கிரிக்கெட் நடுவராவது எப்படி? தகுதி, தேர்வு முறை, ஊதியம் மற்றும் சலுகைகள் விவரம்

மகளிர் உலகக் கோப்பை, நடுவர் சூ ரெட்ஃபெர்ன், நடுவர், கிரிக்கெட், நடுவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையின் ஒரு போட்டியின் போது நடுவர் சூ ரெட்ஃபெர்ன்
    • எழுதியவர், பிரியங்கா ஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பேட்டரின் காலில் கட்டியிருக்கும் பேடை (pad) பந்து தாக்கியது.

பந்து வீச்சாளர் உற்சாகமாக மேல்முறையீடு செய்தார்.

நடுவர் தன் கையை உயர்த்தினார்.

பேட்டர் ஆட்டமிழந்தார்...

கிரிக்கெட்டில், வீரர்களைப் போலவே முக்கியமான சிலரும் மைதானத்தில் நிற்கிறார்கள், அவர்கள் எந்த அணியுடனும் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். ஆனால் இவர்கள் இல்லாமல் போட்டிகள் எதுவும் விளையாடப்படுவதில்லை.

அவர்களின் முடிவு சரியோ தவறோ, எதுவாக இருந்தாலும், அது போட்டியின் போக்கையே மாற்றிவிடும்.

கிரிக்கெட் போட்டியின் முக்கியமான அம்சமான நடுவரைப் பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம்.

அம்பயராவது எளிதானது அல்ல. கிரிக்கெட்டின் விதிகள் அத்துப்படியாக தெரிந்திருப்பது அவசியம். அத்துடன், நடுவராவதற்கு பல வருட கடின உழைப்பு, உடற்தகுதி, பயிற்சி, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் அனுபவம் என்று பன்முகத் தன்மை தேவை.

இப்போது அடுத்த முக்கியமான கேள்வியைப் பார்க்கலாம்.

ஒருவர் எப்படி நடுவராவது? கிரிக்கெட் வீரராக இருப்பவர் தான் நடுவராக முடியுமா? நடுவராவதற்கு அடிப்படைத் தகுதிகள் யாவை? நடுவரின் சம்பளம் எவ்வளவு? இந்தத் தொழிலில் ஒருவர் எந்தளவு முன்னேற முடியும்?

பிரபல நடுவர்கள் சிலரிடமிருந்து இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்வோம்.

கல்வித் தகுதி

கிரிக்கெட், நடுவர், டெஸ்ட் போட்டி, நடுவர் எஸ்.கே. பன்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2001 மார்ச் மாதத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் போது நடுவர் எஸ்.கே. பன்சல் (நடுவில்)

நடுவராவதற்கான கல்வித் தகுதி என்ன? சிறப்புக் கல்வித் தகுதி ஏதேனும் தேவையா என்ற கேள்வியும் அடிக்கடி எழுகிறது.

இதற்கான பதில் 'இல்லை' என்பதே.

கிரிக்கெட் விதிகளில் ஆர்வம் இருந்தால் போதும், சிறப்புக் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் நீண்ட நேரம் மைதானத்தில் நிற்க வேண்டும் என்பதால் உடற்தகுதி மிகவும் அவசியமானது.

பிசிசிஐ மற்றும் ஐசிசி பேனல்களில் பணியாற்றிய எஸ்.கே பன்சல், நடுவராக பணியாற்றுவதற்கு கிரிக்கெட் பற்றிய அறிவு மட்டுமே தேவை என்று விளக்குகிறார். 2001 மார்ச் மாதத்தில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டியில் நடுவராகப் பணியாற்றியவர் பன்சல் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி, ஃபாலோ ஆன் ஆனபோதிலும், ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சரித்திரம் படைத்தது. இந்த போட்டியில் விவிஎஸ் லட்சுமணனின் 281 ரன்களும், ராகுல் டிராவிட்டின் 180 ரன்களும் இன்றும் மைல்கல்லாக பார்க்கப்படுகின்றன.

"கிரிக்கெட் விளையாடியவர்கள் அல்லது இன்னும் விளையாடிக் கொண்டிருப்பவர்களும் நடுவராக சிறப்பாகச் செயல்பட முடியும், ஆனால் கிரிக்கெட் விளையாடாதவர்கள், இந்தத் துறையில் நுழைய விரும்பினால், அது மிகவும் கடினமானதாக இருக்கலாம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

நடுவராக மாறுவதற்கு, சிறந்த தகவல் தொடர்புத் திறனும் ஆங்கில அறிவும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கிரிக்கெட்டின் பொதுவான மொழி ஆங்கிலம் என்பதுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்பதால் ஆங்கிலம்தான் சிறந்த தகவல் தொடர்பு மொழியாக இருக்கும்.

நடுவர் ஆவதற்கான வயதுத் தகுதி குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 40 ஆகும்.

நடுவர் தேர்வு முறை என்ன?

18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள், தாங்கள் வசிக்கும் மாநில கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திலும் (TNCA), உத்தரப் பிரதேசத்தில் இருந்தால் அந்த மாநிலத்தின் கிரிக்கெட் சங்கமான உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கத்திலும் (UPCA) பதிவு செய்ய வேண்டும்.

ஐபிஎல் மற்றும் பல சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் நடுவராக பணிபுரிந்த அனில் செளத்ரி தற்போது வர்ணனையாளராகவும், கிரிக்கெட் நடுவர் பணி குறித்த வீடியோக்களை உருவாக்குபவராகவும் இருக்கிறார்.

கிரிக்கெட் நடுவராக பதிவு செய்யும் முறை குறித்து கூறும் அவர், "யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம், 12-ஆம் வகுப்பு முடித்தவர் கூட நடுவர் ஆகலாம், கல்வித் தகுதி குறித்து எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. முதலில் உங்கள் மாநில சங்கத்தில் உள்ள விளையாட்டு அதிகாரிகள் அல்லது அம்பயரிங் பொறுப்பாளரைச் சந்தித்து, நடுவர் பணியில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தைத் தெரிவிக்கவும். அங்கிருந்தே உங்கள் பயணம் தொடங்குகிறது, அங்கு சேருவதற்கென எந்தத் தேர்வும் எழுத வேண்டிய அவசியமில்லை."

"அடுத்தக்கட்டமாக விண்ணப்பம் ஏதேனும் நிரப்ப வேண்டுமா என்று அவர்கள் கூறுவார்கள், உள்ளூர் லீக் போட்டிகளில் நடுவராகச் செயல்படும் வாய்ப்பு கிடைத்தால் அதைத் தவறவிடாமல் செய்யுங்கள். அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்தின் நடைமுறைப்படி அடுத்தக்கட்ட செயல்பாடுகளை செய்ய வேண்டும். அங்குள்ள மூத்த நடுவர்களைச் சந்தித்தால், அவர்கள் முழு நடைமுறையும் உங்களுக்கு விளக்குவார்கள். அடிப்படை விஷயம் என்னவென்றால், நீங்கள் நடுவராக விரும்பினால் உங்கள் பயணம் மாநில கிரிக்கெட் சங்கத்திலிருந்தே தொடங்க வேண்டும்."

நடுவர் பணியைத் தொடங்க ஆரம்பத்தில் தேர்வுகள் எதுவும் இல்லை என்றாலும், மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்களின் நடுவர் குழுவை (Panel) உருவாக்கும்போது, அவர்கள் நடத்தும் தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அனில் செளத்ரி தெரிவித்தார்.

"உள்ளூர் போட்டிகளில் அனுபவம் பெற்றால் தான் பிசிசிஐ-யுடன் இணைய முடியும். அதன் பிறகு மாநில சங்கங்களால் பரிந்துரைக்கப்படுபவர்கள் பிசிசிஐ நடத்தும் தேர்வை எழுதலாம். முன்பு பிசிசிஐ லெவல் 1 மற்றும் லெவல் 2 தேர்வுகளை நடத்தியது, ஆனால் தற்போது ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது."

கிரிக்கெட் நடுவர் தேர்வு மற்றும் அடுத்தக்கட்ட முன்னேற்றம்

கிரிக்கெட், நடுவர், பிசிசிஐ தேர்வு, ஜூனியர் லெவல் போட்டி, நடுவராக பணிபுரியும் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிசிசிஐ தேர்வில் தேர்ச்சியடைந்தவர் ஆரம்பத்தில் ஜூனியர் லெவல் போட்டிகளில் நடுவராக பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார்

நடுவர்களுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பை, சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் அல்லது இதர தளங்கள் வாயிலாக கிரிக்கெட் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கூறும் அனில் செளத்ரி, "பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடுவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகளை நடத்துகின்றன. நடுவர் தேர்வுகளை பிசிசிஐ நடத்தும் போது, தகுதியானவர்களின் பெயர்களை மாநில கிரிக்கெட் சங்கங்கள் பரிந்துரைக்கின்றன. பொதுவாக, களத்தில் நடுவராக செயல்படுபவர்கள் மற்றும் மாநில சங்கத்தின் புதிய விதிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களே பரிந்துரைக்கப்படும்."

தேர்வு முறையைப் பற்றி அவர் விளக்குகையில், "முதலில் எழுத்துத் தேர்வு, பிறகு செய்முறைத் தேர்வு, இறுதியாக நேர்காணல் நடைபெறும். இந்த மூன்று தேர்வுகளிலும் சேர்த்து 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த நிலைக்கு முன்னேற முடியும்" என்றார்.

அனில் செளத்ரியின் கூற்றுப்படி, பிசிசிஐ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு போட்டிகளில் நடுவராகச் செயல்படும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், ஆரம்பத்தில் 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என ஜூனியர் பிரிவு போட்டிகளே ஒதுக்கப்படும். திறமையும், செயல்பாடும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அடுத்த நிலைக்கு பிசிசிஐ உயர்த்தும்.

அப்போது, துலீப் டிராபி, ரஞ்சி டிராபி, டி-20 மற்றும் டி-20 நாக்-அவுட் போன்ற சீனியர் போட்டிகளில் நடுவராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் பயணம் ஏறத்தாழ ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நீடிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன்பின்னர், மிகச்சிறப்பாக செயல்படும் நடுவர்களுக்கு முதலில் ஐபிஎல் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளும் வழங்கப்படுகின்றன.

பிசிசிஐ-யில் தற்போது சுமார் 150 நடுவர்கள் உள்ளனர். சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இதற்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று அனில் செளத்ரி கூறுகிறார்.

ஐ.சி.சி-யில் இடம் பெறுவது எப்படி?

கிரிக்கெட், நடுவர், நிதின் மேனன், ஐ.சி.சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் நிதின் மேனன் தற்போது ஐ.சி.சி 'எலைட்' நடுவர்கள் குழுவில் உள்ளார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி, உலகெங்கிலும் உள்ள சிறந்த நடுவர்களின் குழுவான எலைட் நடுவர் குழுவை உருவாக்கியுள்ளது. 2002-ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த குழு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவின் உறுப்பினர்கள் உலகக் கோப்பை அல்லது டெஸ்ட் தொடர் போன்ற முக்கிய ஐ.சி.சி போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுவார்கள்.

எஸ்.கே. பன்சல் இந்தக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்தியாவின் நிதின் மேனன் தற்போது இந்தக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

"பிசிசிஐ நடுவர்களில் இரண்டு அல்லது நான்கு பேர் மட்டுமே சர்வதேச நடுவர்களாக முடியும். அவர்களின் அனுபவம் அதிகரிக்கும் போது, ​​ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கைகளை பிசிசிஐ தயாரிக்கிறது, அதன் அடிப்படையில், அவர்களுக்கு சர்வதேச மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஒதுக்கப்படுகின்றன" என்று அவர் விளக்குகிறார்.

எலைட் பேனல் என்பது கிரிக்கெட் போட்டிகள் நேர்மையாகவும், சர்வதேச தரத்துடனும் நடைபெறுவதை உறுதிசெய்யும் முக்கியப் பொறுப்பில் உள்ள நிபுணர்களின் குழுவாகும்.

"எலைட் பேனல் நடுவர்களின் பணி அசாதாரண நடுவர் பணியாகும். உலகக் கோப்பை அல்லது ஆசியக் கோப்பை போன்ற சர்வதேச போட்டிகளில் இவர்களே நடுவராக நியமிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் பிழை செய்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிதானது."

கிரிக்கெட், நடுவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் ஐ.சி.சி நடுவர் எஸ்.கே.பன்சலின் கூற்றுப்படி, நடுவராக தேவையானது கிரிக்கெட் பற்றிய ஆழமான அறிவு மட்டுமே

இப்போது கேள்வி என்னவென்றால், கிரிக்கெட் நடுவராக குறிப்பிட்ட கல்வி தேவையில்லை என்றால், என்ன படிக்க வேண்டும் என்பதே. கிரிக்கெட் அறிவை ஆழமாக வளர்த்துக் கொள்ள என்ன படிக்க வேண்டும்? அதற்கான புத்தகங்கள் யாவை?

அனில் செளத்ரியின் கூற்றுப்படி,

  • Marylebone Cricket Club என்ற சட்டப் புத்தகத்தை படித்து, கற்றுத் தேர்வது நல்லது. இந்த புத்தகம், ஆன்லைனில் அல்லது கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
  • கிரிக்கெட் சட்டத்தின் கருத்துகளைப் புரிந்துகொள்ள உதவும் மற்றொரு புத்தகம் டாம் ஸ்மித் எழுதிய Cricket Umpiring And Scoring. இதன் சமீபத்திய பதிப்பை வாங்கவும்.
  • இந்த இரண்டு புத்தகங்களைத் தவிர, பிசிசிஐ-யின் கிரிக்கெட் தொடர்பான சமீபத்திய விளையாட்டு நிபந்தனைகளையும் படியுங்கள். ஏனெனில் பிசிசிஐயின் விளையாட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் தான் தேர்வு இருக்கும்.

அனில் செளத்ரியின் கூற்றுப்படி, விளையாடுபவர்களும் நடுவராக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. ஆனால் அவர்களும் பிறரைப் போலவே வழக்கமான தேர்வு செயல்முறையின்படியே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உடற்தகுதி எவ்வளவு முக்கியமானது?

கிரிக்கெட், நடுவர், டி20 போட்டி, ஜானி பேர்ஸ்டோவ், நடுவர் அனில் செளத்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டி20 போட்டியின் போது ஜானி பேர்ஸ்டோ மற்றும் நடுவர் அனில் செளத்ரி

கிரிக்கெட் நடுவராக தேர்ச்சி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்கள் மருத்துவ ரீதியாக உடற்தகுதியுடன் இருப்பது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒருவருக்கு பார்வை குறைவாக இருந்தாலும், கண்ணாடியின் உதவியுடன் தெளிவாக பார்க்க முடிந்தால் அவரை தேர்ந்தெடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

"உடல் எடை, கேட்கும் திறன் மற்றும் கண்களின் பார்வைத்திறன் என அடிப்படை உடற்தகுதியுடன் இருப்பது முக்கியம். அதிக எடை கொண்ட நடுவர் எப்படி ஏழு அல்லது எட்டு மணி நேரம் மைதானத்தில் நிற்க முடியும்? இன்று விளையாட்டு மிகவும் வேகமாகிவிட்டது. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இல்லாத ஒருவர் மன ரீதியாகவும் சோர்வடைகிறார். பின்னர் அனைத்துமே தவறாகிவிடும்."

கிரிக்கெட் நடுவராக பணியாற்றுவதற்கு கல்வியை விட முக்கியமான வேறு சில திறன்கள் தேவை என்று அனில் செளத்ரி கூறுகிறார்.

தன்னம்பிக்கை, தீர்ப்பளிக்கும் திறன் மற்றும் புரிதல் போன்றவை அவசியம். மைதானத்திற்கு உரிய மரியாதை அளிப்பவராக இருக்கவேண்டும். பிறருடன் சரியான தகவல் தொடர்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்; அதற்காக ஆங்கிலம் தெரிந்தவராக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை."

அதே வேளையில், "கண்ணாடி அணிந்திருந்தாலும் பார்வை தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில், பந்து வருவதே சரியாகத் தெரியவில்லை என்றால் எதையும் செய்ய முடியாது. பந்தின் நகர்வுக்கு ஏற்ப நம்முடைய அசைவுகளும் இருக்கும் அளவிற்கு நடுவர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, பேட்ஸ்மேன் நேராக ஒரு ஷாட் அடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளவே என்னால் முடியவில்லை என்றால் நான் எப்படிப்பட்ட நடுவராக இருப்பேன்? தனது உடலைப் பாதுகாத்துக்கொண்டு பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று எப்படி பேட்ஸ்மேனுக்கு தெரிந்திருக்குமோ, அதேபோல தனது உடலைப் பாதுகாப்பதில் நடுவரும் கவனமாக இருக்க வேண்டும். இது உடல் தகுதியால் மட்டுமே சாத்தியமாகும்."

கிரிக்கெட் நடுவருக்கான ஊதியம் மற்றும் சலுகைகள்

கிரிக்கெட், நடுவர்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, கிரிக்கெட் நடுவர் பணி என்பது நல்ல வருமானமும், கௌரவமான வசதிகளும் கிடைக்கக்கூடிய ஒரு தொழிலாகும்.

"ஐந்து நட்சத்திர அல்லது உயர்தர ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதி மற்றும் விமானப் பயண டிக்கெட் கட்டணம் வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிர சில இதர படிகளும் கொடுக்கப்படுகின்றன. பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கும் வசதிகள், பல நாடுகளில் சர்வதேச நடுவர்களுக்குக் கூட கிடைப்பதில்லை" என அனில் செளத்ரி கூறுகிறார்.

தற்போது நடைபெறும் கிளப் போட்டிகளில், நடுவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 3,000 ரூபாய் வரை ஊதியம், பயணச் செலவு மற்றும் தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

"பிசிசிஐ-யில் நடுவராகப் பணியாற்றத் தொடங்கும் போது, போட்டி நடைபெறும் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் ஊதியமாகக் கிடைக்கும். ஐந்து நாட்கள் நடைபெற வேண்டிய போட்டி ஒன்று, இரண்டு நாட்களிலேயே முடிந்துவிட்டாலும், ஐந்து நாட்களுக்குரிய முழுத் தொகையும் வழங்கப்படும். பிசிசிஐ-யில் புதிதாக நடுவர் பணியைத் தொடங்குபவர்களுக்கு ஆண்டுக்குச் சுமார் 40 நாட்கள் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு 70 நாட்கள் வரை கூட வாய்ப்பு கிடைக்கலாம்."

அனில் செளத்ரியின் கருத்துப்படி, "கிரிக்கெட் நடுவர் என்பவர், களத்தில் நிலவும் கடும் குளிர், வெயில், புழுதி மற்றும் அனல் பறக்கும் ஆட்டத்திற்கு மத்தியிலும், பொறுமையுடன் நிற்கும் திறன் கொண்டவராக இருக்கவேண்டும்."

கிரிக்கெட் நடுவர்களின் பணி ஓய்வுக்கான வயது 65 என்றாலும், பொதுவாகப் பலர் 60 வயதிலேயே ஓய்வு பெற்று விடுகின்றனர். ஓய்வுக்குப் பிறகு பிசிசிஐ தரப்பிலிருந்து எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு