முன்னாள் இந்திய தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த சிங்கப்பூர் நீதிமன்றம் – என்ன விவகாரம்?

தீபக் மிஸ்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீபக் மிஸ்ரா
    • எழுதியவர், உமாங் போடார்
    • பதவி, பிபிசி

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் பல பகுதிகள், வேறு ஒரு தீர்ப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக (நகலெடுக்கப்பட்டுள்ளதாக) கூறி சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அத்தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

ரயில்வே சரக்கு வழித்தடத்தை நிர்வகிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய தொகை தொடர்பாக, பல நிறுவனங்களுக்கு இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்திய அரசு 2017 ஆம் ஆண்டில் சரக்கு வழித்தட நிர்வாகத்திற்கான குறைந்தபட்ச தொகையை அதிகரித்தது. இது கூடுதல் தொகை தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இது குறித்த வழக்கு தீபக் மிஸ்ரா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள இரண்டு நடுவர் மன்றங்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஒரு நடுவர் மன்றம் என, மூன்று நடுவர் மன்றங்களில் ஒரே சமயத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றங்கள் அனைத்துக்கும் மிஸ்ரா தலைமை நடுவராக செயலாற்றினார்.

நடுவர் மன்றம் என்பது நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்னைகளை தீர்க்கும் ஒரு வழிமுறையாகும். இதில் இருதரப்பினரும் தாங்களாகவே நடுவர்கள் எனப்படும் நடுநிலை நிபுணர்களின் குழுவைத் தேர்ந்தெடுத்து பிரச்னைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.

வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளை விட இது வேகமானது என்பதால், வணிக பிரச்னைகளுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நடுவர் மன்றம் எடுக்கும் முடிவை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும்.

நடுவர் மன்றங்கள் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும். ஆனால், வெகு சில காரணங்களுக்கு மட்டுமே இது சாத்தியம். சிங்கப்பூர் நடுவர் மன்றம் வழங்கிய முடிவை எதிர்த்து, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ஏப்ரல் 8ம் தேதி, மிஸ்ரா தலைமையிலான நடுவர் மன்றம் வெளியிட்ட தீர்ப்பில் உள்ள 451 பத்திகளில் 212 பத்திகள் - அதாவது அதன் உள்ளடக்கத்தின் பாதி பகுதி, இந்தியாவில் அவர் ஏற்கனவே வழங்கிய இரண்டு நடுவர் மன்ற தீர்ப்புகளிலிருந்து நேரடியாக நகலெடுக்கப்பட்டுள்ளன என சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த முடிவு, இந்தியாவிலும் உலக அளவிலும் நிபுணர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

தீபக் மிஸ்ரா

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச நடுவர் மன்ற தீர்ப்புகளை ரத்து செய்வது என்பது "அபூர்வமானது " என்றும், இது "விதிவிலக்கான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை" என்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நடுவர் மன்ற வழக்குகள் குறித்த பேராசிரியர் ஸ்டாவ்ரோஸ் பிரெகோலாகிஸ் கூறுகிறார்.

சமீப காலங்களில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய நீதிபதிகளில் ஒருவராக மிஸ்ரா உள்ளார்.

2017-ஆம் ஆண்டு, அவர் தலைமை நீதிபதியாக இருந்தபோது, நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

அப்போது, முக்கியமான வழக்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு (நீதிபதிகள்) ஒதுக்கி, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கான விதிகளை மிஸ்ரா மீறுகிறார் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிபிசி இந்தி, மிஸ்ராவை குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டது. ஆனால் அவரது தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் இது குறித்து பேசும் போது, "இதற்கு முந்தைய காலங்களிலும் நடுவர் மன்ற தீர்ப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் கவலை கொள்ள வைப்பது என்னவென்றால் நடுவர் மன்றத்தில் இருந்தவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி. மேலும் ரத்து செய்யக் காரணம், அவர் வழங்கிய தீர்ப்பு நகலெடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில், நடுவர் மன்றத்தில் இடம் பெற்றிருந்த மற்ற இரண்டு நடுவர்களும் தீர்ப்பில் என்ன பிழை இருக்கிறது என்பதை காணவில்லை. என்பதால் அவர்களுக்கும் இந்த குற்றச்சாட்டுகள் பொருந்தும்," என்று குறிப்பிட்டார்.

நீதிமன்றம் கூறியது என்ன ?

இந்த விவகாரம் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தை அடைவதற்கு முன், மிஸ்ரா வழங்கிய தீர்ப்பின் சில பகுதிகள் வேறு ஒரு தீர்ப்பின் பகுதிகளில் இருந்து "நகலெடுக்கப்பட்டு ஒட்டப்பட்டவை" என்ற காரணத்தினால், வணிக ரீதியிலான பிரச்னைகளை விசாரிக்கும் ஒரு நீதிமன்றமும் மிஸ்ரா தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், மற்ற இரண்டு நடுவர் நீதிமன்ற தீர்ப்புகளில் இருக்கும் பத்திகளை தீர்ப்பாயம் பயன்படுத்திய காரணத்திற்காக "தீர்ப்பை ரத்து செய்ய வேண்டிய தேவை இல்லை," என்று மேல்முறையீடு செய்தவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

"வழங்கப்பட்ட தீர்ப்புக்கும், இணைத் தீர்ப்புகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை குறித்து நீதிபதி மிகத்தீவிரமாக கவனம் செலுத்தி ஆராய்ந்தார். ஆனால் இது நடுவர் தீர்ப்பில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை," என்றும் அந்த மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த விவாதங்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

வேறு ஒரு தீர்ப்பின் பகுதிகளை நகலெடுப்பது ஆட்சேபனைக்குரியதல்ல. ஆனால், நகலெடுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் உள்ள ஒப்பந்தப் பிரிவுகள், வாதங்கள், முந்தைய வழக்குகளின் எடுத்துக்காட்டுகள் ஆகியவை சிங்கப்பூர் நடுவர் மன்ற விசாரணையின்போது விவாதிக்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் கூறியது.

எனவே இது மிஸ்ராவால் "முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்ட" மற்றும் "நியாயமற்ற" வழக்கு என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

"தீர்ப்பளிக்கும் செயல்முறையின் நேர்மை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சார்புடன் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இது மிஸ்ராவால் "முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்ட" மற்றும் "நியாயமற்ற" வழக்கு என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது மிஸ்ராவால் "முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்ட" மற்றும் "நியாயமற்ற" வழக்கு என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்திய நடுவர் மன்றம்

சர்வதேச அளவில் நடுவர் மன்றங்கள் அமைத்து வழக்குகளை விசாரிக்கும் முக்கியமான மையமாக இந்தியா தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கும் நேரத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது.

இந்தியாவில் நடுவர் மன்றம் 'பழைய நீதிபதிகளின் மன்றமாக' கருதப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக உள்ளது.

பிற நாடுகளில், நடுவர் மன்றங்கள் ஒரு முக்கியமான, முழுநேர தொழிலாகக் கருதப்படுகின்றன.

"இந்திய நடுவர் மன்றங்களை பெரும்பாலான நேரங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகள்தான் வழிநடத்துகிறார்கள். அவர்கள் இந்த பணியை நீதித்துறையின் மனப்பான்மையுடன், மேலும் சர்வதேச நடுவர் மன்றத்தின் தரநிலைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தாத ஒரு உணர்வுடனும் அணுகுகிறார்கள்" என்று பேராசிரியர் பிரெகோலாகிஸ் கூறுகிறார்.

"இதை சீர்திருத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 'வழக்கமான பழக்கவழக்கங்கள்' இன்னும் தொடர்கின்றன. இது இந்தியா சர்வதேச நடுவர் மன்றத்தின் மையமாகத் தன்னை நிலைநிறுத்துவதற்கான நம்பகத்தன்மையை பாதிக்கின்றது என்று அவர் நம்புகிறார்."

இந்த தீர்ப்பு, ஒரு நடுவராக மிஸ்ராவின் நற்பெயரையும் "பாதிக்கக்கூடும் " என்று பேராசிரியர் பிரெகோலாகிஸ் கூறினார்.

இதனால் ஏற்படக்கூடிய தாக்கம் மோசமாக இருக்கக்கூடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். இது போன்ற ஒரு தீர்ப்பு "இந்திய நடுவர்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பார்வையை வலுப்படுத்தக்கூடும்" என்று அஷிம் சூட் எச்சரிக்கின்றார்.

நடுவர்களைக் காரணம் காட்டி தீர்ப்பை ரத்து செய்திருப்பது வழக்கத்திற்கு மாறானது என்பதால் இந்த விவகாரம் நீண்ட நாள் பேசப்படும் ஒன்றாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தங்களின் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

 இந்திய நிதித்துறையில் தீர்ப்புகள் எழுதப்படும் விதம் குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீப காலங்களில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய நீதிபதிகளில் ஒருவராக தீபக் மிஸ்ரா உள்ளார்.

தீர்ப்பு எழுதும் முறை

இந்த முடிவு, இந்திய நிதித்துறையில் தீர்ப்புகள் எழுதப்படும் விதம் குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.

தீர்ப்புகள் சில நேரங்களில் நீண்டதாகவும், சரியான மேற்கோள் இல்லாமல் இல்லாமல் முன்பு கூறப்பட்ட விவரங்களை குறிப்பிட்டு எழுதப்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

"இந்தியாவில் வழங்கப்படும் தீர்ப்புகள் முன்னுதாரணங்களை அதிகமாக நம்பியுள்ளன. கடந்த கால தீர்ப்புகள் மற்றும் அவற்றிலுள்ள பத்திகளை அதிகமாக மேற்கோள் காட்டுகின்றன," என்று டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபக் ஜோஷி கூறுகிறார்.

"தீர்ப்பு எழுதும் முறையில் நீதிபதிகள் பல ஆண்டு காலமாக உருவாக்கிய பழக்கங்கள், இப்போது நடுவர் மன்றங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது."என்றும் அவர் தெரிவித்தார்.

பல நாடுகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை இந்திய உச்ச நீதிமன்றத்துடன் ஒப்பிடுகையில், அங்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் மிகவும் சுருக்கமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கல்வியாளர் முனைவர் உபேந்திர பக்ஸி எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டிய ஜோஷி, 1980-களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில், வி.கே. திரிபாதி எழுதிய பல பத்திகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன என்று தெரிவித்தார். வி.கே. திரிபாதி, இந்திய அரசமைப்பு சட்ட வல்லுநர்.

கடந்த காலங்களில், வேறு ஒருவரின் தீர்ப்பில் உள்ள பகுதிகளை நகல் எடுக்கும் முறை (படைப்புத் திருட்டு- plagiarism) தொடர்பான பிரச்னைகள் இந்திய நீதிமன்றங்களில் எழுப்பப்பட்டுள்ளன.

முன்னதாக, தங்கள் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து பல பத்திகளை எடுத்து அதற்கு சரியான மேற்கோள் வழங்கப்படாமல், ஒரு தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, 2015ல் இரண்டு கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியபோது டெல்லி உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு