யஷ்வந்த் வர்மா: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இவரின் 5 முக்கிய தீர்ப்புகள்

நீதிபதி யஷ்வந்த் வர்மா

பட மூலாதாரம், ALLAHABADHIGHCOURT.IN/GETTY IMAGES

படக்குறிப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மா
    • எழுதியவர், அன்ஷுல் சிங்
    • பதவி, பிபிசி நிருபர்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பெற்று வருகிறது.

புது டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பெரும் தொகையை மீட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மார்ச் 14 அன்று, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் உள்ள ஒரு சேமிப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டது, அப்போது அவரது வீட்டிலிருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ ஒருபோதும் சேமிப்பு அறையில் பணத்தை வைத்திருக்கவில்லை என்றும், தனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறுகிறார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

அதனையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சிறிது காலத்துக்கு எந்த நீதித்துறைப் பொறுப்பும் வழங்கப்படக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி வர்மாவை டெல்லியில் இருந்து நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மீண்டும் அனுப்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவான கொலீஜியம் முன்மொழிந்துள்ளது.

இருப்பினும், அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இன்று, நீதிபதி வர்மா அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.

ஆனால் அவர் ஒரு காலத்தில் இந்த சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.

வழக்கறிஞராக இருந்து நீதிபதியான யஷ்வந்த் வர்மா

நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஜனவரி 6, 1969 அன்று அலகாபாத்தில் (தற்போதுள்ள பிரயாக்ராஜ்) பிறந்தார், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டத் துறையில் அனுபவமுடையவர்.

நீதிபதி வர்மா டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.காம் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார்.

பின்னர், மத்தியப் பிரதேசத்தின் ரேவா பல்கலைக்கழகத்தில் சட்டம் (எல்எல்பி) பயின்ற அவர், ஆகஸ்ட் 8, 1992 அன்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக, அரசியலமைப்பு, தொழிலாளர் மற்றும் தொழில்துறை விவகாரங்கள், பெருநிறுவன சட்டங்கள், வரி விதிப்பு மற்றும் சட்ட விவகாரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை அவர் கையாண்டுள்ளார்.

2014ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1ம் தேதி, 2016ம் ஆண்டு, அவர் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏழு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், நீதிபதி வர்மா அரசியலமைப்புச் சட்டம், வரி விதிப்பு, நடுவர் மன்றம் மற்றும் குற்றவியல் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்குத் தலைமை தாங்கினார்.

கூடுதல் நீதிபதியாக மாறுவதற்கு முன்பு, 2006 முதல் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, நீதிபதி வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில், 2012 முதல் ஆகஸ்ட் 2013 வரை, அவர் உயர் நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் தலைமை ஆலோசகராகப் பதவி வகித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 11, 2021 அன்று, அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணிமூப்பின் அடிப்படையில், தலைமை நீதிபதிக்குப் பிறகு, இரண்டாவது மூத்த நீதிபதியாக நீதிபதி வர்மா இருந்தார்.

அவர் மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியானால், தலைமை நீதிபதிக்குப் பிறகு, பணிமூப்பின் அடிப்படையில் நீதிபதி வர்மா ஒன்பதாவது இடத்தில் இருப்பார்.

கஃபீல் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கஃபீல் கான் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றினார்

நீதிபதி வர்மாவின் முக்கியத் தீர்ப்புகள்

நீதிபதி யஷ்வந்த் வர்மா கடந்த 11 ஆண்டுகளாக அலகாபாத் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.

இந்தக் காலகட்டத்தில் அவர் பல முக்கியமான வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கினார்.

யஷ்வந்த் வர்மா

பட மூலாதாரம், Supreme Court

படக்குறிப்பு, எரிந்த பணம் தொடர்பான படங்களும் உச்ச நீதிமன்ற அறிக்கையில் உள்ளன

மருத்துவர் கஃபீல் கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன்:

2018 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியாற்றிய காலத்தில், மருத்துவர் கஃபீல் கானுக்கு ஜாமீன் வழங்கினார்.

ஆகஸ்ட் 2017 இல், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 60 குழந்தைகள் இறந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், மருத்துவர் கஃபீல் கான் மருத்துவ அலட்சியத்துக்காக குற்றம் சாட்டப்பட்டு ஏழு மாதங்கள் காவலில் இருக்க வேண்டியிருந்தது.

மருத்துவர் கானுக்கு ஜாமீன் வழங்கும்போது, ​​"மனுதாரர் (கஃபீல் கான்) அலட்சியமாக இருந்ததை நிரூபிக்கக்கூடிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்று நீதிபதி வர்மா கூறியிருந்தார்.

அவரது தீர்ப்பு மருத்துவர்களின் பொறுப்புடைமை, அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்னைகள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

காங்கிரஸ் மனு நிராகரிப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதம், காங்கிரஸ் கட்சி வருமான வரி தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்தது.

பிப்ரவரி 13, 2024 அன்று, ரூ.100 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை வசூலிக்க, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மேலும் வருமான வரித்துறை காங்கிரஸுக்கு ரூ.210 கோடி அபராதம் விதித்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறியது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான விவேக் தங்கா வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர், காங்கிரஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது.

இந்த வழக்கை நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா மற்றும் நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

காங்கிரஸ் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தது.

அமலாக்க இயக்குநரகத்தின் அதிகாரங்கள்

ஜனவரி 2023 இல், நீதிபதி வர்மாவின் ஒற்றை அமர்வு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பணமோசடி தவிர வேறு எந்த குற்றத்தையும் அமலாக்கத் துறை விசாரிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

ஒரு குற்றம் நடந்துள்ளதாக அந்த புலனாய்வு அமைப்பு தன்னிச்சையாக ஊகிக்க முடியாது.

ஜனவரி 24, 2023 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி வர்மா, "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குற்றத்தின் விசாரணை, அந்த நோக்கத்துக்காக சட்டத்தால் அதிகாரம் பெற்ற அதிகாரிகளால் அவசியம் நடத்தப்பட வேண்டும்" என்றார்.

இந்த முடிவு அமலாக்கத் துறையின் அதிகார வரம்புகள் குறித்து தெளிவுபடுத்தியது மற்றும் புலனாய்வு அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாகக் கருதப்பட்டது.

டெல்லி மதுபான வரி வழக்கு குறித்து செய்திகள் வெளியிடுதல்

நவம்பர் 2022 இல், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான விஜய் நாயர், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி வர்மா விசாரித்து வந்தார்.

இந்த நேரத்தில், தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறப்படும் சில செய்தி சேனல்களிடம் அவர் விளக்கம் கேட்டிருந்தார்.

விசாரணை நிறுவனங்களின் முக்கியமான தகவல்கள் செய்தி நிறுவங்களின் மூலம் பொதுவில் கசிந்துள்ளதாக நாயர் தனது மனுவில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பிறகு, செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கத்தை (NBDA) தனது அமைப்பில் உறுப்பினராக உள்ள ஊடக நிறுவனங்களை அழைத்து, கசிந்த தகவல்களின் ஆதாரங்கள் மற்றும் அதே போன்ற பிற தகவல்களைக் குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

யஷ்வந்த் வர்மா

பட மூலாதாரம், Supreme Court

படக்குறிப்பு, அந்த அறையில் எரிந்த நிலையில் பணத்தை தீயணைப்பு துறையினர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது

உணவகங்களின் பில்களில் சேவை கட்டணம் தொடர்பான தீர்ப்பு

ஜூலை 2022 இல், நீதிபதி வர்மா மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்களை இடைநிறுத்தி வைத்தார்.

இந்த வழிகாட்டுதல்களில், உணவகங்களும் ஹோட்டல்களும் பில்லில் தங்களுக்கென சேவைக் கட்டணத்தைச் சேர்க்கக் கூடாது என்றும், வேறு எந்தப் பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து இந்திய தேசிய உணவக சங்கம் மற்றும் இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்க கூட்டமைப்பு (FHR) தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி வர்மா விசாரித்தார்.

அத்தகைய சேவைக் கட்டணங்கள் மெனுவில் முக்கியமானதாக காட்டப்பட வேண்டும் என்று நீதிபதி வர்மா கூறினார்.

"இந்திய தேசிய உணவக சங்கம் மற்றும் இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்க கூட்டமைப்பு சங்கத்தின் உறுப்பினர்கள், விலை மற்றும் வரிகளுக்கு கூடுதலாக முன்மொழியப்பட்ட சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மேலும் வாடிக்கையாளர்கள் அதைச் செலுத்த வேண்டிய கடமை, மெனுவிலோ அல்லது வேறு இடத்திலோ பொருத்தமாகவும் முக்கியமாகவும் காட்டப்பட வேண்டும்," என்று அவர் உத்தரவிட்டார்.

ஆனால், செப்டம்பர் 2023 இல், நீதிபதி பிரதிபா சிங் இந்த உத்தரவை ரத்து செய்து, "சேவை கட்டணம்" என்ற வார்த்தையை "பணியாளர் பங்களிப்பு" என்று மாற்றினார்.

அத்தகைய பங்களிப்பு மொத்த பில்லில் 10 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்றும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு