குனால் கம்ராவின் பகடிப் பாடல் சர்ச்சை குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே
படக்குறிப்பு, கருத்து சுதந்திரத்துக்கு ஓர் எல்லை உள்ளது என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்

ஸ்டாண்ட் அப் காமெடியன் குனால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் குறித்து பகடியாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, தன்னுடைய கருத்தை ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பிபிசி மராத்தியின் 'ராஷ்டிர மகாராஷ்டிரா' நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே குனால் கம்ரா சர்ச்சை குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

"இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. எங்களுக்கு நகைச்சுவை குறித்த புரிதல் உள்ளது. ஆனால், அதற்கும் ஓர் எல்லை உள்ளது. இது ஒருவருக்கு எதிராகப் பேசுவதற்கு 'ஒப்பந்தம்' எடுத்துக் கொண்டதைப் போன்றுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

"இதே நபர் (குனால் கம்ரா) உச்சநீதிமன்றம், பிரதமர், அர்னாப் கோஸ்வாமி மற்றும் சில தொழிலதிபர்கள் குறித்தும் பேசியுள்ளார். இது கருத்து சுதந்திரம் அல்ல. இது மற்ற யாருக்காகவோ வேலை பார்ப்பது" எனவும் அவர் கூறினார்.

காழ்ப்புணர்ச்சியை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மற்றொருபுறம், சர்ச்சை வெடித்துள்ள நிலையிலும் தான் மன்னிப்பு கேட்க முடியாது என குனால் கம்ரா தெரிவித்துள்ளார்.

"நான் இதுகுறித்து அதிகம் பேசப் போவதில்லை. நான் காழ்ப்புணர்ச்சியை நியாயப்படுத்த மாட்டேன். ஒருவர் எதற்கும் ஓர் அளவைக் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை இருக்கும். நான் எதற்கும் எதிர்வினையாற்ற மாட்டேன், மாறாக அமைதியாக இருந்து மக்களுக்கு நீதி கிடைக்க என்னுடைய வேலையைச் செய்வேன்" என்றும் ஷிண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை 'துரோகி' என சமீபத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில் குனால் கம்ரா கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சி யூடியூபில் வெளியான உடனேயே சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) குனால் கம்ராவை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. மேலும், மும்பையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.

முதலமைச்சர் பதவி, ஔரங்கசீப் கல்லறை குறித்துப் பேசியது என்ன?

குனால் கம்ரா

பட மூலாதாரம், kuna_kamra/Instagram

படக்குறிப்பு, குனால் கம்ரா

மீண்டும் முதலமைச்சர் ஆவது குறித்து ஷிண்டேவிடம் கேள்வி எழுப்பியபோது, தன்னுடைய போராட்டம் முதலமைச்சர் நாற்காலிக்கானது அல்ல என்று அவர் தெரிவித்தார்.

"பால் தாக்கரேவின் கொள்கைகளை சமரசம் செய்துகொண்டு நாங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறினோம். நான் அப்போது அமைச்சராக இருந்தேன், என்னுடன் எட்டு அமைச்சர்கள் வந்தனர். பின்னர், நான் முதலமைச்சரானேன். இரண்டரை ஆண்டுகள் நான் கடுமையாகப் பணியாற்றினேன்" என்றார் ஏக்நாத் ஷிண்டே.

ஔரங்கசீப் கல்லறை குறித்த விவகாரத்தில், ஔரங்கசீப்புக்கு அதீத புகழ்பாடக் கூடாது என ஷிண்டே தெரிவித்தார்.

"ஔரங்கசீப் மகாராஷ்டிராவை கைப்பற்றி, கொடுமைகள் மற்றும் அநீதியை இழைக்க வந்தவர் என்றுதான் கூற முடியும். சத்ரபதி சம்பாஜி மகாராஜை கொடுமைப்படுத்தியவரின் புகழைப் பாடக்கூடாது" என்றார்.

உண்மையான தேசப் பற்றுள்ள முஸ்லிம்களும் ஔரங்கசீபை புகழக் கூடாது என்றார் ஷிண்டே.

குனால் கம்ரா கூறியது என்ன?

ஏக்நாத் ஷிண்டே
படக்குறிப்பு, குனால் கம்ரா தனது பாடலில் 'துரோகி' என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார், அது ஏக்நாத் ஷிண்டேவை 'இகழ்வதாக' அக்கட்சியினர் கோபமடைந்துள்ளனர்

"பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடக்கும் இடம் ஒரு சாதாரண மேடை மட்டுமே. அங்கு எல்லாவிதமான நிகழ்ச்சிகளும் நடக்கும். எந்தவோர் இடமும் எனது நகைச்சுவைகளையோ அல்லது நான் என்ன சொல்கிறேன், செய்கிறேன் என்பதற்கான உரிமையையோ கட்டுப்படுத்த முடியாது" என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குனால் கம்ரா தெரிவித்துள்ளார்.

"உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டர் சிக்கன் பிடிக்காததால் தக்காளி ஏற்றி வந்த டிரக்கை கவிழ்ப்பது எப்படி அபத்தமானதோ, அதே அளவுக்கு அபத்தமானது அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்துவது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் மற்றும் காவல்துறைக்குத் தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார். ஆனால், ஒரு நகைச்சுவையால் வருத்தப்பட்டு, ஓரிடத்தைச் சூறையாடியதைச் சரியான எதிர்வினையாகக் கருதியவர்களையும் சட்டம் சமமாகக் கருதுமா என்று குனால் கம்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.

குனால், தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அஜித் பவார் (முதல் துணை முதலமைச்சர்), ஏக்நாத் ஷிண்டே குறித்து (இரண்டாம் துணை முதலமைச்சர்) என்ன கூறினாரோ அதையே தான் தெரிவித்ததாகவும் கம்ரா கூறினார்.

என்ன சர்ச்சை?

'டில் டோ பாகல் ஹை' படத்தின் ஒரு பகடிப் பாடலை குனால் கம்ரா தனது ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் பாடினார். அந்தப் பாடலில், 2022இல் சிவசேனா பிரிந்தது குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பாடலில் 'துரோகி' என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டார். அந்த வார்த்தை ஏக்நாத் ஷிண்டேவை 'இகழ்வதாக' பார்க்கப்பட்டது. எனினும், ஏக்நாத் ஷிண்டேவின் பெயரை குனால் கம்ரா குறிப்பிடவில்லை.

அந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை வைரலான நிலையில், சிவசேனா (ஷிண்டே அணி) கட்சியினர் கோபமடைந்து, அதற்கு எதிர்வினையாற்றினர். குனால் கம்ரா நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடத்தை அவர்கள் சூறையாடினர்.

சிவ சேனா (ஷிண்டே அணி) கட்சியைச் சேர்ந்த எம். எல்.ஏ முர்ஜி படேல் குனால் கம்ராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார். மேலும் கம்ராவை கைது செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது. சிவசேனா எம்.பி. நரேஷ் மஸ்கே, வீடியோ வாயிலாக குனால் கம்ராவை எச்சரித்துள்ளார்.

அதில், "மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க சுற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். சிவசேனாவினர் உங்களை நோக்கி வந்தால், நீங்கள் இந்தியாவை விட்டுத் தப்பியோட வேண்டியிருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே கூறியது என்ன?

உத்தவ் தாக்கரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குனால் கம்ரா தவறாக ஏதும் கூறவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்

சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரேவும் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

"குனால் கம்ரா எதுவும் தவறாகக் கூறவில்லை என்று நினைக்கிறேன். துரோகிகளை துரோகி என அழைப்பது ஒருவரைத் தாக்குவது அல்ல. குனால் கம்ரா (பகடியாகப் பாடிய) பாடலை முழுமையாகக் கேளுங்கள்" என்று அவர் கூறினார்.

மேலும், "இந்தத் தாக்குதலுக்கும் சிவசேனாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது துரோகிகள் அணியால் நடத்தப்பட்டது. ரத்தத்திலேயே துரோகம் ஊறியவர்கள், சிவசேனா கட்சியினராக இருக்க முடியாது" என்றார்.

கடந்த திங்கள் கிழமை 'ராஷ்டிர மகாராஷ்டிரா' எனும் பிபிசி மராத்தி நிகழ்ச்சியில் பேசிய சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் ஆதித்யா தாக்கரே, குனால் கம்ரா நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார்.

"ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற எதுவும் தற்செயலானது அல்ல. ஏன், அந்த (நகைச்சுவை நிகழ்ச்சியால்) அவர்கள் காயப்பட வேண்டும்? அதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. கம்ரா பாடிய பாடலில் 'துரோகி' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. அதற்கு ஷிண்டேவின் ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர்" என்றார்.

"முதலமைச்சரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் காட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நினைக்கிறேன். அவர்கள் வன்முறைகளைத் தூண்ட முயல்கின்றனர். அவர்கள்தான் அந்த நிகழ்ச்சி நடந்த ஸ்டுடியோவுக்கு சென்று சூறையாடியுள்ளனர்" என்றார்.

சஞ்சய் ராவத் தனது எக்ஸ் பக்கத்தில், "குனால் கம்ரா நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை செய்பவர். மகாராஷ்டிரா அரசியல் குறித்து நையாண்டியாக பாடலை எழுதியதற்கு, ஷிண்டே அணியினர் கோபமடைந்துள்ளனர். அவர்களின் ஆட்கள் கம்ராவின் ஸ்டுடியோவை சேதப்படுத்தியுள்ளனர். தேவேந்திரஜி (முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ்), நீங்கள் பலவீனமான உள்துறை அமைச்சர்," எனத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு