார்.

கடந்த வாரம் அதிபர் அலுவலகத்தில் இரு தலைவர்களும் சந்தித்தனர். இரு நாட்டு அதிபர்களும், ஊடகங்கள் முன்பு காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். அதன் பிறகு, யுக்ரேனின் வளங்கள் உள்பட ஒரு பொருளாதாரக் கூட்டாண்மையில் இருந்து அமெரிக்கா லாபம் ஈட்ட அனுமதிக்கும் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டங்களை ரத்து செய்தனர்.

நாடாளுமன்றத்தில் தனது உரையின்போது, ஒப்பந்தம் நிறைவடைந்ததை அறிவிக்க டிரம்ப் இலக்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அது நிறைவேறவில்லை.

4. கிரீன்லாந்தை அமெரிக்கா கைக்குள் கொண்டு வரும் டிரம்பின் முயற்சி

டொனால்ட் டிரம்ப, அமெரிக்க நாடாளுமன்ற உரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு நாட்டு அதிபர்களும், ஊடகங்கள் முன்பு காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.

டிரம்பின் உரை 99 நிமிடங்களுக்கு நீடித்தது. அதன் பெரும்பகுதி உள்நாட்டுப் பிரச்னைகளை மையமாகக் கொண்டிருந்தாலும், டிரம்ப் சர்வதேச விவகாரங்களிலும் கவனம் செலுத்தினார்.

உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை விரிவுபடுத்த அவர் விரும்பும் இடங்கள் இருக்கின்றன. மேலும் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளைக் கைவிடவும் இருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்கா கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை டிரம்ப் தனது உரையில் வலியுறுத்தினார். "நாங்கள் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்" என்று அவர் கூறினார்.

மேலும் அவரது அரசாங்கம் பனாமா கால்வாயை "மீட்கும்" என்றும் அவர் கூறினார்.

முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சியில் இருந்த வீண் செலவுகள் என்று அவர் விவரித்த பட்டியலைப் பற்றி டிரம்ப் பேசும்போது, ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிப் பேசினார்.

லைபீரியா, மாலி, மொசாம்பிக், உகாண்டா ஆகிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க உதவியால் நியாயமற்ற முறையில் பயனடைகின்றன என்று அவர் கூறினார்.

ஆனால், அவர் குறிப்பாக லெசோதோ பற்றி வலியுறுத்தினார். பால் புதுமையினரின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக 80 லட்சம் அமெரிக்க டாலர்களை பெற்ற போதிலும், அது "யாரும் கேள்விப்படாத" நாடாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

5. ஈலோன் மஸ்கிற்கு பாராட்டு

டொனால்ட் டிரம்ப, அமெரிக்க நாடாளுமன்ற உரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் உரையை பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஈலோன் மஸ்க் கேட்டுக்கொண்டிருந்தார்.

தனது கோடீஸ்வர ஆலோசகரான ஈலோன் மஸ்கின் பெயரைத் தனது உரையின் ஆரம்பக் கட்டத்திலேயே டிரம்ப் குறிப்பிட்டார். அவரது உரையை பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஈலோன் மஸ்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

தொழில்நுட்ப தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் கீழ் செயல்படும் அரசு செயல்திறன் துறை, ஆயிரக்கணக்கான ஃபெடரல் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த பல பில்லியன் டாலர் உதவிகளை நிறுத்தியதோடு, அமெரிக்க அரசின் பல்வேறு திட்டங்களையும் குறைத்துள்ளது.

அடர் நிற கோட்டும் நீல நிற டையும் அணிந்திருந்த ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான ஈலோன் மஸ்க் எழுந்து நின்று மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

"உங்களுக்கு நன்றி ஈலோன். அவர் மிகவும் கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் அப்படிச் செய்யவேண்டிய தேவையே இல்லை" என 78 வயதான அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

"செலவுகளைக் குறைக்கும் ஈலோன் மஸ்கின் நடவடிக்கையால் தடுக்கப்பட்ட தேவையற்ற செலவுகளுக்கு சில எடுத்துக்காட்டுகளை" டிரம்ப் பட்டியலிட்டார். இது குடியரசுக் கடடியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அப்போது ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "மஸ்க் திருடுகிறார்" மற்றும் "பொய்" என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அரசு செயல்திறன்துறை, 105 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால் இது தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியாத ஒன்று. 18.6 அமெரிக்க பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டதற்கான ரசீதுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பிழைகள் இருப்பது அவற்றை ஆய்வு செய்த அமெரிக்க ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

6. ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு

டொனால்ட் டிரம்ப, அமெரிக்க நாடாளுமன்ற உரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது ஜனநாயக கட்சியினர் "இது ஒரு பொய்" என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர்.

டிரம்ப் உரையைத் தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள், அதிபரை ஏளனம் செய்து இடயூறு விளைவிக்க வேண்டாம் என அவைத் தலைவரின் உத்தரவை மதித்து நடக்கத் தவறியதால் டெக்சாஸை சேர்ந்த அல் கிரீன், அவைக் காவலர்களால் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது மற்ற ஜனநாயக கட்சியினர் "இதுவொரு பொய்" என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர்.

வெள்ளை மாளிகை, பிரதிநிதிகள் அவை, செனட் ஆகியவை குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஜனநாயக கட்சியினர் பெரும்பாலும் தலைவர் இல்லாமல், டிரம்பின் அடுக்கடுக்கான நடவடிக்கைகளுக்கு எதிரான செய்தியைக் கட்டமைக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பல பெண்கள், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இளஞ்சிவப்பு உடைகளை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது கட்சியைச் சேர்ந்த பலர் டிரம்பின் உரையின்போது வெளிநடப்பு செய்தனர். அவர்களில் சிலர் 'எதிர்த்து நில்' எனப் பொருள்படும்படி Resist என்ற வார்த்தையைத் தங்களது சட்டையின் பின் பக்கம் எழுதியிருந்தனர்.

"அவர்களை மகிழ்விக்க நான் சொல்லக்கூடியது எதுவுமே இல்லை," என ஒருதலைப்பட்சமான வெறுப்பை ரசிப்பவர் போலத் தோன்றிய டிரம்ப் கூறினார்.

ஜனநாயக கட்சியின் தலைமை, கட்சியின் அதிகாரப்பூர்வ மறுப்பைத் தெரிவிக்க, எலிஸா ஸ்லாட்கின்னை தேர்வு செய்தது. இவர் நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற, கடும் போட்டி நிலவிய மிச்சிகன் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்.

டிரம்ப் "முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு வாரி வழங்கியிருப்பதாக" எலிஸா குற்றம் சாட்டினார். "அவர் நம்மை பொருளாதார மந்தநிலைக்குக் கொண்டு செல்லக் கூடும்" எனவும் அவர் எச்சரித்தார்.

டொனால்ட் டிரம்ப, அமெரிக்க நாடாளுமன்ற உரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "டிரம்ப் நம்மை பொருளாதார மந்தநிலைக்குக் கொண்டு செல்லக் கூடும்" என்று எலிஸா ஸ்லாட்கின் எச்சரித்தார்

7. பணவீக்கத்தை குறைப்பதற்கு முன்னுரிமை

டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததும் பணவீக்கத்தை முறியடிப்பதாக வாக்காளர்களிடம் உறுதியளித்தார். மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சியை நோக்கி அமெரிக்காவை கொண்டு செல்வதன் மூலம் எரிசக்தி செலவுகளைக் குறைப்பதே தனது முன்னுரிமை என்றும் அவர் உரையில் கூறினார்.

"உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும்விட நம் காலடியில் அதிகளவில் திரவத் தங்கம் (liquid gold) உள்ளது. அதைக் கண்டறிந்து எடுக்க மிகவும் திறமையான குழுவை நான் முழுமையாக அங்கீகரித்துள்ளேன். இது 'ட்ரில் பேபி, ட்ரில் (drill baby, drill)' என்று அழைக்கப்படுகிறது" என்று டிரம்ப் தெரிவித்தார்.

சமீபத்திய வாரங்களில் வேகமாக உயர்ந்து வரும் முட்டை விலை தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் யார் என்று டிரம்ப் தான் நினைப்பதைத் தெளிவுபடுத்தினார்.

"ஜோ பைடன் முட்டைகளின் விலையை, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர அனுமதித்துவிட்டார். அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் முயன்று வருகிறோம்," என்றார்.

கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து பல மில்லியன் முட்டையிடும் பறவைகளைக் கொல்லும்படி பைடன் நிர்வாகம் உத்தரவிட்டதால் முட்டை விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழும் முட்டை விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

கடந்த மாதம் பணவீக்கம் சற்றே அதிகமாக 3 சதவீதமாக இருந்தது. இருப்பினும் அது, 2022ஆம் ஆண்டு இருந்த அதிகபட்ச பணவீக்கமான 9.1 சதவீதத்தைவிட மிகக் குறைவு.

செவ்வாய்க் கிழமை ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் நடத்திய ஓர் ஆய்வின்படி, அமெரிக்கர்களில் மூவரில் ஒருவர்தான் விலைவாசி உயர்வைக் கையாள டிரம்ப் மேற்கொள்ளும் முறைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)