ஐரோப்பாவின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தை ஒரே ஒரு தீ விபத்து முடக்கியது எப்படி?

ஹீத்ரோ விமான நிலையம், லண்டன், பிரிட்டன், விமானங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹீத்ரோ விமான நிலையம்
    • எழுதியவர், சைமன் ஜாக்
    • பதவி, வணிக ஆசிரியர், பிபிசி செய்திகள்

மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஒரே ஒரு தீ விபத்து, உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றை மூடுவதற்கு வழிவகுத்தது என்பது வியப்பாக உள்ளது.

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (மார்ச் 21) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமான நிலையம் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும் விமானங்கள் இயக்கப்படாததால் சுமார் 2,00,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இன்று (மார்ச் 22) விமான நிலையம் முழு செயல்பாட்டிற்கு திரும்பிவிடும் என அதன் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் மில்லியன் கணக்கான டன் வர்த்தகப் பொருட்களின் பயணங்களில் இடையூறு ஏற்பட இந்த விபத்து காரணமாக இருந்தது.

மேலும், பிரிட்டனின் முக்கிய உள்கட்டமைப்பான ஹீத்ரோ விமான நிலையம், மோசமான சூழ்நிலைகளைச் சமாளித்து மீளும் திறனைக் கொண்டுள்ளதா? என்பது குறித்துப் பல கேள்விகளையும் இந்த விபத்து எழுப்பியுள்ளது.

விமான நிலைய முடக்கத்திற்கு காரணம் என்ன?

'பேரிடர் மீட்புத் திட்டங்கள்', பல வணிகங்களின் உயர் நிர்வாகிகளை தொடர்ந்து சிந்தித்து வைக்கும் ஒரு விஷயம்.

வங்கிகள், தரவு மையங்கள், பங்குச் சந்தைகள், மருத்துவமனைகள் என அனைத்திலும் அவசரகாலத் திட்டங்கள் உள்ளன.

"தேசிய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹீத்ரோ விமான நிலையம் போன்ற ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு, மாற்று வசதி ஏதும் இல்லாமல் ஒரே ஒரு மின்சார விநியோக அமைப்பை முழுமையாகச் சார்ந்திருப்பது எப்படி?" என்று விமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் கேள்வி எழுப்புகிறார்.

'தெளிவான திட்டமிடல் இல்லாததே' விமான நிலையம் மூடப்படுவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் விநியோக அமைப்புகள் இருந்தாலும், இந்த சம்பவத்தில் 'ஒரு முக்கியமான மின் விநியோக அமைப்பு' சேதமடைந்ததாக பிரிட்டனில் மின்சார விநியோக பணிகளை மேற்கொண்டு வரும் நேஷனல் கிரிட் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதன் பொருள், உயர் மின்னழுத்த மின்சாரத்தை குறைந்த மற்றும் பாதுகாப்பான மின்னழுத்தமாக மாற்ற நேஷனல் கிரிட் பயன்படுத்தும் துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சமாளிக்க 'பேக்-அப்' அல்லது அவசரக் கால அமைப்புகள் போதுமானவை அல்ல என நிரூபிக்கப்பட்டது.

இந்த செயல்முறை அதிக வெப்பத்தை உருவாக்குகிறது, பின்னர் (எரியக்கூடிய) குளிரூட்டும் திரவங்களைப் பயன்படுத்தி வெப்பம் தணிக்கப்படுகிறது. இந்த செயல்முறை, தற்போதைய சூழலில் கவனம் பெற்றுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் ஏதேனும் சதித்திட்டம் நடந்ததா என்று பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஹீத்ரோ விமான நிலையம், லண்டன், பிரிட்டன், விமானங்கள்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ஹீத்ரோ விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

'மிகப்பெரிய அவமானம்'

ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான அளவு மின்சாரத்தை ஹீத்ரோ விமான நிலையம் பயன்படுத்துகிறது. எனவே அதன் செயல்பாடுகளை எந்த பாதிப்புகளும் இல்லாமல் நடத்த, அதுவே ஒரு அவசரகால மின்விநியோக அமைப்பை சொந்தமாக வைத்திருக்க முடியாது.

இருப்பினும், சில முக்கிய அமைப்புகளுக்கான அவசரகால வசதிகள் இருப்பதாக ஹீத்ரோவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறினார், ஆனால் முழு விமான நிலையத்திற்குமான மாற்று மின்சார விநியோகங்களைத் தொடங்குவதற்கு நேரம் எடுத்தது.

ஹீத்ரோ விமான நிலைய அதிகாரி ஒருவர், அதன் பேக்-அப் டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் அமைப்புகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி இயங்கியதாகக் கூறினார்.

பிரச்னை நேஷனல் கிரிட்டில்தான் உள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார். விமான நிலையம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வீடுகளும் மின்சாரம் இல்லாமல் தவித்துள்ளன.

ஹீத்ரோ விமான நிலையம், லண்டன், பிரிட்டன், விமானங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹீத்ரோ விமான நிலையம்

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் நேஷனல் கிரிட்டின் இரண்டு துணை மின்நிலையங்கள் உள்ளன. ஒன்று விமான நிலையத்தின் வடக்கே உள்ள வடக்கு ஹைட் பகுதியிலும், மற்றொன்று விமான நிலையத்தின் தெற்கே உள்ள லாலேஹாமிலும் இருப்பதாக எரிசக்தி பகுப்பாய்வு நிறுவனமான மான்டெல் குழுமம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மின்விநியோக வலையமைப்பு மூலம் வடக்கு ஹைட் துணை மின்நிலையம் மட்டுமே ஹீத்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று நிறுவனத்தின் இயக்குனர் பில் ஹெவிட் கூறினார்.

"ஒரு முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச உள்கட்டமைப்பு தளத்தில், இத்தகைய சூழ்நிலைகளை கையாள்வதற்கான வசதி இல்லாதது கவலையளிக்கிறது," என்று பில் கூறினார்.

"ஹீத்ரோ போன்ற ஒரு பெரிய மற்றும் முக்கியமான விமான நிலையம், ஒரே ஒரு அசம்பாவிதத்தால் பாதிக்கப்படக்கூடாது" என்றார்.

சாத்தம் ஹவுஸ் (Chatham House) எனும் சிந்தனைக் குழுவின் ஆராய்ச்சியாளர் ராபின் பாட்டர், "ஆனால், இத்தகைய அசம்பாவிதங்களை சமாளிக்கும் விதமாக ஓரளவு ஒழுங்குமுறையைக் கொண்ட பிரிட்டனின் இரண்டு விமான நிலையங்களில் ஒன்று ஹீத்ரோ, மற்றொன்று கேட்விக்" என்றார்.

"இவை உண்மையில் பிரிட்டனின் சிறந்த விமான நிலையங்கள், அவற்றின் அவசரகால நிர்வாகத்திறன் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது மற்றும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்ற அடிப்படையில்" என்று அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டில், பிரிட்டனின் தேசிய உள்கட்டமைப்பு ஆணையம், "தொலைத்தொடர்பு, நீர், போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற சில முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளுக்கான தரநிலைகளை 2025ஆம் ஆண்டுக்குள் நிர்ணயிக்க வேண்டும்" என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் அரசாங்கம் அந்தத் துறைகளில் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதை விவரிக்கும் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

"அவை அக்டோபர் 2023 முதல் அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்கிறார் ராபின் பாட்டர்.

ஹீத்ரோ விமான நிலையம், லண்டன், பிரிட்டன், விமானங்கள்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்

ஹீத்ரோ விமான நிலையத்தின் அவசரகால மின்விநியோகம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று ஹீத்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சில சூழ்நிலைகளில், அதாவது தற்போதைய ஒன்றைப் போல, ஒரு அமைப்பின் ஒட்டுமொத்த வலிமை அல்லது வெற்றி அதன் பலவீனமான பகுதியைப் பொறுத்தது. ஒரு பகுதி தோல்வியடைந்தால், முழு அமைப்பும் பாதிக்கப்படலாம்.

ஹீத்ரோ போன்ற தனியாருக்குச் சொந்தமான ஒரு மிகப்பெரிய விமான நிலையம் முழுமையாக இயங்க ஒரு கூடுதல் மின்சார அமைப்பு தேவை என்றால், அதை உருவாக்குவதற்கு பெரும் பணமும், வளங்களும் தேவைப்படும்.

இந்த சம்பவத்தின் காரணமாக, 1,300க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக 'Flightradar24' என்ற கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது. மேலும், விமான நிறுவனங்களின் அறிவுறுத்தல்கள் வரும்வரை விமான நிலையத்திற்கு பயணிகள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (மார்ச் 21) ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியால், தாமதமான பயணிகளும் சரக்குகளும் தங்கள் இடங்களை அடைந்துவிட்டாலும் கூட, பெரும் செலவு செய்து ஹீத்ரோ விமான நிலையத்திற்கு கூடுதல் மின்விநியோக அமைப்புகளை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்குமா என்று மக்கள் தொடர்ந்து விவாதிப்பார்கள்.

செய்தி சேகரிப்பு: டாம் எஸ்பினர், தியோ லெகெட், பென் கிங் மற்றும் ஆலிவர் ஸ்மித்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு