டொனல்ட் டிரம்ப்: பங்குச்சந்தையின் மொத்த சரிவுக்கும் ஒற்றைக் காரணம்
அமெரிக்கா தொடங்கி ஜப்பான் வரை உலகளவில் பல நாடுகளின் பங்குகளும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம், ஒற்றை நபர். டொனல்ட் டிரம்ப்.
உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன.
டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
திங்கள்கிழமையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்கிழமையன்று ஆசிய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இருந்தாலும் பங்குச்சந்தை ஏன் இத்தகைய சரிவை சந்தித்தது?
இது பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என்று சில நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்தியாவுக்கு நேற்றைய தினம் கருப்புத் திங்களாக அமைந்தது. மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் நான்குக்கும் அதிகமான சதவிகிதம் சரிந்ததில் முதலீட்டாளர்கள் சுமார் 19 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
அடுத்த 30 நாட்களில் சந்தையின் நிச்சயமற்ற தன்மை இன்னும் அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இது மேலும் தொடரக்கூடுமா என்பதைப் பார்க்கும் முன் டொனல்ட் டிரம்ப் இதற்கு எப்படி காரணமானார் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



