நூறாவது ஆண்டில் ஆர்எஸ்எஸ்: நிதி எங்கிருந்து வருகிறது? பாஜகவுடன் என்ன உறவு? முழு விவரம்

ஆர்எஸ்எஸ்: எப்போது, எதற்காக நிறுவப்பட்டது? விரிவாக விளக்கும் 14 கேள்வி, பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், இந்தாண்டுடன் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்த நூறு ஆண்டுகளில், ஆர்எஸ்எஸ் அமைப்போ, அதன் கொள்கையோ அல்லது செயல்பாடுகளோ தலைப்புச் செய்திகளில் இடம்பெறாத காலகட்டம் இல்லை.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அரசு 2014ல் அமைக்கப்பட்ட பிறகு ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அந்த அமைப்பு கடந்த 100 ஆண்டுகளில் தற்போதுதான் மிகவும் வலிமையாக இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், ஆர்எஸ்எஸ்-இன் வரலாறு, இந்தியாவை ஓர் இந்து நாடாக்குவது மற்றும் சிறுபான்மையினர் குறித்த அதன் அணுகுமுறை ஆகியவை குறித்துக் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் பற்றிய சில முக்கியக் கேள்விகளுக்கு பதில்களைப் பார்ப்போம்.

1. ஆர்எஸ்எஸ் என்றால் என்ன? எப்போது தொடங்கப்பட்டது?

பொதுவாக ஆர்எஸ்எஸ் என்றோ சங் என்றோ அறியப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங், 1925ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூரில் கேஸவ் பலிராம் ஹெட்கேவரால் நிறுவப்பட்ட இந்து தேசியவாத அமைப்பு. இந்து தேசியவாத சிந்தனையாளர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிந்தனைகளின் தாக்கம் ஹெட்கேவர் மீது இருந்ததாக நம்பப்படுகிறது.

சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்த பிறகு ஹெட்கேவர் கொள்கை வேறுபாடுகளால் கட்சியை விட்டு விலகி ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவினார். (Rashtriya Swayamsevak Sangh Ka Parichay, மாதவ் கோவிந்த் வைத்யா, பக்கங்கள் 11-13)

உலகின் மிகப்பெரிய தொண்டு அமைப்பு என்று ஆர்எஸ்எஸ் பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதனுடன் தொடர்புடையவர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஏதும் இல்லை. ஆர்எஸ்எஸ் தன்னை அரசியல் சாராத கலாசார அமைப்பு என்று சொல்லிக்கொள்கிறது, ஆனால், அது பாரதிய ஜனதா கட்சியின் 'பாதுகாவலராக' செயல்படுகிறது.

2. ஆர்எஸ்எஸ்-ன் முக்கிய நோக்கங்கள் மற்றும் இலக்குகள் என்ன?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூற்றுப்படி, அது இந்து சமய பண்பாட்டு நெறிகள், இந்து ஒற்றுமை மற்றும் சுய சார்பை ஊக்குவிப்பதற்கான கலாசார அமைப்பு.

நாட்டுக்கு சேவை செய்வது, இந்திய பண்பாட்டை, பாரம்பரியத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஆர்எஸ்எஸ் கூறுகிறது.

அரசியல் சார்பு இல்லை எனக் கூறப்பட்டாலும், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பலர் தேர்தல் அரசியலில் இயங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஆர்எஸ்எஸ்-இன் அகில இந்திய விளம்பரப் பிரிவு பொறுப்பாளரான சுனில் ஆம்பேகர் தனது, "தி ஆர்எஸ்எஸ்: ரோட்மேப்ஸ் ஃபார் தி 21ஸ்ட் சென்சுரி(பக்கம் 9)" என்ற புத்தகத்தில், சமுதாயத்தை ஆளும் ஒரு தனி அதிகாரமாக மாற ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை என்றும் அதன் முக்கிய நோக்கம் சமுதாயத்தை வலுப்படுத்துவதுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

'சங் சமாஜ் பனேகா (சங்கத்தின் வாயிலாக லட்சிய சமூகம் கட்டமைக்கப்படும் என்பதே அதன் பொருள்)' என்ற முழக்கம் ஆர்எஸ்எஸ்-இல் அவ்வப்போது எழுப்பப்படுவதாக அதே புத்தகத்தில் ஆம்பேகர் எழுதுகிறார்.

ஆர்எஸ்எஸ்-இன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் என்பது "ஓர் அமைப்பு, வேறெதுவும் இல்லை," என்கிறார். (Bhavishya Ka Bharat—Sangh Ka Drishtikon, page 19)

3. ஷாகா என்றால் என்ன? யார் ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பினர் ஆகலாம்?

ஷாகா என்பது, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அடிமட்ட அளவில் பெரும் இருப்பைத் தரும் அடிப்படைக் கட்டமைப்பு. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொள்கை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயிற்சியளிக்கப்படும் இடம் ஷாகா.

பெரும்பாலான ஷாகாக்கள் தினசரி காலை நேரத்திலும், சில நேரங்களில் மாலையிலும் நடத்தப்படும். சில பகுதிகளில், இந்த ஷாகாக்கள் வாரத்தில் சில நாட்கள் நடத்தப்படுகின்றன.

ஆர்எஸ்எஸ் கூற்றுப்படி, இந்தியாவில் 73,000 ஷாகாக்களுக்கு மேல் உள்ளன. ஷாகாவில் உடற்பயிற்சி, கூட்டு வேலை, தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர, அணிவகுப்பு மற்றும் தற்காப்புக் கலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஷாகாவில்தான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொள்கை குறித்துக் கற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு இந்துத்வா, இந்து தேசியம், மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் பிற அடிப்படைக் கொள்கைகள் குறித்து கற்றுத் தரப்படுகிறது. நாடு முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்தவும், பராமரிக்கவும் ஆர்எஸ்எஸ் ஷாகாக்களை சார்ந்திருக்கிறது.

முறைப்படியான உறுப்பினர் என்று ஏதும் இல்லை என்கிறது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் பங்கேற்பவர்கள் ஸ்வயம்சேவக் (தன்னார்வலர்கள்) என அழைக்கப்படுகின்றனர். ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி எந்தவொரு இந்து ஆணும் ஸ்வயம்சேவக் ஆக முடியும்.

ஆர்எஸ்எஸ் கூற்றுப்படி யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு அருகில் இருக்கும் ஷாகாவை அணுகி ஸ்வயம்சேவக் ஆக முடியும். ஸ்வயம்சேவக் ஆவதற்குக் கட்டணம், படிவம் அல்லது விண்ணப்பம் ஏதுமில்லை. காலை அல்லது மாலையில் நடைபெறும் ஷாகாவின் தினசரி கூட்டங்களில் பங்கேற்பவர்கள் ஆர்எஸ்எஸ்-இன் ஸ்வயம்சேவக் ஆகிவிடுவதாக ஆர்எஸ்எஸ் சொல்கிறது.

யாருக்கேனும் அருகில் செயல்படும் ஷாகா அல்லது ஸ்வயம்சேவக் பற்றிய தகவல் தெரியாவிட்டால், அவர்கள் ஆர்எஸ்எஸ் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தால், ஆர்எஸ்எஸ்-இல் சேர வசதியாக அவருக்கு மிக அருகில் உள்ள ஷாகா அல்லது ஸ்வயம்சேவக் பற்றிய தகவல்கள் அளிக்கப்படும் என ஆர்எஸ்எஸ் சொல்கிறது.

4. பெண்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக முடியுமா?

பெண்கள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக முடியாது. அதன் இணையதளத்தில் 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' என்ற பகுதியில், ஆர்எஸ்எஸ் இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க நிறுவப்பட்டது என்றும், நடைமுறை வரம்புகளைக் கருத்தில் கொண்டு இந்து ஆண்கள் மட்டுமே இணைய அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பெண்களுக்கு அதே போன்றதொரு அமைப்பு தேவைப்பட்ட போது, வார்தாவை (மகாராஷ்டிரா) சேர்ந்த லக்‌ஷ்மிபாய் கேல்கர் என்ற சமூக செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவரை தொடர்புகொண்டார். அவருடன் கலந்துரையாடிய பின்னர் 1936ஆம் ஆண்டு ராஷ்ட்ர சேவிகா சமிதியை தொடங்க முடிவு செய்யப்பட்டது. ராஷ்ட்ர சேவிகா சமிதியின் குறிக்கோளும் தங்களின் குறிக்கோளும் ஒன்றுதான் என்றும் எனவே பெண்கள் அதில் சேரலாம் என்றும் கூறுகிறது ஆர்எஸ்எஸ்.

ஆனால், அதன் நூறாவது ஆண்டில் பெண்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் மூலம் இந்திய சிந்தனை மற்றும் சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் சொல்கிறது.

5. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி எங்கிருந்து வருகிறது?

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இதனால் அதில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடைமையும் இல்லை என்ற விமர்சனத்துக்கு வழிவகுக்கிறது. ஆர்எஸ்எஸ் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதில்லை என்பதாலும் நிதியாதாரம் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

அதுவொரு தற்சார்புள்ள அமைப்பு என்றும், தானாக முன்வந்து யாரேனும் பணம் அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை என ஆர்எஸ்எஸ் கூறுகிறது. அதன் தன்னார்வலர்கள் காவிக் கொடியைத் தங்களது குருவாகக் கருதி ஆண்டுக்கு ஒருமுறை அளிக்கும் குரு தட்சணை மூலம் தனது செலவுகளைக் கவனித்துக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் சொல்கிறது.

அதன் தன்னார்வலர்கள் பலர் சமூக சேவை செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மக்களிடம் இருந்து உதவி பெறுவதாகவும் ஆர்எஸ்எஸ் சொல்கிறது. இந்த சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் பணம் திரட்டும் அறக்கட்டளைகளைத் தொடங்கித் தங்களுடைய கணக்குகளை சட்ட வரம்புக்குள் செயல்படுத்துகிறார்கள்.

கடந்த காலத்தில், அயோத்தியில் சில சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தங்கள் தொடர்பில், ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்படாதது குறித்தும் வருமான வரி வரம்புக்கு வெளியே இருப்பது குறித்தும் காங்கிரஸ் கட்சி பிரச்னையை எழுப்பியுள்ளது.

ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்படாதது குறித்து விளக்கமளித்த ஆர்எஸ்எஸ் சர்சங்க சாலக் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டபோது சுதந்திர இந்திய அரசு எதுவும் இருக்கவில்லை, சுதந்திரத்துக்குப் பிறகு அனைத்து அமைப்புகளும் பதிவு செய்துகொள்ளவேண்டும் என எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை என்று சொல்கிறார். அவரது கூற்றுப்படி ஆர்எஸ்எஸ் என்பது "தனிநபர்களால் ஆன அமைப்பு" என்பதால் அதற்கு வரி விதிக்க முடியாது.

ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் அரசு கணக்கு கேட்காவிட்டாலும், அதன் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் வகையில், ஆர்எஸ்எஸ் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்து, ஒவ்வோர் ஆண்டும் தணிக்கை செய்து வருவதாகவும், அரசு என்றேனும் கேட்டால், ஆர்எஸ்எஸ்-இன் கணக்குகள் தயாராக உள்ளன என்றும் பாகவத் சொல்கிறார். (Bhavishya Ka Bharat—Sangh Ka Drishtikon, page 105)

6. ஆர்எஸ்எஸ் நிர்வாக கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

ஆர்எஸ்எஸ்: எப்போது, எதற்காக நிறுவப்பட்டது? விரிவாக விளக்கும் 14 கேள்வி, பதில்கள்

பட மூலாதாரம், WWW.GOLWALKARGURUJI.ORG

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் உச்சகட்ட பொறுப்பு சர்சங்க சாலக் என்பதுதான். அதற்கடுத்து மிக முக்கியமான பொறுப்பு சர்கார்யாவா. இவர் ஆர்எஸ்எஸ்-ன் தலைமை செயல் அதிகாரி, என்பதுடன் அமைப்பின் தினசரி செயல்பாடுகள் குறித்து முடிவு எடுப்பதற்கான அதிகாரம் கொண்டவர். தற்போது தத்தாத்ரேயா ஹோசபேல் ஆர்எஸ்எஸ்-இன் சர்கார்யாவாக பதவியில் இருக்கிறார்.

வரலாற்றைப் பார்க்கும் போது, ஹெட்கேவருக்கு பிறகு வந்த 5 சர்சங்கசாலக்குகளில் நான்கு பேர் முன்பு சர்கார்யாவா பொறுப்பிலும் ஒருவர் சா-சர்கார்யாவா பொறுப்பிலும் இருந்துள்ளனர்.

சா-சர்க்கார்யாவா பொறுப்பு இணைச் செயலாளருக்கு சமமான ஒரு பொறுப்பு, ஆர்எஸ்எஸ்-இல் ஒரே நேரத்தில் பல சா-சர்கார்யாவாக்கள் இருக்கலாம்.

ஆர்எஸ்எஸ்-இன் நிர்வாகக் கட்டமைப்பில் நாடு முழுவதும் 46 பிராந்தியங்கள் உள்ளன. அவற்றின் கீழ் துறைகள், மாவட்டங்கள், பிளாக்குகள் உள்ளன. ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி 922 மாவட்டங்கள், 6,597 பிளாக்குகள் மற்றும் 27,720 மண்டலங்கள், தினமும் 73,117 தினசரி ஷாக்காக்களுடன் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டலமும் 12 முதல் 15 கிராமங்களை உள்ளடக்கியது.

ஆர்எஸ்எஸ், இணை அமைப்புகள் என அழைக்கப்படும் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவை மொத்தமாக சங் பரிவார் என அழைக்கப்படுகின்றன. பாரதிய ஜனதா கட்சி(பாஜக), விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி), பஜ்ரங் தளம், அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச், வனவாசி கல்யாண் ஆஸ்ரம், ராஷ்ட்ரிய சிக் சங்கட், இந்து யுவ வாகினி, பாரதிய கிஷான் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சங் பரிவாரின் அங்கமாக உள்ளன.

7. சர்சங்கசாலக் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?

இதுவரை ஆர்எஸ்எஸ்-க்கு ஆறு சர்சங்கசாலக்குகள் இருந்துள்ளனர். ஆர்எஸ்எஸ்-இன் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர்தான் 1925 முதல் 1940 வரை பொறுப்பு வகித்த முதல் சர்சங்கசாலக். ஹெட்கேவர் மரணத்துக்குப் பிறகு, மாதவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர் 1940ஆம் ஆண்டு இரண்டாவது சர்சங்கசாலக்காக பதவியேற்று 1973ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பிலேயே நீடித்தார்.

கடந்த 1973ஆம் ஆண்டு கோல்வால்கரின் மறைவுக்குப் பின்னர், பாலாசாகேப் தீயோராஸ் சர்சங்கசாலக்காக பொறுப்பேற்று 1994ஆம் ஆண்டு வரை பொறுப்பில் நீடித்தார். 1994ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அவர் ராஜேந்திர சிங்கை (ராஜூ பைய்யா) அந்தப் பொறுப்பில் நியமித்தார். ராஜேந்திர சிங் 2000ஆம் ஆண்டு வரை சர்சங்கசாலக்காக இருந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு கே.எஸ். சுதர்சன் புதிய சர்சங்கசாலக்காக பொறுப்பேற்று 2009ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். 2009ஆம் ஆண்டில் சுதர்சன் மோகன் பாகவத்தை அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார். பாகவத் ஆர்எஸ்எஸ்-இன் ஆறாவது சர்சங்சலக்.

ஆர்எஸ்எஸ்-இல் சர்சங்கசாலக்கை தேர்ந்தெடுக்க எந்த முறையான நடைமுறையும் இல்லை. இது விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்படுகிறது. ஹெட்கேவருக்கு பிறகு பொறுப்புக்கு வந்த அனைத்து சர்சங்கசாலக்குகளும் அவர்களுக்கு முந்தைய தலைவர்களால் நியமிக்கப்பட்டவர்கள்தான். சர்சங்கசாலக்கின் பதவிக்காலம் வாழ்நாள் முழுமைக்குமானது என்பதுடன் அவரே அவருக்குப் பின் பொறுப்புக்கு வருபவரைத் தேர்வு செய்கிறார்.

ஹெட்கேவர், கோல்வால்கர் போன்ற பெரிய ஆளுமைகள் வகித்த பொறுப்பு தங்களால் மிகவும் மதிக்கப்படுவதுதான் அதற்குக் காரணம் என மோகன் பாகவத் சொல்கிறார்.

"எனக்குப் பின் யார் சர்சங்கசாலக் ஆக வேண்டும் என்பது எனது முடிவு, நான் எவ்வளவு காலம் சர்சங்கசாலக்காக இருக்க வேண்டும் என்பதும் எனது முடிவுதான். ஆனால் நான் இதுபோல் இருப்பதால் ஆர்எஸ்எஸ்-இல் எனக்கு தனித்துவமான அதிகாரம் என ஒன்றுமில்லை என்பதை ஆர்எஸ்எஸ் ஞானத்துடன் உறுதி செய்துள்ளது.

நான் ஒரு நண்பன், வழிகாட்டி, தொலைநோக்கு இலக்குகளை விளக்குபவன். சர்சங்கசாலக்குக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை. ஆர்எஸ்எஸ்-இன் தலைமை செயல் அதிகாரியான சர்கார்யாவாவின் கையில்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. இப்போது செய்வதை நிறுத்திவிட்டு உடனடியாக நாக்பூருக்கு செல்லும்படி அவர் சொன்னால், நான் எழுந்து செல்ல வேண்டும். அவர் முறையாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலின் மூலம் தேந்தெடுக்கப்படுகிறார்" என்கிறார் மோகன் பாகவத் (Bhavishya Ka Bharat—Sangh Ka Drishtikon, pages 105-106)

8. ஆர்எஸ்எஸ் எப்போது, எதற்காக தடை செய்யப்பட்டது?

ஆர்எஸ்எஸ்: எப்போது, எதற்காக நிறுவப்பட்டது? விரிவாக விளக்கும் 14 கேள்வி, பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆர்எஸ்எஸ் முதலில் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாகத் தடை செய்யப்பட்டது. 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்ஸே துப்பாக்கியால் சுட்டு மகாத்மா காந்தியை கொலை செய்தார். அந்த நேரத்தில் காந்தியின் படுகொலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக நாதுராம் கோட்ஸே ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும் அப்போதைய அரசு சந்தேகித்தது. மத ரீதியாகப் பிரிவினையைத் தூண்டும் அமைப்பாக ஆர்எஸ்எஸ்-ஐ கருதி அரசு அதை 1948 பிப்ரவரியில் தடை செய்து, ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக்காக இருந்த கோல்வால்கரை கைது செய்தது.

அடுத்த ஒரு வருடம் தடையை விலக்கிக்கொள்வது குறித்து கோல்வால்கருக்கும் அரசுக்கும் இடையே பல விவாதங்கள் நடைபெற்றன. ஆர்எஸ்எஸ் எழுதப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் இயங்க வேண்டும் என்றும், அதன் செயல்பாடுகளை பண்பாட்டுத் தளத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும், வன்முறை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையை கைவிட வேண்டும் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசியக் கொடிக்கு அதன் விசுவாசத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு கூறியது. (The RSS: A Menace to India, A.G. Noorani, page 375)

இந்தக் காலகட்டதில் சர்தார் படேல் மற்றும் கோல்வால்கர் இடையே பல கடிதங்கள் பரிமாறப்பட்டன. அந்தக் கடிதங்களில் ஒன்றில், ஆர்எஸ்எஸ்-இன் அனைத்து உரைகளும் மத விஷத்தால் நிறைந்து இருந்ததாகவும், அந்த விஷத்தால், நாடு காந்தியின் தியாகத்தைப் பொறுத்துக்கொள்ள நேரிட்டதாகவும் கோல்வால்கருக்கு சர்தார் படேல் எழுதியிருந்தார்.

காந்தியின் மரணத்தை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியதாக உளவு முகமைகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் சர்தார் படேல் எழுதியிருந்தார்.

இறுதியில் 1949ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. "செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் அளித்த விளக்கங்களின் அடிப்படையில், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக இந்திய தேசியக் கொடியை மதித்து ரகசியத்தன்மையைக் கைவிட்டு, வன்முறையில் இருந்து விலகி ஜனநாயக, கலாசார அமைப்பாகச் செயல்பட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இந்திய அரசு வந்துள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது. (The RSS: A Menace to India, A.G. Noorani, page 390)

இத்துடன் 1948இல் விதிக்கப்பட்ட தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் எந்த நிபந்தனையும் இல்லாமல் தடை நீக்கப்பட்டதாக ஆர்எஸ்எஸ் சொல்கிறது.

ஆர்எஸ்எஸ்-இன் அகில இந்திய விளம்பரப் பிரிவு துணைத் தலைவர் நரேந்திர தாகூர் ஆசிரியராக இருந்த 'ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் கா திரிஷ்டிகோன்' என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தில், இது தொடர்பாக பாம்பே சட்டப்பேரவையில் 1949ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஆர்எஸ்எஸ் மீதான தடை எந்த நிபந்தனையும் இன்றி நீக்கப்பட்டதாகவும், ஆர்எஸ்எஸ் தலைமை அரசுக்கு எந்த உறுதியும் தரவில்லை என்றும் அரசு தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. (Rashtriya Swayamsevak Sangh ka Drishtikon, Narendra Thakur, page 25)

1975ஆம் ஆண்டு, பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய போது ஆர்எஸ்எஸ் இரண்டாவது முறையாகத் தடை செய்யப்பட்டது. அவசர நிலை முடிவுக்கு வந்த பிறகு 1977ஆம் ஆண்டு தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், ஆர்எஸ்எஸ் மூன்றாவது முறையாகத் தடை செய்யப்பட்டது. ஆனால், 1993 ஜூன் மாதத்தில், நீதிபதி பஹ்ரி ஆணையம் இந்தத் தடை நியாயமற்றது எனக் கூறியதைத் தொடர்ந்து அரசு தடையை நீக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

9. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்றதா?

ஆர்எஸ்எஸ்: எப்போது, எதற்காக நிறுவப்பட்டது? விரிவாக விளக்கும் 14 கேள்வி, பதில்கள்

பட மூலாதாரம், WWW.GOLWALKARGURUJI.ORG

படக்குறிப்பு, சுவாமி அமிர்தானந்த் உடன் குரு கோல்வால்கர்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துக்கு (ஆர்எஸ்எஸ்) எதிரான மிகப்பெரிய விமர்சனங்களில் ஒன்று, அது ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முனைப்பாக ஈடுபடவில்லை என்பதுதான்.

கடந்த 1925ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட போது, சுதந்திரப் போராட்ட இயக்கம் ஏற்கெனவே சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. கோல்வால்கரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என அடிக்கடி கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் சுதந்திரப் போராட்டத்தில் முனைப்பாகச் செயல்பட்டதாக ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொள்கிறது. ஆர்எஸ்எஸ் தனது ஷாகாக்களில் 1930, ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாகக் கொண்டாடியதாகவும் அதன ஆயிரக்கணக்காண தன்னார்வலர்கள் சுதந்திரப் போராட்டத்தில் வெளிப்படையாகப் பங்கேற்றதாகவும் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளித்ததாகவும் சுனில் ஆம்பேகர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆர்எஸ்எஸ் ஒத்துழையாமை இயக்கத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றதாகவும் ஆம்பேகர் சொல்கிறார்.

நன்கு அறியப்பட்ட நூலாசிரியரான திரேந்திர ஜா, ஆர்எஸ்எஸ் குறித்து விரிவாக ஆய்வு நடத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ்-இன் இரண்டாவது சர்சங்கசாலக்கான கோல்வால்கர் குறித்து அவர் அண்மையில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் அவர் நாதுராம் கோட்சே மற்றும் இந்துத்வா குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்-இன் அடிப்படைக் கொள்கைகளே அதை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்ததால், சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்பது என்ற கேள்வியே எழவில்லை என்று அவர் சொல்கிறார். திரேந்திர ஜாவின் கூற்றுப்படி, "முஸ்லிம்களே அவர்களது மிகப்பெரிய எதிரி, ஆங்கிலேய அரசு அல்ல என இந்துக்களிடம் சொல்ல முயன்றுகொண்டிருந்த" இந்துத்வா கொள்கையே ஆர்எஸ்எஸ்-இன் அடித்தளம்.

"1930-இல், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் குழப்பம் இருந்தது. ஆர்எஸ்எஸ்-இன் ஒரு பிரிவு இந்தப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பியது. ஹெட்கேவர் இருதலைக்கொள்ளி எறும்பு போன்ற நிலையை எதிர்கொண்டார். அவரால் அமைப்பை ஆங்கிலேயருக்கு எதிரான நிலைப்பாட்டில் எடுத்துச் செல்ல முடியவில்லை, மறுபுறம் அவரது உறுப்பினர்களுக்கு முன் அவர் பலவீனமானவராகக் காட்சியளிக்க விரும்பவில்லை.

எனவே, அமைப்பு போராட்டத்தில் பங்கேற்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். யாரேனும் பங்கேற்க விரும்பினால் அவர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம். உதாரணமாக அவரே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு எல்.பி. பரஞ்பேவை சர்சங்கசாலக்காக நியமித்துவிட்டு வன சத்தியாகிரகத்தில் பங்கேற்றுவிட்டுக் கைதானார்," என்று ஜா கூறுகிறார்.

1935ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தனது பத்தாம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, தனது உரை ஒன்றில் ஹெட்கேவர் ஆங்கிலேய ஆட்சியை 'கடவுளின் செயல்' எனக் குறிப்பிட்டதாக திரேந்திரா ஜா சொல்கிறார்.

மேலும், "ஆர்எஸ்எஸ்-இன் அடிப்படைவாதம் ஆங்கிலேயருக்கு எதிராக இல்லை; மாறாக ஒரு நிலையில் அது ஆங்கிலேயருக்கு ஆதரவானதாக மாறிக் கொண்டிருந்தது. ஏனென்றால் அது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இருதரப்பும் நிறைந்த ஆங்கிலேயருக்கு எதிரான இயக்கத்தைப் பிளவுபடுத்திக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இந்துக்களின் நலன் குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருந்தது" என்கிறார் ஜா.

மூத்த பத்திரிகையாளரும் நூலாசிரியருமான் நிலாஞ்சன் முகோபாத்யாய் ஆர்எஸ்எஸ்-இன் முக்கியத் தலைவர்கள் குறித்து "தி ஆர்எஸ்எஸ்: ஐகான்ஸ் ஆஃப் தி இண்டியன் ரைட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அவர் இப்படிக் கூறுகிறார்: "ஆர்எஸ்எஸ்-இன் இலக்கு காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதில்லை. இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்துக்கு எதிராக இந்து சமுதாயத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன்தான் ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டது. அவர்களது நோக்கம் ஆங்கிலேயர்களை விரட்டுவதில்லை. அவர்களது நோக்கம் இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து அவர்களை ஒரே குரலாகப் பேசத் தயார் செய்வது."

கடந்த 1939ஆம் ஆண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஹெட்கேவரை சந்திக்க முயன்றார். அப்போது, போஸ் மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் கோபால் முகுந்த் ஹட்டாரை ஒரு தூதராக அனுப்பினார். ஆனால் உடல்நிலையைக் காரணம் காட்டி ஹெட்கேர் அந்த சந்திப்பைத் தவிர்த்து விட்டதற்காகவும் ஆர்எஸ்எஸ் விமர்சிக்கப்படுகிறது. கோகுல் முகுந்த் ஹட்டார் இதை 1979ஆம் ஆண்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா இதழில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, ஆர்எஸ்எஸ்-இன் அதிகாரப்பூர்வ இதழான தி ஆர்கனைஸரில் வெளியிடப்பட்ட கட்டுரையில், 1940ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஹெட்கேவரை சந்திக்க வந்ததாக டமாரு தார் பட்னாயக் கூறியுள்ளார்.

அந்தக் கட்டுரையில், "அந்தச் சமயத்துக்குள், டாக்டர்ஜி, ஆர்எஸ்எஸ்-இன் நன்கு அறியப்பட்ட நிர்வாகியான பாபா சாஹேப் காடடேவின் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் (போஸ்) அங்கு சென்று சேர்ந்த நேரத்துக்குள் ஹெட்கேவர்ஜி கண்களை மூடி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தார்" என்று பட்னாயக் எழுதியுள்ளார்.

பட்நாயக்கின் கூற்றுப்படி, இரண்டு பிரசாரகர்கள் ஹெட்கேவரை எழுப்ப முயன்றபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவரை மற்றொரு நாள் சந்திப்பதாகக் கூறிச் சென்றுவிட்டார்.

ஹெட்கேவர் எழுந்து தன்னைச் சந்திக்க போஸ் வந்திருந்ததாகக் கேள்விப்பட்டவுடன், அவர் போஸ் இன்னமும் இருக்கிறாரா என்பதைப் பார்த்து வர தனது பிரசாரகர்களை கவலையுடன் அனுப்பி வைத்ததாக பட்நாயக் எழுதுகிறார்.

"ஆனால் அவர் (போஸ்) உண்மையிலேயே சென்றுவிட்டார், அதற்கு அடுத்த நாள் டாக்டர்ஜி காலமானார். உண்மையிலேயே மனதை நொறுங்கச் செய்யும் ஒரு முரண்," என்று பட்நாயக் எழுதியுள்ளார்.

ஹெட்கேவர் நேதாஜி போஸை சந்தித்ததாக ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் 2018ஆம் ஆண்டு தெரிவித்தார். ஆனால் எங்கு எப்போது இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்ற விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. பாகவத்தின் கூற்றுப்படி, "அவர் (ஹெட்கேவர்) புரட்சியாளர்களுடன் பணியாற்றினார். அவர் அப்போதைய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அவர் சுபாஷ் பாபுவை சந்தித்தார், அவர் சாவர்க்கரை சந்தித்தார். அவருக்கு புரட்சியாளர்களுடன் தொடர்பு இருந்தது." (Bhavishya Ka Bharat—Sangh Ka Drishtikon, pages 17 and 18)

10. நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன தொடர்பு?

ஆர்எஸ்எஸ்: எப்போது, எதற்காக நிறுவப்பட்டது? விரிவாக விளக்கும் 14 கேள்வி, பதில்கள்

பட மூலாதாரம், Mondadori via Getty Images

படக்குறிப்பு, நாதுராம் கோட்சே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல்காரராகப் பணிபுரிந்தார்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின்(ஆர்எஸ்எஸ்) மீதான மிகத் தீவிரமான விமர்சனங்களில் ஒன்று, மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பினர் என்பதுதான். கோட்சே காந்தியை கொலை செய்தபோது அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக இருக்கவில்லை என்றும், அதனால் காந்தி படுகொலைக்கு ஆர்எஸ்எஸ்-ஐ குறை கூறுவது சரியல்ல என்றும் கூறி ஆர்எஸ்எஸ் எப்போதும் தன்னை கோட்சேவிடம் இருந்து விலக்கி வைக்க முயற்சி செய்திருக்கிறது.

படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நாதுராம் கோட்சே, தாம் முன்பு ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்ததாகவும் ஆனால் பின்னர் இந்துமகா சபையில் சேர ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு வெளியேறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கோட்சேவை பற்றி, "காந்தி'ஸ் அஸாஸின்: தி மேக்கிங் ஆஃப் நாதுராம் கோட்சே அண்ட் ஹிஸ் ஐடியா ஆஃப் இண்டியா' எனப் பெயரிடப்பட்ட புத்தகத்தை திரேந்திர ஜா எழுதியுள்ளார்.

அதில் அவர், இரண்டு கேள்விகள் இருப்பதாகச் சொல்கிறார்.

  • கோட்சே எப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பை விட்டு வெளியேறினார்?
  • எப்போது அவர் இந்து மகா சபையில் சேர்ந்தார்?

"கடந்த 1938ஆம் ஆண்டு கோட்சே நிஜாமின் ஹைதராபாத் பகுதிக்கு இந்து மகாசபையில் ஒரு தலைவராகச் சென்றதாக ஆவணப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. எனவே, அவர் இந்து மகாசபையைச் சேர்ந்த ஒரு தலைவராகச் சென்றதால் அவர் ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு வெளியேறிவிட்டதாக அர்த்தமா?

காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் 1939 மற்றும் 1940ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் அவர் பங்கேற்றதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. அந்த நாட்களில், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பலர் இந்து மகாசபையின் அங்கமாகவும் இருந்தனர். இந்து மகாசபை உறுப்பினர்கள் பலர் ஆர்எஸ்எஸ்-இன் அங்கமாக இருந்தனர். 1947-இல் பாம்பே காவல்துறையினர் இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரித்த போது இரண்டிலும் பதிவுகள் இருப்பதைக் கண்டனர்" என்கிறார் திரேந்திர ஜா.

ஜாவின் கூற்றுப்படி, நாதுராம் கோட்சேவின் சகோதரரும், காந்தி படுகொலையில் சக குற்றவாளியுமான கோபால் கோட்சே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தனது வாழ்நாள் முழுவதும் நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு விலகவில்லை எனத் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறார்.

நாதுராம் கோட்சே கடைசிவரை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கோட்சே குடும்பத்தினரிடம் இருந்து கருத்துகள் வெளிவந்துள்ளது. ஆர்எஸ்எஸ் தன்னை நாதுராம் கோட்சேவிடம் இருந்து விலக்கிக் கொண்டது குறித்து இந்தக் கருத்துகளில் அதிருப்தியும் இருந்தது.

"ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் உரிமை சார்ந்த அமைப்பு அல்ல, எனவே சேர்வதற்கோ, விலகுவதற்கோ எந்த முறையான நடைமுறையும் இல்லை. கோட்சே ஆர்எஸ்எஸ்-இல் இருந்தார், தூக்கில் தொங்க விடப்படுவதற்கு முன் கடைசியாக அவர் செய்தது ஆர்எஸ்எஸ் பிரார்த்தனையைப் பாடியதுதான். ஆர்எஸ்எஸ் மீது அவருக்கு இருந்த விசுவாசத்துக்கு இதைவிட வேறு என்ன பெரிய ஆதாரம் இருக்க முடியும்? கோட்சே இளமையிலும், நடுத்தர வயதிலும், தனது வாழ்நாளின் கடைசி வரையிலும் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்." என்கிறார் நிலஞ்சல் முகோபாத்யாய்.

11. ஆர்எஸ்எஸ் - பாரதிய ஜனதா இடையிலான உறவு என்ன?

ஆர்எஸ்எஸ்: எப்போது, எதற்காக நிறுவப்பட்டது? விரிவாக விளக்கும் 14 கேள்வி, பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சியின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும், பல சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று அரசு அமைத்ததற்கு அடிமட்டத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் ரீதியாக ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் உதவியதாகவும் அடிக்கடி வாதிடப்படுவதுண்டு.

தாங்கள் கட்சி அரசியலில் ஈடுபடவில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பலர் தற்போது பாரதிய ஜனதாவின் ஓர் அங்கமாக இருந்து அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பதில் ரகசியம் இல்லை.

பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ்சிங் செளஹான், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி போன்ற தலைவர்கள் அவர்களுடைய ஆரம்பக் காலம் முதலே ஆர்எஸ்எஸ்-இல் உள்ளனர்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே இருக்கும் நெருக்கமான உறவு 2015ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக அரசு பதவியேற்றவுடன், மோதி அரசின் மூத்த அமைச்சர்கள் டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்தியாஞ்சல் பவனில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து பங்கேற்று தங்களுடைய அமைச்சகங்களின் பணிகள் குறித்து விரிவான தகவல்களை அளித்ததில் இருந்து சிறிது தெரிந்துகொள்ள முடியும். அப்போது வெளிவந்த தகவல்களின்படி, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், ஜே.பி. நட்டா போன்ற மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பொருளாதாரம், கல்வி, தேசியப் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் பாஜகவுக்கு கொள்கை ஆலோசனைகளை ஆர்எஸ்எஸ் வழங்கியதாகவும் சொல்லப்பட்டது. மூன்றாவது நாளில் பிரதமர் நரேந்திர மோதியும் கூட்டத்தில் பங்கேற்று, ஊடக செய்திகளின்படி ஸ்வயம்சேவக்காக (ஆர்எஸ்எஸ் உறுப்பினராக) இருப்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த மூன்று நாள் நிகழ்வு விமர்சனத்துக்கு உள்ளானது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சர்கள் தங்கள் பணி அறிக்கையை அரசு சாரா அமைப்பு ஒன்றிடம் தெரிவிப்பது தவறு என்றும் அது நாட்டின் அமைப்பு, அரசியலமைப்பு மற்றும் விதிகளுக்கு எதிரானது என்று எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் சர்காரியாவா தத்தாத்ரேயா ஹோசபேல், "இதில் எங்கு ரகசியம் இருக்கிறது? மற்ற யாரையும் போல நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். மாநாடுகள், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்கள் பேசுகின்றனர். அதேபோல் அவர்கள் எங்களிடம் பேசினர்," எனக் கூறியதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

ஆர்எஸ்எஸ்-க்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றால், பாஜக அமைப்பு செயலாளர் பொறுப்பு எப்போதும் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்படுவது ஏன்? என்று ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத்திடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கேட்கப்பட்டபோது, அமைப்புச் செயலாளர் பொறுப்பைக் கேட்கும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அந்தப் பொறுப்பைத் தருவதாக பாகவத் தெரிவித்திருந்தார். "இதுவரை வேறு யாரும் (பாஜக தவிர) கேட்கவில்லை. அவர்கள் கேட்டால் நாங்கள் அதைப் பரிசீலிப்போம். வேலை நன்றாக இருந்தால், நாங்கள் நிச்சயம் தருவோம்," என்று பாகவத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ்-க்கு ஒரு கொள்கை இருப்பதாகவும், அந்த கொள்கையை ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஆர்எஸ்எஸ்-இன் வலுவான வளர்ச்சி பலனளிக்கிறது எனவும் பாகவத் தெரிவித்தார். "அதைப் பயன்படுத்திக் கொள்ள முடிபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பயன்படுத்த முடியாதவர்கள் விட்டுச் செல்லப்படுகின்றனர்" என்றார்.

தேர்தலின்போது, வேட்பாளராக விரும்புவோர் குறித்த மதிப்பீட்டை பாஜக கேட்கும்போது, ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் அடிமட்ட அளவில் செயல்படுவதால் துல்லியமான தகவல்களை வழங்க முடிவதாக ஆர்எஸ்எஸ் சொல்கிறது. ஆனால், இது தவிர ஆர்எஸ்எஸ் தேர்தல் முடிவுகளையோ, தேர்தல் வியூகங்களையோ முடிவு செய்வதில்லை. (The RSS: Roadmaps for the 21st Century, page 220)

சுனில் ஆம்பேகர் கூற்றின்படி, "எந்த பாஜக அரசிலும் பல ஸ்வயம்சேவக்குகள் இருக்கிறார்கள் என்பதால் மட்டுமே ஆர்எஸ்எஸ் அதன் தினசரி செயல்பாட்டில் தலையிடுகிறது என பொருளில்லை."

பாரதிய ஜனதா அரசை மறைமுகமாகக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுவதையும் ஆர்எஸ்எஸ் மறுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் "பாஜகவின் செயல்பாட்டில் தலையிடுவதில்லை, அவ்வாறு செய்வதற்கான எந்த விருப்பமும் அதற்கு இல்லை. யாருக்கு எந்தப் பொறுப்பு கிடைக்கும்? கூட்டங்கள் எங்கு நடத்தப்படும்? இந்த விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் எதுவும் செய்வதில்லை," என்கிறார் ஆம்பேகர்.

12. இந்திய தேசியக் கொடி விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மீது என்ன சர்ச்சை?

ஆர்எஸ்எஸ்: எப்போது, எதற்காக நிறுவப்பட்டது? விரிவாக விளக்கும் 14 கேள்வி, பதில்கள்

பட மூலாதாரம், Bettmann / Getty Images

படக்குறிப்பு, நீதிமன்றத்தில் நாதூராம் கோட்சே, ஆப்தே, விஷ்ணு ராம கிருஷ்ணா (இடமிருந்து வலம்)

ஆர்எஸ்எஸ்-இன் இரண்டாவது சர்சங்கசாலக் மாதவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர், இந்தியாவின் மூவர்ணக் கொடியை விமர்சிப்பவராக இருந்தார். அவரது, "பஞ்ச் ஆஃப் தாட்ஸ்," என்ற புத்தகத்தில், "இந்தக் கொடி எப்படி வந்தது? பிரெஞ்சு புரட்சியின்போது, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய கருத்துகளை வெளிப்படுத்துவதற்காக பிரெஞ்சு மக்கள் அவர்களது கொடியில் மூவர்ணத்தைப் பயன்படுத்தினர். எனவே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மூவர்ணத்தின் மீது ஒரு கவர்ச்சி இருந்தது. எனவே, இது காங்கிரஸால் எடுத்துக்கொள்ளப்பட்டது," என எழுதியுள்ளார்.

மூவர்ணக் கொடி, "தேசிய வரலாறு, பாரம்பரியம் அடிப்படையில் தேசிய தொலைநோக்கு அல்லது உண்மையால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்டது அல்ல," எனவும் கோல்வால்கர் எழுதியிருந்தார்.

ஆர்எஸ்எஸ்-இல் காவிக் கொடிக்கு குருவின் அந்தஸ்து வழங்கப்படுகிறது. காவிக் கொடி பண்டைய காலம் முதல் தற்போது வரை ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது என்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார் மோகன் பாகவத்.

"நமது வரலாறு விவாதிக்கப்படும் போதெல்லாம், காவிக் கொடி எங்காவது இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவின் கொடி எதுவாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோதுகூட, கொடிக் குழுவின் அறிக்கை நன்கு அறியப்பட்ட, நன்கு ஸ்தாபிக்கப்பட்ட காவிக் கொடியையே பரிந்துரைத்தது. பின்னர் அது மூவர்ணக் கொடியாக மாற்றப்பட்டது. அது நமது தேசியக் கொடி, நாங்கள் அதை முழுமையாக மதிக்கிறோம்" என்கிறார் அவர். (Bhavishya Ka Bharat—Sangh Ka Drishtikon, page 31)

இன்று தேசியக் கொடியை மதிப்பதாக ஆர்எஸ்எஸ் கூறினாலும், மூவர்ணக் கொடி குறித்த அதன் நிலைப்பாடு பற்றி சுதந்திரத்துக்கு முன்பும் அதற்குப் பின்பும் பல பத்தாண்டுகளுக்குக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

நிலாஞ்சன் முகோபாத்யாய், "காங்கிரஸ் கட்சியின் 1929 லாகூர் கூட்டம் முழுமையான சுதந்திரம் எனும் குறிக்கோளை முன்வைத்த போது, 1930 ஜனவரி 26ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்படும் எனவும் மூவர்ணக் கொடி ஏற்றப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் மூவர்ணக் கொடிக்குப் பதிலாக ஆர்எஸ்எஸ் காவிக்கொடியை ஏற்றியது" என்கிறார்.

கடந்த 1930ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஹெட்கேவர் எழுதிய கடிதம் ஒன்றில் ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் காவிக் கொடிகளை ஏற்றுவது குறித்தே எழுதியதாகவும், மூவர்ணக் கொடிகளை அல்லவென்றும், தீரேந்திர ஜா சொல்கிறார்.

கடந்த 1950 ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் அடுத்த 50 ஆண்டுகளில் மூவர்ணக் கொடியை தனது தலைமையகத்தில் ஏற்றவில்லை என்பது மற்றொரு விமர்சனம். ஆர்எஸ்எஸ் தனது தலைமையகத்தில் முதல்முறையாக 2002ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி மூவர்ணக் கொடியை ஏற்றியது.

இதற்கு பதிலளிக்கும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்கள், 2002ஆம் ஆண்டு வரை மூவர்ணக் கொடியை ஆர்எஸ்எஸ் ஏற்றாததற்கு அதுவரை தனிநபர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் காரணம் எனக் கூறுகின்றனர்.

ஆனால் 2002ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த தேசியக் கொடிக்கான விதிகள் எந்தத் தனி மனிதனையோ, அமைப்பையோ தேசியக் கொடியை குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் ஏற்றி வைப்பதைத் தடை செய்யவில்லை என வாதிடப்படுகிறது.

முன்பு, 1950கள், 60கள், மற்றும் 70களில்கூட தனியார் நிறுவனங்கள் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26ஆம் தேதிகளில் தேசியக் கொடியை ஏற்றியதாக நிலாஞ்சன் முகோபாத்யாய் சொல்கிறார். "கொடிக்கான விதிகளின் நோக்கம், தேசியக் கொடி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதுதான்."

கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் ஸ்மிரிதி பவனில் மூன்று இளைஞர்கள் வலுக்கட்டாயமாக மூவர்ணக் கொடியை ஏற்றினர். 2013, ஆகஸ்ட் 14ஆம் தேதி பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், "அலுவலகத்தின் பொறுப்பாளரான சுனில் கதாலே முதலில் அவர்கள் வளாகத்துக்கு நுழைவதைத் தடுக்க முயன்றார், பின்னர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க முயன்றார்."

அத்துமீறி நுழைந்ததாக இந்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால், நாக்பூர் நீதிமன்றம் அவர்களை 2013ஆம் ஆண்டு விடுவித்தது.

13. முஸ்லிம், கிறிஸ்தவர் குறித்த ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு என்ன?

இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள், இந்தியாவை வீடாகக் கருதும் யாராக இருந்தாலும் அவர் எந்த மதமாக இருந்தாலும் அவர் இந்துதான் என ஆர்எஸ்எஸ்-இன் தற்போதைய சர்சங்கசாலக்கான மோகன் பாகவத் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.

இந்தியா ஓர் இந்து நாடு என அவர் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். சிறுபான்மை சமூகத்தினர் குறித்து, குறிப்பாக இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றிய ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்-இன் கோணத்தை, அதன் இரண்டாவது சர்சங்கசாலக் மாதவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர் எழுதிய "பஞ்ச் ஆஃப் தாட்ஸ்" புத்தக்கத்தில் பார்க்கலாம்.

"கையளவு முஸ்லிம்கள்தான் இங்கு எதிரிகளாகவும் போர் தொடுப்பவர்களாகவும் நுழைந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல, வெகுசில வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் மட்டுமே இங்கு வந்தனர். தற்போது முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் பெருமளவு அதிகரித்துவிட்டனர். அவர்கள் மீன்களைப் போல வெறுமனே இனப்பெருக்கத்தால் அதிகரிக்கவில்லை. அவர்கள் உள்ளூர் மக்களை மதம் மாற்றினர்.

நாம் நமது வம்சாவளியை ஒரு மூலத்தில் அடையாளம் காண முடியும். அங்கிருந்து ஒரு பகுதி இந்து குழுவில் இருந்து பிரித்து முஸ்லிமானது, மற்றொரு பகுதி கிறிஸ்தவமானது. மற்றவர்களை மதம் மாற்ற முடியவில்லை, அவர்கள் தொடர்ந்து இந்துக்களாக உள்ளனர்" என கோல்வால்கர் எழுதினார்.

அதே புத்தகத்தில், இஸ்லாமியர், கிறித்தவர் மற்றும் கம்யூனிஸ்டுகளை "நாட்டுக்கு உள்ளேயே இருக்கும் எதிரிகள்" என கோல்வால்கர் விவரித்தார்.

இஸ்லாமியர்களை விரோதிகள் என்று "பஞ்ச் ஆஃப் தாட்ஸில்" கோல்வால்கர் குறிப்பிட்டுள்ளது குறித்து 2018ஆம் ஆண்டு பாகவத்திடம் கேட்கப்பட்டபோது, "குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சூழ்நிலையில் சில கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன, அவை நிரந்தரமானவையல்ல," என்று தெரிவித்தார்.

கோல்வால்கரின் கருத்துகளின் புதிய பதிப்பில், உள்ளூர் எதிரிகள் பற்றிய கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

"ஆர்எஸ்எஸ் ஹெட்கேவர் கருத்துகளை மட்டும் பின்பற்றும் குறுகிய தன்மை கொண்ட ஓர் அமைப்பு அல்ல. காலம் மாறும்போது, அதற்கேற்ப அமைப்பின் சூழ்நிலையும் மாறும். எங்களுடைய சிந்தனை, சிந்திக்கும் முறை மாறுகிறது. மாற்றங்களைக் கொண்டு வர எங்களுக்கு ஹெட்கேவர் அனுமதி அளித்துள்ளார்," என்று பாகவத் தெரிவித்தார். (Bhavishya Ka Bharat—Sangh Ka Drishtikon, page 90)

"நாம் பொதுவான மூதாதையரின் வாரிசுகள். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பதாயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் டிஎன்ஏ-வும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இங்கு ஒரு முஸ்லிம்கூட இருக்கக் கூடாது என இந்துக்கள் சொன்னால், இந்துக்களும் இந்துக்களாக இருக்க முடியாது," என ஜூலை 2021-இல்பாகவத் தெரிவித்தார்.

14. அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா?

கடந்த 1966ஆம் ஆண்டு இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி எந்த அரசு ஊழியரும் அரசியல் கட்சி அல்லது அரசியல் செய்யும் அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியாது. அரசு ஊழியர்கள் அரசியல் இயக்கம் அல்லது அரசியல் செயல்பாட்டில் எந்த வகையிலும் பங்கேற்பது, பங்களிப்பது அல்லது உதவுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எந்த அரசு ஊழியரும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அல்லது ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புகளில் உறுப்பினராகவோ அல்லது தொடர்பிலோ இருந்தால் அவர்கள் மீது குடிமைப் பணிகள் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவு தெளிவுபடுத்தியிருந்தது. இதுவே 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 1966,1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஆய்வு செய்த பின்னர், ஆர்எஸ்எஸ்-இன் பெயரை அந்த உத்தரவுகளில் இருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் பயிற்சித் துறை 2024ஆம் ஆண்டு ஜூலையில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

எளிதாகச் சொல்வதானால், எந்த அரசு ஊழியரும் ஆர்எஸ்எஸ்-இல் சேர்வதையோ அதற்காகப் பணியாற்றுவதைத் தடுப்பதற்கோ தற்போது எந்தத் தடையும் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.