ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்த இளைஞர் ஏற்காடில் இருவர் உதவியுடன் முதல் காதலியை கொன்றது எப்படி?

பட மூலாதாரம், Police Department
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
ஏற்காட்டில், கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று இளம் பெண் ஒருவர் மயக்க மருந்து செலுத்தி மலைப் பகுதியில் இருந்து துாக்கி எறியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக, பொறியியல் மாணவர் ஒருவர், பெண் ஐடி ஊழியர் ஒருவர், ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர், மூன்று பெண்களையும் (கொலை செய்யப்பட்ட பெண், கைது செய்யப்பட்ட பெண்கள்) காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதோடு, விஷ ஊசி போட்டு அப்பெண் கொலை செய்யப்பட்டதாகப் பரவியுள்ள தகவலை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் உடல் மீட்பு
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில், கடந்த புதன்கிழமையன்று 20 அடி பள்ளத்தில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் உடலுக்கு அருகிலிருந்த கைப்பையில் ஓர் அடையாள அட்டை, பான் கார்டு, தனியார் பெண்கள் விடுதியில் பணம் செலுத்தியதற்கான ரசீது, 200 ரூபாய் பணம் இருந்துள்ளது.
அவற்றில் இருந்து, இறந்து கிடந்தவர் சேலத்திலுள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் பணியாற்றும் ஆசிரியர் லோகநாயகி (வயது 35) என்பது தெரிய வந்தது.
மேலும் சேலத்தில் இவர் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் இவரைக் காணவில்லை என்று அவர் ஏற்காடு சென்ற மறுநாளே பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது தெரிய வந்ததாக ஏற்காடு நகர கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், HANDOUT
அதன் பிறகு, அவர் பயன்படுத்தி வந்த அலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டவர்களின் எண்களை வைத்து காவல்துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
அதில்தான், இவர் யாரால், எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்ததாக ஏற்காடு காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் சார்பு ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி உள்ளிட்ட காவல்துறையினர் பிபிசி தமிழிடம் கூறினர்.
''கடைசியாக அந்தப் பெண்ணுக்கு பேசிய மொபைல் எண்ணைப் பார்த்தபோது, அது பெரம்பலுாரில் தனியார் பொறியியல் கல்லுாரியில் கணினி அறிவியல் படிக்கும் அப்துல் ஹபீஸ் (வயது 22) என்பதைக் கண்டுபிடித்தோம்.
அவரைப் பிடித்து விசாரித்ததும், இந்தக் கொலையின் முழு விவரமும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்தான் அவரையும், இரண்டு பெண்களையும் கைது செய்தோம்'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் காவல் சார்பு ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி.
வீட்டை விட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய லோகநாயகி

பட மூலாதாரம், Police Department
இந்தக் கொலையில் அப்துல் ஹபீஸ் உடன் தாவியா சுல்தானா (வயது 22), மோனிஷா (வயது 21) என்ற இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுல்தானா, சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர். மோனிஷா, திருச்சியைச் சேர்ந்த ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி.
காவல்துறையினர் தந்த தகவலின்படி, கொலை செய்யப்பட்ட லோகநாயகிக்கு தாய், தந்தை இல்லாததால், அவருடைய சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎட் படித்து முடித்திருந்த லோகநாயகி, தன்னைவிட வயதில் இளையவரான அப்துல் ஹபீஸை காதலித்தது பற்றி வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு சித்தி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், 3 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறி, சேலத்திற்கு வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கிப் பயிற்றுநராக வேலை பார்த்துள்ளார்.
ஆனால், அப்துல் ஹபீஸ் ஏதேதோ காரணம் சொல்லி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதற்கிடையில் சுல்தானாவுடன் அப்துல் ஹபீஸ் நெருங்கிப் பழகுவதைத் தெரிந்து கொண்ட லோகநாயகி, தன்னை உடனே திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்'' என்கின்றனர் காவல்துறையினர்.
கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று வாடகை காரில் நான்கு பேரும் ஏற்காடு சென்றதாகவும், அங்கு வைத்தே இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்காகவே வாடகை காரை ஓட்டுநர் இல்லாமல் அப்துல் ஹபீஸ் ஓட்டி வந்ததையும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
''அப்துல் ஒரே நேரத்தில் 3 பெண்களிடமும் பழகியுள்ளார். இவர்களில் லோகநாயகி திருமணத்துக்கு மிகவும் வலியுறுத்தியதால் அவரைக் கொலை செய்ய முடிவெடுத்த அப்துல் ஹபீஸ், மற்ற இருவரிடமும் லோகநாயகியை பற்றி மிகவும் தவறாகச் சித்தரித்துள்ளார்.
அவர் இருந்தால் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மற்ற இருவரையும் தனித்தனியாக ஏமாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, மற்ற இரு பெண்களின் உதவியுடனேயே இந்த கொலையை அவர் செய்து, மலையில் இருந்து உடலை எறிந்துள்ளார்'' என்று சார்பு ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி தெரிவித்தார்.
ஏற்காடு மலைப்பாதையில் கண்காணிப்பு இல்லையா?

பட மூலாதாரம், Police Department
விஷ ஊசி போட்டு லோகநாயகி கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் பரவியுள்ள தகவல்களை ஏற்காடு காவல்துறை மறுத்துள்ளது.
அதுகுறித்துப் பேசியபோது, "நர்சிங் மாணவியான மோனிஷாவின் உதவியுடன், அறுவை சிகிச்சைக்குத் தரப்படும் மயக்க மருந்தை, லோகநாயகி கையில் ஏற்பட்ட காயத்துக்கு வலி நீக்கும் ஊசி என்று கூறி, இரு முறை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு மலையிலிருந்து உடலைத் துாக்கி எறிந்துள்ளனர்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே இன்னும் தெளிவான முடிவுகளை அறிய முடியுமென்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஏற்காடு மலைப்பகுதி ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்த நேரத்தில், இதே ஏற்காடு மலைப் பாதையில் ஒரு சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
அந்தக் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இப்போது ஓர் ஆண்டு கழித்து அதே மலைப்பாதையில் மற்றொரு கொலை நடந்துள்ளது.
இது பற்றி சேலம் டிஐஜி உமாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''கடந்த ஆண்டில் நடந்த கொலையில், வேறு எங்கோ கொலை செய்துவிட்டு, இங்கு வந்து சூட்கேஸை துாக்கி வீசிச் சென்றிருந்தனர். இப்போது கொலையே அந்தப் பகுதியில்தான் நடந்துள்ளது. ஏற்காடுக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அந்தப் பாதையில் காவல்துறை சோதனைச் சாவடியும் உள்ளது. அவ்வப்போது வாகனப் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பாதையில் காடுகள் அடர்ந்த பகுதியில் கேமராக்களை நிறுவ இயலாது. ஆனால் அந்தப் பாதையில் காவல்துறையினர் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












