கர்நாடகாவில் தேர்வு முடிவுகள் பற்றிப் பொய் சொன்ன மகளைக் கொன்ற தாய் - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (10/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளைப் பற்றி பொய் சொன்னதற்காக 59 வயது பெண் தனது மகளைக் கொன்றதாக நகர நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு ரூ.50,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை வழங்கியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பனசங்கரியில் உள்ள சாஸ்திரி நகரைச் சேர்ந்த பீமனேனி பத்மினி ராணி, தனது ஒரே மகளான 17 வயதான சாஹிதி சிவப்ரியாவை 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கத்தியால் குத்தியதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
"சாஹிதி தனது அம்மாவிடம், இறுதித் தேர்வில் 95% மதிப்பெண் பெற்றதாகக் கூறி பொய் கூறியுள்ளார். ஆனால் ஏப்ரல் 28 அன்று, தான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததாக சாஹிதி ராணியிடம் கூறினார். சாஹிதி தனது தோல்விக்குத் தனது தாயைக் குற்றம் சாட்டினார், அவர் ஒருபோதும் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறினார்.
மன உளைச்சலுக்கு ஆளான ராணி, சாஹிதியின் நெருங்கிய நண்பரை அழைத்தார், சாஹிதி உண்மையில் நான்கு பாடங்களில் தோல்வியடைந்தது ராணிக்கு தெரிய வந்தது. கோபமடைந்த ராணி, சாஹிதியின் மோசமான செயல்திறனுக்கான காரணத்தைக் கேட்டார், அதற்கு சாஹிதி கடுமையாக பதிலளித்தார்," என்று அரசு வழக்கறிஞர் பாஸ்கர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.
"எங்களுக்குத் திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்துப் அவள் பிறந்தாள். 2020ஆம் ஆண்டு என் கணவர் இறந்த பிறகு அவளிடம் என் பாசம் அதிகமானது. ஆனால் சாஹிதிக்கு என் மீது பாசமில்லை. எதிர்காலத்தில் அவள் மாறுவாள் என்று நம்பி வந்தேன்.
சாஹிதி 95% மதிப்பெண் பெற்று வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கத் தயாராக இருப்பதாக என் சகோதரர்களிடமும் மற்ற உறவினர்களிடமும் பெருமை பேசினேன். உண்மை தெரிந்தால், நான் அவமானத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, இறப்பது நல்லது என்று முடிவு செய்தேன்," என்று ராணி காவல்துறையிடம் கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த்

பட மூலாதாரம், sathya movies
"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, தான் பேசியதற்குக் காரணம் என்ன என்பது குறித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்" என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாண்டு நினைவு நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் அவர், 'என்னுடன் நெருக்கமாகப் பழகி, என் மீது அன்பு செலுத்தியவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே. அதில் இயக்குநர் பாலச்சந்தர், தயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன், மறைந்த மூத்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எல்லாம் இப்போது இல்லை என்று நினைக்கும்போது மனம் வாடுகிறது" என்று பேசியதாக அந்தச் செய்தி கூறுகிறது.
"பாட்ஷா படத்தின் 100வது நாள் விழாவில், தயாரிப்பாளராக ஆர்.எம்.வீரப்பன் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது நான் வெடிகுண்டு கலாசாரம் பற்றிப் பேசினேன். அந்த மேடையில் கடைசியாகப் பேசியது நான்தான். ஆளுங்கட்சியின் (அதிமுக) அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு அதைப் பற்றி நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது அந்த அளவுக்கு எனக்குத் தெளிவு இல்லை.
அதன்பிறகு, 'அது எப்படி அமைச்சராக இருந்துகொண்டு, மேடையில் அரசுக்கு எதிராக ரஜினிகாந்த் பேசுவதைக் கேட்டுவிட்டு சும்மா இருந்தீர்கள்?' எனக் கூறி ஆர்எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தூக்கிவிட்டதாக ரஜினிகாந்த் மேலும் அந்த வீடியோவில் பேசியிருந்தார்", என்றும் அந்தச் செய்தில் கூறப்பட்டுள்ளது.
"இது என்னால்தான் நடந்தது எனத் தெரிந்ததும், ஆடிப்போய்விட்டேன். ஆர் எம். வீரப்பனிடம் மன்னிப்பு கோரினேன். அவர் எதுவுமே நடக்காதது போல, 'அதை விடுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். அடுத்து எங்கே படப்பிடிப்புக்குச் செல்கிறீர்கள்?' என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார். 'ஜெயலலிதாவிடம் இதைப் பற்றிப் பேசட்டுமா?' என நான் அவரிடம் கேட்டதற்கு அவர், 'ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால் மாற்றமாட்டார். அவரிடம் பேசி உங்களது மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி நீங்கள் சொல்லி, நான் அங்கே போய்ச் சேர வேண்டிய அவசியம் இல்லை' என்று சொன்னார்" என்று ரஜினிகாந்த் கூறியதாக இந்து தமிழ் திசை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுப்பதற்குச் சில காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் காரணம் மிகவும் முக்கியமானது என்று கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசு, 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சுமார் 42 கி.மீ தூரத்தில் உள்ள பரந்தூரில், சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்தப் பசுமை விமான நிலையம் அமைக்க நில எடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையில் இதற்கான 'தள அனுமதியை மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிவிட்டது. அடுத்த கட்டத்திற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலுக்காக தமிழக அரசு விண்ணப்பம் செய்திருந்தது", என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதை விரிவாக ஆய்வு செய்து தற்போது கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதையடுத்து பரந்தூர் விமான நிலைய பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது."
மேலும் அந்தச் செய்தியின்படி, விமான நிலைய பணிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன. "எனவே அதற்கான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் விரைவில் விடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது."
"இந்தப் பணிகள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. 2036ஆம் ஆண்டுக்குள் பரந்தூர் பசுமை விமான நிலையம் முழுமையாகச் செயல்பட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதே வேளையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது" என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் குப்பைகளை அகற்றும் ரோபோக்கள்

"சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்கள் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன" என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் தையூரில் உள்ளது. இங்கு ஏசிடிசி (அக்வாட்டிக் க்ளீனப் ட்ரோன் சேலஞ்ச்) ஹேக்கத்தான் இறுதிப் போட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு ஐஐடி கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான 'பால்ஸ்' சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் மிதக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் ஆளில்லா ரோபோக்களை பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் குழுவினர் காட்சிப்படுத்தியிருந்தனர்" என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர் குழுவினருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கியதாகக் கூறும் அந்தச் செய்தி, ''மாணவர்கள் தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப திறமைகளை நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும் பயன்படுத்த வேண்டும்," என்று கூறியதாக அந்தச் செய்தி கூறுகிறது.
மலையக தமிழர்களுக்கான விசேட உதவித் திட்டங்கள் குறித்து அவதானம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய வீடமைப்புத் திட்டம், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்துக்கான விசேட உதவித் திட்டங்கள் போன்ற இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி உதவித் திட்டங்கள் குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
"இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது" என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதன்போது மலையக மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான நவீன வகுப்பறைகள் வழங்கும் செயல் திட்டத்தையும் நடைமுறைப் படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
மலையக சமூகத்தினருக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,000 வீடுகளின் முன்னேற்றம் மற்றும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும், பிரதமர் நரேந்திர மோதியின் அண்மைய இலங்கைக்கான விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்" என்று அச்செய்தி கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












