டி20 உலகக் கோப்பையை கோவிலுக்கு எடுத்துச் சென்ற இந்திய கேப்டன் – ஏன் விவாதம்?

பட மூலாதாரம், ANI
முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான கீர்த்தி ஆசாத், டி20 உலக கோப்பையை ஒரு கோவிலுக்கு எடுத்துச் சென்றதை விமர்சித்துள்ளார்.
ஆசாத்தின் கருத்தைத் தொடர்ந்து, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இஷான் கிஷன் மற்றும் பல முன்னாள் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் ஆமதாபாத்தில் உள்ள ஓர் அனுமன் கோவிலுக்குச் சென்றனர்.
இது குறித்து கீர்த்தி ஆசாத் கருத்து தெரிவித்தார்.
எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ள அவர், "இந்திய அணிக்கு வெட்கக்கேடு. 1983-இல் கபில் தேவ் தலைமையின் கீழ் நாங்கள் உலகக் கோப்பையை வென்றோம். எங்கள் அணியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர். நாங்கள் கோப்பையை தாய்நாடான இந்தியாவிற்கு கொண்டு வந்தோம்.'' என்றார்.
மேலும் கோப்பையை "ஏன் மசூதிக்குக் கொண்டு செல்லவில்லை? ஏன் தேவாலயத்திற்கு கொண்டு செல்லவில்லை? ஏன் குருத்வாராவிற்கு கொண்டு செல்லவில்லை? இந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சூர்யகுமார் யாதவையோ அல்லது ஜெய் ஷாவின் குடும்பத்தையோ அல்ல."
"சிராஜ் அதை ஒருபோதும் மசூதிக்கு கொண்டு செல்லவில்லை. சஞ்சு அதை ஒருபோதும் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. இந்தக் கோப்பை அனைத்து மதத்தையும் சேர்ந்த 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும் சொந்தமானது. இது ஏதோ ஒரு மதத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு அல்ல." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.'

பட மூலாதாரம், ANI
கௌதம் கம்பீர் கூறியது என்ன?
கீர்த்தி ஆசாத் தெரிவித்த கருத்து குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ போட்காஸ்ட் ஒன்றில் கௌதம் கம்பீர் கூறுகையில், "இதைப் பற்றி நான் என்ன சொல்வது? இந்த கேள்விக்கு பதிலளிப்பதே தேவையற்றது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு பெரிய தருணம். என்னைக் கேட்டால், இது நமது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு மிகப்பெரிய தருணம். உலகக் கோப்பையை வென்றவர்களை நாம் கொண்டாடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.'' என்றார்
மேலும் அவர், ''சில விவகாரங்களை எழுப்புவதில் எந்தப் பயனும் இல்லை, ஏனெனில் இவை வீரர்களின் வெற்றியை மட்டுமே குறைத்து மதிப்பிடும். அந்த 15 வீரர்களின் வெற்றி மற்றும் முயற்சியை நீங்கள் குறைத்து மதிப்பிட விரும்பினால், நாளை யார் வேண்டுமானாலும் எழுந்து எதையாவது கூறுவார்கள். நாம் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தொடங்குவோம், இது அந்த வீரர்களுக்கு நல்லதல்ல." என்றார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு வீரர்கள் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு அவர்கள் சாம்பியனாகியுள்ள நிலையில், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவது அவர்களின் வெற்றியை தாழ்த்தும் என்றும் கௌதம் கம்பீர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அந்த வீரர்கள் எவ்வளவு சோதனைகளைக் கடந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோற்ற பிறகு அவர்கள் எவ்வளவு அழுத்தத்தில் இருந்திருப்பார்கள். இன்று, நீங்கள் இப்படி ஒரு கருத்தை சொல்வதன் மூலம், உண்மையில் உங்கள் சொந்த வீரர்களையும் உங்கள் சொந்த அணியையும் கைவிடுகிறீர்கள், அவ்வாறு செய்யக்கூடாது." என்றார்.

பட மூலாதாரம், Punit PARANJPE/AFP via Getty Images
இஷான் கிஷன் கூறியது என்ன?
பாட்னா வந்தடைந்த இஷான் கிஷன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
கீர்த்தி ஆசாத்தின் கருத்துக்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர், "நாங்கள் இவ்வளவு பெரிய உலகக் கோப்பையை வென்றுள்ளோம். நீங்கள் நல்ல கேள்விகளைக் கேட்க வேண்டும். கீர்த்தி ஆசாத் என்ன சொன்னார்? இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? சில நல்ல கேள்விகளைக் கேளுங்கள்," என்று பதிலளித்தார்.
காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வர் இதுகுறித்து கூறுகையில், "கீர்த்தி ஆசாத் சொல்வது முற்றிலும் சரி. அவர் கூறியதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். கோப்பையுடன் கோவில், மசூதி அல்லது வேறு எந்த இடத்திற்கும் செல்வது நமது பாரம்பரியம் அல்ல. இது ஒரு தவறான பாரம்பரியத்தின் தொடக்கம்." என்றார்.
சிவசேனா தலைவர் கிருஷ்ணா ஹெக்டே இது குறித்து கூறுகையில், "இதை மதத்துடன் இணைப்பது சரியல்ல. இந்திய அணி கோப்பையை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல சுதந்திரம் கொண்டுள்ளது. அவர்கள் கீர்த்தி ஆசாத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற பிரிவினையைத் தூண்டும் ரீதியிலான கருத்துக்களை வெளியிட்டு சமூகங்களைப் பிரிக்க கீர்த்தி ஆசாத் முயற்சிக்கக் கூடாது," என்றார்.
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கோவிலுக்குச் சென்றது குறித்து இத்தகைய கேள்விகளை எழுப்பக்கூடாது என்றும், அது அவர்களின் நம்பிக்கை என்றும் கூறினார்.
"விளையாட்டையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருங்கள். இது உங்கள் நம்பிக்கை, நீங்கள் கோவிலுக்குச் செல்லலாம், குருத்வாராவிற்குச் செல்லலாம் அல்லது எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.'' என்று குறிப்பிட்டார் ஹர்பஜன்.

பட மூலாதாரம், Sondeep Shankar/Getty Images
கீர்த்தி ஆசாத் யார்?
ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தரவுகளின்படி, வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப்-பிரேக் பந்துவீச்சாளரான கீர்த்தி ஆசாத் இந்தியாவுக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 135 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆசாத் 1981-ஆம் ஆண்டு வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, அவர் 1980 டிசம்பர் 6 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணிக்காகத் தனது முதல் போட்டியில் விளையாடினார்.
அவர் இந்தியா சார்பாக 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அவர் எடுத்த 39 ரன்கள்தான் அவரது அதிகபட்ச ஸ்கோர்.
கீர்த்தி ஆசாத் சர்வதேச அளவில் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை என்றாலும், 1980-களின் தொடக்கம் முதல் 1990-களின் நடுப்பகுதி வரை டெல்லி கிரிக்கெட்டின் தூணாக விளங்கினார்.
அவரது தலைமையின் கீழ் தான் டெல்லி அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-92-ல் ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கீர்த்தி ஆசாத் இந்தியன் பிரீமியர் லீக்கின் கடுமையான விமர்சகராகவும் இருந்துள்ளார். இந்தத் தொடர் மேட்ச் பிக்சிங்கை ஊக்குவிப்பதாக அவர் விவரித்திருந்தார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கீர்த்தி ஆசாத் அரசியலில் நுழைந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












