டெல்லி அசாத்திய வெற்றி: சிக்ஸர், பவுண்டரிகளால் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய 'தனி ஒருவன்'

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

டெல்லி - லக்னௌ போட்டி ஐபிஎல் ஆட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று 4வது ஆட்டத்திலேயே ரசிகர்களுக்கு உணர்த்திவிட்டது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கடைசி ஓவர் வரை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத ஆட்டமாக இருந்தது. டெல்லி அணி வீரர் அசுதோஷ் ஷர்மா என்ற ஒற்றை பேட்டர்தான் சாத்தியமில்லாத வெற்றியை சாத்தியமாக்கினார். கடைசி ஓவரை அசுதோஷ் சந்திக்கும் வரை டெல்லி அணி பக்கம் வெற்றி இல்லை என்ற நிலைதான் இருந்தது. கடைசி ஓவரில் ஒரு பந்தை சந்தித்தவுடனே அசுதோஷ் வெற்றியை உறுதி செய்தார்.

லக்னௌ அதிரடி

டெல்லி அணியின் பந்துவீச்சை தொடக்கத்தில் மிட்ஷெல் மார்ஷ், நிகோலஸ் பூரன் இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கினர் 4.5 ஓவர்களில் 50 ரன்களும், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களும் என லக்னெள வலுவாக இருந்தது. மார்ஷ் 19 பந்துகளிலும், பூரன் 24 பந்துகளிலும் அரைசதத்தைக் கடந்தனர். இவர்கள் அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு உயர்த்துவார்கள் என கணிக்கப்பட்டது.

ஆனால் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், பூரன் 30 பந்துகளில் 75 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டான பின் ஆட்டம் தலைகீழாக மாறியது.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

13-வது ஓவரில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, அடுத்த 7 ஓவர்களில் லக்னெள அணி எப்படியும் குறைந்தபட்சம் 70 ரன்கள் சேர்த்து 246 ரன்கள் ஸ்கோர் செல்லும் என கணிக்கப்பட்டது.

ஆனால், குல்தீப் யாதவ், மிட்ஷெல் ஸ்டார்க் இருவரும் சேர்ந்து லக்னெள பேட்டிங் வரிசையை சீர்குலைத்தனர். கேப்டன் ரிஷப் பந்த் டக்அவுட்டில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குல்தீப் வீசிய 17வது ஓவரில் பதோனை சிக்ஸருக்கு முயன்று விக்கெட்டை இழந்தார், அதே ஓவரில் ஷர்துல் தாக்கூர் ரன்அவுட்டாகி வெளியேறினர். ஸ்டார்க் தனது கடைசி ஓவரில் ஷாபாஸ் அகமது, ரவி பிஸ்னோய் விக்கெட்டுகளை வீழ்த்தவே லக்னெள அணி 194 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என வலுவாக இருந்த லக்னெள அடுத்த 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் டேவிட் மில்லர் 2 சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். மில்லருக்கு ஒத்துழைத்து எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

கடினமான இலக்கைத் துரத்திய டெல்லி அணி முதல் ஓவரிலேயே மெக்ருக்(1), போரெல்(0), ரிஸ்வி(4) என 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 13-வது ஓவரின் போது டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என ஏறக்குறைய தோல்வியின் பிடியில் இருந்தது.

டெல்லி அணி வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் 94 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி வெற்றி பெற 1.74 சதவீதமும், லக்னெள அணி வெல்ல 98.44 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக கணினியின் கணிப்பு கூறியது. ஆனால், அனைத்துக் கணிப்புகளையும் தகர்த்து அசுதோஷ் ஷர்மா அறிமுக வீரராக வந்த விப்ராஜ் நிகம் ஆகியோர் போட்டியை வேறு திசையில் பயணிக்க வைத்தனர்.

5வது விக்கெட்டை டெல்லி அணி இழந்த போது அந்த அணி வெற்றி பெற 145 ரன்கள் தேவைப்பட்டன.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

திருப்பம் தந்த அசுதோஷ் ஷர்மா

டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், அசுதோஷ் ஷர்மா ஆகிய இருவரும் களத்தில் இருந்த வரை டெல்லி அணி சற்று நம்பிக்கையுடன் இருந்தது. இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினர். ஆனால் ஸ்டெப்ஸ் 34 ரன்னில் சித்தார்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பின் நம்பிக்கை குறையத் தொடங்கியது.

ஆனால், அதன் பிறகுதான் ஆட்டத்தின் முடிவையே மாற்றிய அந்த ஜோடி அமைந்தது அறிமுக வீரர் விப்ராஜ் நிகம் வந்து, அசுதோஷுடன் சேர்ந்தார். பிஸ்னாய் வீசிய 14வது ஓவரை விப்ராஜ் விளாசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் குவித்த விப்ராஜ், ஷாபாஸ் அகமது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் டெல்லி அணிக்கு நெருக்கடியைக் குறைத்து அவர் நம்பிக்கை அளித்தார்.

15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் என இருந்தது. கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டன. பிரின்ஸ் வீசிய 16-வது ஓவரில் அசுதோஷ் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி என 20 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார்.

திக்வேஷ் ரதி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் விப்ராஜ் 39 ரன்னில் ஆட்டமிழக்க டெல்லி அணி மீண்டும் சிக்கலில் மாட்டியது. அடுத்து வந்த மிட்ஷெல் ஸ்டார்க் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு பிஸ்னாய் ஓவரில் ஆட்டிமிழந்தார். பிஸ்னாய் வீசிய 18-வது ஓவரிலேயே 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை அசுதோஷ் விளாசினார்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

திக் திக் ஓவர்கள்

இதனால் கடைசி 2 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. டெல்லி வசம் கடைசி 2 விக்கெட்டுகள்தான் இருந்தன. பிரின்ஸ் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த குல்தீப், அடுத்த பந்தில் ரன்அவுட்டானார். 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மோகித் சர்மா, அசுதோஷுடன் சேர்ந்தார். 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்த்து 28 பந்துகளில் அசுதோஷ் அரைசதத்தை நிறைவுசெய்தார். 5வது பந்தில் சிக்ஸரும், கடைசிப் பந்தில் பவுண்டரியும் அசுதோஷ் விளாச ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. ஷாபாஸ் அகமது வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தை தவறவிட்ட மோகித் சர்மா அடுத்து பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஸ்லாட்டில் வீசப்பட்ட 3வது பந்தை சந்தித்த அசுதோஷ் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பவே டெல்லி அணி ஆர்ப்பரிப்பான வெற்றியைப் பெற்றது.

ஒரு கட்டத்தில் 19 பந்துகளில் 19 ரன் எடுத்திருந்த அசுதோஷ் ஆட்டத்தை முடிக்கும் போது 31 பந்துகளில் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசுதோஷ் சர்மா தான் சந்தித்த கடைசி 11 பந்துகளில் மட்டும் 46 ரன்கள் சேர்த்தார். அசுதோஷ் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி என 66 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

அசுதோஷ் ஷர்மா என்ன பேசினார்?

ஆட்ட நாயகன் விருது வென்ற டெல்லி வீரர் அசுதோஷ் ஷர்மா கூறுகையில் "பல போட்டிகளை என்னால் ஃபினிஷ் செய்ய முடியாமல் போனதால், ஃபினிஷ் எப்படி செய்வது என கடந்த ஆண்டிலிருந்துதான் நான் ஃபினிஷிங்கை கற்றுக்கொண்டேன். என் கவனத்தை ஃபினிஷிங்கில் செலுத்தினேன், உள்நாட்டுப் போட்டிகளிலும் இதில்தான் கவனம் செலுத்தினேன். என் மீது அளவு கடந்த நம்பிக்கையை நான் வைத்திருக்கிறேன், கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை நான் களத்தில் இருந்தால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். அமைதியாக இருக்க வேண்டும், நம்ப வேண்டும், பயிற்சி எடுத்த ஷாட்கள் குறித்து சிந்தித்து அதை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இதைத்தான் இன்று நான் செய்தேன்.

விப்ராஜ் சிறப்பாக ஆடினார், நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பந்து மட்டும் உனக்கு செட்ஆகிவிட்டால் உன்னால் பெரியஷாட்களுக்கு செல்ல முடியும் என்றேன். அமைதியாக இருந்தேன், அதிகமான அழுத்தத்தை நான் எனக்குக் கொடுக்கவில்லை. இந்த ஆட்டநாயன் விருதை என்னுடைய வழிகாட்டி ஷிகர் தவாணுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாபிலும் பட்டைய கிளப்பிய அசுதோஷ்

கடந்த 2024-ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணியில் இருந்த அசுதோஷ் ஷர்மா, பல சாத்தியமற்ற வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக மும்பை அணிக்கு எதிராகவும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் அசுதோஷ் அற்புதமாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணி இம்பாக்ட் வீரராகவே அசுதோஷை களமிறக்கியது, ஆட்டத்தின் போக்கை மெல்ல உணர்ந்து ,அதற்கு ஏற்றார்போல் சென்று, ஆட்டத்தை தனது அணி பக்கம் திருப்பினார் அசுதோஷ்.

லக்னெள அணி செய்த தவறுகள்

லக்னெள அணிக்கு மிட்ஷெல் மார்ஷ்(72), நிகோலஸ் பூரன்(75) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் பெரும்பகுதியாகும். லக்னெள அணியின் 22.97 சதவீத ரன்கள் கடைசி 7 ஓவர்களில் சேர்க்கப்பட்டவை. லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் என இருந்தபின் அடுத்த 7 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நடுவரிசை பேட்டர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தனர். கடைசியில் டேவிட் மில்லருக்கு ஒத்துழைத்து ஆட பார்ட்னர்ஷிப் இல்லை.

சேஸிங்கில் அசுதோஷ் வெறித்தனமாக பேட் செய்தபோது, பிரின்ஸ் யாதவ் 16-வது ஓவரையும், 19-வது ஓவரையும் பந்துவீச ரிஷப் பந்த் எடுத்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று. பிரின்ஸுக்கு ஓவர் வழங்குவதற்குப் பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு பந்துவீச வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம், Getty Images

ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் பிரேசர், போரெல் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஃபார்மில் இருந்தார். அவருக்கு கடைசி வரை 2 ஓவர்கள் மட்டுமே ரிஷப் பந்த் வழங்கியிருந்தார். ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் அணியில் இருந்தும் அவரை பயன்படுத்தவே இல்லை. கடந்த காலத்தில், இதுபோன்ற தருணங்களில் மார்ஷ் பல முறை சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கேப்டன்சியில் சில நுணுக்கமான அம்சங்களில் ரிஷப் பந்த் தவறவிட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதேபோல ஷாபாஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மோகித் சர்மாவை ஸ்டெம்பிங் செய்யக் கிடைத்த வாய்ப்பையும் ரிஷப் பந்த் தவறவிட்டார். மாறாக மோகித் சர்மா கால் காப்பில் வாங்கியதற்காக அப்பீல் செய்து ரிஷப் பந்த் தவறு செய்தார். உச்சக்கட்ட பதற்றத்தில் ரிஷப் பந்த் இருந்த போதுதான் ஸ்டெம்பிங் வாய்ப்பை தவறவிட்டது நன்கு தெரிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.