யுக்ரேன் - ரஷ்யா போரை டிரம்ப் உறுதியளித்தபடி துரிதமாக நிறுத்த முடியாதது ஏன்? 5 காரணங்கள்

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, டிரம்பும் புதினும் சந்தித்துக் கொண்டனர்.
    • எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், ஹன்னா சோர்னஸ்

கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, அவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருந்தார் .

யுக்ரேனில் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.

"நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார்.

அவர் குறிப்பிட்ட 'விரைவு' என்பதன் அர்த்தம் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தது.

முன்னதாக நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், "நான் அதிபராக பதவியேற்கும் முன்பே இதை தீர்த்து வைப்பேன்" என்று டிரம்ப் உறுதியளித்தார்.

இது, 2023 மே மாதத்தில், "அதிபராக பதவியேற்ற பிறகு முதல் 24 மணி நேரத்துக்குள் போரை நிறுத்தி விடுவேன்" என்ற பேச்சு அவர் அளித்திருந்த முந்தைய உறுதிப்பாட்டை விட ஒரு படி மேலானதாகும்.

தற்போது, டிரம்ப் அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. வெள்ளை மாளிகையில், இந்த அளவுக்கு கடுமையான மற்றும் சிக்கலான மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை டிரம்ப் தற்போது உணரத் தொடங்கியிருக்கலாம்.

ஒரு நாளில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என சொன்னது, 'சற்று கிண்டலாகவே' இருந்தது என கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஒரு நேர்காணலில் ஏற்றுக்கொண்டார்.

டிரம்பின் குழுவினர் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் ஏற்படாததற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன.

1. டிரம்பின் அதீத நம்பிக்கை

முதலில், டிரம்ப் தனது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் ராஜ தந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, தவறானதாக இருக்கக் கூடும்.

மற்றொரு நாட்டின் தலைவருடன் அமர்ந்து நேரில் பேசி, ஒப்பந்தத்துக்கு வருவதன் மூலம், எந்த சர்வதேச பிரச்னையையும் தீர்க்க முடியும் என்பதே அவரது நீண்ட நாள் நம்பிக்கையாக இருந்து வந்தது.

டிரம்ப், பிப்ரவரி 12ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முதலில் பேசினார்.

ஒன்றரை மணி நேரம் நீடித்த அந்த உரையாடலை அவர் "மிகவும் பயனுள்ளதாய் இருந்தது" என்று கூறினார்.

பிறகு, மார்ச் 18ஆம் தேதி மீண்டும் இருவரும் பேசினர்.

ஆனால், டிரம்ப் விரும்பிய 30 நாட்கள் இடைக்கால போர்நிறுத்தம் இந்த தொலைபேசி உரையாடல்களில் உறுதி செய்யப்படவில்லை என்பது தற்போது தெளிவாகிறது.

புதினிடமிருந்து அவர் பெற்ற ஒரே முக்கிய ஒப்பந்தம் என்னவென்றால், யுக்ரேனிய மின்சக்தி நிலையங்கள் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்துவதாகக் கூறிய வாக்குறுதி தான்.

ஆனால், அந்த உரையாடல் முடிந்த சில மணி நேரங்களுக்குள் ரஷ்யா அந்த வாக்குறுதியை மீறியது என்று யுக்ரேன் குற்றம் சாட்டுகிறது.

2. அவசரம் காட்ட விரும்பாத புதின்

இரண்டாவதாக, ரஷ்ய அதிபர் அவசரப்பட விரும்பவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். டிரம்ப் அவருடன் தொலைபேசியில் பேசியதற்கு ஒரு மாதம் கழித்து மட்டுமே, கடந்த வாரம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து முதன்முறையாக அவர் கருத்து தெரிவித்தார்.

நீண்ட கால தீர்வைப் பற்றி பேசுவதற்கு முன்பு இடைக்கால போர் நிறுத்தத்தை கோரும் அமெரிக்காவின் இரண்டு கட்ட திட்டத்தை தான் உறுதியாக எதிர்ப்பதாக புதின் வெளிப்படுத்தியுள்ளார்.

மாறாக, எந்தவொரு பேச்சுவார்த்தையும், "போரின் மூலக் காரணங்கள்" என்று அவர் கருதும் விஷயங்களை முதலில் தீர்க்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக உள்ளார்.

நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேன் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருப்பது ஆகியவை ஏதாவது ஒரு வகையில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

எந்தவொரு உடன்பாடும் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு முன்பு, ரஷ்யா முன்வைக்கும் முக்கியமான கேள்விகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பதிலளிக்க வேண்டுமென்றும் புதின் வலியுறுத்துகிறார்.

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம், Genya Savilov/AFP

படக்குறிப்பு, இந்த உபகரணங்கள் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்ட பின்னர் யுக்ரேனிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு கீவ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

3. அமெரிக்காவின் அணுகுமுறை

மூன்றாவது, ஆரம்பத்தில் யுக்ரேன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனும் அமெரிக்காவின் திட்டம் தவறானதாக இருக்கலாம்.

ஏனென்றால், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு தடையாக இருப்பது அதிபர் ஸெலென்ஸ்கி தான் என வெள்ளை மாளிகை நம்பியது.

ஆனால், டிரம்பின் ஆட்சி தொடங்கிய பிறகு உலகின் அரசியல் சூழல் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்பதை யுக்ரேன் அரசு புரிந்து கொள்ள தாமதித்துவிட்டது என்று மேற்கத்திய ராஜ தந்திரிகள் கூறுகின்றனர்.

யுக்ரேன் மீதான அமெரிக்காவின் அழுத்தம், அதிபர் அலுவலகத்தில் நடந்த கடுமையான உரையாடலுக்கு வழிவகுத்தது. இதனால் அதிக நேரமும், முயற்சியும், அரசியல் மூலதனமும் வீணாகியது.

அந்தச் சந்திப்பில் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் முரண்பாடுகள் ஏற்பட்டன. அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராக மாறின.

இதுவும் ஒரு முக்கிய ராஜ்ஜீய சிக்கலாகி, அதை சரி செய்ய நேரம் எடுத்தது.

அந்த நேரத்தில், விளாதிமிர் புதின் அமைதியாக இருந்து, எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, தன்னுடைய தருணத்துக்காக காத்திருந்தார்.

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம், Getty Images

4. ரஷ்யா - யுக்ரேன் நேரடியாக பேசாமல் இருப்பது

நான்காவதாக, இந்த போரின் மிகுந்த சிக்கலான தன்மை, எந்தவொரு தீர்வையும் எளிதாக்கவில்லை. யுக்ரேன் முதலில் வழங்கிய யோசனை, வான்வழித் தாக்குதல் மற்றும் கடல் வழித் தாக்குதலுக்கான ஒரு இடைக்கால போர் நிறுத்தம் என்பதாக இருந்தது.

இது கண்காணிக்க எளிதாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால், கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தையில், கிழக்குப் பகுதியிலுள்ள 1,200 கிலோமீட்டருக்கும் அதிகமான முன்னணிப் போர் பகுதியையும் உட்படுத்தி உடனடி போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

இதனால், அந்த போர் நிறுத்தத்தை கண்காணிக்க வேண்டிய அமைப்புகளுக்கு இன்னும் கடினமாகிவிட்டது. இதை விளாதிமிர் புதின் உடனே நிராகரித்தார்.

ஆனால், மின்சக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்ற அந்த எளிமையான முன்மொழிவுக்கு புதின் ஒப்புக்கொண்டிருந்தாலும், அதிலும் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

இந்த முன்மொழிவின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்களே, சவுதி அரேபியாவில் இன்று (திங்கட்கிழமை )நடைபெறவுள்ள தொழில்நுட்ப விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ மற்றும் ஆற்றல் துறையின் நிபுணர்கள், அணுசக்தி உற்பத்தி நிலையங்கள் உட்பட பாதுகாப்பு வழங்க வேண்டிய மின் நிலையங்களின் விரிவான பட்டியலை தயாரிக்க உள்ளனர்.

