யாழ்ப்பாணத்தில் 35 ஆண்டுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு முக்கிய சாலை திறப்பு - அதில் என்ன இருக்கிறது?

இலங்கை

பட மூலாதாரம், NIRUJAN SELVANAYAGAM

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தின் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வீதியொன்று கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 10) கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பலாலி பகுதியின் அச்சுவேலி முதல் பருத்தித்துறை வரையான வீதி, சுமார் 35 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி திறக்கப்பட்டதை முன்னிட்டு, அந்த பிரதேச மக்கள் வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை

பட மூலாதாரம், NIRUJAN SELVANAYAGAM

கட்டுப்பாடுகள் என்ன?

பலாலி அதிவுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ராணுவ குடியிருப்பின் ஊடாக இந்த வீதி செல்வதாக அந்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அந்த அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

  • நாளாந்தம் அதிகாலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே இந்த வீதி திறக்கப்பட்டிருக்கும்.
  • இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல் மற்றும் திருப்புதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.
  • இந்த வீதியில் நடைபயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்களை தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வீதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அதிகூடிய வேகமாக 40 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.
  • இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பட மூலாதாரம், NIRUJAN SELVANAYAGAM

படக்குறிப்பு, இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வீதியில் என்ன இருக்கின்றது?

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த பகுதி முழுமையாக அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு என அழைக்கப்படும் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் காணிகளை ராணுவம் கையகப்படுத்தியிருந்தது.

இவ்வாறு பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள் உள்ளிட்ட ராணுவ பயன்பாட்டுக்கள் இடம்பெற்று வந்த பின்னணியில், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், கடந்த கால அரசாங்கங்கள் பல காணிகளை விடுவித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு முன்நகர்வாக இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பட மூலாதாரம், NIRUJAN SELVANAYAGAM

காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை

35 வருடங்களின் பின்னர் இந்த வீதியூடாக பயணித்தவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அந்த வீதியின் தற்போதைய நிலைமை குறித்தும் கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்த வீதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள், ராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ செயற்பாடுகளை அவதானிக்க முடிவதாக மக்கள் கூறுகின்றனர்.

''இந்த வீதி விடுவிக்கப்பட்டமைக்கு மக்களை பொருத்தவரை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதேபோன்று எங்களுடைய காணிகளை சும்மா தான் வைத்திருக்கின்றார்கள். பலாலி மாத்திரமன்றி, வலிகாமம் வடக்கில் வசாவிலான், கட்டுவான், குரும்பசிட்டி, பலாலி, மயிலிட்டி, ஊரணி என்று சொல்லி ஏராளமான காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றையும் விடுவித்து தர வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.'' என வீதி திறப்பிற்காக வருகைத் தந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கின்றார்.

மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

''இந்த பிரதேசத்திலுள்ள ஏனைய விடயங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்பட வேண்டியிருக்கின்றது. இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இவற்றோடு மக்களின் குடியிருப்பு காணிகள் இன்னும் விடுப்பட வேண்டியிருக்கின்றது, உடனடியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. படிப்படியாக இந்த தேவைகளை பூர்த்தி செய்து, மக்கள் சுபீட்சமாக சந்தோசமாக வாழ்வதற்காக ஏதுவான காரணிகளை செய்து கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்'' என இந்த இடத்திற்கு வருகைத் தந்த மதக்குரு ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

''எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். எங்களுடைய நிலத்தில் நாங்கள் குடியேற வேண்டும். எங்களுடைய காணிகளில் நாங்கள் சாவதற்கு முன்னர் குடியேற வேண்டும் என்பதே எங்களுடைய ஆசையாக இருக்கின்றது. நான் செத்த பிறகு என்னுடைய பிள்ளைக்கு காணி தெரியாது. நான் வந்து காட்டினால் தான் காணி பிள்ளைக்கு தெரியும். எங்களுடைய காலத்தில் விடுவிக்கப்பட வேண்டும்'' என அந்த பிரதேசவாசி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை
படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன்

''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்ல''

இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட 'உயர் பாதுகாப்பு வலயம்' அல்ல. மாலை 5 மணியிலிருந்து காலை 6 மணி வரை இதனை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும்தான் பாதைகளைத் திறப்பீர்களா? எனவும் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளுடனாவது பாதை திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை

பட மூலாதாரம், MOD SRI LANKA

படக்குறிப்பு, நலின் ஹேரத்

90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டன - ராணுவம் பிபிசிக்கு தெரிவிப்பு

யுத்தக் காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''ஏனைய காணிகளை நாங்கள் மீளாய்வுகளின் பின்னர் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். பூகோள ரீதியில் முக்கியத்துவமாக உள்ள காணிகளே விடுவிக்கப்படாது காணப்படுகின்றன. உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். முடியுமான காணிகளை நாங்கள் விரைவில் விடுவிப்போம். 90 வீதமான காணிகளை விடுவித்துள்ளோம். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அதிலுள்ள காணிகளை மீளாய்வு செய்து, ராணுவத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டிய காணிகளை வைத்துக்கொண்டு, எஞ்சிய அனைத்து காணிகளையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். '' என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.