பிள்ளைகளுக்கு தான பத்திரம் வழங்கியதை பெற்றோர் மீண்டும் ரத்து செய்ய முடியுமா? - நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
"என் கணவர் இறந்து 15 ஆண்டுகளாகி விட்டன. எனக்கு இரு மகள்கள். எனக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் இருந்தது. என்னை ஆயுள் முழுவதும் கவனித்துக்கொள்கிறேன், தங்கைக்கு நிலத்துக்கு ஈடான பணத்தை வழங்கிவிடுகிறேன் எனக்கூறி, என்னுடைய மூத்த மகள் அந்த நிலத்தை தனக்கு எழுதி கொடுக்குமாறு கேட்டார். நானும் அவளை நம்பி, 4 ஏக்கர் நிலத்தை தானப் பத்திரம் செய்து கொடுத்தேன். ஆனால், என்னை சில நாட்களிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டார்," என்கிறார், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜாமணி.
மேலும், தன் இளைய மகளுக்கும் பணத்தை வழங்காமல், சில நாட்களிலேயே அந்த நிலத்தை தன் கணவருக்கு மூத்த மகள் எழுதிவிட்டதாக அழுதுகொண்டே கூறுகிறார் ராஜாமணி.
"இப்போது நான் என்னுடைய சிறிய கோழிப்பண்ணையில் வசித்துவருகிறேன், என்னுடைய இளைய மகள்தான் என்னை கவனித்து வருகிறார்." என்கிறார் அவர்.
"நான் நம்பி நிலத்தை வழங்கியதற்கு, என்னை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டார்."

தானப் பத்திரத்தை வருவாய் கோட்டாட்சியர் மூலம் ரத்து செய்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து அவருடைய மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
'அன்பின் பெயரால்' அல்லது பிள்ளைகள் மீதான 'நம்பிக்கையால்' இப்படி தானப் பத்திரங்களை எழுதி கொடுத்துவிட்டு, பின்னர் தங்களை கவனிக்காததால் அதை மீட்க வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், நீதிமன்றம் என பல்வேறு இடங்களில் சட்டப் போராட்டம் நடத்துவது ராஜாமணி மட்டும் அல்ல.
ஆனால், இத்தகைய வழக்குகளில் ஒரு தெளிவு பிறக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு அமைந்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு
நாகலட்சுமி என்ற 87 வயது மூதாட்டி, தன் மகன் எஸ். கேசவன் என்பவருக்கு தனது சொத்துகளை தான பத்திரமாக வழங்கியுள்ளார். ஆனால், தான பத்திரம் வழங்கிய பின்னர் தன் ஒரே மகனும் அவருடைய மனைவியும் தன்னை முற்றிலும் புறக்கணித்து விட்டதாக அந்த மூதாட்டி புகார் கூறி, தான் வழங்கிய தானப் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி, வருவாய் கோட்டாட்சியரிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் ஒரே மகனான கேசவன் இறந்த பிறகு, அவருடைய மனைவி மூதாட்டியை கவனித்துக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அவர் அளித்த மனுவின்படி, நாகலட்சுமிக்கு மூன்று மகள்கள் இருந்தும் 'அன்பின் வெளிப்பாட்டால்' தன் ஒரே மகனுக்கு தான பத்திரத்தை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். தான பத்திரத்தை வழங்கும்போது, ஆயுளுக்கும் மூதாட்டியை தாங்கள் கவனித்துக்கொள்வதாக கேசவனும் அவருடைய மனைவியும் உறுதியளித்ததாகவும் அந்த 'நம்பிக்கையின்' அடிப்படையிலேயே நாகலட்சுமி அதை வழங்கியதும் அந்த மனுவின் வாயிலாக தெரியவந்தது.
இதையடுத்து, நாகலட்சுமி தன் மகனுக்கு வழங்கிய தான பத்திரத்தை ரத்து செய்து கடந்த ஜன. 25, 2021 அன்று வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
கோட்டாட்சியரின் இந்த உத்தரவை எதிர்த்து நாகலட்சுமியின் மருமகள் மாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே நாகலட்சுமி இறந்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கில்தான், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர், அந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தில் பிரிவு 23(1)ன் கீழ் சொத்தை மீட்க பெற்றோர் வழக்கு தொடுக்க முடியும். தங்களை பிள்ளைகள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், 'அன்பின் வெளிப்பாட்டில்' தானப் பத்திரமாக வழங்கும்போது அதை பெற்றோர்கள் மீட்க முடியும் என்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்ற அதை தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவில், தான பத்திரத்தில் எந்தவொரு நிபந்தனையையும் பெற்றோர்கள் குறிப்பிடாவிட்டாலும், பிள்ளைகள் தங்களை கவனிக்காதபோது தான பத்திரத்தை ரத்து செய்ய முடியும் என்பதை, பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதியோர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆனால், இதுதொடர்பான சட்ட விழிப்புணர்வு முதியோர்களுக்கு இல்லை என்கிறார், முதியோர் நல செயற்பாட்டாளர் இளங்கோ ராஜரத்தினம்.
"பாசத்தால் பிள்ளைகளுக்கு தான பத்திரம் எழுதி கொடுத்துவிடுவார்கள். ஆனால், தங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என, அதை மீண்டும் தங்களுக்கு பெற பெற்றோர்கள் முயற்சிக்கும்போது, அதை பிள்ளைகள் எழுதி கொடுக்க மாட்டார்கள் அல்லது அந்த சொத்துக்களை விற்கும் நிலைக்கு சென்றிருப்பார்கள்." என்கிறார் அவர்.
தான பத்திரத்தைக் கூட மீண்டும் ரத்து செய்துகொள்ளலாம் எனக்கூறும் அவர், இவ்வாறு சொத்துக்களை விற்று கிரையம் செய்துவிட்டால் அவற்றைத் திரும்பி மீட்பது மிகவும் கடினம் என்கிறார்.
முதியோர்கள் இதுதொடர்பாக சிக்கல் எழும்போது இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், முதலில் பெரும்பாலும் காவல் நிலையங்களையே நாடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இதற்கென தீர்ப்பாயம் தனியே உள்ளதாகக் குறிப்பிடும் இளங்கோ, அதை சமூக நலத்துறையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிதான் நிர்வகிப்பார் என கூறுகிறார்.
"பின்னர், வருவாய் கோட்டாட்சியரிடம் சென்று ரத்து செய்ய வேண்டும். ஆனால், அதற்கே 1-2 ஆண்டுகள் இழுக்கிறது. அதுவரை அந்த முதியோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. சிலர் மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். எனவே, இந்த சட்டம் குறித்து முதியோர்களுக்கு பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்கிறார் இளங்கோ ராஜரத்தினம்.
இந்த சிரமங்களைத் தடுக்க முதியோர்கள் சொத்துக்களை தான பத்திரமாக எழுதிக் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
தெளிவு கிடைக்குமா?
"சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு ஏற்கெனவே சட்டத்தில் உள்ளதுதான். தானப் பத்திரம் வழங்கும்போது, தன்னை வாழ்நாளுக்கும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக எழுதி கொடுப்பதுதான் நல்லது. வழக்கறிஞராக நாங்கள் அதைத்தான் அறிவுறுத்துவோம். ஆனால், இந்த நிபந்தனை இல்லாமலேயே பெற்றோர் விரும்பும்போது தானப் பத்திரத்தை ரத்து செய்யலாம் என்பதைத்தான் சமீபத்திய தீர்ப்பு கூறுகிறது." என்கிறார் இதுதொடர்பான வழக்குகளை கையாளும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்ய சந்திரன்.
உச்ச நீதிமன்றமே இதை தெளிவுபடுத்தியுள்ளது எனக்கூறும் அவர், வருவாய் கோட்டாட்சியர்கள் இதுகுறித்த தெளிவுடன் இருக்க வேண்டும் என்கிறார். "தெளிவில்லாமல் இருந்தால், மாவட்ட ஆட்சியரிடம் சென்று பின்னர் நீதிமன்றம் வரை சென்று அதை ரத்து செய்ய வேண்டியுள்ளது." என்கிறார்.
பல்வேறு சுரண்டல்களால் மிக எளிதில் பாதிக்கப்படுபவர்களாக முதியோர்கள் இருப்பதாக குறிப்பிடும் இளங்கோ, சொத்துக்காக பெற்றோரை கொலை செய்யும் வழக்கமும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில், நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களின் பிள்ளைகளே எண்ணெய் குளியல் மூலமாக கொலை செய்யும் வழக்கத்திற்குப் பெயர்தான் தலைக்கூத்தல்.
இந்த கொலை பழக்கம் குறித்து 2010ல் முதன்முதலில் செய்தி வெளியான பிறகு, பல முதியவர்கள் தங்களது குடும்பத்தினர் விரித்த கொலை வலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












