ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
"ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட அவரது சகோதரர் தாரா ஷிகோவை ஏன் முன்நிலைப்படுத்தக் கூடாது?" என்ற கேள்வியை முன்வைத்து, முகலாய பேரரசர் ஔரங்கசீப் தொடர்பாக இருக்கும் ஏற்கனவே இருக்கும் சர்ச்சைக்கு ஆர்எஸ்எஸ் ஒரு புதிய கோணத்தை உருவாக்கியுள்ளது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பலே, தற்போதைய சூழலுக்கு ஔரங்கசீப் பொருத்தமானவர் இல்லை என்ற ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தை நியாயப்படுத்தியதோடு, தாரா ஷிகோவை ஒதுக்கிவைத்து அவருக்கு பதில் ஔரங்கசீப்பிற்கு அதிக மதிப்பு தரப்படுவதாக கூறினார்
மூன்று நாள் நடைபெற்ற ஆர்எஸ்எஸ்ஸின் அகில இந்திய பிரதிநிதிகள் சபையின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹோஸ்பலே, "இந்தியாவின் நெறிகளுக்கு எதிராக செயல்பட்ட ஒருவரை (ஔரங்கசீப்) முன்நிறுத்துவதா? அல்லது இந்தியாவின் இயல்புடன் இணைந்து செயல்பட்டவரை முன்நிலைப்படுத்துவதா (தாரா ஷிகோ)? என்பதுதான் இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்னை" என்றார்.
விடுதலைக்கான போராட்டம்
''கங்கா-யமுனா கலாசாரத்தை (இந்து-முஸ்லீம் கூட்டு நல்லிணக்க கலாசாரம்) ஊக்குவிப்பவர்கள் தாரா ஷிகோவை பிரபலப்படுத்த முயற்சி செய்யவில்லை. அவருக்கு முதன்மையான அந்தஸ்து வழங்கப்படவில்லை", என்று தத்தாத்ரேயா கூறுகிறார்.
பேரரசர் ஷாஜகானின் வாரிசான தாரா ஷிகோ மிதவாதியாகக் கருதப்படுகிறார். அதே நேரத்தில் அவரது இளைய சகோதரர் ஔரங்கசீப் ராணுவ உத்திகளில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார் என்று கூறப்படுகிறது.
"ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மட்டும் சுதந்திர போராட்டம் இல்லை. அவர்களின் வருகைக்கு முன்னர், நாட்டின் மீது படையெடுத்தவர்களுக்கு எதிராக போராடியதும் சுதந்திர போராட்டம்தான்," என்றார் ஹோஸ்பலே.
இந்த விவகாரம் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினர் அல்லது மதத்தைப் பற்றியது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு சாலைக்கு ஔரங்கசீப் பெயர் இருந்ததாகவும், பின்னர் அது அப்துல் கலாம் சாலை என மாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யார் இந்த தாரா ஷிகோ?
தாரா ஷிகோ ஔரங்கசீப்பின் மூத்த சகோதரர் ஆவார். தனது தாத்தா அக்பரைப் போன்ற சிறந்த அறிஞராகவும், தந்தை ஷாஜகானுக்கு பிடித்த மகனாகவும் இவர் அறியப்பட்டார்.
தத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் மீது அவருக்கு அதிக நாட்டம் இருந்தது. உபநிடதங்கள் சிலவற்றை பாரசீக மொழியில் மொழிபெயர்த்த பெருமை அவருக்கு உண்டு. இதற்காக நிபுணர்களின் உதவிகளையும் அவர் நாடினார். சூஃபி சிந்தனை மற்றும் தத்துவங்கள் மீது அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
அனிருத் கனிசெட்டி போன்ற வரலாற்று நிபுணர்கள் கூட, ஷாஜகான் இறக்கும் தருவாயில் இருந்தபோது நடைபெற்ற போரில் ஔரங்கசீப், தாரா ஷிகோவைக் கொல்லாமல் இருந்திருந்தால், இன்று இந்தியா முற்றிலும் மாறுபட்ட ஒரு நாடாக இருந்திருக்கும் என்று எழுதியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. இப்படிப் ஒரு சூழலில், இந்த அமைப்பின் செயல்பாடுகளை எதன் அடிப்படையில் கணக்கிடுவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர், "எங்களுடைய செயல்பாட்டை கணக்கிட எந்தவொரு அளவுகோலும் இல்லை. ராமர் கோயிலைக் கட்டியது எங்களுடைய வெற்றியல்ல, அது மக்களுடைய வெற்றி. இந்தியாவின் அடையாளத்தை மீண்டும் அறியச்செய்ய இது உதவியது,"என்றார்.
"எங்களைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் ஒரு இந்து அமைப்பு. நாங்கள் இந்து என்று கூறிக்கொள்வதில் எங்களுக்கு பெருமை. இது வெறும் மதத்தைப் பற்றியதல்ல, இது ஒரு கலாசார, ஆன்மீக மற்றும் நாகரீக வெளிப்பாடாகும். இந்து சமூகத்தின் பன்முகத்தன்மை காரணமாக அதை ஒழுங்கமைப்பது கடினமான பணியாக இருந்தது. ஆனால், இந்து சமூகத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்."
பல சீர்திருத்தங்கள் "நாட்டின் உள்ளேயே" செய்யப்பட வேண்டும் என்கிறார் தத்தாத்ரேயா ஹோஸ்பலே.
"உதாரணமாக, தீண்டாமை மற்றும் பெண்களுக்கான சம உரிமை வழங்குவதில் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படவில்லை. சாதி மறுப்பு திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கமாக இருக்கின்றது. இதற்காக, கிளைகள் மூலம் ஒவ்வொரு நாளும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறது. '' என்கிறார்
பாஜகவின் அடுத்த தலைவர் யார்?
ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு அரசியல் சார்பில்லாத கலாசாரக் அமைப்பு என்று கூறிக்கொண்டாலும், பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பாகவே இது பார்க்கப்படுகிறது.
ஆனால் பாஜக விவகாரங்களில் தாங்கள் தலையிடுவதில்லை என்று தத்தாத்ரேயா தெளிவுபடுத்தினார்.
பாஜகவின் புதிய தேசிய தலைவர் தொடர்பாக பேசிய அவர், "அடுத்த தலைவரையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்த கட்சியினருடையது. இந்த முடிவிகளை எடுக்கும் அளவிற்கான அனுபவம் அவர்களுக்கு உள்ளது," என்று தெரிவித்தார்.
மணிப்பூர் குறித்த கேள்விக்கு, ''மணிப்பூரில் அரசாங்கம் என்ன முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கவில்லை'' என்று கூறினார்.
"குடியரசு தலைவர் ஆட்சியை மணிப்பூரில் அறிவித்து, மக்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றியதோடு, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுதந்திரமாக செல்வதை உறுதி செய்துள்ளனர். இது புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. அரசாங்கம் தங்களுக்காக செயல்படுகிறது என்ற எண்ணம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்றார் அவர்.
அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமியன்று நடைபெறும் ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழாவிற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கபட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