அவர்கள் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதற்கும் ஒருமித்த முடிவுக்கு வர முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், ஆற்றல் உள்கட்டமைப்புக்கும் பிற பொதுமக்கள் வசதிகளுக்கும் இடையிலான எல்லையை வரையறுப்பது சுலபமல்ல.

அதனால் அந்த விவாதம் கூட சிறிது நேரம் எடுக்கும்.

முக்கியமாக, யுக்ரேன் மற்றும் ரஷ்யா நேரடியாக பேசுவதில்லை. இருவரும் தனித்தனியாக அமெரிக்காவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா இருதரப்புக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. இதுவும் கால தாமதத்திற்கு காரணமாகிறது.

5. பொருளாதார நன்மைகளில் அதிக கவனம் செலுத்தும் அமெரிக்கா

ஐந்தாவது, போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் அமெரிக்கா அதிகமாக கவனம் செலுத்துவதாகும்.

டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களுக்கு யுக்ரேனின் முக்கியமான கனிம வளங்களை பெற வாய்ப்பு அளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சித்தார்.

யுக்ரேனின் எதிர்காலத்தில் அமெரிக்கா முதலீடு செய்வதாக சிலர் இதைப் பார்த்தனர் .

ஆனால், மற்றவர்கள் இதை நாட்டின் இயற்கை வளங்களை மிரட்டி லாபம் பெறுவது போல இந்த அணுகுமுறையை கருதினர்.

ஆரம்பத்தில், எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் வகையில், யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால்தான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வேன் என்று அதிபர் செலென்ஸ்கி கூறினார்.

ஆனால் வெள்ளை மாளிகை அதனை நிராகரித்து, அமெரிக்க சுரங்க நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் யுக்ரேனில் இருப்பதே பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என தெரிவித்தது. இறுதியில், ஸெலென்ஸ்கி தனது நிலைப்பாட்டை மாற்றி , பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமலேயே கனிம ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க தயாராகிவிட்டார்.

ஆனாலும், அமெரிக்கா இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

யுக்ரேனிய அணுமின் நிலையங்களுக்கான அணுகல் அல்லது உரிமை பெறுவதற்கான வாய்ப்பையும் சேர்த்து மீண்டும் விதிமுறைகளை மேம்படுத்தலாம் என்று அமெரிக்கா நம்புகிறது.

ரஷ்யா - யுக்ரேன், டிரம்ப், புதின்

பட மூலாதாரம், Getty Images

இன்னும் கடினமானதாக வாய்ப்பு

போர்களை முடிவுக்கு கொண்டு வருவது கடுமையானதும், அதிக நேரம் எடுக்கும் செயல்முறையாகவும் இருக்கும். டிரம்பின் அழுத்தம் இல்லாமல், போர் நிறுத்த விஷயத்தில் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. ஆனால், அவர் நினைத்ததுபோல் முன்னேற்றம் வேகமாகவோ எளிதானதாகவோ இல்லை.

2018 டிசம்பரில், அதிபர் பதவிக்கு பரப்புரை செய்துகொண்டு இருந்த போது, விளாதிமிர் புதினுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எளிதாக இருக்கும் என ஸெலென்ஸ்கி கூறினார்.

"மிகவும் எளிமையான முறையில் பேச வேண்டும்," என்று அவர் யுக்ரேனிய பத்திரிகையாளர் டிமிட்ரோ கார்டனிடம் கூறினார். "உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் நிபந்தனைகள் என்ன?" எனும் கேள்விக்கு, "இதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்று நான் பதிலளிப்பேன். பிறகு, இருவருக்கும் பொதுவான ஒரு ஒப்பந்தத்துக்கு வரலாம்." என்றார்.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், அது ஸெலென்ஸ்கி நினைத்ததைவிட மேலும் கடினமாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு