உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் தங்கம் விலை மேலும் உயருமா?

தங்கம், அமெரிக்கா, டிரம்ப், வரி விதிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 2) அன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நேற்று தெரிவித்தார்.

உயர்ந்து வந்துகொண்டிருந்த தங்கம் விலையானது கடந்த வாரம் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22 கிராட்) 110 ரூபாய் சரிந்து சுமார் 8,500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைந்தது.

ஏப்ரல் 9 அன்று ஒரு கிராமுக்கு (22 கிராட்) 65 ரூபாய் உயர்ந்து சுமார் 8,390 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் உயர்ந்து ஒரு கிராம் 8,660 ரூபாய்க்கு விற்பனையானது.

​பொதுவாக, பொருளாதார நெருக்கடி அல்லது சந்தை குழப்பத்தின் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதன் மீது முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை உயரும். ஆனால் இந்த முறை மாறாக டிரம்ப் வரி விதிப்புக்கு பிறகு, தங்கத்தின் விலை சரிந்து தற்போது உயர்ந்துள்ளது.

தங்கம், அமெரிக்கா, டிரம்ப், வரி விதிப்பு

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் விலை ஏன் சரிந்தது?

இந்தியாவில் தங்கத்தின் விலையானது அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், எப்போதும் விலை உயர்ந்துகொண்டேதான் இருந்துள்ளது.

2000களின் தொடக்கத்தில் தங்கம் ஒரு சவரனுக்கு சுமார் 3,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியின்போது தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் சுமார் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன் பிறகு கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

இதன் பிறகு ரஷ்யா – யுக்ரேன் போர் போன்ற பல காரணங்களினால், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி, தற்போது ஒரு சவரன் சுமார் 67,000 முதல் 69,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ள தங்கத்தின் விலைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம், "டிரம்பின் வர்த்தக வரி விதிப்பின் காரணமாக உலக பொருளாதாரமே குழப்பத்தில் இருக்கிறது. அதனால்தான் தங்கம் விலை இறங்கி தற்போது எறியுள்ளது", என்று கூறினார்.

"தங்கம் ஒரு நிலையான முதலீடு. இதனால் மக்கள் மத்தியில் தங்கத்திற்கு அதிக தேவை இருக்கிறது. தற்போது பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்தாலும், தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்வை எட்டியுள்ளது. இந்த வீழ்ச்சி ஒரு குறுகிய கால தாக்கம் மட்டுமே", என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தங்கம், அமெரிக்கா, டிரம்ப், வரி விதிப்பு

பட மூலாதாரம், Getty Images

ஆனால் டிரம்பின் வரி விதிப்பு காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை 38 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மார்னிங்ஸ்டார் என்னும் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ளார்.

இது நடக்க வாய்ப்பில்லை என்று ஜோதி சிவஞானம் தெரிவிக்கின்றார்.

"வெறும் அமெரிக்காவின் வரி விதிப்பினால் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை'' என்று ஜோதி சிவஞானம் கூறுகிறார்.

"சமீபகாலமாக தங்கத்தின் விலையேற்றத்தில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தங்கத்தை கொள்முதல் செய்வது ஆகும். தங்கம் ஒரு நிலையான மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு முதலீடு என்பதாலும், அது வர்த்தக பரிவர்த்தனை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதாலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் சார்ந்துள்ளன", என்று பேராசிரியர் ஜோதி சிவஞானம் தெரிவித்தார்.

உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் சுமார் 20% தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்குகின்றன. தங்கத்தை வாங்கும் துறைகளில், மூன்றாம் இடத்தில் மத்திய வங்கிகள் உள்ளன.

அதிக அளவிலான தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

தங்கம், அமெரிக்கா, டிரம்ப், வரி விதிப்பு
படக்குறிப்பு, பேராசிரியர் ஜோதி சிவஞானம்

"எப்போதும் எறிக்கொண்டே இருக்கும் அதன் விலை மற்றும் நிலைத்தன்மை காரணமாக இந்தியாவைப் போல மற்ற நாடுகளிலும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளைத் தாண்டி பொது மக்களும் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணியாக இருக்கின்றது", என்று அவர் கூறினார்.

மேலும் பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவையும் சேர்ந்து தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டார் ஜோதி சிவஞானம்.

தொடர்ந்து பேசிய அவர், "இது போன்ற காரணிகளில் பாரிய மாற்றம் நிகழ்ந்து, தங்கத்திற்கான தேவை குறைந்தால் மட்டுமே அதன் விலையிலும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்படும். மற்றபடி, தங்கத்தின் விலையில் அவ்வப்போது சரிவு இருந்தாலும், அதன் மதிப்பு மேல்நோக்கி உயர்ந்துகொண்டேதான் இருக்கும்", என்று தெரிவித்தார்.

"அமெரிக்கா தொடங்கியுள்ள வர்த்தக போரால் தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பு முதலீடாக கருதப்படுகிறது. இது தங்கத்தின் விலையை நிச்சயமாக அதிகரிக்கவே செய்யும்", என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.