சென்னையில் 1.8 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம் - எதற்காக தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு உடலில் சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று சென்னை மாநகராட்சி நம்புகிறது.
சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தொடங்கியுள்ளது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஜனவரி 30ஆம் தேதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
"சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டு நாய்களுக்கு சிப் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது," என்று சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் ஹுசைன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மைக்ரோ சிப் என்பது என்ன?
நாய்களின் உடலில் மைக்ரோ சிப்கள் தோலுக்கு அடியில், பொதுவாக தோள்பட்டைப் பகுதியில் ஊசி மூலமாகச் செலுத்தப்படும். இந்த சிப் ஒரு அரிசிப் பருக்கையின் அளவில் மட்டுமே இருக்கும்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும். அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை என்ற ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் (புவி குறியீடு) விவரமும், வீட்டு நாய்களில் அவற்றின் உரிமையாளர் விவரங்களும் இருக்கும்.
உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும். RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சிப்களில் நாயின் விபரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தத் தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும்.
"இதன் மூலம் நாய்களின் தடுப்பூசி விவரங்களைக் கண்காணிக்க முடியும். வருடாந்திர தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டலை உரிமையாளர்களுக்கு அனுப்ப முடியும்" என்று சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் ஹுசைன் கூறுகிறார்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்தலாம்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னையில் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றில் சுமார் 30% நாய்களுக்கு மட்டுமே இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இடத்தில் கவனம் செலுத்தி நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது மிக அவசியமான நடவடிக்கை என்கிறார் விலங்குகள் நல உரிமை ஆர்வளர் கிளமன்ட் ஆண்டனி ரூபின்.
"தெரு நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாடு திட்டம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுணங்கியது. இப்போது மிக வேகமாக இதில் ஈடுபட வேண்டும். நாய்கள் ஓர் ஆண்டுக்கு இருமுறை குட்டிகளைப் பிரசவிக்கின்றன.
அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, ஆறு மாத கால பிறப்பு சுழற்சியை முந்திக்கொள்ள இந்த சிகிச்சைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தி அனைத்து தெரு நாய்களுக்கும் இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்" என்று கிளமன்ட் வலியுறுத்தினார்.
சென்னை மாநகராட்சியின் கால்நடை அதிகாரி கமால் ஹுசைன் இதுகுறித்துப் பேசுகையில், "இனப்பெருக்கக் கட்டுப்பாடு சிகிச்சை வழங்கத் தற்போது ஐந்து மையங்கள் செயல்படுகின்றன. மேலும் பத்து மையங்கள் அமைக்கப்படவுள்ளன, அவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
கடந்த ஆண்டு 15 ஆயிரம் நாய்களுக்கு இந்தச் சிகிச்சையைச் செய்திருந்தோம். இந்த ஆண்டு 20 ஆயிரம் நாய்களுக்கு செய்யத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு, கூடுதல் மையங்களுடன் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்" என்றார்.
கைவிடப்பட்ட நாய்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு இல்லை

பட மூலாதாரம், Antony Rubin
சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் எத்தனை நாய்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவை என்ற அதிகாரபூர்வ விவரங்கள் அதிகாரிகளிடம் இல்லை. இருப்பினும் கைவிடப்படும் நாய்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன என்று சென்னை மாநகராட்சி கூறுகிறது.
ப்ளூ கிராஸ் காப்பகத்தில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 15 கைவிடப்பட்ட வீட்டு நாய்கள் தஞ்சமடைவதாகக் கூறுகிறார் டாக்டர் எஸ்.சின்னி. இவர், இந்திய விலங்கு நல வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் ப்ளூ கிராஸ் அமைப்பின் துணை நிறுவனராகவும் இருக்கிறார்.
ராட்வீலர், டாபர்மேன் உள்ளிட்ட வகை நாய்கள் கைவிடப்படுகின்றன என்று கூறும் அவர், "நாய்கள் குட்டியாக இருக்கும்போது அவை பார்க்க அழகாக இருக்கின்றன என்று நினைத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் கைவிடுகின்றனர். சிலர் வெளிநாடு செல்வதால் கைவிடுகின்றனர். இன்னும் சிலரது வீட்டில், குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு நாய்கள் பிடிக்காததால் கைவிடுகின்றனர்" என்கிறார்.
சென்னையில் வளர்ப்பு நாய்கள் குறித்த கணக்கெடுப்பு இல்லாத நிலையில், சுமார் ஒரு லட்சம் நாய்கள் வீட்டில் வளர்க்கப்படலாம் என்கிறார் சின்னி கிருஷ்ணா. மேலும், "இந்த நாய்களைப் பதிவு செய்வது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி கூறினாலும், அனைவரும் முன்வந்து பதிவு செய்யவில்லை. பதிவு செய்யப்பட்ட நாய்களுக்கே சிப்கள் பொருத்தப்படும்" என்று கூறினார்.

சென்னையில் வளர்ப்பு நாய்கள் ஆன்லைன் பதிவு 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
"இதுவரை 9,600 நாய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓர் உரிமையாளர் எத்தனை நாய்களை வீட்டில் வைத்துக் கொள்ளலாம், நாய்களைப் பதிவு செய்யாவிட்டால் அதற்கான நடவடிக்கை, வளர்ப்பு நாய்களைக் கைவிட்டால் அதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விதிகள் இதுவரை வகுக்கப்படவில்லை," என்றும் சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி தெரிவித்தார்.
சிப் பொருத்துவதால் சிக்கல் ஏற்படுமா?
பெங்களூர் மாநகராட்சி தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் 2.79 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவது என முடிவு செய்து, அதற்கான சோதனையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டம் சட்டவிரோதமானது என ஆக்ஷன் ஃபார் அனிமல் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் நெவினா காமத் தனது மனுவில் தெரிவித்துள்ளார். சிப் பொருத்துவதால், நாய்களின் உடலில் காயங்களும் கட்டிகளும் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சென்னையில் சிப் பயன்பாடு ஏற்கெனவே உள்ளது என்று கூறுகிறார் விலங்குகள் நல உரிமைகள் ஆர்வலர் கிளமண்ட் ஆண்டனி ரூபின். அவர் கூறுகையில், "சென்னையில் ஏற்கெனவே மெரினா கடற்கரையில் உள்ள குதிரைகளுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. காடுகளில் யானைகளுக்கு இதுபோல சிப் பொருத்தப்படுவது உண்டு. கோவாவில் தெரு நாய்களுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. சிப் பொருத்துவதால் நாய்களின் உடலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மைக்ரோ சிப் எங்கே பொருத்தலாம்?
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 6 கால்நடை மருத்துவ கிளினிக்குகளிலும், கால்நடை வளர்ப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 5 மருத்துவ கிளினிக்குகளிலும், கால்நடை அறிவியல் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கும் மருத்துவ கிளினிக்குகளிலும் இந்த சிப்புகளைப் பொருத்தலாம். மேலும், இதற்காக தனியார் கால்நடை மருத்துவ நிலையங்களையும் ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












