ரேபிஸ் நோய் முற்றிய நோயாளிகளை கையாளும் வழிமுறைகள் - மருத்துவர் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.
நாய்க் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி முற்றிய நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வட மாநிலத் தொழிலாளி ஒருவர், நோயின் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பு, அவருடைய செயல்பாடுகள் குறித்த வீடியோ, வைரலாக பரவியுள்ள நிலையில், ரேபிஸ் முற்றிய நோயாளிகள் குறித்த அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. அதேவேளையில், ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று காலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், சிகிச்சைக்காக வந்துள்ளார். தனது பெயர் ராம்சந்தர் (வயது 35) என்றும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தான் கோவை சித்ரா பகுதியில் தங்கி, கார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தன்னை தெருநாய் கடித்ததாகவும், அதற்கு எந்த சிகிச்சையும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளை வைத்திருக்கும் தனி வார்டில் (Isolation Ward) அவரை வைத்துள்ளனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு, ரத்தத்தால் தன்னுடைய உறவினரின் தொடர்பு எண்ணை எழுதி வைத்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அந்த நோயாளி நடந்து கொண்ட விதத்தை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்துப் பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.
ரேபிஸ் நோய் தாக்கியவர்களின் இறுதி நிலை குறித்து, பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தக் காணொளி அமைந்துள்ளது. இதனால் ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்பது குறித்த கேள்விகளும் பலரிடமும் எழுந்துள்ளன.
இதுகுறித்த சந்தேகங்களுக்கு, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார்.
நாய் கடித்துவிட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நாய் கடித்த இடங்களை முதலில் நன்கு சோப்புப் போட்டு குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கழுவ வேண்டும். அதன் பிறகு தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்றால் அங்கு ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
அந்தத் தடுப்பூசி, குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்தம் 4 முறை போடப்படும். அதைச் சரியான தேதிகளில் செலுத்திக் கொள்வது அவசியம். அதுபோக, மருத்துவர் கூறும் சில வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம்.
ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வீட்டு நாய்கள் கடித்தால் சாதாரண தடுப்பூசி (TT-Tetanus Toxoid) போட்டுக் கொண்டால் போதுமா?
தன்னிச்சையாக இப்படி முடிவெடுப்பது தவறு. அதனால் வீட்டு நாய்க்கும் ரேபிஸ் தாக்குதல் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். அப்படி வீட்டு நாய்க்கு ரேபிஸ் தாக்குதல் இல்லை என்பதை உறுதி செய்யும் பட்சத்தில், ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி தேவைப்படாது.
ஆனால், அப்படி உறுதி செய்ய முடியாத பட்சத்தில் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும்.
ஏனெனில், ஒவ்வொரு நாய்க்கும் அதன் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையின் (Antibody level) அளவைப் பொருத்து, ரேபிஸ் தடுப்பூசி செயலாற்றும்.
அது குறைவாக இருக்கும்பட்சத்தில், ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், வேறு ஏதாவது நாயிடம் இருந்து அதற்கு அந்த நோய் தாக்க வாய்ப்புண்டு. அதேபோன்று போடப்படும் ரேபிஸ் தடுப்பூசியும் தரமுடையதாக இருக்க வேண்டும்.
ரேபிஸ் நோய் தாக்கியும் வீட்டு நாய்களிடம் அது வெளிப்படாமல் இருக்கலாம். அத்தகைய நேரங்களில் வீட்டு நாய்கள் கடிக்கின்ற நபருக்கும் ரேபிஸ் தாக்கும் அபாயம் அதிகமிருக்கிறது.
எனவே, நாய்க்கடியால் அச்சப்படவும் கூடாது; அதே நேரத்தில் அசட்டையாகவும் இருக்கக்கூடாது. ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆரோக்கியமான வீட்டு நாய்கள் கடித்தால் மட்டுமே, கடிபட்டவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
நாய்க்கடி காயம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
காயமான இடத்தை நன்கு கழுவிய பிறகு, அரசு மருத்துவமனைக்குச் சென்றால், காயம்பட்ட இடத்தை மேலும் நன்கு சுத்தம் செய்து, அந்த இடத்தைச் சுற்றிலும் Rabies immune globulin என்ற தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மருந்தின் வீரியம் சில ஆண்டுகள் வரையிலும் உடலில் தங்கியிருக்கும். இதைச் செலுத்தினால் மட்டுமே, நாயால் ஏற்பட்ட காயம் விரைவில் குணமாகும்.
நாய் கடித்துவிட்டால் எவ்வளவு நேரத்துக்குள் தடுப்பூசி போட வேண்டும்? குறிப்பிட்ட நேரத்துக்குள் போடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்?
ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படாத தெருநாய்கள் கடித்துவிட்டால் எந்த வகையிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதைத் தாமதிக்கவே கூடாது. வழக்கமாக, 24 மணிநேரத்துக்குள் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பது தவறு. நாய் கடித்த இடம், பாதிப்பின் அளவைப் (VIRAL LOAD) பொருத்து, ரேபிஸ் வைரஸ் மூளையைத் தாக்கும்.
அதை யாராலும் கணிக்க முடியாது என்பதால் எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட முடியுமோ அதற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்லது. சீக்கிரமாக தடுப்பூசி போடாவிட்டால், அதற்குள் ரேபிஸ் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாகிவிடும்.
ஒரு வேளை ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதன்பின் உயிரைக் காப்பாற்றவே இயலாது. மருத்துவப் பரிசோதனையில் ரேபிஸ் உறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன் பிறகு அந்த நோயாளியைத் தனிமைப்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை.
ரேபிஸ் நோயின் இறுதிக் கட்டத்துக்கான அறிகுறிகள் என்ன?
- இதை ரேபிஸ் நோயின் நான்காம் நிலை என்பார்கள். இதுதான் நோயின் முற்றிய நிலை.
- அப்போது நோயாளிகளுக்கு காய்ச்சல், உடல் வலி ஏற்படும்.
- தண்ணீரைக் கண்டால் கடுமையான அச்சம் ஏற்படும்.
- நுரையீரல் செயலிழந்து விடும், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும்.
- சிலர் கோமா நிலைக்குச் சென்றுவிடுவர். இந்த நிலைக்கு வந்துவிட்டால், அதிகபட்சமாக 4 அல்லது 5 நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.

பட மூலாதாரம், Getty Images
ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கலாமா?
அது மிகவும் ஆபத்தானது. ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களின் உடல் தன்மையும், செயல்பாடுகளும் மிகவும் விநோதமாகிவிடும்.
அவர்களை எங்கே எப்படி வைத்திருந்தாலும் உயிரைக் காப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவர்களை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிப்பதே சிறந்தது.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












